மார்கழி 15வது நாள்
'' நானே தான் ஆயிடுக''
சின்ன ஊர். எங்கு எது நடந்தாலும் அடுத்த நிமிஷமே அந்த ஊர் பூரா விஷயம் பரவிவிடும். காரணம் எந்த ஒரு தடையும் கிடையாது. எல்லாமே எல்லாருக்கும் தெரிந்தது தான் என்ற நிலை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த ஊரின் சைஸ். சென்னையில் அடுத்த தெருவில் என்ன நடக்கிறது என்று கூட நம்மால் அறிய முடியாது. தெரு எதற்கு ஓரே ஒரு காம்ப்ளெக்ஸில் முதல் மாடி சமாச்சாரம் அந்த மாடியின் கீழே இருப்பவனுக்கு தெரியாது.
ஆயர்பாடியில் ஒவ்வொரு நாளும் ஊரில் இதே பேச்சு. அந்த ஆண்டாள் எவ்வளவு பக்தி பூர்வமாக உற்சாகமாக கண்ணனைத் துதித்து வழிபட ஊரிலுள்ள மற்ற பெண்களையும் விடியற் காலையில் எழுப்பி நீராடி பாவை நோன்பை பண்போடு செய்ய வைக்கிறாள் என்று அவள் மேல் மட்டற்ற அன்பும் பாசமும் அனைத்து கோப கோபியரிடத்தே தோன்றியது.
வைதேகி வீட்டு வாசலில் ஆண்டாள் நின்ற அன்று மார்கழி 15ம் நாள். வைதேகி பொல்லாத வாயாடி!”
“வைதேகி, வாடி வெளியே, நேரமாச்சு!” ஆண்டாள் குரல் அவளுக்கு உள்ளே கேட்டது. ஆனாலும் அவள் பதிலுக்கு குரல் கொடுத்தாள் .
“ஆண்டாள் உன்னை பத்தி நிறைய தெரியும், உன் அழகு, பேச்சு, பாட்டு, சாமர்த்தியம், பக்தி எல்லாமே. இவ்வளவு சீக்கிரமே ஏண்டி வந்து என்னை எழுப்பறே, மற்ற எல்லாரும் வந்து விட்டார்களா சொல்.? எத்தனை பேர்? எண்ணிச்சொல். அது வரை என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடேன்”,
“எல்லாருமே வந்தாச்சு. நதிக்கும் கிளம்பி நடந்தாச்சு. மறந்து விட்டதா உனக்கு? இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானையை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனை பத்தி நீ அடிக்கடி பாடுவியே அதைநாங்கள் எல்லோரும் கேட்கப் போகிறோம். உடனே அதைப் பாட சீக்கிரமாக எழுந்து வாடி”
யாரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்று ஆண்டாளுக்கு நன்றாகத் தெரியும். அதை உபயோகித்து தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்விப்பதில்அவளுக்கு நிகர் அவளே தான். அடுத்த கணமே, படுக்கையில் கிடந்த அந்தப்பெண் எழுந்தாள். கூட்டத்தில் சேர்ந்தாள்,யமுனைக்கு நடந்தார்கள், நீராடினார்கள். பாடினார்கள். அவள் சிறப்பாக பாடினாள். கிருஷ்ணனே அவள் பாட்டைக் கேட்டு மயங்கினான் என்றால் தவறில்லை. அனைவரும் திருப்தியாக அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பினர்.
எனவே நாம் இப்போது நேராக தெற்கு நோக்கி நடப்போம். வில்லிப்புத்தூருக்குச் சென்று அங்கே நடப்பதைப் பார்ப்போம்.
கோவிலிலிருந்து யாரோ ஒருவர் அதிகாலையிலேயே வந்துவிட்டார். விஷ்ணு சித்தர் தனது மகள் கோதை இயற்றும் திருப்பாவை பாசுரங்களை பற்றி சொன்னதில் வந்தவருக்கு பரம சந்தோஷம். தினமும் விஷ்ணு சித்தரிடமிருந்து பாசுரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மகிழ்வார். இன்று நேரிலேயே கோதை பாடுவதைக் கேட்க வந்துவிட்டார்.
''கோதை அவருக்காக நீ பாடிய இன்றைய பாசுரத்தை மீண்டும் ஒருதடவை ஒரு தடவை பாடிக் காட்டம்மா. ரொம்ப ஆர்வமா கேட்க காத்திருக்கார். அந்த சாக்கிலே நானும் இன்னொரு தரம் சந்தோஷமா அதை கேட்கிறேனே.''
