Saturday, December 30, 2017

RAGAVENDRA SWAMI




வெங்கண்ண பட்டா கதை J.K. SIVAN

ஒரு எச்சரிக்கை. படிப்பதற்கு முன். ஆரம்பத்தில் நிறைய ''பட்டாக்கள்'' வருகிறது. பொறுமையாக எந்த பட்டா யார் ? என்று புரிந்து கொண்டு தொடரவும்.
திம்மண்ண பட்டாவின் அப்பா பெயர் கனகாசல பட்டா. கனகாசல பட்டாவின் அப்பா ஸ்ரீ கிருஷ்ண பட்டா. கிருஷ்ண பட்டா வீணை நன்றாக வாசித்து கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் சுகமாக வாழ்ந்தார்.
கிருஷ்ண பட்டாவின் பேரன் திம்மண்ண பட்டா கோபிகாம்பா என்ற மாதுவை மணந்து ரெண்டு பிள்ளைகள் பெற்றார்.
திம்மண்ண பட்டாவின் இரண்டாம் மகன் வெங்கண்ண பட்டா, என்கிற வேங்கடரமணன் என்கிற வெங்கட நாதன் என்று ஏன் பெயர் கொண்டான் என்றால் அவன் குடும்பத்தில் குல தெய்வம் திருப்பதி வெங்கடேஸ்வரர் என்பதாலும் அவர் அனுக்ரஹத்தால் அவன் பிறந்ததாலும் என்றும் சொல்லி விடுகிறேன்.

வெங்கண்ண பட்டா இப்போது பிறந்தவன் இல்லை. கிட்டத்தட்ட 420 வருஷங்களுக்கு முன்பு 1595ம் வருஷம்,, பங்குனியில் ஒரு வியாழக்கிழமை , மிருக சீரிஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவன். நீங்கள் இப்படிப்பட்டவன் எங்கே பிறந்தான் என்று கேட்பதற்கு முன்பாகவே அது தமிழ் நாட்டில், சிதம்பரம் அருகே புவனகிரியில் என்றும் சொல்லிவிடுகிறேன்.

வெங்கண்ண பட்டா நன்றாக படித்தான். சிறுவயதிலே சகல கலைகளும் கற்று தேர்ந்தான். வீணை வாசிப்பதிலும் நல்ல பயிற்சி பெற்றான்.

திம்மண்ண பட்டா, காலமானார். சிறுவன் வெங்கண்ண பட்டா அவன் அண்ணா குருராஜ பட்டாவிடம் வளர்ந்தான். கல்வி கற்றான். அத்திம்பேர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சர்யாரிடம் மதுரையில் கல்வி கற்றான் .

1614 ல் மதுரையிலிருந்து திரும்பி வந்ததும் சரஸ்வதி பாய் மனைவியானாள். லக்ஷ்மி நரசிம்மாச்சாரி என்று ஒரு பிள்ளை பிறந்தான். குடும்பம் கும்பகோணம் போயிற்று. அங்கே த்வைத வேதாந்தம், இலக்கணம், இதிகாச புராணங்கள் பாடமாயிற்று. அங்கே தான் வெங்கண்ணாவிற்கு சுதீந்திர தீர்த்தர் குருவானார்.

வெங்கண்ண பட்டா பாஷ்யங்களில் நிபுணனானான், பண்டிதர்கள் பலரை தர்க்கத்தில் வென்றான். அவனுக்கு மூலராமனும் ஸ்ரீ பஞ்சமுக முக்ய ப்ராண தேவரும் இஷ்ட தெய்வமானார்கள். அவர்களிடம் பரம பக்தி. சிஷ்யர்கள் பலருக்கு சம்ச்க்ரிதம், வேதங்கள் கற்றுக்கொடுத்தான். காசுக்காக அல்ல. மனைவி பிள்ளையோடு தரித்ரத்தோடு, பல நாள் ஆகாரம் இன்றி ஏழ்மையான வாழ்க்கை நடத்திக்கொண்டு. வாரத்தில் பல நாள் வாயு பக்ஷணம் நீராகாரம் மட்டுமே. சரஸ்வதிக்கு மாற்று புடைவை கூட கிடையாது. பாதிப் புடைவை உடம்பில் சுற்றி, மீதி ஈரமான புடைவை காயும் வரை காற்றில் பிடித்துக்கொண்டு நிற்பாள். வேதாந்தியான அவளுக்கு இது துன்பமாக படவில்லை. வெங்கண்ண பட்டாவுக்கு பக்திக்கே நேரம் போதவில்லை. துணி எங்கே போய் தேடுவது?

