Friday, November 24, 2017

WANTED A SERVANT.2

  வாண்டெட் வேலைக்கு ஆள் - 2     J.K. SIVAN

வேலைக்கு  ஆள்  கிடைப்பது எவ்வளவு கஷ்டம், அப்படி கிடைத்தாலும்  வேலை நடக்காமல் துன்பம் மட்டுமே  சேர்வது பற்றியும் சொன்னேன் அல்லவா.  இந்த மாதிரி சூழ்நிலையில் தான் ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. 

நல்ல ஒரு ஆள்  சொன்னதை  செய்து திருப்தி படுத்துபவன் கிடைக்கமாட்டானா  என்று ஏங்கும்போது தான் இது நடந்தது.                                                

திடீரென்று ஒருநாள்  அந்த ஆள்  வேலைக்கு  கிடைத்தான் அல்லவா?  நம்பிக்கையில்லாமல்  அவனுடன்  பேச்சு நடந்தது.

''யாருப்பா  நீ ?''

"இங்கே  தானுங்க -

''என்ன பண்ணிட்டிருக்கே?''
''நாங்க  மாடு, கன்னு மேய்க்கிற  இடையருங்க.  வீட்டோட  இருந்து  எல்லா  வேலையும்  செய்வேனுங்க. ''
''சரியான நாட்டுப்புறமாக  இருக்கிறதே. பார்ப்போம் வேறே என்னதான் தெரியம் என்று என்று பேச்சு கொடுத்தேன்.  
''வேறே என்ன எல்லாம் செய்ய தெரியும் உனக்கு ''
'வழக்கமா  வீடு  பெருக்கிறது, துணி துவைக்கிறது.  சின்ன புள்ளைங்களைப்  பொறுப்பா  பாத்துக்கிறது.  அவங்களை   இஸ்கோலு   கூட்டி போறது இந்த மாதிரி வேலை எல்லாம்   கூட  செய்வேனுங்க. ''
''அட இதெல்லாம் கூப்பிட செய்வியா? அப்புறம் ''
'' டமாசா   பாட்டு  எல்லாம்  கூட புள்ளைங்களுக்குச்  சொல்லித்  தருவேனுங்க. நானு  வளக்கிற  பசங்க  அழுவவே அழுவாதுங்க.  சதா  சந்தோசமா  சிரிக்கும்.
''ம்ம்   ஓஹோ...''
''வந்துங்க....  ராவிலே  தனியா  போவ  சொல்ல   துணைக்கு வருவேனுங்க.  ஒரு கஷ்டமும்  இல்லைங்க. கூப்பிட்ட  குரலுக்கு ஓடியாருவேனுங்க.''
''ஆமா   ஆளு  வாட்ட சாட்டமா இருக்கியே''  சொல்லு?''
'' எவனாச்சும்  கோணா   மாணான்னு  வாலாட்டினா  ஒரே  போடு தாங்க.  அவன்  டவுனாய்டுவான்.  நம்ம கிட்டே  எவனும்  வாலாட்ட முடியாதுங்க''. 
''இவ்வளவு சொல்றே  உன்  பேர்  என்னான்னு  சொல்லலியே பா''
''என்னைத் தெரிஞ்சவங்க  ''டே  கண்ணா'' ன்னு  கூப்பிடுவாங்க''.
''தம்பி,   உன்னைப் பார்த்தா  நல்லவனா இருக்கே. சிரிச்ச  முகம்.  சந்தோஷமாகவே  இருக்குதுப்பா   உன்கூட  பேச.  ரொம்ப மகிழ்ச்சி.  நீ  சொன்னதெல்லாம்  பிடிச்சிருக்கு.   அது சரி.  என்ன கூலி  கேட்பே  வேலை செய்ய?''

