Wednesday, March 6, 2019

GEETHA GOVINDHAM


கீத கோவிந்தம் J K SIVAN
ஜெயதேவர்
3. கீத கோவிந்தம் (அஷ்டபதி) ??????

கீதகோவிந்தம் எட்டு பதங்கள் நடனத்துக்கு ஏற்றபடி கொண்டதால் அஷ்டபதி என்ற பெயரால் உலக பிரசித்தி பெற்ற பாடல் தொகுப்பு. முழுக்க முழுக்க கிருஷ்ணன் பற்றியது. காட்சிகளில் கண்ணனின் ராஸ லீலையை பாடும் கீதம். இதில் முக்கிய பாத்திரங்கள், கிருஷ்ணன், ராதை,தோழி என மூவர். பக்திரஸம், ஸ்ங்கீதம், நர்த்தனம் இவைகளின் ரசத்தால் பிழிந்தெடுக்கப்பட்ட அற்புத கலவை. பூரி ஜகன்னாத ஷேத்திரத்தில் ஜயதேவர் இந்தஅஷ்டபதி ஸ்தோத்திரங்களை இயற்றி பாட, அவர் மனைவி பத்மாவதி ஆடினாள். சங்கீதம் நாட்டியம் இரண்டுமே, கிருஷ்ணனுக்கு பூஜாகாலத்தில் செய்யும் அறுபத்து நான்கு உபசாரங்களில் சேர்ந்தவை. உபசாரம் ஒவ்வொன்றும் நம்மிடம் பகவானுக்குக் கருணை உண்டாக்கும் கருவி. நாட்டியமும் கீதமும் மிகவும் அந்தரங்கமான தத்துவம் நிறைந்தவை. பகவான் நாதஸ்வரூபன். அவனே ஒரு வித்துவான். புல்லாங்குழல் வாத்திய நிபுணன். நாதம் காற்றுடன் கலப்பதே நடனம். ஒலிக்கு அனுகூலமான காற்று வடிவமானவள் பராசக்தி. இந்த தத்துவமே ராதாகிருஷ்ண தத்வம். பக்தரின் உள்ளம் பக்குவமாவதற்காகப் பல லீலைகளை கண்ணன் புரிந்தான். லீலைகள் பொதுவாக எல்லோர் உள்ளத்தையும் கவரும். அதனுள் பதிந்து கிடக்கும் பரதத்வம் உத்தம பக்தரான ஒரு சிலர் உள்ளத்தையே கவரும். அத்தகையவரே பரம ஏகாந்தி, ஜீவன் முக்தர்கள். அப்படித்தான் பக்த சிகாமணி, முக்தர் வேதவ்யாஸர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை உலகுக்கு அளித்தார்.

வேதவியாஸரின் ப்ரம்மவைவர்த்தம் எனும் 10வது புராணத்தில் ஸ்ரீராதாக்ருஷ்ண சரிதத்தைக் கூறுகிறார். அதற்கு விரிவுரை வடிவமாக அமைந்த கர்க ஸம்ஹிதை என்ற இதிஹாஸத்திலும் இது மிக விரிவாகவும் ரஸமாகவும் தத்வார்த்தத்துடனும் காண்கிறது. இவ்விரு நூல்களையும் ப்ரமாணமாகக் கொண்டே ஜெயதேவரின் அஷ்டபதி அமைந்தது.

கோலோகத்திலுள்ள ஸ்ரீக்ருஷ்ணன் விரஜா என்ற மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும்போது ராதை வருகிறாள். கிருஷ்ணன் தன்னைத் தவிர வேறு யாருடனும் பேசினால் கூட கோபம் கொள்பவள் ராதை. கிருஷ்ணன் ராதையை சமாதானப்படுத்த விரஜையை யமுனை நதியாக மாற்றி, தாமும் மறைகிறார். . ராதை கிருஷ்ணனைத் தேடி ஏமாற்றம் அடைந்தவளாக திரும்பும்போது, ராதையை தேடி அலைபவர் போல், ’ராதே ராதே’ எனக்கூறி எதிரே தோன்றுகிறார் கிருஷ்ணன். ராதை கோபங்கொண்டு பேசாமல் போக, ''ராதே உனக்கு கோபம் ஆகாதடி.....'' அவள் கடுங்கோபத்துடன் செள்கிறாள்.

