Saturday, March 16, 2019

MORAL STORY



                                              அது தான் வேண்டும்    J  K  SIVAN

வீடு  என்பது அமைதியாக  நிசப்தமாக இருக்கவேண்டிய இடம்.  அதில்  மனைவி ஓசை ல் மட்டும் தான் ஒலிக்கலாம், அல்லது எங்கும் எதிரொலிக்கமுடியும்  என்பது  ஜானகியின் கோட்பாடு.

கிருஷ்ணாபுரம் கிராமத்தில்  விவசாயம் பால்  பண்ணை நடத்திய கோவர்தனன் தனது மனைவி ஜானகியின் சித்தாந்தத்தை அப்படியே கேள்வி   கேட்காமல்  ஒப்புக் கொள்பவன்.

அன்று ஜானகிக்கு  ஒரே கோபம்.  கண்கள் நெருப்பை கக்கின.  கத்தினாள்.
''இது என்ன வீடா  நாய்கள்    சராணாலயமா?  பால்  பண்ணையா நாய்ப்  பண்ணையா? ''
அவள் கேட்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.   தனது பண்ணையில் காவலுக்கு  சில  நல்ல  ஜாதி நாய்களை கோவர்தனன் வளர்த்து வந்தான்.  அவை குட்டி போட்டு நாய்கள் அளவுக்கு மீறி  எண்ணிக்கையில் வளர்ந்து விட்டன.  இருபது நாய்கள் கொண்ட குடும்பம்!!    நாய்க் குட்டிகளும் நாய்களும் குலைக்காமலா  இருக்கும்.   என்ன செய்வது என்று
தலையை சொரிந்து கொண்டிருந்தபோது    கருப்பு நிற   டைகர்  என்ற நாய்  அன்று காலையில்   6  குட்டிகளை பண்ணையில்  புதிதாக   ஈன்றுவிட்டது.  அதுவே  ஜானகியின் ரணகளத்துக்கு காரணம்.

" இனியும்  பொறுக்கமுடியாது. ஒன்று நாய்கள் குறையவேண்டும்  இல்லை  நான் இந்த வீட்டை விட்டு  வெளியேற
வேண்டும் " என்று  அவன் மனைவி கூச்சலிட்டாள்.  இரண்டாவது  சூரியன் மேற்கே உதித்தாலும்  நடக்காது.

' ஒரு வாரம் கால அவகாசம்  தருகிறேன். நாய்கள் ஒன்று   இரண்டுக்கு மேல் இங்கே  காவலுக்கு தேவை இல்லை. மீதி எல்லாம் எப்படியோ வீட்டை விட்டு  வெளியேற வேண்டும்''
.
ஐந்து ஆறு நாளில்  பல இடங்களில்  பண்ணையில்  அறிவிப்பு  பலகைகள் தொங்கின.   தோட்டத்தின் வாயிலில்  ஒரு    விளம்பரம்  கொட்டை எழுத்தில்    "நல்ல ஜாதி நாய்கள்   குட்டிகள் விற்பனைக்கு.  சல்லிசான  விலை. ஐம்பது  ரூபாய் மட்டுமே" என்று  அறிவித்தது. .

அண்டை அயலில் இருந்து அநேகம் பேர் வந்து   நாய்களையும் குட்டிகளையும்  பார்த்து செலக்ட் பண்ணி  விற்றாகி விட்டது.  ஒன்றிரண்டு நாய்கள் மட்டுமே   பாக்கி இருந்தது.

ஒருநாள் மாலை  ஒரு சிறு பையன்   எட்டு  வயது இருக்கும்.  வந்து  கோவர்தனனை  சந்தித்தான்.

''எனக்கு ஒரு நாய் தர முடியுமா?''
''உன்னிடம்  ஐம்பது ரூபாய் உள்ளதா?''.
'' எண்ணிப் பார்க்கிறேன்'' அந்த  சிறுவன் தான் சேர்த்து  வைத்திருந்த  காசுகளை  எண்ணி னான்.  ''நாற்பத்து ஒன்று  ரூபாய்''

 கோவர்தனனுக்கு அந்த சிறுவனின்  ஆசையைப்  புறக்கணிக்க மனமில்லை.  வந்த விலைக்கு ஒரு குட்டியை  தள்ளிவிடலாம்  என நினைத்தான்.

''சரி,  பையா இது போதும் இப்போது  நாய்க்  குட்டிகளை அழைக்கிறேன்.  எந்த குட்டி வேணுமோ  அதை எடுத்துக் கொண்டு போ''  என்று சொல்லி  ஒரு  விசில் அடித்தான்.   பண்ணையிலிருந்து   ஒரு  தாய்   நாய், குட்டிகள்  புடை சூழ  ஓடிவந்தது.  இரண்டு  குட்டிகள்  வேகமாக ஓடி வர   ஒரு குட்டி  விழுந்து புரண்டு மெதுவாக  பின்னால்  வந்தது.  இதில் எது வேண்டும்  என்று   முதலில் ஓடி வந்த இரண்டு குட்டிகளை  காட்டிய போது  பையனின்  கவனம்  பூரா பின்னால்  ஓடிவந்த  மூன்றாவது நாய்க்  குட்டிமேலேயே  இருந்தது. 

''அதோ அது தான் வேண்டும்'
 "பையா,  அந்த குட்டிக்கு   ஒரு கால்   கொஞ்சம்  ஊனம்.  வேகமாக  ஓடி உன்னோடு விளையாட முடியாது.  எனவே  இந்த இரண்டிலே  ஒன்றை எடுத்துக்கோ."
நாற்பத்துஒன்று  ரூபாய் கை மாறியது.

''பையில்  பணம்  குறைவாக  இருக்கிறது என்பதற்காக  ஏன்   ஊனமான  நாய்க்குட்டியை  கேட்கிறாய்?.  நான் தான்  வேறு எடுத்துக்கொள்  என்றேனே?

"எனக்கு  வேகமாக  ஓடும்  நாய் வேண்டாம். அந்த குட்டியே   எனக்கு போதும்.  என்னால் தான் வேகமாக  நடக்கக்கூட
முடியாதே " என்ற பையன்  பேண்ட்  ஐ   மேலே தூக்கி இடது காலை காட்டியபோது  முட்டிக்கு  கீழே  ஒரு  மரத்தில் செய்த  கால்  தெரிந்தது.

நீதி: ஊனம் உடலில் இல்லை.மனத்திலே தான் உள்ளது


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...