Thursday, December 28, 2017

THIRUPPAVAI 14



சுடச்சுட அக்காரவடிசல் மார்கழி 14வதுநாள்: J..K. SIVAN

பங்கயக்கண்ணான் பரம தயாளன்

கிராமங்களில் மனிதர்கள் வாழவே, பிழைக்கவே முடியாது என்று முடிவெடுத்து கூட்டம் கூட்டமாக அநேகர் வெளியேறிய காலம் போய் விட்டது. ஆரம்பத்தில் பட்டணம் ஸ்வர்கபூமியாக காட்சியளித்தது. கை நிறைய காசு. வசதிகள், நாகரிக வாழ்க்கை, சொகுசு என்று கனவில் மிதந்து இங்கே நாளாக நாளாக நகரவே இடம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், மின்சாரம் குறைந்து, வெட்டப்பட்டு, திருடும் கொலை கொள்ளையும் அதிகரித்து பயத்தில் வாழ்ந்து, ஒன்றுக்கு பத்தாக பணம் இறைத்து நகர வாழ்க்கை நன்றாக வாழ்க்கையாகி விட்டது. நட்பு, பிரேமை, அன்பு எல்லாம் பறிபோனது. மனிதாபிமானம் எட்டுக்குள் அடங்கி விட்டது. இப்போது கெட்டுப்போனபின் சூரிய நமஸ்காரம் செய்ய தோன்றி இருக்கிறது. ''சார் நான் ரிட்டையர் ஆனபின் அக்கடா என்று கிராமத்தில் போய் சுகமாக இருக்கப்போகிறேன். காசு கொடுத்து இந்த ஜென்மத்தில் இனிமேல் கத்திரிக்காய் கொத்தமல்லி கூட வாங்கமாட்டேன். குழாய் தண்ணீருக்கு சண்டைபோடமாட்டேன். குளத்தில் நீஞ்சுவேன்'' இல்லை. சாரி ரொம்ப லேட். கிராமங்களும் கெட்டுப்போக ஆரம்பித்துவிட்டன. நமது தவறான முடிவால் தவறான வாழ்க்கை முறை அங்கும் பரவிவிட்டது.... போகட்டும்....

++

கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய்விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை கொழிக்கிறதே அங்கே. இப்பவே இப்படியென்றால் 5-6000 ஆண்டுகளுக்கு முன்புஆயர்பாடி கிராமம் எவ்வளவு தெய்வ லோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே அங்கே வாழ்ந்தபோது! மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டது.

ஆண்டாள் ஒரு இயந்திரம் மாதிரி. சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர்களையும் எழுப்ப வந்துவிட்டாள். அவள் தோழியர்கள் அனைவரும் ஏறக்குறைய வந்தாகி விட்டதே. ஒரு சிலரைத்தவிர. ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.?

''ஆண்டாள் இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார் இந்த அல்லிக்குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. "

ஆண்டாள் தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத்தட்டி எழுப்புகிறாள்.

''அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள்
செல்வதை வெளியே வந்து பாரேண்டி? வெள்ளையாக தாடி, மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு. அதன்மூலம் தான் பெருமாள் முன் நின்று பரவசத்தோடுஅவர்கள் ஊதி சுப்ரபாத சேவை பண்ணப்போகிறார்கள். ''வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு நாமும் பெருமாள் கோவிலுக்கும் செல்வோம்''

ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது. முதல் நாள் பெய்த மழை இன்னும் முழுதும் நிற்கவில்லை. எனினும் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் முடிந்து பூஜைக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதையும் ஆவலாக ரசித்து படித்தாகி விட்டது. அவரது மனம்
அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாள் நினைவில் கொண்டு நிறுத்தியது.

மார்கழி முப்பது நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. ஒருவேளை அப்படி இருந்தால் நமக்கு தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற பேராசை!

மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து அந்த வார்த்தைக் கோவையின் அழகைப் படித்தார்.

'' உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

மேலெழுந்தவாரியாக இதில் வர்ணனை என்று தென்பட்டாலும் வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது.ஞானத்திலும் கண்ணன் மீதுள்ள பற்றிலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப்பாவை ஒரு உபநிஷதம், என்ன ஞானம் அவளுக்கு! நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ணனின் பெருமையைப் பாடுவதற்காகவே .

'வா, வந்து க்ரிஷ்ணனைத் துதி செய்' என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல, அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே நீவிர் உய்வீர்களாக என்று உலகத்துக்கே ஒரு வரியில் வழி காட்டுகிறாளே !

''அப்பா''

கோதை அழைக்கும் குரல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு ஆஸ்ரமத்தின் உள்ளே சென்றார் விஷ்ணு சித்தர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...