இதைக் கண்ட உத்தம கிருஷ்ண பக்தனான ஸுதாமா ராதையிடம் கோபங்கொண்டார். க்ருஷ்ணன் மறுபடியும் விரஜையுடன் கூடி விளையாட, கிருஷ்ணன் பிரிவை தாங்கமுடியாத ராதை, ஒரு தோழியை அனுப்பித் தன்னை மன்னித்து தன்னிருப்பிடம் வரும்படி சொல்லி அனுப்ப்புகிறாள் .

மாயாவி கிருஷ்ணனோ, ராதே, உன்னை எண்ணி, மனம் வாடி,உடல் நலிந்து எழுந்து நடக்கக்கூட ,சக்தி இல்லை, இங்கு உடனே வா '' என்று அந்த தோழி மூலம் சேதி போகிறது. ராதை சேதி அறிந்து கிருஷ்ணனை நோக்கி ஓடி வருகிறாள்.

முன்பே அவளிடம் கோபித்த ஸுதாமா அவளை உள்ளே விடாமல் தடுக்க, தேவி அவரை அரக்கனாகும்படி சபித்தாள். ஸுதாமா ராதையைப் பகவானை விட்டு பிரிந்திருக்கும்படி சபிக்கிறார். கிருஷ்ணன் ஒருவாறு அந்த இருவரையும் சமாதானப்படுத்தியது பாகவதத்தில் வருகிறது.

சுதாமா தான் சங்கசூடனாக பிறந்து சிவனால் கொல்லப்பட்டு கோலோகம் திரும்புகிறான். ராதையை வ்ருஷபானு என்பவரின் பெண்ணாகப் பிறந்து, அங்கிருக்கும்படியும் தாம் வஸுதேவனிடம் பிறந்து நந்தன் வீட்டில் வளரும் போது ராதையை மணந்து சிலகாலம் அவனியில் தங்கி பிறகு இருவரும் கோலோகம் செல்லலாம் என்றும் கட்டளை இடுகிறார். இது தான் கீத கோவிந்த பாடல்கள் 24 அஷ்டபதியாக ஜெயதேவர் சொல்லும் கதை.

கோலோகத்தில் நடந்த கதையும் பூலோகத்தில் வந்த கதையும் அற்புதமாக இணைக்கப்பட்டு அசாத்திய வர்ணனையோடு கூடிய இசை பொக்கிஷம். இதை பாடத வித்துவானே கிடையாது. ஆடாத பக்தன் இல்லை.

ஒரு விஷயம். வேதமந்திரங்களின் மாதாவான காயத்ரீ மந்த்ரம் 24 அக்ஷரமுள்ளது. ஒரு எழுத்திற்கு ஆயிரம் ச்லோகமாக வால்மீகி ஸ்ரீராமசரிதத்தை 24000 ச்லோகமுள்ள ஸ்ரீராமாயணமாக இயற்றினார். ஸ்ரீ த்யாகராஜஸ்வாமிகள் 24 ஆயிரம் கீர்த்தனமாக எழுதினார். இருபத்துநான்கு அஷ்டபதிகளாக ஜயதேவர் எழுதினார்.

கோவிந்தனைப் பற்றிய கீதமானதால் கீத கோவிந்தம் . எட்டுப் பதங்கள் நடனத்திற்குகந்தபடி அமைந்து அஷ்டபதி. ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள கீதத்தைப் புஷ்டிப்படுத்த பல ச்லோகங்கள் கூறப்படுகின்றன. அஷ்டபதியை நிறைய கேட்டிருக்கிறேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு பாவத்தோடு பாடும்போது கிருஷ்ணன் எதிரே தோன்றுகிறான். இதில் 12 ஸர்க்கங்கள் உள. ஜெயதேவர் கண்ணனுடைய த்வாதசாக்ஷரீ என்ற மஹா மந்திரத்தைமனதில் கொண்டு, 12 ஸர்க்கமாக பண்ணி இருக்கிறார். ஒவ்வொரு ஸர்க்கத்திற்கும் அவர் வைத்த பெயர் மிகவும் ஆச்சர்யமானதும் பக்தி பூர்வமானதும் ஆகும். . சொல்கிறேன் கேளுங்கள்.

