J.K. SIVAN
நம்மில் யாருக்கேனும் நமது பாரத தேசம் ஒரு புண்ய பூமி தான் என்பதில் துக்குணியூண்டேனும் சந்தேகம் இருக்குமானால் கொஞ்சநாள் அவர்கள் பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ, இரான், இராக்கிலோ அல்லது எங்கோ ஒரு நாட்டில் இருந்து விட்டு மீண்டும் இங்கே வரவும். யாரும் சொல்லாமலே தானாகவே தெரியவரும். இந்த புண்ய தேசம் இப்போது சரியாக பராமரிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் கொஞ்சமாவது நமது பண்பாடு பரிமளிக்க யார் காரணம், எது காரணம்?
நமக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையரும்,நம்மில் பலர் வணங்கும் தெய்வங்களும், நலமோடுநாம் வாழ வழிகாட்டி வாழ்த்திய புண்ய புருஷர்களும் தான். இயற்கையோ அன்று போல் இன்றும் , என்றும் ,இருப்பது. கொஞ்சம் உரு மாறிவிட்டது. அதை வெறுத்து வருத்தி சின்னா பின்னமாக்கி நாகரிகம் என்ற போர்வையில் நாமே உண்டாக்கிக்கொண்ட குளிரில் வாடுகிறோம்.
இந்த மார்கழி விருந்தை ருசிக்க சற்று பின்னோக்கி செல்வோம். பண்பையும் பக்தியையும் ருசிப்போம். குளிர் என்று சொன்னவுடனே மார்கழி கவனத்துக்கு வருகிறதே! இன்றுமுதல் துவங்கும் மார்கழி பற்றியே ஆரம்பிப்போமே.மார்கழி என்ற வுடனேயே என்ன தோன்றுகிறது?
''மார்கழித் திங்கள் என்ற பாடல் மட்டும் போதும், மடி நிறைய பொங்கல் வேண்டாம். ஒரு தொன்னையே போதும். பிரசாதம் உணவல்ல. இறை அருள் பெற விழைய, ஒரு தூண்டு கோல்.
மார்கழியை மணக்க வைத்த மா 'மனிதை' (இது என் தமிழ்) ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் எட்டிய தூரத்தில் என்றும் நம் கண் முன்னே நின்று, மனத்தை ஆக்ரமிக்கும் பெண் தெய்வம். பெருமாள் இருக்கும் இடமெல்லாம் ஒரு சந்நிதியில் தானும் நமக்காக அருள்பவள். மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள் என்று சொல்கிறவர்களும் உண்டு. கண்ணன் இருந்த காலத்தில் தானும் வாழ்ந்ததாக தானே ஒரு காட்சி அமைத்து எண்ணத்தில் வாழ்ந்து நம் மனத்தில் இடம் பிடித்தவள் ஆண்டாள். வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தில் துளசியோடு துளசியாக பெரியாழ்வார் கண்டெடுத்த, அவதரித்த, கோதை எனும் பெயர் பெற்றவள்.
அரங்கனுக்கு, ரங்க மன்னாருக்கு பூச்சூட ஒரு பெரும் நந்தவனமே வளர்த்த பெரியாழ்வார் தனது வழியிலேயே சுடர்க்கொடியை வளர்த்தார். தமிழ் கலந்த பக்தியை வளர்ப்பு மகளுக்கு ஊட்டினார். தேனிலே ஊரினவள் தேனான பாசுரங்களை இயற்ற வழிகாட்டினார். தனக்குத் தெரிந்த சாஸ்திரம், வேதம்,பக்தி மார்க்கம், அனைத்தும் தீஞ்சுவைத் தமிழில் கலந்து ஊட்டி அவளைப் பக்குவப் படுத்தினார். திருப்பாவை பிறந்தது.
திருப்பாவை 30 பாசுரங்களையும் கோதைநாச்சியார் எழுதியபோது தன்னைக் கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் அந்த ஊர் சிறுமிகளில் ஒருவளாக உருவகப் படுத்திகொண்டு அந்த இடைச்சிறுமிகளோடு பாவை நோன்பு நோற்றபோது அவள் கிருஷ்ணனின் பெருமையை உணர்த்தியதிற்கு ஈடு இணை இல்லை.
மார்கழி 30 பாசுரங்களையும் ஒருநாளைக்கு ஒன்றாக அந்த பாசுரங்களை தொடர் நிகழ்ச்சியாக தொகுத்து அந்தச்சிறுமியர்களின் பேச்சு வாயிலாக திருப்பாவை பாசுரங்கள் சுடச்சுட அக்காரவடிசலாக இன்றுமுதல் பி விநியோகமாகும்.
