அருளியது க்ரிஷ்ணனா? ராமனா?
J.K. SIVAN
என் மனதில் எத்தனையோ எண்ணங்கள் கடல் அலைகள் போல் ஒன்றன் மேல் ஒன்றாக எழும்பி இடைவிடாது தொடர்வது அதிசயமில்லை.
எது அதிசயம் என்றால் நான் எண்ணிய எண்ணம் ஏதாவது நிறைவேறுவது தான். எனக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. அது நிறைவேறாது என்று அறிவிக்கப்பட்டதெனில்.
சந்தர்ப்ப சூழ்நிலை நிலைமை அறிந்து ஏற்றுக்கொண்டேன். ஏமாற்றம் என்று சொல்லமுடியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது ஏமாற்றமா? நடக்க முடியாத ஒன்று நடக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறுவது சாத்தியமில்லை அல்லவா?
சந்தர்ப்ப சூழ்நிலை நிலைமை அறிந்து ஏற்றுக்கொண்டேன். ஏமாற்றம் என்று சொல்லமுடியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது ஏமாற்றமா? நடக்க முடியாத ஒன்று நடக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறுவது சாத்தியமில்லை அல்லவா?
கடந்த ரெண்டு, ரெண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து வேதவியாஸரின் லக்ஷக்கணக்கான மஹா பாரத ஸ்லோகங்களை சமஸ்க்ரித, வங்காள, ஆங்கில விற்பன்னர் ஸ்ரீ P. C.ராய் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ரசித்து அதிலிருந்து வடிகட்டிய சில ஸ்லோகங்களை கதைப்படுத்தினேன். ஆயிரம் பக்கங்களில் சிறுவர்களுக்கு ரெண்டு பாகங்களாக, ஐந்நூறு, ஐந்நூறு பக்கங்களில், பல வண்ணப்படங்களோடு, அழகிய வண்ணக்காகிதத்தில் அச்சாகி விலையின்றி ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்கத்தில் பிரசுரித்திருக்கிறோம்.
இந்த கடினமான மிகுந்த பிரயாசைப்பட்டு படைத்த நூலை யார் கையினால் வெளியிடுவது என்று யோசித்தபோது எனக்கு முதலில் தோன்றிய பெயர் ஸ்ரீ ஸ்ரீ மஹாரண்யம் முரளிதர ஸ்வாமிகள்.
எனவே முதலில் வெளியிட ஒரு இடத்தை தீர்மானித்து, அது நங்கநல்லூர் ஸ்ரீ குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜத்தை சேர்ந்த நாராயண ப்ரவசன மண்டபம் என்று முடிவாகி 12.11.17 அன்று ''தாமோதரனுடன் ஒரு நாள் '' என்ற நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக உருவெடுத்தது.
ஸ்ரீ ஸ்வாமிகள் அன்று சென்னையில் இல்லை என்பதால் எதிர்பார்த்தது நிகழவில்லை என்ற ஆதங்கம் என் மனதில் இருந்தது. வேறு ஏற்பாடுகள் நடந்தது.
ஸ்ரீ மதுராந்தகம் கைங்கர்ய சீமான், திருமால் கவிச்செல்வர் ஸ்ரீ உ.வே. ரகுவீர பட்டாச்சாரியார் அவர்களின் ஹாஸ்ய பூர்வ ஜனரஞ்சக பிரசங்கம் எல்லோரும் அறிந்ததே. ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி அவர் பேசும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்க என் நண்பர் ஸ்ரீ அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு சென்றேன்.
05.11.17 அன்று கிருத்திகை. ஸ்ரீ பாக்கியநாதன் என்னும் சிவபக்தர் ஸ்ரீனிவாசனை நடுப்பழனி மரகத முருகன் ஆலயத்திற்கு வர அழைத்திருந்தார்.
''சிவன், நீங்கள் வருகிறீர்களா நடுப்பழனி போகலாமா ஞாயிறு காலை?'' என்றார் ஸ்ரீனிவாசன்.
''சந்தோஷமாக.. ஒரு சின்ன வேண்டுகோள், போகும் வழியில் மதுராந்தகம் செல்லவேண்டும், அங்கே நமது அடுத்த ஞாயிறு நிகழ்ச்சியில் பிரசங்கம் செய்யும் ஸ்ரீ ரகுவீரா பட்டாச்சார்யரை நேரில் சந்தித்து பத்திரிகை வழங்கி அழைக்கவேண்டும் '' முடியுமா?'' என்றேன் .
''போகும் வழி தானே, அப்படியே கோதண்டராமரை தரிசித்துவிட்டு நடுப்பழனி செல்லலாம்'' என்றார்.
மதுராந்தகம், சோத்து ப்பாக்கம் வழியாக செய்யூர் பாதையில் நடுப்பழனி என்ற ஒரு சிறு ஊர் இருக்கிறது. அங்கே மரகத முருகன் ஸ்ரீ முத்துசாமி சித்தரால் நிறுவப்பட்டு அருப்புதமான மலைக்கோவிலாக அமைதியாக உள்ளது. பல நூறு வருடங்கள் வயதான ஆலமரங்கள் பார்க்க பிரமிக்க வைத்தன. எங்கும் நிழல். பல பக்தர்கள் நூற்றுக்கணக்கான காவடிகள் எங்கிருந்தெல்லாமோ கொண்டு வந்திருந்தனர். ரித்விக்குகள் ஏகதாசருத்ரம் ஜபித்துக் கொண்டிருந்தனர். நானும் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து கொண்டோம்.
