Thursday, November 2, 2017

யாத்ரா விபரம் 26.10.17

யாத்ரா விபரம் 26.10.17 J.K. SIVAN

மீஞ்சூர் பகுதி சிவன்களும் பெருமாள்களும்

மீஞ்சூருக்கு பக்கத்திலேயே சற்று தூரத்தில் ஒரு பழைய சிவாலயம் இருக்கிறது. அந்த ஊருக்கு நெய்த வாயல் என்று பெயர். நமது தேசத்தில் அமைதியாக அண்டை அசலில் நடப்பது எதுவும் அறியாமல் தூங்கும் எத்தனையோ கிராமங்களில் ஒன்று. அங்கே ஒரு பழமையான சிவன் கோவில் அற்புதமாக இருக்கிறது. கோவிலின் கதை தான் அற்புதமானது. கோவிலின் நிலை பரிதாபம்.

செருப்பு போடாமல் உள்ளே சென்றேன். சிறிய மழைத்தூறலை லக்ஷியம் செய்யவில்லை. விஸ்தாரமான இந்த கோவில் சிதிலமடைந்து இருக்கிறது. செடி முளைத்த விமானம். சோழன் கட்டி மறைந்து எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகியும் இந்த கோவிலை எடுத்து சீரமைக்க இன்னும் ஒருவர் தோன்றவில்லையே. மீண்டும் சோழன் வர காத்திருக்கிறார்களோ? நெருஞ்சி முள் காலை பதம் பார்த்துவிட்டது.

இங்கே சிவன் பெயர் அக்னீஸ்வரர், எங்களைத்தவிர அர்ச்சகர் கணேசன் மட்டுமே அங்கிருந்த பேசும் ஜீவராசிகள்.

கணேசன் திரையை மூடிவிட்டு சிவலிங்கத்தின் பின் புறம் கற்பூர ஆரத்தி காட்டியபோது செக்கச்செவேலென்று அக்னீஸ்வரர் ஜொலித்து அக்னியாக காட்சி அளித்தார். ஸ்படிகமோ அல்லது அது போன்ற கல்லாலான லிங்கமோ?

கணேசன் மூலம் அருகே இன்னொரு ஊர் இருப்பதை அறிந்து கொண்டு திருவெள்ளவாயல் எனும் க்ஷேத்ரம் சென்றோம். மீஞ்சூரிலிருந்து வடக்கே 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்த ஒரு ஏக்கர் கோவில் சுயம்புவாக திருவெள்ளீஸ்வரருக்காக பல நூற்றாண்டுகள் முன்பு கட்டப்பட்ட ஆலயம். சிவன் வெள்ளை வெளேரென்று இருந்தார். ஏதோ வெள்ளி கவசம் போல் தோன்றியது. அம்பாள் சாந்தநாயகி. இந்த கஜப்பிரஷ்ட ஆலயம் பிற்கால சோழன் ஆதித்தன் பராந்தகன் காலத்தியது. கல்வெட்டுகள் படிக்க முடியாதபடி நிறைய இருக்கிறது. நிதானமாக தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டோம். திருவெள்ள வாயல் அர்ச்சகருக்கு எங்கள் ஐந்து பேரையும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்று அறிந்து சந்தோஷம். நிறைய பேர் எங்கிருந்தோ இந்த மாதிரியான பழைய கோவில்களுக்கு வரவேண்டும் என்று தானே சோழன் அப்போதே எதிர்பார்த்து பெரிதாக காட்டியிருக்கிறான். நீங்கள் எல்லாம் அடிக்கடி வரவேண்டும் என்று அவன் கல் வெட்டுகளில் பொறித்து வரவேற்றிருப்பது நமக்கு புரியவில்லை என்றால் அதற்கு அவன் பொறுப்பா?




நேரம் கிடைத்த்த போதெல்லாம் குடும்பத்தோடு இந்த மாதிரி சென்னைக்கு சற்று தூரத்திலேயே இருக்கும் கோவில்களுக்கு செல்லுங்கள். மன நிம்மதி கொள்ளை கொள்ளையாக கிடைக்கிறதே.

அர்ச்சகர் பால சந்திரனைக் கேட்டேன். அடுத்து காட்டூர் பாதையில் செல்லுங்கள் என்கிறார். அங்கே பெருமாள் சிவன் கோவில்கள் உள்ளன என்றார். காட்டூர் பாதை காட்டுப்பாதையாக இல்லை. நல்ல தார் ரோடு. சீக்கிரமே

திருவாலீஸ்வரர் ஆலயம் காட்டூரில் இருக்கிறது. அம்பாள் திருபுர சுந்தரி. நேர்த்தியான அம்பாள். அர்ச்சகர் வேறு எங்கோ சில கோவில்களிலும் பணி புரிய வேண்டி இருக்கிறது. எனவே அவருக்காக காத்திருந்தோம் . அவர் தத்தை மாஞ்சி என்ற கிராம சிவன் கோவில் சென்றிருக்கிறார் என்கிறார்கள். அங்கே போகலாம் என்றால் கதவைப் பூட்டிக்கொண்டு காட்டுருக்கு வந்து விட்டார். தத்தை மாஞ்சி சிவ தர்சனம் இனி எப்போதோ?. வாலி பூஜித்த ஸ்தலம் என்றார் .

வெகு அருகிலேயே காட்டூரில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. ஒரு வைணவ பட்டாச்சார்யர் குடும்பம் பல தலைமுறைகளாக வைகுந்தவாசனுக்கு பணிவிடை செயது வருகிறார்கள். தாயார் வைகுண்ட வள்ளி. இங்கு பெருமாள் வீற்றிருந்த கோலம் ஏற்கனவே முந்தைய கட்டுரையில் சொன்னது நினைவிருக்கலாம். இந்த பக்கத்தில் மூன்று பெருமாள்கள் இருக்கிறார்கள். மீஞ்சூரில் நின்ற திருக்கோலம், தேவதானத்தில் கிடந்த திருக்கோலம், காட்டூரில் வீற்றிருந்த திருக்கோலம். ஒரே நாளில் மூவரையும் தரிசனம் செய்ய முடியும், அருகருகே தான் இருக்கிறார்கள். கட்டாயம் சென்று தரிசியுங்கள்.
ராஜராஜன் கட்டிய கோவில் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கிறது என்றார் பட்டாச்சார்யார். எல்லா கோவில்ல்களிலும் எளிதான விபரம் ஆயிரம் வருஷம் கோவில், ராஜராஜ சோழன் காலம்.



அடுத்து திருப்பாலைவனம் சென்றது பற்றி சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...