Sunday, November 26, 2017

OUR FAMILY HISTORY

எங்கள் வம்சம்:  J.K. SIVAN 

                                   
இப்படியும்  நடந்தது.


மீண்டும் நாம் கஷ்டமே படாமல்  300-350 வருஷங்கள்   பின்னோக்கி அப்போதைய  சோலையும்  வாவியுமான  உடையார் பாளையம்  போகப் போகிறோம்.  அப்போதைய காலம் போல்  மாட்டு வண்டியில் அல்ல.  அதற்கு பல நாள்  ஆகும்.  ஆகவே,  இதோ இந்த கணமே  மனத்தால் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறோம்.  வந்து சேர்ந்தாயிற்று.

ராமஸ்வாமி  பாரதியையும்  அவர்  தம்பி  வைத்யநாத  பாரதியையும்  பார்க்கிறோமே.  இருவருமே உடையார்பாளையம்  யுவரங்க  பூபதி ஜமிந்தார் ஆதரவில்  வாழ்ந்தவர்கள். சகோதரர்கள் குடும்பம் ஒற்றுமையான ஒன்று.

இந்த  சகோதரர்களுக்கு மணம் முடிக்க வரன்  தேடியதில்  திருக்குன்னம்  ராமு அய்யர் பெண் ஞானம்மா   ராமசாமி பாரதியையும்,  திருத்தி மலை சுப்பையர் பெண்  ஜானகி  வைத்யநாத பாரதியையும்  மணந்தார்கள்.
ஜானகிக்கு  ஸ்ரீதனமாக ஒரு வீடும்  நிலமும்  கிடைத்தது. தஞ்சை  ஜில்லாவில்     ஒரு  சாத்தனூர்  கிராமம் இருக்கிறது.  அங்கே  போய்  வைத்யநாத பாரதியும்  அண்ணா ராமஸ்வாமி பாரதியும்  குடியேறினார்கள்.

காவிரிக்கரையில் வடக்கே  இந்த  கிராமம்   பூலோக  கைலாசம் என  பெருமை வாய்ந்த  திருவையாறுக்கும் சப்தஸ்தான   க்ஷேத்ரமான திருநெய்த்தானத்துக்கும் இடையே  உள்ளது.   திருநெய்த்தானத்தை தில்லைஸ்தானம் என்றும்  அழைப்பதுண்டு.

இந்த  க்ஷேத்ரத்திற்கு  மேற்கே   ஒரு   நாலுமைல்  நடந்தால் (அந்த காலத்தில்  நடக்கும்  தூரத்தை  வைத்து தான் அடையாளம்  சொல்ல முடியும்)  மரூர் என்று ஒரு  சிறிய  கிராமம்  வரும்.  அதற்கு பக்கத்தில்  தான்  சாத்தனூர். பச்சைப் பசேலென்று   விளைச்சல் நிலங்கள் உள்ள  பூமி.  காவேரிப்  பாசனம்.  கேட்க வேண்டுமா விளைச்சலுக்கு?  அமோகம். விவசாய பூமி என்பதால் அங்கே  வேளாளர்கள் அதிகம். அவர்களில் சிலர்   பட்டப்பெயர்கள் கொண்டிருந்தார்கள்  அந்த  காலத்தில்.    இன்னும் சில குடும்பங்களில் அந்த பெயர்கள் பெருமையாக  வழங்கி வருவது  சந்தோஷம்.

சோழகர்,  மழவராயர்,  தஞ்சிராயர்,  வாண்டையார்,  ராஜாளியார்,  தென்கொண்டார்  என்றெல்லாம் பட்டங்கள் இருந்து  இருந்தது.  கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வனில்  இந்த மாதிரியான பெயர்கள் வருவதை சிலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

காலாட்டி  சோழகர் என்று  ஒருவர் அப்போது  பெரிய  மிராசுதார் அந்த  ஊரில்.  ' நாட்டாமை'  என்று  தான் அவரை  எல்லோரும் அழைப்பார்கள் தெய்வ பக்தி  உள்ளவர்  சோழகர்.  அவருக்கு  பிராமணர்களையே தெய்வமாக பார்க்கும் குணம்.  தரும சிந்தனை  எல்லோருக்கும் அவசியம் தான்.    இருந்த போதிலும் இந்த மாதிரி  தார்மீக குணம் படைத்த  மிராசுதாருக்கு   அது  இருந்தால் பலருக்கு நன்மையல்லவா?.

ரெண்டு சகோதர பாரதிகளுமே  ராமநாடக  கீர்த்தனையில்  பயிற்சி  உள்ளவர்கள். தினமும் அவர்கள் வீட்டு  திண்ணையில்  சாயந்திரம் ஆனவுடனே பாடுவார்கள். அப்போது  ஊரே திரண்டு உட்கார்ந்துவிடும். காலாட்டி சோழகர்  ராமசவாமி  பாரதியின்  கீர்த்தனைகளில்  தன்னையே  இழந்துவிடுவார். சமஸ்க்ரிதத்தில்  கீத கோவிந்தமும் சங்கீத ஞானத்துடன்  பாடுவார்.   ஜெயதேவர்  அஷ்டபதி,  சதாசிவ ப்ரம்மேந்திரா கிருதிகள் அனைத்துமே  தினமும்  தனது  வீட்டில்  பாராயணம்  செய்வார்.  இதற்கெல்லாம் நல்ல  ஞாபக சக்தி வேண்டும். அது பயிற்சியில்  விட முயற்சியில் தானே வரும்.  ஊர் மக்கள்  அனைவரும் இரவு  பின்னேரம்  வரை  அமர்ந்து ரசிப்பார்கள்.  
உடையார் பாளையத்துக்கும்  அவ்வப்போது  போய்  ஜமீன்தாரை  பார்த்து விட்டு சிலகாலம் தங்கி பரிசுகள் பெற்று வருவார்கள். பரிசு  காசு கொஞ்சம்,  நெல், பருப்பு, காய்கறிகள், எண்ணெய், வஸ்திரங்கள், ஆபரணங்கள்.

