Thursday, November 9, 2017

பார் போற்றும் பரமஹம்சர்

பார் போற்றும் பரமஹம்சர் - J. K. SIVAN

மனது திரும்ப திரும்ப தேடுகிறது, நாடுகிறதே..

தக்ஷிணேஸ்வரம் காளி கோவில் பஞ்சவடியில் அந்த சிறிய ஆஸ்ரமத்தில் தாழ்வாரத்தில்......
சுற்றி எங்கும் பச்சை பசேல் என செடி கொடி ,மலர்கள் காற்றில் ஆடி ஒரு இன்ப மயக்கத்தை உண்டாக்கினாலும் ராமகிருஷ்ணர் சிலையாக நின்றுகொண்டிருந்தார்.

நரேந்திரன் குரல் அந்த ஆசிரமத்திலிருந்து வெளிவந்து காற்றில் கலந்து செவிக்கினிமையாக ரீங்காரம் செய்தது.

மோஹிந்த்ரருக்கு ஆச்சர்யம் ''ஆஹா, குருநாதரின் குரல் தான் இனிமையானது என நினைத்தேன். இந்த இளம் வாலிபனின் குரல் மதியை மயக்குகிறதே!''என தோன்றி ராமக்ரிஷ்ணரைப் பார்த்தபோது அவர் இந்த உலகிலேயே இல்லை..மூச்சு விடுகிறாரா என்று கூட சந்தேகமாயிருந்தது. கண்கள் மேலே செருகி இருந்தன. யாரோ ஒருவர் ''குருநாதர் சமாதி நிலையில் இருக்கிறார் '' என்று மெல்லிய குரலில் சொன்னார். இதுவரை மோஹிந்தர் சமாதிநிலை பற்றியோ அதில் இருப்பவர் பற்றியோ கேட்டதில்லை, அறிந்ததில்லை. "ஒரு மனிதனால் இந்த உலகைவிட்டு தன்னை விலக்கிக் கொள்ள முடியுமா. அப்படியென்றால் எந்த அளவுக்கு அவர் கடவுளோடு சேர்ந்து இணைந்திருக்க வேண்டும்! எவ்வளவு பக்தி நம்பிக்கை வேண்டும் ?''

நரேந்திரன் பாடிய பாடலின் சாராம்சம்: ''மனமே, ஹரியை நினை, தியானி, குறையற்ற, கறைபடியாத பரிசுத்த ஆத்மா , பரமாத்மா, என்ன தெய்வீக ஒளி, மந்திரத்தால் கட்டப்பட்டது போல் பக்தர்களை கவர்ந்த பார்வை. லக்ஷம் சந்திரர்களை ஒன்று சேர்த்தாற்போல் ஒரு பால் ஒளி... மின்னல் போல் கண்கூசும் பிரகாசம். மயிர்க்கூச்செரியும் ஆனந்த மயமானவன் ...''

கடைசிவரை, ராமகிருஷ்ணரை தூக்கி வாரி போட்டது. மயிர்க்கூச்செரிந்தது. கண்களில் பிரவாகமாக ஆனந்தக்கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஈரமாக்கியது. உதடுகள் ஏதோ சொல்ல அசைந்தன.ஆஹா அந்த பரமாத்மாவை நேரிலே அல்லவோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்..

நரேந்திரனின் பாடல் தொடர்ந்தது......''... அவன் திருவடிகளில் சரணடை..கண்கள் பணிக்க, மனம் கரைய, ஈடற்ற அந்த ஒளி வீசும் காட்சியை அனுபவி.. இதயத்தில் நிரப்பிக்கொள்.

நரேந்திரன் பாடலின் கடைசி அடிகளை திரும்ப திரும்ப பாடினான்... ''.... அவனது பேரன்பின் அம்ருதக்கடலில் மூழ்கி,, ஓ மனமே, ஆனந்தமாக நிறைய நிறைய பூரண ஞானத்தை பெறு ..ஆனந்தத்தில் திளை ''

அவன் எதிரே ஒருவர் அந்த ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருந்தாரே..

அந்த காட்சி மோஹிந்தரின் மனதில் ஆணியடித்தது போல் பதிந்தது. வழி முழுக்க நினைத்துக்கொண்டே வீடு நோக்கி நடந்தார். ''அவன் திருவடிகளில்.......ஆனந்தத்தில் திளை ''

அடுத்த நாள் மோஹிந்தர் ஆஸ்ரமம் சென்றபோது.. பவநாத், மற்றும் சிலர் தரையில் கோரைப்பாய் மீது அமர்ந்திருந்தார்கள் எல்லோருமே 19-20 வயது வாலிபர்கள். அவர்கள் ஏதோ கேட்க ஒரு சிறு தலையணை மெத்தையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு ராமகிருஷ்ணர் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். காந்த சிரிப்பு.

மோஹிந்தர் நுழைந்ததை கண்ட ராமகிருஷ்ணர் சிரித்து தலையாட்டி வரவேற்று, ''அதோ அவர் வந்துவிட்டார்'' என்கிறார். மோஹிந்தர் அனைவரையும் வணங்கினார். இதற்கு முன்பெல்லாம் கைகூப்பி வணங்கிவதோடு சரி. இப்போது சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு குருவின் எதிரே கை கட்டி அமர்ந்தார்.

மோஹிந்தருக்கு பகவத் சத்சங்கம் பிடித்து விட்டது. அது அவரை திரும்ப அழைத்து வந்திருக்கிறது என்பதை ஒரு கதையாக சொல்லாமல் சொன்னார் ராமகிருஷ்ணர்.

''ஒருத்தர் ஒருநாள் சாயங்காலம் ஐந்து மணிக்கு ஒரு மயிலுக்கு ஒரு உருண்டை போதைப் பொருள் கஞ்சாமாதிரி ஏதோ கொடுத்துவிட்டார். மயிலும் சாப்பிட்டுவிட்டது. அதற்கு அது மீண்டும் வேண்டும் போல் இருந்ததோ என்னவோ. மறுநாள் சொல்லிவைத்ததுபோல் ஐந்து மணிக்கு அந்த ஆளைத்தேடி மயில் வந்து நின்றது''

மோஹிந்தர் மனதில் ''ஆஹா இது அல்லவோ எனது மன நிலையை சரியாக எடுத்துச் சொல்லும் உதாரணம்'' என்று பட்டது. ஆம் எப்போது மீண்டும் பரமஹம்சரை சந்திப்போம், அவர் உபதேசத்தை கேட்போம் என்று மனது துடித்துக்கொண்டிருந்ததே. நேற்றெல்லாம் சிலையாக சமாதிநிலையில் இருந்தார். இதோ சிறு வயது பிள்ளைகளுடன் சரிசமானமாக சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்.



பரமஹம்சரின் பார்வை மோஹிந்தரின் மீது சென்றது...''ராம்லால், நீங்கள் எல்லாம் சிறியவர்கள்.. அதோ அவரைப் பாருங்கள் உங்களைவிட சற்று வயதானவர். நீங்கள் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள் அவர் ஏதோ தீவிர சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறார்.'' என்கிறார். மோஹிந்தருக்கு அப்போது வயது 28.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...