மார்கழி 4ம் நாள் ''ஞான மழை''
நாம் இப்போது ஆயர்பாடியில் :
காற்று ஈரத்தோடு குளிர்ச்சியாக வீசும்போது அதன் அருமையே தனி. வெயில் காலத்தில் வறண்ட காற்று உடலையும் உள்ளத்தையும் களைத்துப் போக செய்கிறதே. எல்லையற்ற கடலாக ஓ வென்று யமுனை நதி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கம்பீரம் கண் நிறைந்த காட்சியாக அது ஓடுவதில் தான். ஒரு சில பட்சிகள் மட்டுமே பொழுது தெரியாமல் சீக்கிரமாக குரல் கொடுத்தன. சிறுமிகள் சேர்ந்து விட்டனர். நடுவே ஆண்டாள்.
"இன்னிக்கி மார்கழி 4ம் நாள் காலையிலேயே என்னமாக இருட்டிக்கொண்டு வருகிறது பார்த்தாயா..நேற்று தானே நாமெல்லாம் அந்த நாராயணனைப்பற்றி பேசினோம், பரிசுத்தமாக ஸ்நானம் செய்துவிட்டு பாடி ஆடினோம். நிறைய மழை இருந்தால் தான் சுபிக்ஷம் என்பதற்காகதானே இல்லையா? ஆண்டாள் தலையைச் சாய்த்து ஆர்வத்தோடுஅந்த பெண்களிடம் கேட்டாள்.
“ஆண்டாள் நீ சொன்னால் அது நிஜம்தான் அம்மா எப்போதுமே .”
“இப்போ எல்லாரும் அந்த வருணனுக்கு நன்றி சொல்வோம் வாருங்கள் ''
"வருண பகவானே, நீ எங்களுக்கு சமர்த்தியாக இடி இடித்து, ஜோ என்று மழையைக் கொடு . சமுத்ரம் எல்லாம் ரொம்பணும். மேலே பார்த்த மேகம் வானம் எல்லாம் அந்த கிருஷ்ணன் மாதிரி கருப்பாக இருக்கணும். மின்னல் அந்த நாராயணன் சக்ரம் மாதிரி மின்னணும். இடி சத்தம் கிருஷ்ணனுடைய பாஞ்ச ஜன்யம் மாதிரி ஒலிக்கணும் . மழை விடாது பெய்யணும். எங்க ஊர் யமுனையில் நிறைய தண்ணீர் வந்து நாங்க ரொம்ப சந்தோஷமாக குளிக்கணும் ,
ஆண்டாள் நீ சமுத்ரம் பார்த்திருக்கியா?
'இல்லையே.. அது ரொம்ப பெரிய ஆறு, இந்த யமுனையை விட என்று மட்டும் தெரியும்.''
''எங்களுக்கு தெரியாது ஆண்டாள் , நீ ரொம்ப விஷயம் தெரிந்தவள் . எப்படி உன்னாலே இவ்வளவு அழகாக ஒண்ணுஒண்ணுக்கும் உதாரணம் எல்லாம் கொடுக்க முடிகிறது. மழை அந்த நாராயணனுடைய சார்ங்கம் என்கிற வில்லிலிருந்து புறப்படும் சரங்கள் மாதிரி விடாமல் தொடர்ந்து பெய்யணும் என்கிறது ரொம்ப பொருத்தமாக புரியும்படியாக சொல்கிறாய். இதெல்லாம் எங்கடி படிச்சே''.
'''நான் எங்க படிச்சேன். மனசிலே தோணினது தான்.''
''ஆண்டாள், உன்னோடு நாங்க இந்த நோன்பு நோர்க்கும் போது நிறையவே தெரிந்து கொள்கிறோம். நதியில் நீராடி, ஈரத் தலையைத் துவட்டி முடிந்து கொண்டு பரிசுத்தமாக அந்த பெண் குழந்தைகள் அந்தரங்க சுத்தியோடு நாராயணனை வேண்டின. பாடிக்கொண்டே வீடு திரும்பின. பிரசாதங்கள் படைத்து நோன்பு செய்தனர்.
ஆண்டாள் உனக்கு நன்றி. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆயர்பாடி சிறுமிகள் வீடு சென்றனர்.
