Tuesday, March 19, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
அர்ஜுன சுனாமி

நினைவு தெரிந்த நாள் முதலாக மகா பாரதம் கதைகளை அம்மா முதல் அத்தனை பேரும் வித விதமாக சொல்லி நிறைய கேட்டிருந்தும், நானே படித்தும் எழுதியும் 80வருஷம் ஆன போதிலும் பாரத தாகம் தீரவில்லை. அதில் வரும் வீர புருஷர்கள் தனது கொள்ளுப்பாட்டனார்கள் என்று அறிந்தால் ஜனமேஜயனுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும் பாரதம் கேட்க? என்று சற்று சிந்திப்போம்.

''வைசம்பாயனரே, என் முன்னோர்களின் பெருமையை, அதுவும் அர்ஜுனனின் கம்பீரத்தை, வலிமையை நீங்கள் சொல்லும்போது நான் அங்கே நேரிலே இருப்பது போல் உணர்கிறேன். அப்புறம் என்னவாயிற்று?''

''பீஷ்மன் சொன்னவாறே மூட்டையைக் கட்டிக்கொண்டு துரியோதனன் உடனே ஹஸ்தினாபுரம் நோக்கி திரும்பினான்'' என்று ஆரம்பித்தார் முனிவர்.

'' இடது பக்கம் அஸ்வத்தாமன், வலது பக்கம் கிருபர் பாதுகாப்பில் நடுவே துரோணர் என்று நாம் அர்ஜுனனின் தாக்குதலை சமாளிக்கவேண்டும். பின் புற தாக்குதலை நான் பார்த்துக் கொள்வேன். கர்ணன் தேரில் பக்க பலமாக அனைவருக்கும் உதவட்டும்'' என்று பீஷ்மர் அணி வகுத்தார்.

''ஆஹா, அதோ பசித்த புலியாக, வெகு வேகமாக தேரைச் செலுத்திக் கொண்டு நம்மை எதிர்நோக்கி ஒருவனாகவே அர்ஜுனன் வருகிறான். தயாராகுங்கள் '' என்றார் பீஷ்மர்.

''உத்தரா, நேரே தேரை செலுத்து. துளியும் பயப்படாதே உன்னையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதோ எதிரே இளைஞனாக ரிஷி குமாரன் போல் நிற்கும் மாவீரன்தான் புகழ் பெற்ற அஸ்வத்தாமன். துரோணரிடம் என்னோடு வில் வித்தை பயின்ற அவர் பெற்ற மகன். இன்னொரு பக்கம் தெரிகிறாரே அவர் க்ரிபாசாரியார். எனது இன்னொரு குரு. நடுவே இருப்பவர் என் குரு தனுர் வேத நிபுணர் துரோணர். பின்னால் சைன்யத்தின் பாதுகாப்பு அரணாக தேரில் இருப்பவர் பீஷ்மர், என் தாத்தா. எவராலும் வெல்லமுடியாத, மரண மில்லாதவர். ஒளி மிகுந்த தேரில் நடுவே தெரிபவன் என் எதிரி கர்ணன்.மகா வீரன். நமது நோக்கம் யுத்தம் அல்ல, பின்னால் அடைபட்டு நிற்கும் ஆநிரைகளை விராட நகர் எல்லை மீறாமல் மீட்பது மட்டுமே. தடுப்பவரை எதிர்ப்போம். துரியோதனன் இருக்குமிடம் நோக்கி முதலில் செல். அதோ அவன் ஆநிரைகளோடு திரும்பி செல்கிறான். கிருபரின் சேனை அர்ஜுனனை தடுத்தது.

அர்ஜுனன் மழையாக அம்புகளை பொழிந்து கௌரவ சேனையை நகரமுடியாமல் செய்தான். அவனது தேவதத்த சங்கின் ஒலியில் பசுக்கள் கலங்கி அர்ஜுனன் எதிர்பார்த்தபடியே தெற்கு நோக்கி விராடனின் மத்ஸ்ய தேசத்துக்கே ஓடின. நிலை கலங்கிய கவுரவ சேனை இந்த திடீர் தாக்குதலால் மிரண்டு அர்ஜுனன் மேல் பாய்ந்தது. அதை எதிர்பார்த்து சேனைக்குள் செல்ல முயற்சித்த அர்ஜுனன் திட்டம் எளிதானது. உத்தரனின் தேர் கௌரவ சேனையின் நடுவே இப்போது. கர்ணனை குறி வைக்கிறான் அர்ஜுனன் என அறிந்து சித்திரசேனன், சங்க்ரமஜித், சத்ருசாஹன், ஜெயன் ஆகியோர் கர்ணனை சூழ்ந்து கொண்டனர். விகர்ணனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