இதைக் கையாண்ட விதத்தை பற்றி சொல்லும்போது ஆண்டாள் என்பவள் ஆயர்பாடி இடைச்சிறுமிகளில் ஒருவளாகவும் அதே நேரம் வில்லிப்புத்தூரில் சிறந்த விஷ்ணு பக்தர், பெரிய ஆழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணு சித்தர் கண்டெடுத்த வளர்ப்பு மகள் கோதையாகவும் ஒரே சமயத்தில் ஒவ்வொரு பாசுர கதையிலும் அறிமுகமாகிறாள்
மார்கழி 1ம் நாள் ''
''ஏம்மா, குழந்தை வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துட்டே.? உன்னுடைய திவ்ய குரல்லே நீ பாசுரங்கள் பாடும்போது என்னை ஸ்ரீ வைகுண்டத்துக்கே கொண்டு சேர்க்கிறதம்மா''.
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார் குரல் தழுதழுத்தது.
''அப்பா. எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது தானே. எனக்கு நீங்க இல்லாட்டா இதெல்லாம் வருமா அப்பா. அரங்கனை அறிமுகப் படுத்தியதே நீங்கதானே. காரணமே நீங்க தானே. என் ரங்கனை பத்தி பாடத் தோண வச்சதே நீங்க தானேப்பா?
''ஆமாம் தாயே, நான் செஞ்ச பெரிய பாக்கியம் உன்னை அடைந்தது. உன் மூலமா அந்த ரங்கனை நினைக்கிறது, அவனைப் பத்தி பேசறது, பாடறது எல்லாம். இப்படியே என் வாழ்நாள் பூராபோகணும்னு தோணறது அம்மா. இப்பல்லாம் நீயே எழுத்தாணி பிடிச்சு ஓலைச்சுவட்டிலே நிறைய எழுத ஆரம்பிச்சுட்டே. ரொம்ப சந்தோஷம் , தாங்கலை எனக்கு.''
'' நிறைய எழுத மனது துடிக்கிறது அப்பா. ஒண்ணை நினைச்சு எழுதறத்துக்குள்ளே அதைக்காட்டிலும் அருமையாக வேறே ஒண்ணு மனசுக்குள்ளே ஒடறதாலே முதல்லே நானே அதைப் பாடிப்பார்த்து அனுபவிச்சுக்கிறேன்.''
'ஏன் சீக்கிரம் எழுந்துட்டேன்னு கேட்டேளே. வாசலைப் போய் பாருங்கோ, பெருக்கி, சாணம் தெளிச்சு,மெழுகி, பூ செருகி பெரிய கோலம் போட்டிருக்கேன், '' ரங்கா வா'' என்றும் எழுதி இருக்கேன்''
''மார்கழி மாசம். பிரம்ம முகூர்த்தத்திலே சகல தெய்வங்களும் பூமிக்கு வரா அம்மா. நீ வான்னு எழுதி கூப்பிடறத்துக்கு முன்னாலே உன் குரல் கேட்டே ஓடி வருவான், அந்த ரங்கன், எனக்கு தெரியாதா? நீ என்ன புதுசா பாடினே?''
''அப்பா, மார்கழிலேவிடியறதுக்கு முன்னே எழுந்து நீராடி விரத மிருந்து முப்பது நாளும் அந்த நாராயணனையே நினைத்து நோன்பு நோற்றால் அந்த ரங்கன் வேண்டியதை தருவான் என்கிறதாலே எனக்கு அவனே வேண்டுமென்றே இந்த மாதம் பூரா நோன்பு நோக்கறேன். அந்த மாய கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலேயே நான் இருக்கிறதா மனசாலே அங்கே போய் மீதி பெண்களோடு சேர்ந்து கொண்டு அவர்களில் நானும் ஒருத்தியா அங்கே ''ஆண்டாள்'' ஆகிட்டேன் பா. நான் உடம்பிலே இங்க இருந்தாலும் மனத்திலே கிருஷ்ணன் வீட்டையே சுத்திசுத்தி வரது தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கு அப்பா. ''
''என்ன எழுதினே படியேன் கேக்கறேன். கண்ணு சரியா தெரியலை. ஓலைச்சுவடு படிக்க வெளிச்சம் போறலே.''
++++
இது ஆயர்பாடி கிராமத்தில் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்:
கோதை ஆயர்பாடி இடைச்சிறுமி ஆண்டாள் ஆகிவிட்டாள் மார்கழி மாதம் குளிர். யமுனை உறங்குவது போல் அமைதியாக இருக்கிறது.அதை எழுப்புகிறாள் ஆண்டாள். முதலில் தூக்கம்கலைந்து எழுந்தவள் தனது குடிலை விட்டு வெளியே வந்தாள். பாடுகிறாள்:
‘’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். ‘’
++++
வில்லிப்புத்தூரில் கோதை, ஆண்டாளாக ஆயர்பாடியில் தன்னை உருவகப் படுத்திக்கொண்டு பாடிய பாசுரம் கணீரென்று கோதையின் குரலில் திருப்பாவை முதல் பாசுரமாகத் தோன்றியது. விஷ்ணு சித்தர் கண்களில் நீர் மாலை.
