Wednesday, November 8, 2017

சூர் ஸாகரம்

சூர் ஸாகரம் 

                                                          மறந்து விட்டாயா?

எனக்கு தெரிந்து  எந்த தெய்வம்  கையில்  சக்ரம் வைத்துக்கொண்டிருக்கிறது?.  ஹுஹும்.   அந்த நாராயணனாகிய  கிருஷ்ணன் ஒருவனே  சுதர்சன தாரி. சரி அப்படி யாரோ நமக்கு தெரியாத
ஒருவர்  சக்கரம் வைத்துக்கொண்டிருப்பவர்  என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால்  சக்கரம் வைத்துக்கொண்டு பெரிய கருடன் மீது சௌகரியமாக  பறப்பவர்  யார் ??  நிச்சயம் அது கிருஷ்ணனாகிய  நாராயணனை மட்டுமே காட்டும்.

அப்படியும் இன்னொருத்தர் எங்காவது இருந்துவிட்டாரென்றால்??

அப்போது இந்த பிரம்மாஸ்திரம் அவசியமாகிறது.

அப்படிப்பட்டவர்  நந்தகோபன் யசோதை தம்பதியின்  செல்ல மகனா?  என்ற கேள்விக்கு  ''ஆம்''  என்று ஒருவர் மட்டுமே பதில் சொல்லமுடியும். அவரே உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரியவர், நிலஉலாவிய நீர் மலி மேனியர்.
அலகிலா விளையாட்டுடையார்,  எமது  ஈடற்ற  தலைவர்....  ஸ்ரீ கிருஷ்ணன் ஒருவரே அவர்.
என் மனக்கலத்தை நீக்கி, சிந்தை தெளியவைத்து, ஆனந்தனுபவம் பெற வைப்பவர் அவர் ஒருவரே.

கிருஷ்ணா  எத்தனை பேர் துன்பம் இதுவரை   தீர்த்திருக்கிறாய்? கணக்கிலடங்காதே .

ஞாபகம் இருக்கிறதா?  நந்தகோபன் அரண்மனை  தோட்டத்தில்  .....யம்லாக்,  அர்ஜுன் என்ற இருமரங்கள்.......   மரங்களா அவை?  பல யுகங்கள் சாபம் ஏற்று காத்திருந்து,  உன்னால் சாப விமோசன  விடுதலை பெற்று  விண்ணுலகம் திரும்பக்  காத்திருந்த குபேரன் புதல்வர்கள் ...அதற்காக தானே  வெண்ணை திருடி நாடகமாடி, உரலில் கட்ட வைத்து, அந்த உரலாலேயே  குபேரன் புதல்வர்களுக்கு விடுதலை....

இதுமட்டுமா.. கஜேந்திரன்  நீர் அருந்தி தாமரை பறித்து உனக்கு சாற்றுவதற்கு நீரில் இறங்கப்போய்  அவன் உயிரே போகும் நிலை....கஜேந்திரன் நீர் குடிக்கும் முன்பு அவன் அவனது உயிர் குடிக்க காத்திருந்த பெரிய முதலை ஒன்று....எவ்வளவோ  போராடி தோற்று, முடியாமல், தான் முடியுமுன்பு,  உன்னை ஆதிமூலமே  என்று கதறி அந்த  யானை கண்ணீர் மல்க  அழைக்க காத்திருந்தவன் போல் நீ கருடன் மீதேறி உன் சுதர்சன சக்கரத்தால் முதலையை முடித்து கஜேந்திரனை காப்பாற்றினாயே....

இன்னொன்றும் நினைவுக்கு வருகிறதே...  யமுனை நதி அழகாக ஓடியது.  அதன் நீர் அனைவரையும்  ''வா வந்து குளி , நீரில் விளையாடு'' என்று அழைத்தும்  நெருங்க முடியாமல்  கொடிய  அரக்கன்  காளீயன் கடும்  விஷத்தோடு யமுனையை ஆக்கிரமிக்க,  சிறுவனாக இருந்தும் கிருஷ்ணா உன்னால் எப்படியப்பா  அவன் மீது பாய்ந்து காளீயன் சிரத்திலேறி, நர்த்தனமாடியே அவனை அடிபணியச் செய்து  உயிர்ப்பிச்சை அளித்து அங்கிருந்து அகற்ற முடிந்தது.  என்ன கருணை உனக்கு?

''அடாடா, அந்த வானவர் தலைவன் இந்திரன் உன் மீதும், உன் மக்கள் பிருந்தாவன வாசிகள் மீதும் கோபம் கொண்டு வருணனை அனுப்பி   ஒரு சுனாமி காட்சி நடத்த, நீ என்ன செய்தாய்?

'' அப்படியா சேதி, இதோ பார் என்று எந்த பரபரப்பும் இன்றி  இடது சுண்டுவிரலால் கோவர்தன மலையை தூக்கி  குடையாக பிடித்து , ஓர் நிமிஷமா, மணியா, நாளா,  ஏழு நாட்கள் அனைவரையும், மாடு கன்று அனைத்துமே இந்திரனின் சீற்றத்திலிருந்து காத்து அவனை அடிபணிய செய்தவனாயிற்றே...  

இதைச் சொல்ல மறந்துவிட்டேனே .  ஹஸ்தினாபுரத்தில், அனைவரும் இருந்த சபையில், அபலை  திரௌபதியை  மான பங்கப்படுத்த  துரியோதனன் ஆணையிட, கர்ணன் மற்றோர் ஆதரிக்க, துச்சாதனன் துகிலுரிய அந்த நேரத்தில், அல்ல, தக்க நேரத்தில் அவள்  மானம் காத்தது யார்,  சரமாரியாக  எல்லையற்ற 'ஸாரி ' வஸ்திரம், எங்கிருந்து அவளது உடலைச் சுற்றி வந்துகொண்டே இருந்தது. கை வலிக்க, துவண்டு விழுந்தவன் துச்சாதனன் தானே, திரௌபதி அல்லவே....   ''ஹரே கிருஷ்ணா, ஆபத்பாந்தவா'' என்ற ஒரே குரல் போதுமே உனக்கு...

உண்மையிலேயே  நீ ஒருவன்  தான் உண்மையிலேயே  காக்கும் கடவுள். கிருஷ்ணா.  அப்படி எல்லோருக்கும் ஓடி ஓடி வந்து கருணை காட்டிய  நீ, நாளெல்லாம்  உன்னை பாடி நினைத்து வாடிக் கொண்டிருக்கும் இந்த சூர்தாஸ் மேல் மட்டும் இன்னும் கருணை காட்டாதது எதனால்,  என்ன காரணம் கிருஷ்ணா? சொல் , நானும் உன் பக்தன் தானே.ஏன்  லேட்??


Chakra ke dharanhaar Garun ke aswaar
nand kumar mero sankat niwaro

Yamlaak arjun taryo gaj ke ubaryo
naag naathanhaar mero to sambharo

girivar kar pe dharyo indra garv daryo
vraj ke rakshanhaar deenan vicharo

drupad suta ki ber nikana ki aber
ab kyun aber sur  sevak tiharo

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...