உன்னை நான் விடுவதில்லை.J.K. SIVAN
முருகன்தமிழ்க் கடவுள். அருள் புரியும் பாலகன். ஒளவை யையே ''சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்ற கேள்வியில் யோசிக்க செய்தவன்
.அருணகிரிக்கு '' முத்தைத்தரு '' அன்று திருவண்ணாமலையில் முதலடி எடுத்துக் கொடுத்தவன். தாயிடம் வேல் வாங்கி சிக்கலில் இன்னும் சூரசம்ஹார சமயம் வியர்த்துக்கொண்டிருப்பவன். சுனாமியே வந்தாலும் தனது ஆலயத்தை நெருங்காது திருச்செந்தூரில் கடலை உள்வாங்கச் செய்பவன். அறுபடை வீடுகளில் எண்ணற்ற பக்தர்களை மனம் மகிழச்செய்பவன். பல பாடல்களின் நாயகன். தேவ சேனாதிபதி. தேவசேனாவின் பதி .
அவனை மனமுருகி ஒருவர் பாடுகிறார். ஆழ்ந்த பக்திச்சுவை மிக்க எளிய கருத்தமைந்த பாடல். நீல மயில் மால் முருகனை நீலமணி ராகத்தில் பாடுகிறார்.
''தமிழ் பாடல்களில் மனம் விருப்பம் கொண்டவனே. யார் பாடினாலும் மயில் வேகமாக மறந்து வந்து ரசித்து அருள்பவனே, அதென்னவோ நான் மட்டும் எந்தவிதமான பாடல்கள் இயற்றி உன் மேல் பாடியும் உன் மனம் ஏனோ கருங்கல்லாகி உருகவில்லையே .இரங்கவும் இல்லை. ஏன் இந்த சோதனை? சொல்.
சரி நீ தான் இப்படி இருக்கிறாயே, உ ன் அன்னையையாவது வேண்டி அருள் பெறலாம் என்று அவளை பாடினேன். லோக மாதா யாரையெல்லாமோ கவனிக்கிறாள். என் பாட்டு அவளை தொடவில்லை. அவள் என்னை ஒருவன் இருப்பதாகவே அறியவில்லை. உன் தந்தையிடம் சென்றேன். அவர் என்ன செய்தார் என்கிறாயா? தான் இருப்பதே தெரியாமல் ஆழ்ந்த நீண்ட மௌனம், த்யானம். நான் என்ன செய்யமுடியும். அவர் நினைவில் இடம் பெறவே வழியில்லை. அவ்வளவு தான் என் அதிர்ஷ்டம் என்று நடந்தேன். யாரிடம்? உன் மாமன். அது தான் அந்த நாராயணன். எல்லோரும் சொல்கிறார்களே, இந்த உலகத்தையே காக்கும் கடவுள் என்று அவரிடம். என்னை காத்தருள மாட்டாரா, துயர் தீர்க்க மாட்டாரா என்று.
என்னைத் தவிர மற்றஎல்லோரும் சொல்வது தான் அவர் காதில் விழுந்தது. தேவர் குறை கேட்டு துயர் தீர்த்தவர் என் குரல் கேட்காமல் செவிகள் செவிடாகிவிட்டதே. நான் என்ன செய்வேன். நேராக உன் மாமியிடம் சென்றேன். மஹாலக்ஷ்மி, திரு. வாரி வழங்குபவள். கையால் மட்டுமில்லை. கண் பார்வையாலே. அவள் பார்வை பட்டாலே போதும். துன்பம் தீர்ந்து இன்பம், சுபிக்ஷம் பெருகும். அதைத்தானே லக்ஷ்மி கடாக்ஷம் என்று அவள் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே என்று தேடுகிறோம். ஹுஹும். அவள் பார்வையிலும் நான் படவில்லை. திருப்பி உன்னிடமே வந்துவிட்டேன்.
உங்கள் எல்லோரையும் விட இந்த பூமியில் போஜராஜன் போல் நல்ல கவிதைகளை கேட்டு ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் லக்ஷம் பொன் கொடுக்க ஆளில்லை.
அவனவன் லக்ஷம் கோடி என்று பொன்னாகவும் காசாகவும் வைத்துக்கொண்டு மாட்டிக்கொண்டு தவிக்கிறான் என்னை எங்கே லட்சியப்படுத்துவான் .
ஆகவே இந்த கணமே நீ வருகிறாய், எனக்கருள்கிறாய். அதுவரை நான் உன்னை விடமாட்டேன் என்பது நினைவிருக்கட்டும்.
இந்த பாட லை அந்த ஏழைக் கவிஞனின் உண்மையான முருக பக்தி சொட்ட, நம் கண் முன்னே அவனை, அந்த பாராமுக ஆறுமுகனை நிற்கச்செய்ய ஒருவரால் மட்டுமே முடியும். அவரே மதுரை சோமசுந்தரம் என்ற அசுரர் சாதக பாடகர். முருகன் பாடல்களுக்கென பிறந்த அழியாப்புகழ் கொண்டவர்.
மதுரை சோமுவின் இந்த பாடலின் கடைசி வரியில் ''உன்னை நான் விடுவதில்லை'' என்ற இடத்தில் ஒரு அழுத்தம். நெருங்கிய உறவு, பக்தி, ''நீ மட்டும் இதை செய்யவில்லைஎன்றால் பா
ரேன்
, உன்னை நான் சும்மா விடமாட்டேன்' என்று பாந்தவ்யம் காட்டும் உணர்ச்சி நம்மை எங்கேயோ கொண்டுபோய்விடும்.மதுரை சோமுவை ஆனந்தமாக செவியில் பருக சொடுக்க வேண்டிய லிங்க் https://youtu.be/ZiiDf-HmkCEhttps://youtu.be/ZiiDf-HmkCE
No comments:
Post a Comment