மணி வாசகரின் திருவெம்பாவை. J.K. SIVAN
முன்னைப் பழம்பொருளே! முக்கண்ணா!
''பராத்பரா, பரமேஸ்வரா'' என்று வாசஸ்பதி செவியில் மணக்க, கம கமக்க, பக்தியை குழைத்து ஒரு பக்தர் பரமசிவனை வணங்கி பாடுகிறார். குரலில் இனிமை, கண்களில் ஆனந்த பிரவாகம். எதிரே சிவலிங்கம் கர்பகிரஹத்தில். பெரிய உருவம். கரிய கம்பீரத்தில் வெண்மை கீற்றுகள். நாகாபரணம் சார்த்தி இருக்கிறார்கள். எனவே தங்க முலாம் பூசிய அந்த பளபளப்பின் இடையே பச்சை பேசேலென்று வில்வ தளங்கள் லிங்கம் மேல் நிரம்பியிருக்கிறது.
ஆவுடையாரை வளைத்து வெள்ளை வேஷ்டி, ஸம்ப்ரதாய பட்டை காவி கறையோடு அணிவித்திருப்பது எதிரே ஒரு பரப்பிரம்மம் பஞ்சகச்சத்தோடு காட்சி அளிப்பது போல் இருக்கிறது. மேலே உத்தரீயம் நாகாபரணத்தில் நுழைந்து இருபக்கம் விரிசடை போல் தொங்குகிறது. சோம சூர்யாக்னி நேத்ரன் அல்லவா. ஒரு பக்கம் வட்ட சூர்யனும் இன்னொருபக்கம் சந்தனத்தில் குளிர்ந்த சந்திரனும் நடுவே விபூதி பட்டைக்கிடையே அக்னி நேத்ரம்.மேலே பெரிய ருத்திராக்ஷ மண்டபம், சிவன் மேலேயும் ருத்ரக்ஷ மாலை சுற்றியிருக்கிறார்கள். தொங்கும் விளக்கில் தீபம் சன்னமாக ஒளியைக் கூட்டுகிறது. எங்கும் வெளியே இருட்டு. ஏன் உள்ளேயும் மனத்திலே அஞ்ஞான இருட்டு தானே. மெதுவாகத்தான் அதை போக்கவேண்டும் என்று தெளிவிக்க தான் தீபம் மெல்லிய சுடர் விட்டு எரிகிறது.
சொட்டு சொட்டாக தாரா பாத்திரத்திலிருந்து கங்கை நீர் சிவனை குளிர்வித்துக் கொண்டிருக்க பாடல் வராமல் இருக்குமா?.
பார்வதி பதே ஹர பசுபதே ,....
''ஆதி அந்தமில்லா பழமனாதி'' என்ற அடி வரும்போது திருவெம்பாவை மனதில் பொடேரென்று உதித்தது அந்த பக்தருக்கு. கணீரென்று இடைச்செருகலாக அதை பாடுகிறார். அது தான் இந்த பாடல். கண்ணை மூடிக் கேட்டால் சிதம்பரத்தில் மணி வாசகர் நிற்பது தெரிகிறது. நடராஜன் முன்பு அந்த சிவபக்த நாயன்மார் பாடுவது தேனாக சுரந்து செவியில் நுழைகிறதே....
''முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன் அடியாற் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் !!(9)
பழசுக்கெல்லாம் பழசே, இல்லை நீ புதியன வற்றிலெல்லாம் கூட புதிதானவன் தான். எனக்கு நன்றாக தெரியும். நீயல்லவோ புண்யமூர்த்தி, சுப்ரமண்யன் தந்தை.. எங்களுக்கும் நீயே தலைவன் தந்தை எல்லாமே.
எங்களை ஆட்கொண்ட உனக்கு நாம் ஆளாமே. இதோ இந்த நோற்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட சிவ பக்தர்களே கணவனாக கிட்டட்டும். நீ வரமளிப்பதில் முதன்மையானவன். யார் எது வேண்டினாலும் வேண்டியதை போதும் போதும் என்று சொல்லும் வரை அளிப்பவன்.
இதோ பார் பெண்ணே, நான் சொல்வது கேட்டாயா. சிவனருள் பெற்றால் உனக்கு ஒரு குறையும் மில்லை. எங்கே பாடு. சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்.? சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்.
No comments:
Post a Comment