சிவனை நினைந்தார் எவர் தாழ்ந்தார்.?
பனிமலையில் வெற்றுடம்புடன், தலையில் இன்னும் குளிர்ந்த ரெண்டு விஷயங்கள். ஒன்று குளிர்ந்த பால் போல் ஓளி வீசும் தண்ணொளி வெண்ணிலாவான சந்திரன். போதாதற்கு பனிக்கட்டிகள் பாயசத்தில் முந்திரி போல் மிதக்கும் பனிக்கட்டிகள் கொண்ட சில்லென்று எலும்பை ஊடுருவும் கங்கை நதி... உலகத்தின் உயரத்தின் மேல் பனிமலையோடு ஒன்றாக வாழம்போல் பால் வெண்ணீறு பூசி கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்போடு சிவன்....பிரமனும் பெருமாளும் அடிமுடி காணாது வியந்தவன். அக்னிப்பிழம்பாக ஒளிமயமான தாணு. ஆதிஅந்தமில்லாத பழமனாதி. நாம் அவனை இவ்வாறு அறிந்துகொள்வோம். அது போதும். அவனை இதற்கு மேல் அறிவோம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. அறியவொண்ணா அரன் அவன்.
பெண்ணே தேன் போல், பால் போல் இனிக்க பேசுபவளே, எழுந்திரு. நாங்கள் சிவன் இல்லை. குளிரில் நடுங்குகிறோம். வா, வந்து கதவைத் திற. அவனை நினைவில் மட்டும் நிறைத்து வைத்துக்கொள்வோம். அறிய முடியாததை அறிந்து கொள்ள முயல்வதே முடியாது. நமது சிற்றறிவுக்கு எட்டியவரை அவனை புகழ்ந்து போற்றி பாடுவோம்.
அவனுக்கே நாம் ஆளாவோம். நம்மை அவன் அல்லவோ வழி நடத்தி செல்பவன். கடலில் மிதக்கும் காகித கப்பல் நாம். எந்நேரமும் அழிபவர்கள். நம்மை காப்பாற்றி, சீராக்கி, நல்லொழுக்கம் தருபவன் சிவன். அதற்கு நன்றி சொல்வதற்கே இனி வரும் ஜென்மங்கள் போதாதே.
நன்றாக எண்ணெய் தடவி, கம்மென்று வாசனை வீசும் மலர் அணிந்து, கூந்தலை சிங்கரித்துக்கொண்டு சப்ர மஞ்ச கட்டிலில் சாய்ந்திருக்கும் பெண்ணே, வாசலில் சிவனே சிவனே என்று போற்றிக்கொண்டு சிவனே என்று உனக்காக காத்திருக்கும் எங்கள் நினைவு கொஞ்சமும் உண்டா உனக்கு ? சீக்கிரம் எழுந்து வாயேன். கொஞ்சம் சிவ தத்துவம் புரிந்துகொள். வா. முதலில் தமோ குணத்திலிருந்து விடுபட்டு... மற்றது தானாக விளங்க ஆரம்பிக்கும்.
மணிவாசகரின் அழகிய பாடலை இனி படியுங்கள் கொஞ்சம் புரியும்.
''மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏழக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய் !! (5)
No comments:
Post a Comment