Wednesday, December 13, 2017

ENGAL VAMSAM



எங்கள் வம்சம்  j.k. sivan 

                                                 பழைய நினைவுகள்...  
                             

காலம்  என்பது  நிற்காமல்  வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்  ஒரு  பிரேக் இல்லாத  வாகனம்.  அது  நின்றது  என்றால்  சகலமும் முடிவுறும்.    அதில் பிரயாணம் செய்யும் நாம்  எப்போது  திரும்பி பார்த்தாலும் இனிக்கும்.


கடந்த காலத்தை நினைப்பது  என்பது  இறைவன் அளித்த ஒரு அற்புத பரிசு.  பழைய நினைவுகள் வாழ்க்கைக்கு  தெம்பை அளிப்பவை என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு தலை ஆட்டுவீர்கள். 

ஆம், அவரவர் வாழ்க்கையில் நடந்தது அவரவர்க்கு புத்துணர்ச்சி தருவது. சில  நினைவுகள்  பொதுவாகவே எல்லோருக்கும் சந்தோஷம் அளிப்பவை. நான் தேர்ந்தெடுப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரவேண்டும் என்ற ரகத்தை சேர்ந்தது.

++

பரசுராம  பாரதியின் ஜேஷ்ட புத்திரன்  ராமஸ்வாமி  பாரதி  அப்பாவைப்போலவே  வாக் பலிதம்  பெற்றவர் ஆகிவிட்டார். சொன்னது  நடக்கும்  என்று  சாத்தனூர்   வேளாண் குடி மக்கள்  நம்பி வந்தனர்.  கல்யாணங்களுக்கு நடத்திக்கொடுப்பதில்  வரும்  வருமானம் தவிர சரஸ்வதி  சம்பாவனை வரும்படி,   ஊர்காரர்களுக்கு  அறிவுரை சொல்வதில்  கிடைப்பது,   ஊரார்  விட்ட  மானியம்   ''ஏத்துக்கு  ஒரு குறுணி '' யில் கிடைத்த உணவு  தானியங்கள்  எதேஷ்டமாக  அவர்  குடும்பத்துக்கு  உதவியது.


ஊரில்  செக்கான்   சாமிநாதன் என்று   ஒருவன்  வாணியன்,  எண்ணெய்  ஆட்டும்  செக்கு  வைத்திருந்தான். படுகையில்  நிறைய  எள்ளு  விதைத்து நல்ல  போகம்.  ஆனால்  ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாட்டின் படி  முதல் வருஷமும்  ''ஏத்துக்கு   ஒரு குறுணி   எள்ளு''  கொடுக்கவில்லை. ரெண்டாவது வருஷமும்  கொடுக்கவில்லை.

ராமசாமி பாரதி  ஒருநாள்  அவனை  ஊர் கிணற்றருகே பார்த்து விட்டார்.   அவன்  எண்ணை விற்பதற்காக , எண்ணெய் நிரம்பிய பீப்பா  வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான்.

'' சாமிநாதா என்னடா  தண்டம் ரெண்டு வருஷமாக   நீ எனக்கு  தரலே''  என்று கேட்டார் ராமஸ்வாமி பாரதி.

''நிலமை  சரியில்லே  சாமி. அப்பாலே  தாரேன்,  எங்கே போவுது பாக்கி.  அதுக்கின்னா  இப்போ''  என்று  அலட்சியமாக  சொல்லிவிட்டு  போனான்.  பாரதி மறுவார்த்தை பேசவில்லை.

 பாரதி  திண்ணைப் பள்ளிக்கூடத்தில்  உட்கார்ந்திருக்கும்போது  வெகுநாள்  கழித்து  செக்கான்   அந்த பக்கமாக  போனான்.

 ''சாமிநாதா ''  என்று  கூப்பிட்டும்  காது கேளாததுமாதிரி  பார்த்தும்  பார்க்காமல்  அலட்சியமாக போனான்.  ராமஸ்வாமி பாரதி சாந்த குணம் கொண்டவரானாலும்  வேண்டுமென்றே  அலட்சியம் பண்ணிய  அவன் மீது  மனம் ஒடிந்து  வருந்தினார் .