ஸாமோத தாமோதரன்: உரலோடு கட்டிய தாய்க்கும் ஆனந்தம் அளிப்பவர்.
அக்லேச கேசவன்: ப்ரம்மாவையும் சிவனையும் கஷ்டப்படாமல் காத்தவர்.
முக்த மதுஸூதனன்: மோஹங் கொண்ட மது எனும் அரக்கனைச் சிக்ஷித்தவர்.
ஸ்நிக்த மதுஸூதனன்: மது கைடபருக்கும் தன் அழகைக் காட்டியவன்.
ஸாகாங்க்ஷ புண்டரீகாக்ஷன்: தன்னை நாடி பக்தர் வருவார்களா என விசாலமான கண்களால் பார்ப்பவன்.
த்ருஷ்ட வைகுண்டன்/ தன்ய வைகுண்டன்: வைகுண்ட இன்பத்தை எல்லோருக்கும் அறிவிப்பவன்.
நாகர நாராயணன்: க்ராமத்தில் கோபகோபியருடன் இருந்து பழகினாலும் நகரத்தில் உள்ளவர்க்கும் ஏற்றபடி நடப்பவர்.
விலக்ஷ்ய லஷ்மீபதி: பகவத் கருணையைக் கோரும் அனைவரையும் லக்ஷ்மீயாகப் பாவித்து மணப்பவர்.
முக்த முகுந்தர்: விசேஷ அனுபவத்தைத் தரும் ஸத்குரு.
சதுர சதுர்புஜம்: ஸகல புருஷார்த்தங்களையும் அள்ளி அளிக்கும் நான்கு கைகள் உள்ளவர்.
ஸாநந்த கோவிந்தர்: இடையர்க்கும் பூமியில் தோன்றிய அனைவருக்கும் ஆனந்தமளிப்பவர்.
ஸுப்ரீத பீதாம்பர: பக்தரது பக்தியால் பரம ஸந்தோஷமடைந்து பக்தரைப் பீதாம்பரதாரியாகச் செய்பவர்.

நமக்கு மோக்ஷம் என்றாலே என்ன என்று தெரியாது. அறியாத ஒன்றை அறிந்த ஒன்றின் மூலமாகவே அறியவேண்டும். துன்பமே இல்லாத இன்பமே மோக்ஷம். அனுபவத்தினால் மாத்ரம் அறியக்கூடிய இன்பம் பேரானந்தம். அதை அறிய அவரவர் அனுபவத்தால் உணர்ந்த சிற்றின்பத்தை உதாரணமாகக் காட்டுகிறது வேதம். சிற்றின்பமென்பம் மனிதர்களால் அறியப்பட்ட மிருக காதல். பிரேமை மனித காதலல்ல. புனிதமானது. கணவன் மனைவி,காதலன் காதலி, என இறைவனோடு பக்தி பூர்வமாக பணிவது நாயக-நாயகி பாவம். ஜீவன்-ஈசுவரன் இருவருக்கும் ஒருமை சேர்க்கை, உபாஸனை முதலியன உண்டு.

தேவாரம், திவ்யப்ரபந்தம் முதலிய தமிழ் நூல்களிலும், பாரதியார் போன்ற பல பக்தர்களது பாடலிலும், ப்ரேமபக்தியை ரசிக்கலாம். சிற்றின்பம் போல் மேல் பூச்சில் காணப்பட்டாலும் கீத கோவிந்தம் ஒரு வேதாந்த காவ்யம். ஆகவே தான் ஹரிதாஸ் கிரி போன்ற துறவியர்கூட இதைப் பாடினார்கள். ஜீவன் ஈஸ்வரனிடமிருந்து பிரிந்து பூமியில் துன்பங்களை - ஜனன மரணம், மூப்பு, பிணி, பசி எல்லாம் அனுபவிக்கிறான். பரமனின் அருளால் நல்ல ஆசாரியன் குருவின் உபதேசங்கள் மூலம் ஜீவன் மீண்டும் ஈஸ்வரனை அடைகிறது. க்ருஷ்ணன் பரமாத்மா, ராதை ஜீவாத்மா, ஸகி எனும் தோழி இதில் ஆசார்யன், என காட்டுகிறார் ஜெயதேவர்.

முதல் அஷ்டபதி ஆரம்பத்தில்
கைர்மேதுரமம்பரம் வனபுவ: ஸ்யாமா: தமாலத்ருமை:நக்தம் பீருரயம் த்வமேவ ததிமம் ராதே க்ருஹம் ப்ராபய
இத்தம் நந்த நிதேஸத: சலிதயோ: பிரத்யத்வ குஞ்ஜத்ருமம்
ராதா மாதவயோர் ஜயந்தி யமுனாகூலே ரஹ: கேளய: என்று ஒரு காட்சியைப் பார்த்தோமல்லவா. இனி மீதியையும் பார்ப்போம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...