Monday, November 27, 2017

ANNADHANA SIVAN 2

எங்கள் வம்சம்: 
   

                       அன்னதான சிவன்   - 2

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.  எங்கோ எவரோ ஒரு சிலர்  எப்போதோ  செய்த தவறுகள் இருப்பின், அதற்காக ஒட்டுமொத்தமாக  அந்த தவறு செய்தவர்களின் வர்கத்தையே வெறுப்பதும் அக்குலத்தையே  எதிரிகளாக பாவித்து, அவர்கள்  மீது வெறுப்பும் காழ்புணர்ச்சியும் காட்ட  சிலர் முனைகிறார்கள்.  

இது அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது. நேர்மையின்மை, அநியாயம்  அக்ரமத்துக்கு துணைபோவது  புலப்படுகிறது. 

பிராமணர்களை பொறுத்தவரை எத்தனையோ நல்லவர்கள் எத்தனையோ  நல்ல சேவைகள் புரிந்திருக்கிறார்களே. யாராயிருப்பினும் பாராட்டுவோம்.  குறுகிய மதியினர் தானே திருத்தட்டும். காலம் திருத்தும்.

பசிப்பிணி மருத்துவராக  ஸ்ரீ அன்னதான சிவன் அரை நூற்றாண்டுக்காலம்  தமிழகத்தில் பல லக்ஷம் உயிர்கள் போற்ற  உணவளித்திருக்கிறார். ஒருவேளை சோற்றுக்கே  நாம்  அன்னமிட்டவருக்கு கடமைப்பட்டிருக்கும்போது  இவ்வளவு காலம்....! அடேயப்பா.


        சின்னஞ் சிறுவயதில் செயலதுவோ பெரியதுவாம்
        செவியில் ஒலித்ததுமே சிலுசிலுத்துப் போகுதடா
        அன்னதான சிவம் அறமேற் கொண்டதுவோ
        அதுவல்லோ தேப்பெருமாள் நல்லூரின் அழியாப்புகழ்
        ஆவியை தந்தவர் அன்னதான சிவன்.

     1852 இல்  பிறந்த  சிவனுக்கு  பெயர்   ராமசாமி.  அப்பா அசுவத நாராயண சாஸ்திரியார்,  அம்மா: லக்ஷ்மி அம்மாள். கூடப் பிறந்தவர்கள்": அன்னம்மாள், சகோதரி.   சுப்ரமணிய சாஸ்திரி:  சகோதரர்: 
தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தியிடம்  குழந்தை பருவம் முதல் அசாத்திய பக்தி.   பள்ளிக்கூடம் போகாமல்   சிலேட்டில் பூக்களை  வைத்துக்கொண்டு தக்ஷிணாமூர்த்திக்கு ஸமர்பிப்பார்.

 உள்ளூர் காளியாட்டத்திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் வைக்கவேண்டும் என்று  ஆரம்பித்த  ஆசை, தயாள மனசு, பின்னாளில்  பெரிதாக வளர்ந்து  ராமசாமியை  அன்னதான சிவனாக்கியது.

 வேத அத்யயனம் நடந்தது.  வைதீகத்துக்கு செல்ல மனம் இல்லை.  திருவிடைமருதூர் செட்டியார் சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு  போஜனம் தயாரிக்கும் தலைமை சமையல்காரர் வேலை.. மாத சம்பளம் மூன்று ரூபாய்+சாப்பாடு. திண்ணை படுக்கை.

 அன்னம்  தயாரித்தவுடன் ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் சாதம் தனியாக எடுத்து வைத்து விட்டு, அனைவரும் போஜனம் செய்தபின், மீண்டும் ஸ்நானம் பண்ணிவிட்டு, திருவிடைமருதூரிலிருந்து தேப்பெருமாள் நல்லுர்  சிவன் கோவிலுக்கு நடந்து வந்து  தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு நிவேதனம் செய்வார் அப்புறம்  தனது  வீட்டில் உணவு உண்பார்.

  சிலசமயம் நேரம் ஆகி சாதம் கெட்டு போய் விடக்கூடாதே  என்று  அதன் மேல் ஜலம் சேர்த்து எடுத்துக்கொண்டு வந்து தேப்பெருமாநல்லூர்  தக்ஷிணாமூர்த்திக்கு   நீர் கலந்த சாதம் நைவேத்தியம்.  இப்படி  ''பழையதை''  நைவேத்தியம் பண்ணுவதாக  சிலர்  கேலி செயது   ''பழையசோத்து சிவன்” என பெயரிட்டதும் உண்டு.  தக்ஷிணாமூர்த்தி ஒருவேளை ராமர்  சபரி கொடுத்த  கடித்த  எச்சில் பழத்தை விரும்பி சாப்பிட்டது போல் பக்தியோடு சிவன் அளித்த  பழையதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாரோ?

 சிவனுக்கு  25வயசில் சிவகாமி மனைவியானாள். சிவனுக்கேற்ற சிவகாமியாக அவருக்கு உதவினாள் . 

வருஷாவருஷம்  தேப்பெருமாநல்லூர்  பெருமாளுக்கு  சித்திரை வஸந்தோத்ஸவம் விமரிசையாக நடக்கும்.  எங்கிருந்தோ எல்லாம்  வித்துவான்கள் நாட்டிய நாடக விற்பன்னர்கள் வருவார்கள். ஸம்ப்ரதாய நாட்டிய நாடகம் எல்லாம் கோலாகலமாக  நடக்கும்.   விழாவிற்கு  பல ஊர் மக்கள் ஜேஜே என்று கும்பல் சேர்வார்கள். ''ஆஹா  இந்த  சந்தர்ப்பத்தை விடலாமோ?  இவர்களுக்கெல்லாம்  அன்னதானம் செய்யலாமே ''  என்று ராமசாமிக்கு தோன்றி  அப்போது தான் தனது  பூர்வீக சொத்தினை விற்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத வரதராஜர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்  உத்ஸவத்தில் அவருடைய  முதல் அன்னதானம்  துவங்கியது. அப்புறம்  50வருஷங்கள்  உலையில் சாதம் பொங்கிக்கொண்டே இருந்தது. தேப்பெருமாள்நல்லூரில் மட்டும் அல்ல. தங்கு தடையின்றி   தமிழ் நாட்டின் பல ஊர்களில் கோயில் திருவிழாக்களில். பாத்திரங்களோடு  முதல் நாள் இரவு செல்வார் .சிப்பந்திகள் வருவார்கள். முதல் நாள் மாலை வரை அன்னதானத்திற்கான எந்த அறிகுறியும் தெரியாது.   மறுநாள் காலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் எப்படி நடந்தது??

சிவன் உபயோகித்த சமையல் பாத்திரங்கள் பல கும்பகோணம் ஸ்ரீ காஞ்சிமடத்தில் இருந்தது.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...