ஹாப்பி கிருஷ்மஸ் - J.K. SIVAN
வாசலில் யாரோ அழைக்கும் மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்தபோது வாசலில் ஜோன்ஸ் .
''வாங்க ஜோன்ஸ் சார்''
''ஐயா உங்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிப் போக வந்தேன்.''
''எங்கே உங்களை வெகு காலமாக காணவில்லை ''.
''நான் இப்போது நாகர்கோயிலில் வேலை மாற்றி போய்விட்டேன். மூன்று வருடங்களுக்கு பிறகு நேற்று இங்கு வந்தேன். நாளை 25.12.17 எங்களுக்கு புனித நாள். உங்களை வணங்கி ஆசி பெற வந்தேன்.''
''கர்த்தர் அருள் பெற காலையில் உங்கள் ஆலயம் செல்வீர்களே ?''
''ஆம் ஐயா. எனக்கு நீங்களும் ஒரு ஆசான். உங்களிடம் மத பேதம் கிடையாது.''
''நாம் வணங்கும் தெய்வங்களிலோ , அவர் படைத்த மாந்தரிலோ யாருக்குமே பேதம் கிடையாது ஜோன்ஸ்''.
''ஐயா, சென்ற முறை சில வருடங்களுக்கு முன் நீங்கள் சொன்ன மகா பெரியவர் வார்த்தைகள் இன்னும் என் காதில் ரீங்காரம் செய்கிறது. எவ்வளவு அழகாக கிருஷ்ணன் கிறிஸ்து பற்றி ஒரு சில அருமையான கருத்துகள் சொன்னார் என்று நீங்கள் எடுத்துரைத்தீர்கள். அதை மீண்டும் ஒரு முறை நீங்கள் சொல்லி கேட்க ஆவலாக உள்ளது அய்யா.
++
1966லே பெரியவா சொன்ன கருத்துச் சுருக்கம் சொல்கிறேன் எல்லோருமே கேளுங்கள்:
''எப்போதும் கிறிஸ்மஸ் பண்டிகையும் திருவாதிரையும் பக்கத்திலே வரும். எல்லாமே டிசம்பர் மாசத்திலே தான். இந்த இரண்டுமே லோகம் பூராவிலும் ரொம்பப் பேர் ‘ஹோலிடே’ யாகவோ, வெறும் ‘ஹாலிடே’ யாகவோ கொண்டாடும் நாளாக இருக்கிறது. இதன் காரண புருஷரையும் நம்மைச் சேர்ந்தவராக, அதிலும் தம்முடைய பேராலேயே நான் சொன்ன அந்த சிவ-விஷ்ணு அபேதத்தைக் காட்டுகிறவராக, சொல்லிக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது!
அவர் பெயரை 'ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறோம். அது ஜெர்மானிக் என்றும் ட்யூடானிக் என்றும் சொல்கிற பாஷா ‘க்ரூப்’பைச் சேர்ந்த ஜெர்மன் பாஷை, இங்கிலீஷ், டச் (DUTCH ), இன்னும் ஸ்காண்டினேவியன் பாஷைகள் என்பதாக நார்வே, ஸ்வீடன், டென்மார்க் முதலான தேசங்களில் பேசப்படும் பாஷைகள் ஆகியவற்றில் அவருக்கு ஏற்பட்டிருக்கிற பெயர்தான். அவருக்கு மூலத்தில் ஹீப்ருக்களின் பாஷையில் என்ன பெயரோ அதுவே – ஸம்ஸ்க்ருத ‘ச்ராவணீ’ தமிழ் ‘ஆவணி’யாக உருமாறின மாதிரி – இந்த பாஷைகளில் ஜீஸஸ் என்று ஆகியிருக்கிறது.
ஆனால் ஜீஸஸ் இந்த பாஷைகள் வழங்குகிற ஐரோப்பாவைச் சேர்ந்தவரேயில்லை. நம்முடைய ஆசியாக் கண்டத்துக்காரர்தான் அவர். அவருடைய தாய்பாஷை அர்மீனியன் என்கிறது. அது ஹீப்ருக்களின் பாஷைகளான ஸெமிடிக் க்ரூப்பைச் சேர்ந்த ஒரு பாஷையே. அதிலே அவருக்கு வைத்த பெயர் ‘யீஷுவ (Yeshua) என்கிறதே! அந்த final ’வ’ வை ‘அ’ மாதிரி பட்டும் படாமலும் சொல்ல வேண்டும். அதுதான் மற்ற ஐரோப்பிய பாஷைகளில் ‘ஜோஷுவா’ என்றும் ’ஜீஸஸ்’ என்றும் ஆயிற்று.