முதலில் மின்னல் வேக தாக்குதலாக விகர்ணனை ஓடச் செய்த அர்ஜுனன் அடுத்து எதிர்த்த சத்ருந்தபனை கொன்றான். தடுத்த சங்க்ரமஜித்தும் கொல்லப்பட்டான். தொடர்ந்து பெரிய யுத்தம் ஒன்று நிகழ்ந்தது. கர்ணனை எதிர்த்த அர்ஜுனன், விகர்ணனின் உடலில் காயங்களை ஏற்படுத்தி அவன் தேரையும் வில்லையும் முறித்தான். விகர்ணன் உயிர் தப்பி பின் வாங்கினான். எங்கும் கண்ணே தெரியாமல் அம்புகளால் திரை போட்டது போல் அர்ஜுனன் சரமாரி பொழிந்தான்.

கர்ணன் தேரிழந்து, ஆயுதம் இழந்து பின் வாங்கினான். மேலே கௌரவ சேனையைப் பிளந்து கொண்டு அர்ஜுனன் காட்டுத்தீயாக
முன்னேறினான்.

இந்த அர்ஜுன சுனாமியை எப்படி சமாளிப்பது என்ற புதிரோடு கௌரவ சேனை விழித்தது.அதற்குள் எண்ணற்ற உடல்கள், யானைகள், குதிரைகள், உடைந்த தேர்கள், இறந்த தேர்பாகர்கள், ரத்த வெள்ளம். அர்ஜுனன் சென்ற வழியெல்லாம் இதுவே.

கௌரவ சேனை அர்ஜுனனை தாக்குவதற்கு பதிலாக அவனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பெரும் பாடு பட்டது.

''உத்தரா, அதோ தெரிகிறது பார் ஒரு கொடியில் கலசம் சின்னம். த்ரோண கலசம் அது. அது துரோணர் தேர். அதை நெருங்கி பிரதக்ஷணமாக வா. அவரை முதலில் வணங்க வேண்டும். என் குரு. முதலில் அவர் என்னை தாக்கியபிறகே நான் அவரை தாக்குவேன்.

பிறகு நேராக துரியோதனன் தேர் முன்பு கொண்டு செல். கர்ணன் குறுக்கிட்டால் நான் அவனைக் கொல்வேன். அதோ நீலக் கொடியில்,ஐந்து நக்ஷத்திரங்களுக்கு மத்தியில் சூரியனோடும், வெள்ளைக் குடையோடும் தெரிகிற தேர் தான் என் பிதாமகர் பீஷ்மர். அவரைக் கண்ணால் பார்க்க வேண்டும். துரியோதனன் மீது பாசம் கொண்டவர்.

கிருபரின் தேர் எதிர்த்தது. அர்ஜுனனின் தேவதத்தம் என்கிற சங்கின் ஒலி விண்ணையே அதிர வைக்க கிருபரை சந்தித்தான் அர்ஜுனன். கிருபரின் அம்புகள் அவனை எதிர்நோக்கி துளைக்க வந்ததை எளிதாக முறியடித்தான் அர்ஜுனன். முதலில் அவர் தன்னை தாக்கக் காத்திருந்த அர்ஜுனன் அவரது தாக்குதலுக்கு பதிலாக நூற்றுக்கணக்கான அம்புகளால் அவரை நகர முடியாமல் செய்தான். காண்டிபத்திலிருந்து புறப்பட்ட அம்புகள் கிருபரின் தேர்க் குதிரைகளைக் கொன்று அவர் மேற்கொண்டு அவனை நெருங்காமல் செய்தது. அவரது கவசம் உடைந்து விழுந்தது. அவர் வில் நொறுங்கியது. கொடி முறிந்தது. தேர்ப் பாகன் இறந்தான். அவர் ஒரு கதையை எடுத்து வீசியபோது அதுவும் துண்டானது. அதற்குள் வேறு சிலர் ஓடிவந்து கிருபரைக் காப்பாற்றி அங்கிருந்து அகற்றினார்கள். அர்ஜுனன் மேற்கொண்டு கௌரவப் படையை நாசம் செய்வதை தடுக்க துரோணர் முன் வந்தார்.