''இன்னா சாமி இது. இப்படி கேட்டுட்டே.  பொஞ்சாதியா, குழந்தையா, குட்டியா?.  ஒத்தை ஆளு  நானு.  தனியா  எனக்கு என்று  ஒரு    வீடு  வாசல் ஏதுமில்லை. பார்க்கறதுக்கு  இளமையா  இருக்கலாம்.  எனக்கு  ஆன  வயசு எனக்கே  தெரியாதுங்க.''
''அடேயப்பா  என்ன கூலி கேப்பே?''
'' காசு  என்னங்க  காசு. இன்னிக்கு வரும்  நாளைக்கு  போவும்.  எனக்கு  வேண்டியதெல்லாம்   மனசு தாங்க.  என்னைப்  பிடிக்குதான்னு  சொல்லுங்க.... .  உங்களுக்கு  எது வேண்டுமின்னாலும்  செய்யறேன்.''

இது மாதிரி  ஒரு  பழஙகாலப்  பைத்தியம்  கிடைக்குமா?.  உடனே  வேலைக்கு எடுத்துக்கொண்டேன். என்னோடேயே  இருக்கிறான்.  நிழலாய்க்  கூடவே  இருந்து எல்லா  வேலையும் தானே  எடுத்துப் போட்டுக்கொண்டு   செய்கிறான்.

நாளாக நாளாக  அவன்  இல்லாமல்  நான்  இல்லை   என்று  ஆகிவிட்டது.  இவனைப்போல்  இன்னொருத்தன்  இந்த  வையகத்தில்  இல்லை  எனலாம்.  என் குடும்பத்திலே அவனும்  ஒருத்தன் என்கிற மாதிரி  எல்லோருக்கும்  அவனைப்பிடித்து விட்டது. தக்காருக்கு தக்க மாதிரி  வேறே  யாரால்  பழக  முடியும்?

 சுருக்கமாகச்  சொன்னால்,  அவன்  தான் எனக்கு எல்லாமே.  பெருக்குவது.  யாராவது வீட்டில் தப்பு செய்தால் அடக்குவது. புத்திமதி சொல்கிறது.  பிள்ளைகளுக்கு அவன்தான் வாத்தியார். வளர்ப்புத் தாய்  என்று கூட  சொல்லலாம். உடம்பு யாருக்காவது  சரியில்லை என்றால்  ஓடி யாடி  உதவுகிற  வைத்யனும் கூட.  விடியல்  காலை  வீடு பெருக்கி  வாசல் தெளித்து  பால்  வாங்குவது முதல்  இரவு  கதவு  எல்லாம்  தாழ்ப்பாள்  போட்டு விளக்குகளை  அணைப்பது வரை  ''ஏ  கண்ணா''  என்று  அவன்பேர்  சொல்லி  கூப்பிடாமல்  ஒன்றுமே  முடியாது.  

அவனுக்கு  தெரிந்த  வேதாந்தம் விஞ்ஞானம்  அசாத்தியம்  எனலாம்.  அப்படியே  அசர வைக்கும். பண்பில், நட்பில்,  நேர்மையில்,  பாசத்தில்  அவனிடம்  கட்டுண்டு  அனைவரும்  எங்கள்  வீட்டில்  திளைக்கிறோம். இவ்வளவு சொல்லியும்  இன்னும்  நிறைய  சொல்ல இருக்கிறது.

பாரதியார்  சொன்னதைத் தான்  நான்  சொல்கிறேன்.

கண்ணனை  நான்  ஆட்கொண்டேன், கண் கொண்டேன், கண்டு கொண்டேன், கண்ணன் எனை  ஆட்கொள்ள காரணமும்  உள்ளனவே.

மேற்சொன்னது  யாவும்  பாரதியாரின் ''கண்ணன்  என்  சேவகன்''  பாட்டின் வார்த்தைகளை  வைத்து  பின்னப்பட்டவை. இவ்வாறே  கண்ணன்  உங்கள்  மனத்திலும் வீட்டிலும்  ''எஜமான் வேலைக்கு''  ' வேளா  வேளை வரட்டுமே!'

                              கண்ணன் என் - சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ... 5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; ... 10

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ... 15

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ... 20

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ... 25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ... 30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு'' கென்றேன். ''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 35

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ... 45

வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் ... 50

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ... 55

இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ... 60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...