எனக்கு கவிஞர்களை ரொம்ப பிடிக்கும். அதிலும் இந்த காளமேகத்தின் சிலேடைகள் நாலாம் வகுப்பிலே இருந்தே என்னை கவர்ந்தது. அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத வயதில் அவர் வார்த்தை விளையாட்டு பிடித்தது.
நான் கவிஞனோ, புலவரோ, தமிழறிஞனோ அல்ல. அங்குமிங்கும் படித்ததை, ரசித்ததை, தேடிப் பிடித்து, உங்களுக்கு கொடுக்கும்போது நானும் மீண்டும் மகிழ்கிறேன். என்னிடம் பெரிதாக எதிர்பார்ப்பு வேண்டாம்.
நிறைய நண்பர்களுக்கு காளமேகத்தைப் பிடித்திருக்கிறது கண்டு ரொம்ப சந்தோஷம். எனக்கும் அவரைப்பிடிக்கும். என்ன அறிவு, என்ன ஞானம், என்ன எழுத்து வன்மை, வண்மை !
அவரது நகைச்சுவையை இன்று கொஞ்சம் பரிமாறுகிறேன்.
இருபொருள் விளங்க சொல்வது சிலேடை எனப்படும். படிக்கும் போது மேலெழுந்தவாரியாக ஒன்று பொருள் படும். உன்னிப்பார்த்தால் மற்றோர் அருமையான உள் அர்த்தம் புலப்படும்.
இதைத் தமிழறியா அன்பர்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பில்லை. இந்த இடத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும், கை தட்டவேண்டும் என்று மேடைகளில் கேட்டு சிரிப்பையும் கை தட்டலையும் வாங்குவது இப்போது வழக்கமாக போய்விட்டது.
தமிழறியாதவர்களால் ரசிக்கமுடியாதே என்று வருத்தம் தான். என்ன செய்ய முடியும். ஆங்கிலத்தில் எழுதலாம். சுவை போய் விடும். தமிழை ரசிக்க தமிழிலேயே தான் படிக்கவேண்டியிருக்கிறது. தமிழிலே தான் எழுதவேண்டும்.
15ம் நூற்றாண்டு கவிஞர், காளமேகம். ஆசுகவி, திட்டினால் பலிக்கும். சபித்தால் அவ்வளவு தான். காளமேகம் என்பதே பட்டப்பெயர். நிஜப்பெயர் வரதாச்சாரி. கருப்பு மேகங்கள் எப்படி மழையைக் கொட்டித் தீர்க்குமா அது போல் கவிதைகள் சரமாரியாக கொட்டும் ஞானஸ்தர்.
குறை கூறுவது போல் நிறை கூறுவது நிந்தா ஸ்துதி என்று வடமொழியில் உண்டு. புகழ்வது போல் இகழ்வது வஞ்சப்புகழ்ச்சி என்று ஒன்று கூட உண்டு. அது இதற்கு எதிர்மறையானது.
ஒரு தடவை காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கருட சேவை உத்சவத்தில் கருடன் மீது பெருமாள் ஆரோகணித்து போவதைப் பார்த்துவிட்டார் காளமேக புலவர். சும்மா இருப்பாரா? இந்த பெருமாள் நல்லவர் தான் . இன்றைய நாளும் நல்ல நாள் தான். ஆனால் இந்த பெருமாள் சும்மாயிருக்காமல் ஏதோ சேட்டை பண்ணி இருப்பதால் தான் ....., அய்யய்யோ ஓடி வாருங்கள், இதைப் பாருங்கள் ஒரு பெரிய பருந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகிறதே!!
''பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்!--பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!
மேலே சொன்ன கருட வாகனம் சமாசாரம் போல இன்னொன்று. விநாயகர் தனது மூஷிக வாகனத்தில் ஆரோகணித்து செல்வதை வேடிக்கையாக இன்னொரு பாட்டில் சொல்கிறார் காளமேகம். அது என்ன தெரியுமா?
''மூத்தோருக்கு மூத்தவனான சிவனின் சூலம், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம், பிரம்மாவின் ஸ்ருஷ்டி மந்த்ரங்கள், இதெல்லாம் எங்கு போயிற்று. பெரிய காது, தும்பிக்கை, உடல். தந்தம் எல்லாம் இருந்தும், பாவம், அந்த யானையை ஒரு எலி இழுத்துக்கொண்டு ஓடுகிறதே! ஏன் யானைக்கு என்னவாச்சு ?''
மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?--மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றதே ஏன்?
காளமேகம் முருகனையும் விட்டு வைக்கவில்லை.
முருகனை தரிசித்து கேட்கிறார் :
''ஏ முருகா, உனக்கு அப்பனாகிய சிவன் ஒரு பிச்சைக்காரன். (பிக்ஷாடனர், கையில் கப்பரை) , ஆத்தாளோ சொல்லவே வேண்டாம். மலையிலே(கைலாசத்தில் என்று கொள்ளவேண்டும்) வசிக்கும் ஒரு நீலி. (நீல கலரில் இருப்பவள் என்று பொருள் கொள்ளவேண்டும். நீலி என்று உண்மை மறைத்து பொய் வேஷம் போடுபவளைச் சொல்வதாக தோன்றும்) உன் மாமன் யோக்யதை எல்லாருக்குமே தெரியுமே. உறியிலே வெண்ணை திருடுபவன். அண்ணன் என்ன சாமான்யமானவனா? . பீப்பாய் மாதிரி வயிறு, ஏதாவது போட்டு அதை நிரப்பவே நேரம் இல்லை அவனுக்கு. அந்த பெரு வயிறு தூக்க முடியாமல் கால் ரெண்டும் கவட்டை மாதிரி வளைந்து வேறு. ரொம்ப ரொம்ப அழகப்பா உன் குடும்ப கெளரவம் பெருமை எல்லாம்! இதுக்கு ஒரு மூஞ்சி போதாமல் ஆறு முகம் வேறு உனக்கு.
அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பறிய மாமன் உறிதிருடி;--சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.
இன்னும் முடிந்தபோது நிறைய சொல்கிறேன்.
No comments:
Post a Comment