அவர் தேரை மின்னல் வேகத்தில் சுற்றி வந்து அவர் எதிரே கை கூப்பி நின்று ''குருவே, எங்கள் வனவாசம் தங்கள் ஆசியால் நிறைவேறியது. இனி பழி தீர்க்கப் போகிறோம். எங்களைத் தடுத்து நீங்கள் என்னை முதலில் தாக்கிய பிறகு தான் நான் உங்களுக்கு எதிராக ஆயுதம் தொடுவேன்'' என்றான் அர்ஜுனன் . துரோணர் கண்கள் பாசத்தால் ஒரு கணம் பணித்தாலும்
அடுத்த கணமே தனது கடமை உணர்வால், துரோணரின் வில்லிலிருந்து ஆயிரம் அம்புகள் அர்ஜுனனை சூழ்ந்தது. அர்ஜுனன் முதலில் தனது குதிரைகள், உத்தரன் ஆகியோரை அம்புகளால் கோட்டையாக அமைத்து எந்த ஆபத்தும் வராமல் தடுத்தான். பிறகு ஒரு யுத்தம். குருவுக்கும் குருவை மிஞ்சிய சிஷ்யனுக்கும் நடந்தது. அர்ஜுனன் அவர் விடுத்த அம்புகளை தடுத்துக்கொண்டே அருகில் நின்ற அவர் சேனையை அழித்தான். உடல்கள் மலையாக பெருக ரத்தச் சேற்றில் துரோணர் தேர் அமிழ்ந்தது. தேர்ப் பாகன் காயமுற்றான். குதிரைகள் அடக்கப்படாமல் தவித்தன. அவரது ஆயுதங்களை எளிதில் தடுத்த அர்ஜுனனை 'ஆஹா அற்புதம் அற்புதம்'' என்று வாயார வாழ்த்திக்கொண்டே போர் புரிந்தார் துரோணர்.
வீரனை வீரனல்லவோ மெச்சுவான். துரோணர் தோல்வி நிச்சயம் என்று புரிந்து கொண்டதை அறிந்த அஸ்வத்தாமன் அர்ஜுனனை எதிர்த்தான். இதை விரும்பிய அர்ஜுனன் துரோணர் திரும்பிச் செல்ல நிறைய அவகாசம் கொடுத்து பிறகு அச்வத்தாமனை தாக்க ஆரம்பித்தான்.கண்ணிமைக்கும் நேரத்தில் அஸ்வத்தாமனின் தேர் குதிரைகளை தேரிலிருந்து பிரிந்து திசைக் கொன்றாக ஓடுமாறு அர்ஜுனன் அம்புகளை செலுத்த அஸ்வத்தாமன் திகைத்தான். அதற்குள் அவன் வில்லும் ஓடிய கர்ணன் எதிர்பட்டான்.

கர்ணனின் வரவு அர்ஜுனனின் கோபத்தையும் எதிர்க்கும் வலிமையையும் அதிகரிக்க வெகு காலமாக காத்திருந்த வாய்ப்பு கிடைத்த உற்சாகத்துடன் கர்ணனைத் தாக்கினான். சிறிது நேர யுத்தத்தில் கவசங்களை பிளந்து கர்ணன் மார்பில் அம்புகள் தாக்கி கண் மயங்கி தேரில் சாய்ந்தான் கர்ணன்.

''வடக்கு நோக்கி தேரை செலுத்து உத்தரா''.
அர்ஜுனன் தேர் பீஷ்மரின் சேனையை நெருங்கியது. அவசரப்பட்டு அர்ஜுனன் எதிரே தனது வீரத்தை காட்ட எதிர்த்த துச்சாதனன் மார்பில் அம்புடன் அங்கிருந்து வெளியேறினான். அவனது மற்ற சகோதரர்கள் அர்ஜுனனை எதிர்த்தது விளக்கை நோக்கி வந்து விழுந்து மாளும் விட்டில் பூச்சிகளை நினைவூட்டியது. துரியோதனன் மகன் விகர்ணன் அர்ஜுனனை தாக்க முற்பட நெற்றியில் அம்போடு கீழே சாய்ந்தான்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...