‘ய’ கர வரிசை ‘ஜ’கர வரிசையாவது எல்லா இடத்திலேயும் உண்டு. வேதத்திலேயே மற்ற சாகைகளில் (கிளைப் பிரிவுகளில்) ‘ய’ என்று வருவது வடதேசத்தில் இப்போதும் அநுஷ்டானத்திலிருக்கிற சுக்லயஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகையில் ‘ஜ’ என்றுதான் வரும்…. யமுனாவை ஜமுனா என்கிறார்கள். யந்த்ரம் என்பதை ஜந்தர் என்கிறார்கள். தமிழிலே ஸம்ஸ்க்ருத ‘ஜ’வை ‘ய’ ஆக்குவது ஸஹஜம். வேடிக்கையாக இதற்கு ஒரு ‘கான்வெர்ஸ்’! ஸம்ஸ்க்ருதத்தில் ‘யாமம்’ என்றே இருப்பதை நாம் ‘ஜாமம்’ என்கிறோம்! எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், ‘யீஷுவ’வின் ‘யீ’தான் ‘ஜீஸ’ஸில் ‘ஜீ’யாகியிருக்கிறது. அந்த ‘ஜீ’யை நாம் மறுபடி ‘ய’காரப்படுத்தி, ஆனால் கொஞ்சம் வித்யாஸமாக, ‘யேசு’ என்கிறோம்.
மூல ‘யீஷுஅ’ நம்முடைய ‘ஈச’ தான், அதாவது சிவ நாமாதான் என்று வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது.
அப்படிச் சொன்னால் நம்மவர்கள், அந்த மதஸ்தர்கள் இரண்டு பேரிலுமே யாராவது அபிப்ராய பேதமாகச் சொல்வார்களோ, என்னவோ? பேதம் வேண்டாம் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஆனபடியால் வைத்துக் கொள்ளலாமே என்றில்லாமல் வைத்துக் கொள்ளலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது என்று வேண்டுமானால் திருத்திக் கொள்கிறேன்!
‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’டில் ‘ஜீஸ’ஸை ‘ஈச’னாகச் சொல்லலாமோ என்று!
‘க்ரைஸ்ட்’டுக்கு வருகிறேன். அது முழுக்கவும் ஐரோப்பிய பாஷையாகவே ரூபமான (உருவான) வார்த்தைதான். நாம் பட்டாபிஷேகம் என்று விசேஷமாக அபிஷேகம் பண்ணுகிறோமோல்லியோ? மங்கள ஸ்நானம் என்று தலைக்குத் தைலம் வைத்து அப்படிப் பண்ணுகிறது. இதே மாதிரி எல்லா தேசங்களிலும் மத சாஸ்த்ரபூர்வமாகத் தைலம் தேய்ப்பதாக இருந்திருக்கிறது. அப்புறம் ஸ்நானம் பண்ணுவிக்கிறது இல்லை; தைலம் தேய்த்து மட்டும் நிறுத்தி விடுவது. கொஞ்சமாகப் பூசுவதால், அதுவே உள்ளே போய் விடும். அதற்கு ‘அனாயிண்ட்’ பண்ணுவதென்பது பெயர். ஈச்வரனே அந்த மாதிரிச் சில பேரை லோகோத்தாரணம் பண்ணுவதற்காக ‘அனாயிண்ட்’ பண்ணி, அதாவது பட்டாபிஷேகம் பண்ணி, ‘மெஸையா’ (Messiah) என்று அனுப்புவதாகச் சொல்வார்கள். ஹீப்ரு ‘மேஷியா’ இங்கிலீஷில் ‘மெஸையா’ ஆயிற்று. அதற்கே ஐரோப்பிய பாஷையான க்ரீக் (Greek)-ல் இருக்கிற பெயர் ‘க்ரைஸ் டோஸ்’ என்பது. அதன் அடியாகத்தான் இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ‘க்ரைஸ்ட்’ என்ற வார்த்தை ஏற்பட்டது. ஜீவ ஸமூஹ உத்தாரணத்துக்கென்றே ஈச்வரன் அனாயிண்ட் பண்ணி அனுப்பினவரே ஜீஸஸ் என்கிற நம்பிக்கையுள்ள மதஸ்தர்கள் அவரொருத்தரையே குறிப்பாக அப்படிச் சொல்வதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘ஜீஸ’ஸுக்கு ‘ஈச’ ஸம்பந்தம் காட்டின மாதிரி இந்த ‘க்ரைஸ்டு’க்கு கிருஷ்ண ஸம்பந்தமும் காட்டினாலென்ன என்று தோன்றுகிறது!