ஒரு வீட்டில் ஏதோ விசேஷம். கூப்பிட்டிருந்தார்கள். இந்த ஏழைக்குடும்பத்திற்கு சாப்பாடு சும்மா எதற்கு போட வேண்டும் அந்த வீட்டுக்காரன் நினைத்தான். ஆகவே ஏதாவது ஒரு வேலை கொடுப்போம் இந்த பயலுக்கு என்று வெங்கண்ண பட்டாவிடம்

'' நீ போய் அந்த கல்லில் எல்லோருக்கும் சந்தனம் அரைத்துக்கொண்டு வா' என்று வேலை வாங்கினான். வழக்கம் போல் ஸ்தோத்திரங்களை சொல்லிக்கொண்டு வெங்கண்ண பட்டா சந்தனம் அரைத்தார். அதை தரித்துக்கொண்ட அனைவருக்கும் திகு திகு வென்று மிளகாயை பூசிக்கொண்டது போல் எரிந்தது.

''ஏன் சந்தனம் எரிச்சலை தருகிறது?''

''அக்னி ஸ்தோத்ரம்'' சொல்லிக்கொண்டு வெங்கண்ண பட்டா சந்தனம் அரைத்ததால் அக்னி சந்தனத்தில் தனது குணத்தை காட்டிவிட்டான். மந்த்ரத்தை சரியாக புரிந்துகொண்டு உச்சரித்தால் அது எப்படி பலன் தரும் என்றும் தெரிந்தது. வீட்டுக்காரன் வெங்கண்ணாவை அவமரியாதையாக நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

வெங்கண்ணா மீண்டும் சந்தனம் அரைத்தார். இந்த தடவை வருணனை உபாசித்து அரைத்ததால், அது எரிச்சலை தணித்தது. எரிச்சல் நீங்கியது. குளு குளு வென நறுமணம் கமழ்ந்தது.

கும்பகோணம் மட பீடாதிபதி சுதீந்ர தீர்த்தருக்கு தனது அந்திம நேரம் வந்துவிட்டது தெரிந்து கவலையும் சேர்ந்து கொண்டது. இனி அடுத்த வாரிசு மடத்திற்கு யார் என்று யோசிக்கும்போது. மூலராமரே கனவில் வந்து வெங்கண்ண பட்டாவே தகுதியானவர் என்றதால் அவருக்கு அழைப்பு வந்தது.

''வெங்கண்ணா, உன்னை அடுத்த குருவாக இந்த மடத்திற்கு தேர்வு செய்திருக்கிறேன் '' என்றார் குரு.

''சுவாமி, நான் குடும்பஸ்தன், மனைவி பிள்ளைக்கு நான் ஆற்றவேண்டிய கடமை இருக்கிறதே'' என்றார் வெங்கண்ண பட்டா.

சரஸ்வதி அவர் கனவில் வந்தாள். ''நீ சன்யாசியாக வேண்டும் அப்பா இது லோகக்ஷேமார்த்தம் '' என்றாள்

1621ல் தஞ்சாவூரில் பங்குனி சுக்ல த்வீதியையில் வெங்கண்ண பட்டா சந்நியாசியானார். இனி அவரை ஸ்ரீ ராகவேந்த்ர தீர்த்தர் என்போம்.

