Tuesday, November 21, 2017

சிவபுராணம்

சிவபுராணம்  -  ஜே.கே. சிவன்

தமிழனென்று  சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.....   அப்படி எவனாவது  பாரதி சொல்லை மதித்து தமிழனென்று சொல்லிக்கொண்டால் நிச்சயம் அவன் திருவாசகம் தெரிந்தவனாக இருக்கவேண்டும்.  மாணிக்கவாசகரை அறியாத  தமிழன் முழுது தமிழன் ஆக மாட்டான்.  மணிவாசகரின் சொல்லுக்கு உருகாதவன் எதற்கும் உருகாதவன், யாருக்கும் உதவாதவன்.



வாய் மணக்கும் தமிழ்  மணி வாசகர் பாடும்   திருவாசகம். சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக வெகு சிறப்பாக அமைந்துள்ளது.   ஓம்  நமச்சிவாய  எனும்  திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம்  சிவனடியார்  அனுதினமும்  போற்றும் சிவ வழிபாட்டில் இன்றியமையாதது.

சிவபுராணம் உண்மையில்  ஒரு  சீவ புராணம்.  இந்த சீவன் நற்கதி பெற  சிவனைப்படி போற்றி  மனம் கனிந்து பாடிய  பதிகங்கள்.   சிவனையே முழுதுமாக மனதில் நிரப்பி  மணிவாசகர் பாடிய அற்புத பதிகங்கள்   எளிய நடையில்  அமைந்து  சிவபுராணம் என்று பெயர் பெற்றது மிகவும் பொருத்தமானது.


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

 இதற்கு அர்த்தமே  சொல்லவேண்டாம். ஓம்  நமச்சிவாய,  என்  சிவகுருநாதனே , நின் திருவடி வாழ்க.கண்ணிமைக்கும் நேரமும் கூட  என்  நெஞ்சத்தை விட்டு  பிரியாமல்  இருப்பவனே,நின்  திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஸ்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தருளும் குருநாதா,  மாணிக்கமே  உன்  திருவடி வாழ்க.
தானே ஒரு  ஆகமமாகி நின்று எமக்கு அருகில் வருபவனே , சிவனே, உன் திருவடி வாழ்க.
ஒருவனாகவும்  பலவாகவும்  ரூபமெடுத்து  காட்சி தரும்  இறைவா  நின் திருவடி போற்றுகின்றேன். வேதங்கள் தான் நமக்கு   ஞானம் அளிப்பவை.  அந்த வேதங்களின் பயனாகத்தான்  ஆகமங்கள் உருவாகி  நம்மை இறைவனின் அருகில் செல்ல வழி வகுப்பவை.  இறைவனால் அருளிச்செய்யப்பட்டவை. 

இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் -  திரு மந்திரம்).    நாம் பசுக்கள்  அவன்  பசுபதி.

''வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ''

நான் எப்போதுமே  எதிலுமே   ''எடுத்தேன் கவிழ்த்தேன்'' பேர்வழி. எனவே  என் அவசரத்தை, வேகத்தை  போக்கிவிடு.  மீண்டும் மீண்டும்  பிறவி எடுக்க வைக்காதே.  போதும்  இந்த தொடர்  அவஸ்தை. உன் பாதம் பணிகிறேன். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.

தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனே , என் அப்பனே,  ஞான ஒளி ரூபனே அக்னிஸ்வரூபமாக சிவந்து காணும் சிவனே,  அன்பான தெய்வமே,  அன்பில் கலந்த ஆரமுதே ,  மாயை நிறைந்த, மாயையே உலகென இருக்க, இதில் இருந்து என்னை மீட்கும் சக்தி வாய்ந்த  உயர்ந்தவனே, திருப்பெருந்துறையில்  அமர்ந்து அருள்பாலிக்கும்   அரனே,உன்  திருவடி போற்றி போற்றி. வணங்குகிறேன். .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...