கிருஷ்ணனை நாம் கிஷ்டன், கிட்டன், கிருட்டிணன் என்றெல்லாம் சொல்கிறோமோ இல்லியோ? இந்த மாதிரி ‘க்ரிஸ்டன்’ என்றும்தான் சொல்லலாம். முடிவிலே சொல்லும் ‘அன்’ விகுதி தமிழில்தான் உண்டு. நாம் ‘ஈச்வரன்’ என்பது வடக்கத்திக்காரர்களுக்கு ‘ஈச்வர்’தான்; நம் சங்கரன், ராமன் எல்லாமே சங்கர், ராம் என்றிப்படித் தான்! வர வர இங்கேயும் அதுவே ஃபாஷனாகி வருகிறது… அது இருக்கட்டும்…. ‘அன்’ விகுதி போய்விட்டால் க்ரிஸ்டன் ஆன க்ருஷ்ணன் என்ன ஆவான்? ‘க்ரிஸ்ட்’ என்று தானே ஆவான்? ‘சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?
ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.
(நெடுநேரம் தாமும் சிரித்து உடனிருந்தோரையும் சிரிக்க வைத்து விட்டு மஹா பெரியவா தொடர்கிறார்: ) இப்படியாகத்தானே சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே அந்த இரண்டு பேருக்குமான திருநாள்களுக்கு மத்தியிலே வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. தோன்றினதைச் சொன்னேன்.''
++
பிரமாதம் சார், மகா பெரியவா மகா பெரியாவா தான். சார் இதைப்பாருங்கோ என்று ஒரு காகிதத்தை நீட்டினார்.
என்னது ஜோன்ஸ் சார் இது?
நீங்கள் போன வருடம் கிறிஸ்மஸ் அன்று எழுதியது சார் இதை நூறு காபி எடுத்து எங்கள் பள்ளியில் கொடுத்தேன். நிறைய பேர் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அதை ஞாபகமாக ஒரு காபி உங்களிடம் கொண்டுவந்து காட்டினேன்.
பிரித்து பார்த்தேன். என்ன எழுதிஇருந்தேன் போன வருடம்?
++
"மரகதமும் மார்கரெட்டும் இணை பிரியாத தோழிகள் அடுத்த அடுத்த வீடு. ஒரே வகுப்பில் தான் ஆரம்பத்திலிருந்தே படிப்பவர்கள். மகிழமரத்தடியில் பாண்டி விளையாடியவர்கள்.
''மரகதம், இன்னிக்கு உனக்கு கிறிஸ்மஸ் கேக் கொண்டுவந்திருக்க்றேன் சாப்பிடு. நீ கொடுத்த திருவாதிரைக் களி இன்னும் நாக்கில் தேன் சொட்டுறது. எல்லாபண்டிகைகளும் இந்த மாதிரி கிட்டே கிட்டேயே வந்து நம்மை சந்தோஷப்படுத்துகிறதைப் பார்த்தாயா?
''மார்கி, சந்தோஷம் சாப்பாட்டிலே இல்லை, மனசிலேதான் இருக்கு என்று தாத்தா அடிக்கடி சொல்வார். வாஸ்தவம். நான் இன்னிக்கு காலம்பர படிச்ச ஒரு விஷயம் உனக்கு சொல்லட்டுமா?''
''மரகதம் நீ எப்பவுமே ரொம்ப அழகா பேசுவியே. உன் வாயாலே சொல்லேன் கேக்கறேன்.''
''இல்லே இந்த ரெண்டு மதத்திலேயும். உங்க கிறிஸ்டியன் மதத்திலே போற்றும் கிறிஸ்துவும் எங்க மதத்திலே நாங்க வணங்கும் கிருஷ்ணனும் ஏறக்குறைய ஒரே மாதிரி வாழ்ந்திருக்கலாமோ என்று தோணித்து .''