கணவன் சந்நியாசி ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டதும் சரஸ்வதி அவர் முகத்தை கடைசி முறையாக பார்க்க ஆசைப் பட்டாள். மடத்துக்கு ஓடினாள். ஆனால் திருப்பி அனுப்பப் பட்டாள். துக்கத்தில் வரும் வழியில் இருந்த ஒரு பாழும் கிணற்றில் விழுந்து மாண்டாள் . அகால மரணம் அவளை ஒரு பைஸாஸமாக மாற்றியது. பூமியிலும் இன்றி மேலுலகமும் இன்றி பேயாக சுற்றினாள். மடத்தை சுற்றி வந்தாள். அவளது நிலையை மந்த்ர சக்தியால் உணர்ந்த ராகவேந்த்ரர் கமண்டலத்தில் சிறிது ஜலம் எடுத்து அவள் மீது தெளித்து அவள் நிம்மதி பெற்று மோக்ஷ பதவி பெற வைத்தார். அவள் மகிழ்ந்து வணங்கினாள். ராகவேந்த்ரரின் பூர்வாஸ்ரமத்தில் உதவிய அவளுக்கு இனி பிறவிகளே கிடையாது என்ற பரிசு கிடைத்தது.

ஸ்ரீ ராகவேந்திரர் பீடாதிபதியான சில நாளில் சுதீந்திர தீர்த்தர் பரமபதம் அடைந்ததால், அவருக்கு ஹம்பி அருகே அனெகுண்டி என்ற க்ஷேத்ரத்தில் பிரிந்தாவனம் அமைத்தார் ராகவேந்த்ரர். நவ பிருந்தாவனத்தில் இது ஒன்பதாவது. மாத்வர்கள் தவறாமல் தரிசிக்கும் புண்ய ஸ்தலம் இது. நம் போன்ற மற்றவரும் தரிசிக்க வேண்டிய புண்ய ஸ்தலம்.

ஸ்ரீ ராகவேந்த்ரர் பீடாதிபதியாவதற்கு முன்பே சுதீந்த்ரரால் சன்யாச தீக்ஷை பெற்றவர் யாதவேந்திர தீர்த்தர்.
எனவே அவர் தீர்த்த யாத்ரைகள் முடிந்து தஞ்சாவூர் திரும்பியதும் அவரிடமே மடத்தை ஒப்படைக்க ராகவேந்த்ரர் வேண்டினாலும்,

''ராகவேந்திரா, உன் தலைமையில் இந்த மடம் வெகு சிறப்பாக நடந்துவருகிறது. நீயே பகவானால் நியமிக்கப் பட்டவன்'' என்று மூல ராம விக்ரஹத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டு மீண்டும் தீர்த்த யாத்ரை சென்றுவிட்டார் யாதவேந்த்ரர். கும்பகோணத்திலிருந்து த்வைத வேதாந்தம் சிறப்பாக பரவியது. பல சிஷ்யர்கள் சேர்ந்தனர்.

எதிர்பாராதவிதமாக பன்னிரண்டு வருஷம் தஞ்சாவூர் சீமை பஞ்சத்தில் துடித்தது. தஞ்சாவூர் ராஜ செவ்வப்ப நாயக்கனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ''சுவாமி நீங்கள் தான் ஏதாவது செய்து இந்த பிரதேசத்தைக் காப்பாற்றவேண்டும்'' என கேட்டுக்கொண்டான். சில யாகங்கள் செய்ய சொன்னார் ராகவேந்த்ரர். ஆச்சர்யமாக யாகங்கள் செய்தவுடன் கன மழை பொழிந்தது. காவேரி மற்றும் உப நதிகள் எங்கும் நுங்கும் நுரையுமாக வெள்ளம் நிரம்பி வழிந்தது. ராஜா மகிழ்ந்து மாணிக்க மாலை ஒன்றை பரிசளித்தான். யாகம் செய்து கொண்டிருந்த ராகவேந்த்ரர் அவன் எதிரிலேயே அந்த மாணிக்க மாலையை ஹோமத்தீயில் இட்டு அது சாம்பலாயிற்று. ராஜாவுக்கு வருத்தம். '' அன்பாக மரியாதையோடு நன்றியோடு அளித்ததை நெருப்பிலிட்டு விட்டாரே''.

