ஒரு சில உரையாடல்....
தக்ஷிணேஸ்வரம் பற்றி ஆங்காங்கே மக்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆம் இப்போதெல்லாம் ராமகிருஷ்ணரின் சிஷ்யர்கள் கூட்டம் அதிகரித்தது. அவரது உபதேசங்கள் ஈடிணையற்றவை என்பது புரிந்தது:
''ஒரு மனிதன் கடலை கடக்க முயன்றான். விபீஷணன் ஒரு இலையில் ராமா என்று எழுதி அவன் வேஷ்டியில் முடித்துவிட்டு 'நீ பயப்படவேண்டாம். தைரியமாக நட. கடலை கடக்க முடியும்.'' என்றான். அவனும் கடல் மீது நடக்க முடிந்தது. பாதி தூரம் சென்றவன் அப்படி என்ன இருக்கிறது இந்த இலையில் என்று முடிச்சை அவிழ்த்து பார்த்தவன் ' என்ன இது வெறும் ராமா என்ற இந்த எழுத்துகளாலா நீர் மேல் நடக்க முடியும்?'' என்று நினைத்து நம்பிக்கை இழந்த அந்தக்கணமே நீரில் மூழ்கினான். நம்பிக்கை கடவுள் மேல் அவசியம். அவன் எவ்வளவு பாபியாக இருந்தாலும் அது அவனை காப்பாற்றும். பகவானே, நான் இதுவரை செய்த தப்புகளை இனி பண்ணமாட்டேன் என்ற ஒரு வார்த்தை போதும். அவனை பகவான் ரக்ஷிப்பான்''. இதை சொல்லிவிட்டு ராமகிருஷ்ணர் காளியின் மீது மனம் கனிந்து பாடினார்.
ஒரு நாள் எல்லோரும் அமர்ந்திருக்கும்போது நரேந்திரனை சுட்டிக்காட்டி, ''இந்த பையனை பாருங்கள். விசித்ரமானவன். வீட்டுக்கு அடங்கினவன். நண்பர்களோடு சுற்றுபவன்.ஆனால் எப்போதும் சுதந்திரமானவன். உலகத்தோடு ஒட்டாதவன். இது மாதிரியானவன் ஒரு நாள் பெரியவனானதும் உள்ளே ஒரு விழிப்புணர்வு தோன்றும். கடவுளை நோக்கி நகர்வான். மற்றவர்க்கு அறிவூட்ட ஒரு வேளை கடவுள் இதுபோல் யாரையாவது படைக்கிறார். உலகம் வாழ்க்கை பற்றி எல்லாம் கவலையே இல்லாதவர்கள். நான் சொன்ன மூவாசை நெருங்காதவர்கள்''
எவ்வளவு தூரம் ராமகிருஷ்ணர் சொன்னது வாஸ்தவம் என்பதை நாம் இன்று உணர்கிறோம். நிதர்சனமாக தெரிந்து விவேகானந்தரை அனுபவிக்கிறோம்.
மேலும் ராமகிருஷ்ணர் தொடர்ந்தார். ''வேதங்களில் ஒரு ஹோம பறவை பற்றி வருகிறது. அது எங்கோ உச்சியில் ஆகாசத்தில் பறக்கிறது. முட்டை இடுகிறது. முட்டை கீழே விழுகிறது. கீழே விழுந்து முட்டை சிதறினால் என்ன ஆகும்? அவ்வளவு உயரத்தில் இருந்து முட்டை கீழே விழ பல நாள் ஆகிறது. அதற்குள் முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வருகிறது. கீழே விழுந்து கொண்டே இருக்கும் முட்டையிலிருந்து வெளியே வருகிறது. கண் திறக்கிறது. பார்க்கிறது தனது மரணம் கீழே காத்திருக்கிறது. அதற்குள் அதற்கு ரெக்கை முளைத்து விட்டது. அதால் இப்போது பறக்க முடிகிறது. மெதுவாக மேல் நோக்கி பறக்கிறது. அம்மா பறவையை அடைகிறது. '' இந்த கதை ராமகிருஷ்ணர் சொல்லும்போது நரேந்திரன் எழுந்து வெளியே போனான்.மற்றவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
பரமஹம்சர்: ''இதோ போனானே, நரேந்திரன் எவ்வளவு அழகாக பாடுகிறான். வாத்தியங்கள் வாசிக்கிறான், நல்ல படிப்பு, எப்படி எல்லாவற்றிலும் கெட்டிக்காரனாக இருக்கிறான். ஒரு நாள் கேதார் அவனிடம் ஏதோ வாதம் செய்தார். அவரது வாதங்களை பிய்த்து உதறிவிட்டான் '', ராம கிருஷ்ணர் இதை சொல்லிவிட்டு சிரித்தார். எல்லோரும் அவரோடு சேர்ந்துகொண்டனர் .
''மோஹிந்தர் பாபு, ஆங்கிலத்தில் பகுத்தறிவதற்கு ஏதாவது பாட புத்தகம் இருக்கிறதோ?''
''ஆமாம் குருநாதா, தர்க்கம் என்று சொல்வார்கள்''
''அதில் என்ன சொல்கிறது?'''
''எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். பொதுவாக சொல்வதிலிருந்து குறிப்பாக ஏதாவதை அறிதல். ''எல்லோருமே அழிவுற்ற மானிடர்கள். நன்றாக கற்றுணர்ந்தவர்கள் எல்லாருமே மானிடர்கள். ஆகவே ஞானிகள் கூட மானிடர்கள் தான்.'' இன்னொரு உதாரணம். குறிப்பாக எதையாவது சொல்லி அதிலிருந்து பொது விதிகளை உணர்த்துவது. ''இந்த காக்கை , அந்த காக்கை , எங்கு பார்த்தாலும் காக்கை கருப்பு. ஆகவே எல்லா காக்கைகளும் கருப்பானவை.'' இப்படி ஒரு முடிவை சொல்வதும் சில சமயங்களை தவறானவை, விசாரித்து தேடி பார்த்தால், எங்காவது ஒரு ஊரில் வெள்ளை காக்காவும் இருக்கலாம்.
மழைபெய்கிறது என்றால் மேகம் இருக்கிறது, அல்லது இருந்தது. அதனால் மேகம் இருந்தால் தான் மழை எனலாம்.
இவனுக்கு முப்பத்திரண்டு பல். அவனுக்கும் கூட. ஆகவே எல்லோருக்குமே முப்பத்திரெண்டு பல் என்னும்போது எத்தனையோ பேருக்கு சிலது குறைந்திருக்கலாம்.
இது தான் தர்க்கவாதம். logic என்பது. சிலது ஒன்றுபடும் சிலது வேறுபடும்'' ராமகிருஷ்ணரின் கவனம் எங்கோ போய்விட்டது. அவர் இதெல்லாம் கேட்டாரா, தெரிந்து கொண்டாரா என்பதே ''M '' முக்கு புரியவில்லை. ராமகிருஷ்ணர் எழுந்தார்..அனைவரும் எழுந்தார்கள். காளி கோயில் தோட்டம் சென்றார்கள். சாயந்திரம் ஐந்து மணி. சூரியன் மெதுவாக மேற்கே இறங்கிக்கொண்டிருந்தான். சிலு சிலு வென்ற குளிர்ந்த காற்று. பக்ஷிகள் சப்தம்.
''M ''பஞ்சவடியில் குருநாதர் அறையை நோக்கி நடந்தார். அங்கே தாழ்வாரத்தில்....
No comments:
Post a Comment