எனக்கும் கொடு!
ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒரு குக்கிராமம் ஒரு நதிக்கரையில் அமைந்திருந்தது. ஒற்றை அடிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து அந்த ஊர் குடிசைகளை இணைத்தது. நடந்து நடந்து கால் தடம் தான் அவ்வாறு பாதையாக தோன்றியது எனலாம். சுற்றிலும் புல் செடி கொடி, மரங்கள், தோட்டங்கள், சோலைகள், கோயில்கள், வயல்கள், குளங்கள், குட்டைகள். தெருக்களுக்கு பெயர், விளக்கு, என்று எதுவும் கிடையாது. கோவிந்தன் வீட்டு பாதை, நந்தகோபன் வீட்டுக்கு பாதை என்று தான் அறிவார்கள்.அடையாளங்கள் கிழக்கே, மேக்கே , வடக்காலே, தெக்காலே என்று தான் இருக்கும். மாடுகள், கன்றுகள், வண்டிகள், வைக்கோல் போர்கள், ஆடுகள் கோழிகள், மயில்கள் என்று நிறைய விலங்குகளும் பறவையினமும் ஒவ்வொருவர் வீட்டு சொத்தாக இருக்கும். வீடுகளுக்கு காம்பௌண்ட் , கம்பி, க்ராதி, கான்க்ரீட் போஸ்ட் வராத காலம். வீடுகள் பாதியின் எதிரும் புதிருமாக, பின்பக்கங்கள் இணைந்த அடுத்த பகுதியாக இருக்கும்.
கண்ணனுக்கு வெண்ணை மேல் ஆசை. வெண்ணை வைத்திருப்பவர்களுக்கு கண்ணன் மேல் ஆசை. தினமும் கை நிறைய, பாத்திரம் நிறைய வெண்ணை கொண்டு வருவார்கள் தருவார்கள். யமுனை ஆற்றில் வெள்ளம் வடிந்தால் ஆற்றில் இறங்கி நடந்து அக்கரை செல்வார்கள். நிறைய வெள்ளம் வந்து ஜலம் ஓடினால் ஓடம் வைத்திருப்பவர்கள் அக்கறை யோடு அக்கரைக்கு கொண்டு செல்வார்கள்.
வழக்கமாக கண்ணனுக்கு வெண்ணை கொடுக்கும் ஒரு சில கோபிகளுக்கு ரொம்ப வருத்தம். ரெண்டு நாளாக கண்ணனுக்கு என்று வைத்திருக்கும் வெண்ணையை கொண்டு கொடுக்க முடியவில்லை. ஆற்றைக்கடக்க வழியில்லை. ஓடக்காரனும் ஊரில் இல்லை. வெள்ளம் பெருகி ஓடுகிறது யமுனையில். அடுத்த கரைக்கு எப்படி சென்று கண்ணை பார்ப்பது, வெண்ணெய் கொடுப்பது?
தவித்தார்கள். துடித்தார்கள். அப்போது ஒருவள் சொன்னாள் : ''இங்கே வியாச முனிவர் வந்திருக்கிறாரே . அவரைப் போய் யோசனை கேட்போம். ஏதாவது வழி செய்வார். எப்படியாவது அக்கரை செல்லலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தவ முனிவர் ஆயிற்றே அவர்.
ஒரு ஆஸ்ரமத்தில் வியாசர் வந்து தங்கியிருந்தவர் த்யானத்தில் ஆழ்ந்திருந்தார்.
அவர் கண் விழிக்க காத்திருந்து வணங்கி ''மகரிஷி, எங்களுக்கு கண்ணனை எப்படியாவது இன்று சந்திக்கவேண்டும். ஆற்றின் அக்கரையில் இருப்பவனை எப்படி காண்பது. ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. ஓட்டமும் இல்லையே. நீங்கள் தான் ஏதாவது வழி செயது உதவ வேண்டும்'' என்று கதறினார்கள்.
சற்று நேரம் அமைதியாக வியாசர் கண்மூடி மனதார கிருஷ்ணனை வேண்டினார். ''கிருஷ்ணா கிருஷ்ணா'' என்று உரக்க அவர் வாயிலிருந்து சப்தம் வெளி வந்தது. பிறகு அந்த கோபியர்களைப்பார்த்து
''கோபியரே , எப்போது பார்த்தாலும் ''கிருஷ்ணா கிருஷ்ணா'' என்று அவனையே தொழுது, வேண்டி,அவனுக்கு மட்டும் வெண்ணெய் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள், எல்லாமே கிருஷ்ணன் தானா உங்களுக்கு?. நான் ஒருவன் ரிஷி, வயதானவன் இங்கே இருக்கிறேனே. எனக்கு கிடையாதா? '' என்கிறார் வியாசர்.