ஞானி க்கு தெரியாதா ராஜாவின் மன ஓட்டம். அடுத்த கணமே தனது கையை எரியும் தீயில் இட்டு அதிலிருந்து அந்த மாணிக்க மாலையை வெளியே கொண்டு வந்தார். கையோ, மாலையோ தீயால் எந்த மாறுதலும் அடையவில்லை. ராஜா அதிர்ச்சியுற்றான். அந்த கணமே அவர் பக்தரானான்

ஸ்ரீ ராகவேந்த்ரர் தென்னிந்தியா பூரா திக் விஜயம் செய்தார். த்வைத சித்தாந்தம் பரவியது. ஸ்ரீ ரங்கம் ராமேஸ்வரம் மற்றும் பல புண்ய ஸ்தலங்கள் சென்றார். ராமேஸ்வரத்தில் அந்த சிவலிங்கம் ராமரால் ராவண சம்ஹாரத்திற்கு முன்பாக, லங்கா விஜயம் செய்வதற்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று எடுத்துரைத்தார். ராமருக்கு ராவணன் என்ற பிராமணனைக் கொன்றதால் பிரம்ம ஹத்தி தோஷம் வந்தது என்று சொல்வது தவறு. ராவணன் ஒரு ராக்ஷசன். அவன் தாய் ராக்ஷசி, என்பதால் அவன் பிராமணன் அல்ல ராமருக்கு எந்த தோஷமும் கிடையாது என்றார். கன்யாகுமரி, மதுரை திருவனந்தபுரம் எல்லாம் சென்று பிறகு விஷ்ணு மங்களா, குக்கே சுப்ரமண்யா, உடுப்பி தேசங்களுக்கு சென்றார். சென்றவிடமெல்லாம் சிறப்பெய்தினார். நிறைய வேதாந்த மார்க்க நூல்களை எழுதினார்.

போகும் வழியில் ஒரு இடத்தில் ஒரு ஆடு மேய்ப்பவன் அவரை வணங்கினான். ''உனக்கு எப்போது தேவையோ என்னை நினை அப்போது'' என்றார் அவனிடம்.

ஆதோனி என்ற பிரதேசத்துக்கு அப்போது நவாபாக இருந்தவன் மசூத் கான்.அவன் பாரசீகன். கன்னடமோ தெலுங்கோ தெரியாதே. ஒருநாள் அவன் குதிரையில் பிரயாணம் செய்தபோது மேலே சொன்ன ஆடு மேய்த்துகொண்டிருப்பவனை வழியில் கண்டான். அந்த நேரம் டெல்லி சுல்தானிடமிருந்து ஒரு கட்டளை உள்ளூர் பாஷையில் எழுதப்பட்டு மிக அவசரமாக நவாபிடம் தரப்பட்டது. அதிலென்ன வாசகம் என்று அறிய ஆள் தேடிக்கொண்டிருந்தபோது ஆடு மேய்ப்பவன் கண்ணில் பட, அவனை இதை உடனே படித்து சொல் என்றான். ஆடு மேய்ப்பவன் எழுத்தறி யாதவன். '' நவாபோ உடனே இதைப் படி'' என்கிறானே. என்ன செய்வது? அந்த ஓலையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். நவாப் '' இந்த ஆள் வேண்டுமென்றே இதை எனக்கு படித்து சொல்லமாட்டேன் என்கிறான். இவன் படித்துச் சொல்லாவிட்டால் இவன் தலையைச் சீவுங்கள்'' என்று கோபமாக கட்டளையிட்டான்.

அதிர்ஷ்டவசமாக ஆடு மேய்ப்பவனுக்கு, வெகு நாள் முன்பு, ஒரு சந்நியாசி தன்னிடம் ''எப்போது தேவையோ என்னை நினை'' என்று சொன்னாரே என்பது நினைவுக்கு வந்தது. ராகவேந்த்ரரை மனதில் கண்மூடி ஒரு வினாடி நினைத்தான். எதிரே நீட்டிய ஓலையை பார்த்தான். அதில் இருந்த எழுத்துக்கள் அவனுக்கு துல்லியமாக தெரிந்தது. படிக்க முடிந்தது. நவாபிடம் அதன் விவரம் புரியும்படியாக சொன்னான். அதில் நவாப்பை மெச்சி அவனுக்கு சாதகமாக டில்லி சக்ரவர்த்தி எழுதியிருந்தார். எனவே மிக்க மகிழ்ச்சி அந்த அதோனி பிரதேச நவாபுக்கு.