கோதை அமர்ந்தாள் . எதிரே ஓலைச்சுவடியைப் புரட்டினாள் . அன்று அவளால் இயற்றப்பட்ட பாசுரம் அவள் குரலில் வெளியேறி அந்த நந்தவனத்தில் இருந்த மரம் செடி கொடிகளும் ஆர்வமாக கேட்ட பாசுரம் இது தான்.
''எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
ரசித்து ருசித்து பாடினாள் கோதை. முடித்து கண்களை திறந்து எதிரே இருந்த இருவரையும் பார்த்தாள் .
அமைதியைக் கிழித்துக்கொண்டு விடிகாலை புறப்பட்ட அந்த நாத ஒலி அண்ட பகிரண்டங்களை எல்லாம் விழுங்கிவிட்டு விண்ணோரை மண்ணோரை எல்லாம் மயக்கிவிட்டு, சாதுவாக இருக்கும் இடம் தெரியாமல் அந்த அமைதியான ஆஸ்ரமத்தில் அடங்கியது.
''ரொம்ப ஆச்சர்யம். சுவாமி, உங்க பொண்ணு, தெய்வப்பிறவி. சாக்ஷாத் அந்த மகாலட்சுமி தாயாரே வந்து பொறந்திருக்கா '' என்று தோன்றுகிறது. இதிலே பொருந்தியிருக்கிற உள்ளர்த்தத்தை வழக்கம்போலே நீங்களே அடியேனுக்கு சொல்லணும் ''
''ஒருத்தர்கிட்டே ஒரு நல்ல குணம், திறமை, சாமர்த்தியம் இருந்தா அதை போற்றணும்.'' ஆயர்பாடிலே எந்த பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தாளோ, அவள் கிளி மாதிரி குரல் உடையவள். நன்றாக பாடுபவள். நீ பாடினால் அந்த கிருஷ்ணனே நேரில் வந்து கேட்பவனாயிற்றே. நீ வந்தால், பாடினால், அவன் வந்து கேட்டால், மனம் மகிழ்ந்தால் அனைவருக்கும் அல்லவோ அந்த மாதவனின் அருள் கிட்டும் என்று ஆண்டாள் சொன்னவுடனே லோகக்ஷேமத்துக்காகவே தான் இந்த பொண்ணு இதை பாடியிருக்கா, சுவாமி.''
முதல்லே, நீங்க எல்லோரும் வந்தாச்சா என்று போய் எண்ணுங்கோ. நான் இப்போ எதுக்கு வரணும். என்னை எழுப்பாதேங்கோ என்று எதிர்த்து அடம் பிடித்த பெண் அப்பறம், தானே முதல்லே, ஆண்டாளோடு நோன்புக்கு வந்தாளே. இதற்கென்ன அர்த்தம்? வைஷ்ணவன் தான் செய்வது தவறு என்று உணர்ந்த மறுகணமே பெருந்தன்மையோடு அதை ஒப்புக்கொண்டு பிராயச்சித்தமாக தன்னைத் திருத்திக் கொள்பவன். மற்றவர் மேல் அதிக அன்புடையவன். அவர்களை மதிப்பவன். சரணாகதி அடைபவன்.
ராமன் காட்டுக்கு சென்றதற்கு தன் தாயோ, கூனியோ காரணம் இல்லை, தானே என்று வலிய பரதன் ஒப்புக்கொண்ட மாதிரி.
இதைத்தான் ''நானேதான் ஆயிடுக'' என்று அந்தப் பெண் கூறுகிறாள் என்று இந்த கோதை எழுதியது அதி அற்புதம்.''
கோவிலில் மணி அடித்தது. வந்தவர் சென்று விட்டார். அவர் தனக்குள் முணுமுணுத்தது காதில் விழுகிறது:
'ஆண்டாள், இந்த பாசுரத்தில் கண்ணன் குவலயாபீடம் என்கிற பலம் கொண்ட மதயானையையும், கம்ச சாணூரர்களைக் கொன்றதும் எதற்கு இங்கு உதாரணம் காட்டுகிறாள் தெரியுமா?
ஒவ்வொருவனுக்குள்ளேயும், காம,க்ரோத,மோக, மத குவலயாபீடங்கள், கம்சர்கள், சாணூரர்கள்
இருக்கிறார்களே அந்த கிருஷ்ணனைத் துதி பாடி ''அவர்களையும் கொல்லப்பா என் செல்லப்பா'' என்று வேண்டிக்கொள்ளவே.''
No comments:
Post a Comment