 திண்ணைப் பள்ளிக் கூடத்திலி ருந்தபடியே அப்போது அவர்  ஒரு  ஆசு கவி பாடினார்:

 ''    வாரேன்   என்றான்  வரவில்லை
      தாரேன்  என்றான்  தரவில்லை
      சேரான்  செக்கான்   சாமிநாதன்
      பாராக் கண்கள் படைத்தானே ''

இயல்பாக  அவன்  பாராதது  போல் சென்றதைப்பற்றி  அவர்  பாடினார்.    சில நாள் கூட  ஆகவில்லை.   திடீரென்று  ஒரு நாள்  சாமிநாதனுக்கு கண்கள்  பார்வை  இழந்தன.    அவ்வூர் ஜனங்கள்  இது  பாரதியின்  வாக்கு பலன்  என்று  புரிந்துகொண்டார்கள்.  ஊரெங்கும்  இதே  பேச்சு.

சாமிநாதன்  எங்கெங்கோ அலைந்து  பல வைத்தியங்கள்  பண்ணிப்  பார்த்தும்  குணமில்லை.  தான் செய்த தப்பு அவனுக்கு உரைத்தது.  எள்ளும்  எண்ணையும்   அதிகமாகவே கொண்டு  வந்து ராமசாமி பாரதியிடம்'
 கொடுத்தான் .  ஆனால்  அவர் அதை  ஏற்றுக்கொள்ளவில்லை. ஊர்  ஜனங்களுக்கு  அவர்  மேல்  இருந்த   மதிப்பும் பக்தியும்    இந்த சம்பவத்திற்குப் பிறகு ரொம்ப அதிகமாயிற்று.

சாமிநாதன்  எண்ணைக்கடை  சாத்தனூரிலிருந்து  மகாராஜபுரம் போகும்  வழியில்  இருந்ததாம்.  சில காலத்தில் அவனுக்கு  ஒரு  பிள்ளை  பிறந்தது.  துரதிர்ஷ்ட வசமாக  அந்த  குழந்தைக்கும்  பிறவியிலிருந்தே பார்வை  இல்லை என்பார்கள்.

எங்கள்  தாத்தா  வசிஷ்ட  பாரதியார்  80- 85  வருஷங்களுக்கு  முன்னர்  அந்த  பகுதியில் செல்லும்போது  இந்த விவரம்  சேகரித்தார்.

 +++

ராமஸ்வாமி  பாரதியார்  4  மைல்  தொலைவில்  இருந்த  திருவையாறு  க்ஷேத்ரத்துக்கு  அடிக்கடி   செல்வார்.  சப்தஸ்தான உற்சவங்களில் பங்கேற்பார்.  பரம்பரையாக இருந்த  ராம  பக்தியோடு  அதீத  சிவ பக்தியும்  உண்டு. அவர்  எப்போதும்  தோய்த்து உலர்த்தி  வெளுத்த  வஸ்த்ரம்,  பட்டை  பட்டை யாக  விபூதி   ருத்ராக்ஷ  தாரணம்,  வாக்கில் சிவ  ராம நாம  ஸ்மரணத்தோடு   இருப்பதைக்  கண்டு  அனைவரும்  இவர்  சிவப்பழமோ,தவப்பழமோ  என்று  வியந்தனர். 

நான்  போன வாரம் திருவையாறு முதலான  சப்தஸ்தான க்ஷேத்ரங்களுக்கு சென்று வந்தேன். அதைப் பற்றி எழுதுவதாக இன்று தீர்மானம் செய்து  முதலில்  திருவையாற்றைப்  பற்றி இங்கு  கொஞ்சம்  சொல்கிறேன்.

 ஊர் மக்கள்  திருவாதி, ஐயாறு, திருவையாறு என்றெல்லாம்  சொல்வார்கள்.  மஹா சிவ க்ஷேத்ரம்.  இங்கு பெரும்  தரிசனம்  தான்  கைலாச தரிசனம் என்பதற்கு  பிரமாணம்    பெரியபுராணத்தில்  வரும்  தொண்டர் புராணம்.  அப்பர் என்று  பெயர் பெற்ற  திருநாவுக்கரசர் சைவ சமயக்குரவர்களில் முதல்வர்.  அறுபத்து மூன்று   நாயன்மார்களில்  நால்வரில்  முதல்வர்.  அவர் கைலாய தரிசனம்  காண  விரும்பி,  நடந்து, தவழ்ந்து, புரண்டு, உருண்டு, சென்ற போதும்,  காண  முடியாத காட்சியை, மகேஸ்வரனான பரம சிவன் அருளால் அங்கு ஒரு  தடாகத்தில்  மூழ்கியவர்   அங்கிருந்து,  இங்கு  திருவையாற்றின் தென்  ப்ரஹாரத்தில்  அக்னி மூலையில்  உள்ள சிவ  தீர்த்தமென்னும்  தடாகத்தில் இருந்து  எழுந்து  ஆச்சரியமாக பார்த்தார் .   திருவையாறே, கயிலாயமாக  தோற்றம் அளித்தது.    ப்ரஹாரத்தில்  காண்பவர்கள்  சிவ கணங்களாக  தோன்றினர்.     காணும் யாவுமே   சிவ சக்தி ஸ்வரூபமாகவே காட்சியளித்தது. '' யாதும்  சுவடு படாமல்  ஐயாரடைகின்ற போது 

