Wednesday, December 20, 2017

THIRUPPAVAI. 5



அக்காரவடிசல் சுடச்சுட. - J.K. SIVAN

மார்கழி 5ம் நாள் -- ஆழிமழையா.... ஆழ்ந்த ஞான மழையா??

நீராடி, ஈரத் தலையைத் துவட்டி முடிந்து கொண்டு பரிசுத்தமாக அந்த பெண் குழந்தைகள் அந்தரங்க சுத்தியோடு நாராயணனை வேண்டின. பாடிக்கொண்டே வீடு திரும்பின. கிருஷ்ணன் வசிக்கும் நந்தகோபன் மாளிகையை சுற்றி வந்தன. கூர் வேலொடு வாயில் காப்போன் கண் இமைக்காமல் நின்று கொண்டிருந்தான். வேண்டிக் கொண்டனர் . கோவிலுக்கு சென்றனர் பிரசாதங்கள் படைத்து நோன்பு செய்தனர்.

ஆண்டாள் உனக்கு நன்றியம்மா. உன்னோடு பழகுவது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆயர்பாடி சிறுமிகள் வீடு சென்றனர்.

நாளைக் காலையில் மீண்டும் அவர்களை ஆயர்பாடியில் சந்திப்போம்.அதற்குள் தெற்கே மீண்டும் நேரே வில்லிப்புத்தூர் திரும்புவோம்.

வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் மனத்திலும் கோதை உருவாக்கிய மேற்கண்ட காட்சி தத்ரூபமாக பிரதிபலித்தது.

அந்த சின்னஞ்சிறுமிகள் குதூகலமாக ஆண்டாளைச் சுற்றி ச் சுற்றி வந்து நூறு கேள்விக் கணைகளைத் தொடுத்து அவளும் ஓயாமல் அவர்களுக்கு பதில் சொல்லும் பாங்கு அவருக்கு ரொம்பவே பிடித்தது. எல்லாம் கோதையின் கற்பனை. ஆயர்பாடி.... ஆண்டாள்...... தோழிப் பெண்கள்..... யமுனை நதி... நீராடல்.... துயில் எழுப்புவது.....ஆஹா என்ன அபாரமான கற்பனை என் பெண்ணுக்கு. என்ன திறமை. இதை அடிப்படையாகக் கொண்டதல்லவோ மேற்கண்ட கோதை தீட்டிய சித்திரம்.

''எங்கே மீண்டும் ஒருமுறை இன்றைக்கானா நீ எழுதிய பாசுரத்தைப்படி. இல்லை, இல்லை, பாடு கொழந்தே!''

விஷ்ணுசித்தர் நீட்டியிருந்த காலை மடக்கி கையைக் கட்டிக்கொண்டு எதிரே இருந்த ரங்கனின் பதுமையைப் பார்த்துக்கொண்டே காதைத் தீட்டிக்கொண்டார். அப்பாவை மகிழ்விக்கவும், தானே மீண்டுமொரு தரம் அந்த நாராயணனை, அரங்கனை,. மனம் களிக்க பாடுவதற்கும் கோதை தயாரானாள். கண்கள் மூடி இருந்தன. அவள் வில்லிப்புத்தூரில் இல்லை. பிருந்தாவனத்தில் கண்ணனோடு அல்லவா இருந்தாள்! . ஆனால் குரல் மட்டும் அங்கேயிருந்து வில்லிப்புத்தூரில் கேட்கிறதே.

''ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.''

பெரியாழ்வார் கண்கள் குளமாயின. பெண்ணைக் கட்டி உச்சி முகர்ந்தார். தெய்வமே! என்ன ஒரு உயர்ந்த தத்துவத்தை எளிதாக்கி விட்டாய். அந்த பாசுரம் அவர் மனதில் எவ்வாறு பதிந்தது தெரியுமா?

''எவ்வளவு பலமான சக்தியா யிருந்தாலும், மழையோ, இடியோ, நீரோ நெருப்போ, பரமனின் அடியார்களை அருகில் நெருங்காது என்பதை அந்த சிறிய பெண்கள் மூலம் கோதை உணர்த்துகிறாளே. நாடு செழிக்க வேண்டும் என்ற பெருந்தன்மை பரந்த மனப்பான்மை பிராட்டிக்கு அல்லவோ உரித்தானது. கோதையே அந்த பிராட்டிதானோ? துளசிவனத்தில் கண்டெடுக்கும்போது அந்த எண்ணம் தானே மனதில் தோன்றியது!

வால்மீகி சொன்னது நினைவுக்கு வருகிறதா?

நாற்பதாயிரம் அரக்கர்களை ராமன் கொன்றபோது, எவருமே அவன் கோதண்டத்தை கையில் எடுத்ததையோ, காது வரை நாணை இழுத்ததையோ, அம்பைக் குறி பார்த்து செலுத்தியதையோ மின்னல் வேகத்தில் சரங்கள் சென்று தாக்கியதையோ காணவில்லை. அரக்கர்கள் கதறி விழுந்தது ஒன்றுதான் தெரிந்தது.

ஆண்டாளின் ஆசை என்னவென்று தெரிகிறது. நிறைய இடி இடித்து, கொட்டோ கொட்டு என்று ஆயர்பாடியில் மழை பொழியவேண்டும். ஆநிரைகள், மக்கள் சுபிக்ஷமாக வாழவேண்டும். அவ்வளவுதான்.

''ஆஹா, ஆசார்யன் தான் பிரம்ம ஞானம் கொண்டவன். பரமனன்றி வேரெதிலும் மனம் லயிக்காது. எப்படி கருமேகம் உப்பான கடல் நீரை சுமந்து இனிய மழையாக பொழிகிறதோ அவ்வாறு ஆண்டாள் பகவத் விஷயத்திலும், போதனையிலும் சிறந்து விளங்குகிறாளே ஞான மழை பொழிகிறாளே."

LISTEN TO MLV SINGING THIS ENCHANTING PASURAM https://youtu.be/9Mx9efyoITk

LISTEN TO MLV SINGING THIS ENCHANTING PASURAM IN THE RAGA VARAALI: https://youtu.be/9Mx9efyoITk

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...