'''அசாத்யம், ஸ்ரீயப்பதே, ரங்கநாதா, எல்லாம் உன் கிருபை. என்ன அற்புதம் இந்தக் குழந்தையின் பக்தி ச்ரத்தை. என் தாயே, கோதை, நீ லக்ஷ்மி அம்சம் என்பதில் சந்தேகமே இல்லை. என்ன திவ்யமாக எழுதியிருக்கிறாய். இவ்வளவு காலம் நான் எழுதினத்துக் கெல்லாம் சிகரமாக உன் எழுத்தில் பக்தி பாவம் மிளிர்கிறதே. எல்லாம் அந்த ரங்கன் செயல்.''
நாளைக்கு நீ எழுதப்போவதையும் ஆவலாக கேட்க காத்திருக்கேன்.
''ஓவ்வொரு நாளும் பாசுரம் எழுதப்போறேன். நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த நாராயணன் அவதாரமான கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனையில் நீராடி நல்ல கணவன் கிடைக்க காத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும் எழுதப்போகிறேன்.
+++
வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தரையும் கோதையையும் விட்டுவிட்டு நாம் இப்போது ஆயர்பாடிக்கு செல்கிறோமே அங்கு சில பெண்கள் விடியற்காலையில் கூடியிருக்கிறார்கள். மற்றும் சிலரை எழுப்பச் செல்கிறாள் ஆண்டாள் என்கிற சிறுமி. '
''மார்கழி வந்து விட்டதே. எழுந்திருக்க வேண்டாமா. நாம் எல்லாருமாக யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ கிருஷ்ணனைப் பணிவோம். அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள.தோழியர்களே எழுந்திருங்கள்.''
''என்னடி ஆண்டாள் , இந்த மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களை எழுப்பி வா குளிப்போம், பாடுவோம் என்கிறாய். எதற்கு ஏன் என்கிற விஷயம் சொல்லேன்? என்றனர் அந்த ஆயர்பாடி சிறுமியர்
அவளிடம். அவள் சொன்னாள்:
''நான் சொல்றேன் ஆனால்ஒரு நாளைக்கு ஒரு விஷயம் தான் சொல்வேன். அப்போதான் உங்களுக்கு கொஞ்ம் கொஞ்சமா புரியும். ஒரே அடியா ஒரு மாச விஷயத்தை ஒரே நாளில் சொல்லித் திணிக்கக் கூடாது.
இன்னிக்கு மார்கழி 1ம் நாள். இந்த மார்கழி என்கிற மாசம் ரொம்ப ஒசத்தியானது.எனக்கென்னமோஇந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது. தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த ஊர் என் உயிர். ஏன் என்றால்
இதில் தான் கிருஷ்ணன், அந்த ஆண்அழகன், கருநீல வண்ணன், செவ்விதழ், கன்னம், செந்தாமரை போன்ற கண்கள் எல்லாம் உடையவன். அவன் இருக்கும் நம்முடைய இந்த ஆயர்பாடி, ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேகமடி உங்களுக்கு!!. அவன் சாதாரணமானவனா யிருந்தால் இந்த பேச்சுக்கே இடமிலையே! எதிர்த்தவர்களின் உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையைத் தவிர வேறு யார்? அவன் தாய் பற்றி சொல்லவில்லையே, இந்த சிங்கக்குட்டியைப் பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை அவள் பேர்.'' போதுமா?
''நேரமாச்சே, சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து அவனைப் பாடுவோம்,
''ஆண்டாள் கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன் அப்படி என்ன இதுக்கு முக்கியம்?''
''எதற்காக இந்த மார்கழி மாதம் நோன்பு என்று தெரியணும் என்றால் , இந்த மாசம்தான் அந்த கிருஷ்ணனுக்கு, அதாவது நாராயணனுக்கு பிடித்த மாசம். மாதங்களில் அவன் மார்கழியாகவே இருக்கிறானாம் . நாமெல்லோரும் ஏன் இந்த உலகில் எவருமே ஸ்வர்கமடைய நாம் செய்யும் இந்த பாவை நோன்பு தவிர குறுக்கு வழி வேறே இல்லை அல்லவா?
பெண்கள் ஸ்நானம் முடித்து கூட்டமாக சேர்ந்து நாராயணனை நெக்குருகி, மனமுருகிப்பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத்தொடங்கினர். பிறகு தத்தம் வீடு திரும்பினர்.
மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்ய இயலுமா? சென்னை வாசிகளே! திருவல்லிக் கேணி தான் சென்னையின் வில்லிப்புத்தூர். அங்கு மார்கழி முழுதும் கோலாகலமாக விமரிசையாக ஆண்டாள் அபிஷேகம், பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திவ்யதரிசனம் கிடைக்கிறதே, விடாமல் போவோம். நம்மால் முடிந்த நோன்பு இதையாவது செய்வோமே.
No comments:
Post a Comment