Tuesday, December 26, 2017

THIRUPPAVAI 12





சுடச்சுட அக்காரவடிசல்: J.K. SIVAN


மார்கழி மாத 30 விருந்தில் இன்று 12வது நாள்

'' நீங்க திருப்பாவை தினமும் எழுதறீங்கன்னு சொல்றா. திருப்பாவையை புதுசா எழுதறீங்களாமே?''என்கிறார் ராகவன் இன்று காலை..

'' சார் நீங்க சொல்றதை கேட்கும்போது இந்த குளிரிலேயும் எனக்கு வேக்குது. நான் திருப்பாவை எழுதல சார். ஆண்டாள் எழுதியது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வர முப்பது பாசுரங்கள். ஒரே பெண் ஆழவார் ஆன கோதை நாச்சியார் எழுதினது. அதுவும் நான் புதுசா எழுதறதுன்னா...... நினைச்சு கூட பார்க்க முடியலே ராகவன் சார்'' என்றேன்.

''அப்போ நான் கேள்விப்பட்டது?''

''திருப்பாவை பாசுரங்களை ரசித்து அதை ஒரு காட்சியாக விளக்குகிறேன். ஒரு பாதி ஆயர்பாடியில் கிருஷ்ணன் ஊரில் நடப்பது போலவும் அதையே இன்னொரு பாதியாக வில்லிப்புத்தூரில் கோதை நாச்சியார் வீட்டில் பெரியாழ்வார் முன்னிலையில் நடப்பது போலவும் அளிக்கிறேன். அவ்வளவு தான். இது நன்றாக இருந்தால் அது ஆண்டாள் கிருபை. அந்த ரங்கன் அருள். அவ்வளவே.

+++


''ஆயர்பாடி கிராமத்தில், பசுக்கள் கூட இன்னும் தூங்கி கொண்டு தான் இருக்கின்றன. தலை ஆட நின்றுகொண்டே சில தூங்குகிறது. கன்றுக்குட்டிகள் சுருண்டு தரையில் படுத்து நீண்ட நித்திரை.

வழக்கம் போலவே நிறைய சிறுமிகள் அந்த அதிகாலையிலும் வீதியில் ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஆண்டாள் மற்றும சிலரை எதிர்பார்த்து காத்திருந்தாள். காற்று சில்லென்று வீசியதையும், பனி எங்கும் சூழ்ந்திருந்ததையும் அவர்கள் லக்ஷியம் பண்ணவே இல்லை.

“ஆண்டாள் என்னடி இன்று ஒருமாதிரி இருக்கிறாய்?”

“ஒண்ணுமில்லை.. தினமும் இவர்களை நாம் போய் எழுப்பி, கிளப்பி நோன்பில் பங்கேற்க வைக்க வேண்டியிருக்கிறதே. அப்படி என்ன தினமும் நாம் அவர்களை எழுப்பும் கடிகாரம் போல் ஆகி விட்டோமே என்று யோசித்தேன். ஆனால் இப்படி இவர்களை துயிலெழுப்பும் போது அந்த மாயகிருஷ்ணனின் நினைவோடும் அவன் பெருமை பாடும் பாசுரங்களை பாடிக்கொண்டும் செய்வது மனதிற்கு இனிக்கிறது. இந்த வேடிக்கை பார்த்தாயா?''

'' என்ன வேடிக்கை ஆண்டாள்? ''

“ இதோ அந்த கோபாலன் நண்பன் சுதாமாவின் வீட்டு வாசலில் (இன்று மார்கழி 12 இந்த வீட்டுக்கும் நம்பர் 12, என்ன பொருத்தம்) நிற்கிறோம். இந்த வாசல் முன்புறத்தில், வாயிலில், மேலே கூரையில்லை. மார்கழி பனி நம் தலை பூரா மழையென நனைத்து குளிர் காற்றில் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது. கீழே பார்த்தால் இதென்ன அதிசயம்?. சுதாமாவின் வீட்டு செழுமையான எருமைகளில் ஒன்று என்ன செய்கிறது பாருங்கள் பெண்களே! அதன் கன்று மெதுவாக அருகில் வர பரம ஆனந்தத்தோடு அந்த தாய் எருமை தனது மடியில் வெள்ளம் போல் தானாகவே சுரக்கும் பாலை எல்லாம் கீழே பொழிய வைத்து இங்கு நிற்கும் நம் கால்களை நனைத்து நம் கால்களுக்கு பால் அபிஷேகம் நடக்கிறதே!