கோபியர் அதிர்ந்து போயினர். இப்படி கேட்டுவிட்டாரே இந்த ரிஷி? இருக்கும் வெண்ணையில் வியாசருக்கு சிறிது கொடுக்கிறார்கள். அதை உண்ட வியாசர் ''இன்னும் கொஞ்சம் தா'' என்று குழந்தை மாதிரி கேட்கிறார். கொடுக்க கொடுக்க ''இன்னும் இன்னும்'' என்கிறார். கண்ணனுக்கு என்று அவர்கள் கொண்டுவந்த எல்லா வெண்ணையும் கிட்டத்தட்ட காலி ஆகிவிட்டது. துளியூண்டு தான் கிர்ஷ்ணனுக்கு என்று மிஞ்சி இருந்தது.
இது என்ன இப்படி பண்ணிவிட்டார் இந்த வியாச ரிஷி. எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு, கண்ணனுக்கு துளியூண்டு வெண்ணையை தான் விட்டு வைத்திருக்கிறார். சரி நாம் என்ன செய்வது'' என்று அமைதியாக வியாசர் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்தார்கள்.
''வாருங்கள் என்னோடு'', என்று சொன்ன ;வியாசரோடு யுமுனைநதி க்கரை அடைந்தார்கள்.
"ஓ ய;யமுனாதேவி , இதோ பார் நான் ஒன்றும் சாப்பிடாதவனாக இருந்தால் உடனே இந்த நதி ரெண்டாக பிளந்து வழி விடட்டும். அதில் நடந்து அக்கரையில் உள்ள கணனனை இந்த கோபியர் சென்று பார்க்கட்டும்'' என்று கைகூப்பி யமுனையை வேண்டினார்.
காற்று பலமாக வீசியது. மரங்கள் ஆடின சப்தம் செய்தன. யமுனை ஓவென்ற பேரிரைச்சலை நிறுத்தினாள். நதி இரண்டாக பிரிந்து வழி விட்டது. கோபியர்களுக்கு வியர்த்தது. உடல் நடுங்கியது. ஆச்சர்யத்தில் பேச்சு நின்றது. ''என்ன நடக்கிறது இங்கே, வயிறு புடைக்க கண்ணனுக்கு வைத்திருந்த வெண்ணையை எல்லாம் கேட்டு வாங்கி விழுங்கிவிட்டு நான் ''ஒன்றும் சாப்பிடவில்லை என்றால் '' என்று பொய் சொல்கிறாள். அதை நம்பி யமுனாதேவியும் வழிவிடுகிறாளே.''
அடுத்த கரை அடைந்து ஓடினார்கள் கண்ணனிடம். அவன் உறங்கிக்கொண்டு இருந்தான். ஒவ்வொருநாளும் ஆவலாக அவர்களுக்காக காத்திருப்பவன் ஏன் இப்படி அவர்கள் வருவதை லக்ஷியம் செய்யாமல் உறங்குகிறான்? எழுப்புகிறார்கள்.
''கிருஷ்ணா, என்னடா, உனக்கு நாங்கள் வெண்ணை கொண்டுவருவோம் என்று தெரியுமே. ஆவலாக காத்திருப்பாயே. இன்று பசி இல்லையா?' இந்த உனக்கென நாங்கள் கொண்டுவந்த வெண்ணையில் கொஞ்சம் தான் இருக்கிறது அதை நீ உண்டு மகிழ்''
''இல்லை அம்மா, எனக்கு பசியும் இல்லை, வயிற்றில் இடமும் இல்லை. ஆற்றின் அக்கரையில் மகரிஷி வேத வியாசர் தங்கி இருக்கிறார். ''இன்னும் இன்னும் சாப்பிடு '' என்று வயிறு முட்ட சாப்பிடு என்று நிறைய வெண்ணையை எனக்கு அளித்துவிட்டாரே"
''என்ன கிருஷ்ணா நீ சொல்கிறாய். வேத வியாசர் ஆற்றின் அந்த பக்க கரையில் அல்லவோ இருக்கிறார். உன்னை எங்கே பார்த்தார்?, உனக்கு கொடுக்க வைத்திருந்த வெண்ணை எல்லாம் மிச்சமில்லாமல், எல்லாவற்றையும் அவரே அல்லவோ சாப்பிட்டார். கண்ணாலே இதை பார்த்தோம். யமுனையிடம் பொய் வேறு சொன்னார் தான் ஒன்றுமே சாப்பிடவில்லை'' என்று.
"ஆமாம் ஆமாம். வியாசர் நீங்கள் கொடுத்த அத்தனை வெண்ணையும், எனக்கு திருப்தி அளிக்கட்டும் என்று தானே வேண்டிக்கொண்டு சாப்பிட்டார். என் வயிறு ரொம்பாதா? ''என்றான் கிருஷ்ணன்.
No comments:
Post a Comment