சகோதரர்களின் மனைவிமார்கள்  ஜானகியும்  ஞானம்மாளும்  நகமும்  சதையுமாக  இருந்தார்கள். ஞானம்மாவுக்கு புத்திர பாக்கியம் இல்லை.  ஜானகியின் ஐந்து ஆறு குழந்தைகளை ஆசையாக  வளர்த்தாள்.

குற்றால   புராணத்தில்  அக்கால  பெண்களின்  சிறப்பு  குணங்கள்  எழுதப்பட்டிருக்கிறது.  அதன் படி அந்தக்காலத்தில்  ஒரு குடும்ப ஸ்திரீயிடம்  என்ன  எதிர்பார்த்தார்கள்  தெரியுமா?

அதிகாலையில்  எழுந்து  ஸ்நானம் செய்து  புலாலன்றி  சுவையோடு  சமைத்தல்,  
வீட்டிற்கு   யார் வந்தாலும் இன்முகத்தோடு விருந்த்து சமைத்தல்.
மகப்பேறு,  
அச்சம்  மடம்  நாணம்,  
பின்னுறங்கி முன்  எழுதல், 
காலையில் கணவன்  காலைத்தொட்டு கண்ணில்  ஒற்றிக் கொண்டு பிறகு   கடவுள்  வழிபாடு. (

இதை இப்போது  யாராவது அமுலுக்கு கொண்டு வரமுடியுமா? நினைப்பதே குற்றம்.  அமுல் டப்பா வேண்டுமானால்  வாங்கி வந்து கொடுக்கலாம்.    நான்  சொன்ன இப்படிப்பட்ட  பெண்  ''ஏ, மழையே பெய்' என்றால் வருணன் உடனே கொட்டோ கொட்டு  என்று  மழையைக்  கொண்டுவந்து தருவான்.' என்று நம்புவோம்.

 ராமஸ்வாமி பாரதி  68வது வயதில்  கைலாச  பதவி  அடைந்தார்.  ஞானம்மாள்  கணவன் உடல் அருகிலேயே இருந்தாள் .  எல்லோருடனும்  இருந்து  கணவன் உடலின் அந்திம க்ரியைகளுக்கு வேண்டிய  உதவி செய்தாள்   ஆச்சார்யமாக இருந்தது. துளியும் அவளிடம்  கண்ணீரோ கவலையோ   இல்லை. அவரது  சடலம்  தூக்கிச்  செல்லப் படும்போது கூடவே  போனாள்.   காவிரிக்கரையில்  மந்திரங்கள் சொல்லி  கனல்  மூட்டும் சமயம்,  ஞானம்மா ஸ்நானம் செய்து, மஞ்சள்  குங்குமம்  அணிந்து,   ஈர  வஸ்த்ரத்தோடு  என்ன செய்தாள் தெரியுமா?

  ''அவரைப்பிரிந்து   நான்  அரைக்கணமும் இரேன் ''  என்று  அனைவரிடமும் சொல்லிவிட்டு,  ஜ்வாலையோடு  தீப்பற்றி   எரியும்  சிதையில்  கணவன் ராமசாமி  பாரதியின் உடலின் மேல் தாவினாள் .

'அம்மா  நீங்கள்  எங்களோடு இருங்கள்''  என்று  வேண்டிக் கொண்டவர்களிடம்   '' என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.  நான் அவரைத் தனியே விடுவதாவது.  அவருக்கு  யார்  சிச்ருஷை செய்வார்கள்?'' 
என்ற   பதில் தான்  வந்தது.  
எல்லோரையும்  ஒரு முறை பார்த்தாள் 

''நீங்கள்  எல்லோரும்   சௌக்கியமாக வாழணும் ''   என்ற  ஆசியுடன் கனலானாள். 

அப்போது  ராஜாராம்  மோகன் ராயோ,  வில்லியம்  பெண்டின்க் பிரபுவோ  சதி  எனும்  உடன்கட்டை ஏறும் பழக்கத்தை  சட்டபூர்வமாக  நீக்கவில்லை. எண்ணற்ற பத்தினிகள்  கணவனோடு  தங்கள் வாழ்க்கையையும் முடித்துக்கொள்வது வழக்கத்தில்  இருந்தது.  நிறைய குடும்பங்களில் இத்தகைய  பெண்டிரை சுமங்கலிப் பிரார்த்தனையில் இன்னும்  வணங்கு கிறார்கள்  அவர்கள்  ஆசியுடன்   அக்குடும்பங்கள் சுபிக்ஷமாகவும் உள்ளன.   நமது முன்னோர் வாழ்க்கை எனும் சுரங்கத்தில் எத்தனையோ  பேர் தெரியாத அபூர்வங்கள் நிறைந்திருக்கிறது.

தொடரும் 


                                                                           

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...