''இந்த நிமிஷம் முதல் இந்த ஆள் தான் ஆதோனிக்கு திவான்'' என்று ஆடு மேய்ப்பவன் பெரிய உத்தியோகம் பதவி எல்லாம் வழங்கப்பட்டான்.

இதன் பிறகு அதே ஆதோனி நவாப் ஒருமுறை ராகவேந்திரரை சந்திக்க நேர்ந்தது. அவரை ஒரு வேளை போலி சன்யாசியா என்று சோதிக்க நினைத்தான் நவாப். ''இந்தாருங்கள் பழங்கள்'' என்று ஒரு தட்டு நிறைய மாமிசங்களை பாத்திரம் பூரா நிரப்பி வெள்ளைத் துணியால் மூடி அவரெதிரில் வைத்தான்.

கமண்டலத்திலிருந்து சிறிது தீர்த்தம் எடுத்து அதன் மீது தெளித்து மூல ராமருக்கு நைவேத்யமாக அர்ப்பணித்து விட்டு மூடியைத் திறந்தார் ராகவேந்திரர்.

பாத்திரம் நிறைய இருந்த மாமிசம் புத்தம் புது பழங்களாக மாறியிருந்தது. மாமிசம் மட்டும் மாறவில்லை. நவாபும் ராகவேந்திர பக்தனாக மாறியிருந்தான்.செல்வங்களை வாரி வழங்கினான். ராகவேந்த்ரருக்கு செல்வத்தில் பற்றில்லை. மாஞ்சாலியில் ஒரு இடத்தில் மடத்திற்கு மனை மட்டும் பெற்றுக்கொண்டார். அதுவே இப்போதுள்ள மந்த்ராலயம். மேலும் நிறைய தர ஆசைப்பட்டான் நவாப். ஆனால் துங்கபத்ரா நதிக்கரை வறண்ட நிலமே போதும் என்றார் மகான்.

பின்பு எப்போதோ சில சிஷ்யர்கள் ''ஏன் இந்த இடம் தான் வேண்டும் என்று பெற்றீர்கள் என்று கேட்ட போது '' இங்கு தான் ப்ரஹ்லாதன் யாகங்கள் செய்தான்'' என்று அந்த க்ஷேத்திர மகிமையை சொன்னார். மந்த்ராலயத்தில் ராகவேந்திரர் மடம் ஸ்தாபித்தார். அன்னதானம் துவங்கி வைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

அருகில் பஞ்சமுகி என்ற ஒரு க்ஷேத்ரம். அங்கே ராகவேந்திரர் தவம் செய்தார். பஞ்ச முகத்தோடு ஹனுமான் தரிசனம் பெற்றார். பக்தர்கள் ராகவேந்திரரை பிரஹலாதன் மறு பிறவி என்று போற்றுவதுண்டு. ப்ரஹலாதனே சங்குகர்ணன் என்கிற தேவன் அவதாரம் தானே. எனவே மந்தராலயத்தில் பிருந்தாவனம் தோன்றியது.

1671ல் ஸ்ராவண கிருஷ்ண பக்ஷம் த்வீதிய திதியில் ராகவேந்திரர் மனம் திறந்து பக்தர்களிடம் பேசினார்.