மேலே பனிநீர் பன்னீருக்கு பதிலாக, கீழே பால் -- ஆக நமக்கு இன்று -- இரண்டு அபிஷேகம் ஒரே சமயத்தில்!! ஏன் தெரியுமா?

அந்த கிருஷ்ணனை நாம் பாடிக்கொண்டே நிற்பதால் தான்.

''கோபாலனின் தங்கையே, உன்னைத் தான் அடியே, நாங்கள் வாசலில் பாடி நிற்பது தெரிந்துமா இன்னும் கதவு தாள் திறக்கவில்லை நீ?. எங்கள் பாட்டைக் கேட்டு அண்டை அசல் வீட்டு வாசலில் எல்லாரும் எங்களை வரவேற்று பால், பூ, பழங்களோடு நிற்க நீ என்னடி இன்னும் படுக்கையில் கிடக்கிறாய். சீக்கிரம் வந்து சேர்ந்துகொள். இன்று உனக்கு பிடித்த ராவண சம்ஹார மூர்த்தி ராமனைத்தான் போற்றி பாடுகின்றோம். வா, சீக்கிரம் வெளியே”.

இது பாட்டாக வெளிவந்தது. ஆண்டாள் மிக நன்றாக பாடுவாள். அவள் பாடியதை ஒரே குரலில் திருப்பி சொன்னது அண்டை அசல்வீடுகளில் இருப்போரை எல்லாம் எழுப்பிவிட்டது.அந்த பெண்ணும் எழுந்து விட்டாள்,


''கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்''

அனைத்து பெண்களுமாக சென்று வழக்கம்போல் நீராடி கண்ணனைப்பாடி மனம் உடல் தூய்மையுடன் தங்கள் அன்றைய பாவை நோன்பை இனிது முடித்து வீடு திரும்பினார்கள் என்பது இந்த 12வது நாளும் திரும்பத் திரும்ப சொல்வது வழக்கமாகிவிட்டதல்லவா?

அதேபோல் நாம் வழக்கமாகச்செல்லும் வில்லிபுத்தூர் கிராமத்தில் விஷ்ணு சித்தரின் நந்தவன ஆஸ்ரமத்தில் என்ன நடக்கிறது என்றும் பார்ப்போமா?

எங்கும் நிசப்தம். இருள் இன்னும் நீங்கவில்லை. போர்வை போர்த்தியது போல் வெண் பனித்திரை.

''அந்த தீபத்தைச் சற்று பெரிதாக தூண்டி விடு கோதை, என்னால் இந்த ஓலையைப் படிக்க முடியவில்லை. வெளிச்சம் போதவில்லை .''

'நீங்கள் எதற்கப்பா சிரமப்படுகிறீர்கள். நானே பெரிதாக இன்று கோலத்தில் வாசலில் அந்த பாசுரத்தை எழுதியிருக்கிறேன் வெளியே போய் வாசலில் பாருங்கள்.

விஷ்ணு சித்தர் ஆர்வமுடன் எழுந்து சென்று அந்த பாசுரத்தைப் பார்த்து மகிழ்ந்து படித்தார்.அர்த்தத்தில் ஆழ்ந்தார்.

''இந்த கோதை எவ்வளவு பக்குவப்பட்டவள். கண்ணனும் ராமனும் ஒன்றே. அவர்களுள் என்ன வித்யாசம் என்பதை ஒரு வார்த்தையில் ஆணி அடித்தாற்போல் சொல்லி விட்டாளே ! ராமன் தனது எதிரிகளாலும் விரும்பப்படுபவன். கிருஷ்ணனும் அவ்வாறே எதிரிகளாலும் மதிக்கப்படுபவன். கண்ணனை கண்ணுக்கினியான் என உணர்த்தும்போது ராமனை மனத்துக்கினியான் என்றல்லவோ அலங்கரிக்கிறாள்.''

நெஞ்சம் உருகி கண்ணீராக வெளிவந்ததை ஹே ரங்கா, ரங்கா என்று உச்சரிப்போடு துடைத்துக்கொண்டு உள்ளே திரும்பினார் பெரியாழ்வார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...