''மாதர் பிறைக்கண்ணியானை,  ........கண்டேன்  அவர்  திருப்பாதம்   கண்டறியாதன  கண்டேன் ''   என பாடியவர்   அல்லவா அப்பர்.

திருவையாறு  நான் சென்றபோது மனதுக்கு சந்தோஷம் அளிக்கவில்லை. எவ்வளவு அதை புனிதமின்றி அசுத்தமாக்க முடியுமோ அப்படி நமது மக்கள் பாழ் படுத்துவது கண்டு மனம் வெதும்பினேன். எவ்வளவு புண்யம்  வாய்ந்தது  அந்த பஞ்சநதி.எத்தனை மஹான்கள் கால் பட்டது.  அங்கே நீராடினேன். கரையில் ஒரு டேங்கில் பிடித்து வைத்த தண்ணீரில்....  

பாரதிகள் திருவையாற்றிற்கு  தவறாமல்  வருவார். கங்கையிற் புனிதமாய  காவிரி ஸ்நானம் செய்து  மனைவி  காமாக்ஷியோடு தெற்கு  கோபுர  வாயிலில்  காட்சி தரும்   ஆட்கொண்டார் சந்நிதியை வணங்கி  நிறைய  குங்கிலியம்  இட்டு   ''பவ சங்கிலியை''  அறுத்துவிட்டோம்  என்று  பிரார்த்தனை  பண்ணிக்கொண்டு  கோவிலில் நுழைந்து  சிவகங்கையில்  ஆசமனம்   பண்ணி, மேற்கே  திரும்பி   அப்பர் சுவாமிகளுக்கு  தரிசனம்  தந்த  தக்ஷிண  கைலாச மூர்த்தியை தரிசனம்  பண்ணி,  வலம் வந்து  கிழக்கு  அணுக்கன் வாயிலில் நுழைந்து நடு  இடை ஆடி  நந்தியைத் தொழுது  ஐயாரப்பனை தரிசித்து  உள்   பிரதட்சிணம் செய்து நந்திகேஸ்வரர் தவம்  செய்த  ஜப்பேசர் மண்டபத்தில்  சிவ பஞ்சாக்ஷர்  மந்திரம்  ஜபம் செய்து  பிறகு  பரிவார  தேவதைகளை பணிந்து  வடக்கே உள்ள  தர்மாம்பிகா  சந்நிதியை நமஸ்காரம் பண்ணி  வணங்கி விட்டு  பிறகு  மனிவியோடு  வீடு  செல்வது  வழக்கம்.
நான் முன்பு சென்றபோது பஞ்ச பூத லிங்கங்களை எவரும் அருகே சென்று தரிசிக்க முடிந்தது. இப்போது கம்பி வலை கட்டி காட்சிப் பொருளாக்கி விட்டார்கள்.  கோவில் பராமரிப்பு என்பது துளியும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிற மதத்தவர் போல் நம் மதத்தவரும் நடந்து கொள்வது ஏனோ?

++++

அப்பரின்  தேவாரங்கள்  தேன்  சுவை சொட்டுபவை.  எளிய  தமிழில் சொற்சுவை பொருட்சுவை கொண்டவை.   நாவுக்கே அரசர் எழுதியது எப்படி  இருக்கும்  என்று  சொல்ல வேண்டுமா?.   நிறைய    பிறகு தேவாரம் பாடல்களை பற்றி  பேசுவோம்

அப்படியே  எனது சமீபத்தைய சப்தஸ்தான  தரிசனம்  பற்றியும்  சில  வார்த்தைகள் சொல்கிறேன்.......

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...