மதுராந்தகம் கோவிலில் ஸ்ரீ பட்டாச்சாரியார் இருப்பதாக அவர் மனைவியார் தொலைபேசியில் சொன்னார். எனவே முதலில் ஏரி காத்த ராமனை தரிசிக்க சென்றோம். சிறு மழைத்தூற்றலில் காலை எட்டு எட்டரைமணி அளவில் கோவிலில் சில தலைகளை மட்டுமே காண முடிந்தது. கோவில் வாசலில் காரை நிறுத்திய எங்கள் எதிரே ரகுவீர பட்டாச்சாரியார் கோவிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்ததை கண்டோம். . இருவரும் வணங்கினோம் அவர் அருகே மற்றொருவர்.
''சிவன் சார் வாங்கோ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வந்திருக்கார். ஆஞ்சநேயரை தரிசனம் பண்ணுவோம்''. என் காதுகளை நம்ப முடியவில்லை. ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளா....
எங்களோடு ராமர் சந்நிதிக்கு எதிரே வாசலில் கோவில் கொண்ட ஆஞ்சநேயரை தரிசனம் செய்தோம்.
''உங்களை தரிசிக்க ஒரு பாக்கியம் கிடைத்தது'' என்றேன. வாய் குழறியது. நாக்கு தழுதழுத்தது. நெஞ்சில் ஏதோ ஒரு அடைப்பு.
''இப்போது தானே வருகிறீர்கள். நீங்கள் முதலில் ராமரை தரிசித்து விட்டு வாருங்கள். நாம் ரகுவீர பட்டாச்சாரியார் இல்லத்தில் சந்திப்போம்.'' என்றார் ஸ்வாமிகள்.
''ஏரி காத்த ராமா, என் மனத்தில் கொண்ட ஆதங்கம் வற்றிப்போகமால் எண்ணம் வெள்ளமாக நிறைவேற நீ உதவுகிறாயோ. என்னே உன்கருணை. கிருஷ்ணனாக நீ வந்து உன்னைப்பற்றி மஹாபாரதத்தில் மனமுவந்து எழுதி அதை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரத்தில் அளிக்க என் எண்ணத்தில் ஒரு ஆவல் உருவாகி அது நிறைவேற வில்லையே என்று கொஞ்சம் ஆதங்கப்பட்டதை உணர்ந்து கிருஷ்ணனே ராமனாக ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உன்னை தரிசிக்க வந்தபோது என்னையும் அவரோடு சேர்த்து வைத்து நான் கொண்டுவந்திருந்த முதல் பிரதிகளை அவர் திருக்கரத்தில் அளிக்க எத்தனை அற்புதமான ஆச்சர்யம் அளிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாய்.!!
ஒரே ஓட்டமாக ராமனை தரிசித்து நன்றி தெரிவித்துவிட்டு, கலெக்டர் லயனல் ப்ளேஸ் ராம லக்ஷ்மணர்களை ஏரிக்கரையில் நேராக தரிசித்த பாக்யத்தை நினைத்து உருகி ரகுவீர பட்டாச்சாரியார் வீடு சென்றோம். பல கோடி ராம நாமாக்கள் பிரதிஷ்டை செயதிருந்த சிறு மேடை அமைந்த த்யான மண்டபத்தில் அவர் இல்லத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை தரிசித்தேன்.
''அடியேன் ஐந்தாம் வேதம் என்ற தலைப்பில் மஹாபாரதம் முழுமையும் தமிழில் குழதைகளுக்காக இரு பாகங்களாக விலை இல்லாமல் பரிசளிக்க எழுதியிருக்கிறேன். இதை தங்கள் திருக்கரத்தால் வெளியிட ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தேன்.''
'' ஆமாம் நான் பார்த்தேன். நீங்கள் வெளியிடும் நாளில் நான் வெளியூரில் இருப்பதை அறிவித்து உங்களுக்கு சேதி வந்திருக்குமே''
ஆமாம் சுவாமி. எனது பாக்கியம்.. இப்போது நான் தெய்வாதீனமாக கொண்டுவந்திருக்கும் முதல் பிரதிகளை தங்களிடம் சமர்ப்பிக்க உத்தரவு அளிக்க வேண்டுகிறேன். அருள் புரியவேண்டும் ''
''ஆஹா . அப்படியே செய்யுங்களேன் '' என்றார் ஸ்வாமிகள் மலர்ந்த முகத்தோடு.
''நான் இதை ஒரு ஆத்ம திருப்திக்காக சமூக ஆன்மீக ஈடுபாடாக செய்கிறேன். பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லை. எதிர்கால வாரிசுகளுக்கு நமது பாரம்பரிய இதிகாச, புராண செல்வங்களை வழங்க, எங்களுக்கு தேவையான அச்சுக்கூலி, தட்டச்சு கூலி மட்டுமே பல அன்பர்கள் மூலம் பெற்று இதுவரை நான்கு வருடங்களில் 32 ஆன்மீக புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம்'' என்றேன். மிகவும் மகிழ்ந்து வாழ்த்தினார் ''
நான் எதை கிருஷ்ணனிடம் பெற விரும்பினேனோ , அதை அவன் ராமனாக எனக்கு அருள் புரிந்த இந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம் சொல்வேனடி/டா தோழி, தோழா''
No comments:
Post a Comment