நாளைக் காலையில் மீண்டும் அவர்களை ஆயர்பாடியில் சந்திப்போம்.அதற்குள் தெற்கே மீண்டும் நேரே வில்லிப்புத்தூர் திரும்புவோம்.
வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் மனத்திலும் கோதை உருவாக்கிய மேற்கண்ட காட்சி தத்ரூபமாக பிரதிபலித்தது.
அந்த சின்னஞ்சிறுமிகள் குதூகலமாக ஆண்டாளைச் சுற்றி ச் சுற்றி வந்து நூறு கேள்விக் கணைகளைத் தொடுத்து அவளும் ஓயாமல் அவர்களுக்கு பதில் சொல்லும் பாங்கு அவருக்கு ரொம்பவே பிடித்தது. எல்லாம் கோதையின் கற்பனை. என்ன திறமை. இதை அடிப்படையாகக் கொண்டதல்லவோ மேற்கண்ட கோதை தீட்டிய சித்திரம்.
''எங்கே மீண்டும் ஒருமுறை அந்த பாசுரத்தைப்படி. இல்லை, இல்லை, பாடு கொழந்தே!''
விஷ்ணுசித்தர் நீட்டியிருந்த காலை மடக்கி கையைக் கட்டிக்கொண்டு எதிரே இருந்த ரங்கனின் பதுமையைப் பார்த்துக்கொண்டே காதைத் தீட்டிக்கொண்டார். அப்பாவை மகிழ்விக்கவும், தானே மீண்டுமொரு தரம் அந்த நாராயணனை, அரங்கனை,. மனம் களிக்க பாடுவதற்கும் கோதை தயாரானாள். கண்கள் மூடி இருந்தன. அவள் வில்லிப்புத்தூரில் இல்லை. பிருந்தாவனத்தில் கண்ணனோடு அல்லவா இருந்தாள்! . ஆனால் குரல் மட்டும் அங்கேயிருந்து வில்லிப்புத்தூரில் கேட்கிறதே.
''ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.''
பெரியாழ்வார் கண்கள் குளமாயின. பெண்ணைக் கட்டி உச்சி முகர்ந்தார். தெய்வமே! என்ன ஒரு உயர்ந்த தத்துவத்தை எளிதாக்கி விட்டாய். அந்த பாசுரம் அவர் மனதில் எவ்வாறு பதிந்தது தெரியுமா?
''எவ்வளவு பலமான சக்தியா யிருந்தாலும், மழையோ, இடியோ, நீரோ நெருப்போ, பரமனின் அடியார்களை அருகில் நெருங்காது என்பதை அந்த சிறிய பெண்கள் மூலம் கோதை உணர்த்துகிறாளே. நாடு செழிக்க வேண்டும் என்ற பெருந்தன்மை பரந்த மனப்பான்மை பிராட்டிக்கு அல்லவோ உரித்தானது. கோதையே அந்த பிராட்டிதான்.
வால்மீகி சொன்னது நினைவுக்கு வருகிறதா?
நாற்பதாயிரம் அரக்கர்களை ராமன் கொன்றபோது, எவருமே அவன் கோதண்டத்தை கையில் எடுத்ததையோ, காது வரை நாணை இழுத்ததையோ, அம்பைக் குறி பார்த்து செலுத்தியதையோ மின்னல் வேகத்தில் சரங்கள் சென்று தாக்கியதையோ காணவில்லை. அரக்கர்கள் கதறி விழுந்தது ஒன்றுதான் தெரிந்தது.
ஆண்டாளின் ஆசை என்னவென்று தெரிகிறது. நிறைய இடி இடித்து, கொட்டோ கொட்டு என்று ஆயர்பாடியில் மழை பொழியவேண்டும். ஆநிரைகள், மக்கள் சுபிக்ஷமாக வாழவேண்டும். அவ்வளவுதான்.
''ஆஹா, ஆசார்யன் தான் பிரம்ம ஞானம் கொண்டவன். பரமனன்றி வேரெதிலும் மனம் லயிக்காது. எப்படி கருமேகம் உப்பான கடல் நீரை சுமந்து இனிய மழையாக பொழிகிறதோ அவ்வாறு ஆண்டாள் பகவத் விஷயத்திலும், போதனையிலும் சிறந்து விளங்குகிறாளே ஞான மழை பொழிகிறாளே."
No comments:
Post a Comment