''நேர்மையான வாழ்க்கையை கை கொண்டால் தான் நேர்மையான எண்ணம் தோன்றும். அவரவர் கர்மாக்களை, கடமைகளை பலன் தேடாமல் அவற்றை பகவானுக்கு விட்டுவிட்டு மேற்கொள்வது தான் சரியான பாதை. இதுவே சதாசாரம். (நல்வழி). கர்ம யோகம்.
மக்களுக்கு உண்மையாக செய்யும் சேவை மகேசன் சேவை, ஜனசேவா ஜனார்தன சேவா. வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் செய்வது பகவானுக்கு சேவை, வழிபாடு. ஒவ்வொரு செயலுமே பூஜை. கிடைத்தற்கரிய பாக்கியம் இந்த மனுஷ ஜன்மம். ஒவ்வொரு வினாடியும் வீணாக்க வேண்டாம். இனி அது திரும்ப வரப்போவதில்லை. இதை புரிந்து கொள்ளவேண்டும். எனவே பகவானை நினைக்க தவறவே கூடாது. "

சாஸ்த்ரங்களை புறக்கணித்து, தன்னை குரு, பகவான் என்று சொல்லிக்கொண்டு, மாயா ஜாலங்கள் அதிசயங்கள் நிகழ்த்துவர்களை விட்டு தயவு செய்து தூர விலகுங்கள். நானும் அதிசயங்கள் நிகழ்த்தியிருக்கிறேன். மத்வாசார்யார் போன்றோரும் அவ்வாறே நிகழ்த்தி யிருக்கிறார்கள் . ஆனால் அதெல்லாம் யோக சித்தியால் மட்டுமே. .சாஸ்திரம் சொல்லியபடி நடந்து, பகவான் கிருபையால் எப்படி பலன் பெறலாம் என்று நிரூபணம் செய்யவே. "

"ஞான மார்க்கம் அதிசயம் நிகழ்த்துவதை விட சிறந்தது. இதில்லாமல் நிகழும் வித்தைகள், பயனற்றவை. தந்திரம்.வீண்.
பகவானிடம் பக்தி வை. அவனது கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து செலுத்தும் பக்தி சிறந்தது. யோகிகள், குருமார்கள்,இவர்களிடம் அதே பக்தி தேவை. அவர்கள் ஆசியே நமக்கு பலம்.''

பேசி முடித்து ஸ்ரீ ராகவேந்திரர் தான் கட்டிய பிருந்தாவனத்தில் அமர்ந்தார். மாஞ்சாலியில் மாதவரம் கிராமத்திலிருந்து கற்கள் கொண்டுவரச் சொன்னார். த்ரேதா யுகத்தில் ராமன், சீதா, லக்ஷ்மணன் பாதம் பட்ட இடத்திலிருந்து வந்த கற்கள் அவை என்றார். அவரைச் சுற்றி கற்கள் அடுக்கப்பட்டன. அவரோ கண்களை மூடி கையில் ஒரு ஜபமாலையை உருட்டிக்கொண்டு ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார்.

''என் கைகளில் உருளும் ஜபமாலை மணிகள் எப்போது உருளாமல் நிற்கிறதோ அப்போது என்னை சுற்றி கற்களை எழுப்பிவிடுங்கள்'' என்று கட்டளை இட்டிருந்தார்.

பிரணவ மந்த்ரம் உச்சரித்தவர் பூரண சமாதியில் ஆழ்ந்தார். மாலை அசையாமல் நின்றது. கற்கள் அவரைச்சுற்றி அடுக்கப்பட்டு அவரது சிரம் வரை எழும்பியது. சிரத்தை மூட ஒரு தாமிர பெட்டி. அதில் நேபாளத்தில் கண்டகி நதி தீரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 1200 லக்ஷ்மி நாராயண சாலக்ராமங்கள் நிரப்பி சுற்றிலும் சுவர் எழும்பியது. சமாதி மூடப்பட்டது. 12000 வராஹ அபிஷேகங்கள் அவரது பிருந்தாவனத்துக்கு நடந்தது.

ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவ சமாதியில் இன்றும் இருக்கிறார். சமாதி அடைந்த ஸ்ராவண கிருஷ்ண பக்ஷ த்விதிய திதி அன்று ஆராதனை வருஷந்தோறும் நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுமுகிறார்கள். A RARE PICTURE FROM ORIGINAL PORTRAIT OF SRI RAGAVENDRA SWAMI (RAYARU)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...