''எப்படி சொல்றே?'' என்றாள் மார்கரெட்
'' சொல்றேன் கேளு மார்கி :
''கிருஷ்ணனும் கிறிஸ்துவும் ரெண்டு பேருமே பகவான் அவதாரம். ரெண்டுபேருமே பிறந்ததே கடவுள் அனுக்ரஹத்தாலே மனிதர்களாக வந்தவாளாம் . பிறந்ததே ஒரு லோக சம்ரக்ஷண காரியத்துக்காகவாம். அவா பிறக்கப் போகிறதே முன்னாலேயே தெரியுமாம்.
பிறந்ததும் கூட எங்கேயோ மாட்டுதொழுவம், சிறைச்சாலை என்று யாரும் யோசித்துப் பார்க்காத இடமாம்.
ரெண்டு பெரும் குழந்தையா இருக்கும்போதே அவர்கள் உயிருக்கு ஆபத்தோடு தானாம்.
அவரகளைக் கொல்றதுக்கு எத்தனையோ முயற்சிகளாம்
ஒருத்தர் ஆடு மத்தவர் மாடு மேய்ச்சவராம் .
அவா ரெண்டு பேர் பிறந்த சமயம் அவர்களுடைய நாடு ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்ததாம். அவா பிறந்தா தான் விடிவுகாலம் என்று இருந்ததாம்.
ரெண்டு பேருக்குமே ஏதோ சாதரணமாக மரணம் இல்லையாம். ஒருத்தருக்கு ஆணியாலே, ஒத்தருக்கு அம்பாலே.
''என்ன ஆச்சர்யமா இருக்கு மரகதம்? மேலே சொல்லுடி.''
''இதைக்கேளு. ரெண்டு பேருமே ''எல்லாரையும் அன்பாக நேசியுங்கள்; என்று தான் சொல்லியிருக்கா.
ரெண்டு பேருமே நீலம் சம்பந்தபட்டாவர்கள் தானாம். ஒருத்தர் கண்ணு நீலம் மதத்தவருக்கு உடம்பு நீலக் கலராம்.
இன்னொன்று சொல்லட்டுமா? ஒருத்தர் ஆட்டுக்குட்டி வச்சிண்டிருப்பார். கிருஷ்ணன் கன்னுக்குட்டியோடு இருப்பார்.
ரெண்டு பேருக்குமே இந்த மார்கழி மாசம் (டிசம்பர்) ஒசத்தி. ஒருத்தர் பிறந்தது. மதத்தவருக்கு பிடித்தது
பேரே கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரி இல்லையா ? கிருஷ்ணன் - கிறிஸ்து.
ஒருத்தர் சொன்னதை பைபிள் என்றும் அடுத்தவர் சொன்னதை பகவத் கீதை என்றும் போற்றுகிறோம்.
''மரகதம் நீ சொல்றதைப் பார்த்தால் இன்னும் ரொம்பவே சொல்வே போல் இருக்கு.''
''ஆமாண்டி மார்கி. யோசித்துப் பார்த்தா இன்னும் அனேக ஆச்சர்யமான விஷயங்கள் இருக்கும்போல தான் தோணறது.
ரெண்டு பேருமே கோடானு கோடி மக்கள் கொண்டாடற தெய்வங்கள் என்று பார்க்கும்போது அவர்களுக்குள்ளேயே இத்தனை ஒத்துமை இருக்கே எப்படி மரகதம்?''
''ஆமாம் மார்கி. அவர்கள் ரெண்டு பேருமே ஒரே மாதிரி இருந்ததே நாம எல்லாரும் அதே மாதிரி ஒத்துமையா இருக்கணும் என்று காட்டவே தான்.''
தாத்தா சிரித்துக்கொண்டே ஜோன்ஸ் சார் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பண்டிகைகள் என்று கொள்வோமா.
அப்படியே அனைவருக்கும் முடிந்தபோதெல்லாம் சொல்வேன் அய்யா.
வணங்கிவிட்டு சென்றார் ஜோன்ஸ்.
திருப்பாவையைப் பிரித்து நாளைய பாசுரம் படிக்கலாம் என்று எனக்கு தோன்றிற்று. .
No comments:
Post a Comment