Wednesday, November 22, 2017

எங்கள் வமிசம்:

எங்கள் வமிசம்:

                      கிராம தேவலோக வாழ்க்கை 


எல்லோரும் கோவில் குளம் என்று பகவானோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் நாம் மறக்கக் கூடாது.

எந்த பக்கம் திரும்பினாலும் ஏதாவதொரு கோபுரம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்.  யாருமே  கோபுரத்தை விட உயரமான கட்டிடம் கட்ட மாட்டார்கள்.   எனவே கோபுர  தரிசனம் கோடி புண்யமாக அவர்களை விடாமல் சேர்ந்துகொண்டிருந்தது.  பெருமாள்  கோவிலில்  ஏதோ விசேஷம், சிவன் கோவிலில் ஏதோ உற்சவம் என்று மாற்றி மாற்றி அவர்களை கோவில் அழைத்துக்கொண்டு இருக்கும்.  கோவிலில் தான்  முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  
பிரசங்கம் பாட்டு சதிர்  (டான்ஸ்) தீ வட்டி (தீ வத்தி, மெழுகு வத்தி போல ) வெளிச்சம்.  முக்கியமான பெரிய மனிதர்கள்  காஸ் லைட் ஏற்பாடு செய்வார்கள். 

பெருமாள்  கோவிலில் இருந்து கொண்டுவந்த சந்தனத்தை   எல்லோரும்  கமகம என்று பூசிக்கொள்வார்கள். 

 ''நாணா  மாமா   ஸ்லோகம் சொல்லிண்டே  சந்தனம்  இட்டா  ஓடம்புக்கு  ஒரு  வியாதியும்  இல்லை''  என்று அடிக்கடி சொல்வார். குளக்கரையில்  சாயந்திரம் ஜிலுஜிலு என்று என்றார் காற்றில் உட்கார்ந்து பேசுவார்கள்.  சட்டை இல்லாத ஆட்கள் தன  ஜாஸ்தி. மேல்  துண்டு  மட்டும்.   சிலர் பாடுவார்கள்.  யாருமே  ரயில்  பார்த்ததில்லை.  பஸ் என்ன என்றே  தெரியாது.  எதற்கும்  ரெட்டை மாட்டு  வண்டி,  வில்  வண்டி  தான்.  நடை  அத்தியா வசியம்.  

கையில்  கூஜா,  ஒரு  பெரிய  மூங்கில் தடி.  ஜோல்னா  பையில் கட்டுசாதம் தலையில்  ஒரு துணி மூட்டை.    இது  தான் நெடும்பயணம் செய  தேவைப்பட்டது.  மூங்கில் தடி ஊன்றி நடக்க இல்லை. வழியில் மிருங்கள் கள்ளர் பயம் இருப்பதால். இருட்டில் அதிகமாக  பயணம் செய்ய மாட்டார்கள்.  எல்லா வீடுகளிலும்  ஐந்து ஆறு ஆட்கள் கால் நீட்டி படுக்கும் அளவுக்கு  இடம் உண்டு.  எந்த வீட்டுக்கும் காம்பௌண்டு, பூட்டு , நாய் இப்போது போல்  கிடையாது. வேலி  இல்லாமல்  மனதைப்போல  திறந்ததாகவே இருந்தது. எனவே  யார் வேண்டுமானாலும் எந்த திண்ணையிலும் படுக்கலாம். அந்தந்த வீட்டுக்காரர்கள் அதிதிகளுக்கு  ஆகாரம்   நீர்  அளித்து உபசரிப்பது வழக்கம் . இன்னும்  எங்கோ சில கிராமங்களில் இந்த வழக்கம் தொடர்ந்து கொண்டு இருப்பதால் இன்னும் மழை  பெய்கிறதோ.       .   

 கல்யாண வீடுகளில்  உற்சவமாக  சந்தோஷம்  நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்  சாயந்திரம்  சதிர்  கச்சேரி.  நிறைய தீவட்டிகள்  எரியும். ஹார்மொநியம் அலறும்.  காலில்  கஜ்ஜை   கட்டிக்கொண்டு  பட்டுக்கோட்டை சரசா ஆடுவதைப்  பார்க்க  பல  ஊர்களில்  இருந்தே  மத்தியானமே  வண்டி பூட்டிக்கொண்டு  வந்துவிடுவார்கள்.  அனைவருக்கும்  சாப்பாடு  உண்டு.  முன்பெல்லாம்  சரசா  பாடிக்கொண்டே  ஆடுவாள். இப்போது  முடியவில்லையாம்.  இரைக்கிறதாம். மூச்சு  வாங்குகிறது  என்கிறாள்.  சாரீரத்தைப்  போல்  சரீரமும் கட்டையாகிப்  பருத்துவிட்டதே.  கோபலாச்சாரி  அவர் தம்பி   பிர்கா   ரங்கு,    ரெண்டு  பெரும்   சுருதி சேராமல்,   அதைப்பற்றி  துளியும் கவலைப்படாமல்  சேர்ந்து  பாடுவார்கள்.  ராத்திரி  ஒருமணி  ரெண்டுமணி  வரை  கூட   கச்சேரி  இருக்கும்.    மூன்று இளவட்ட சிஷ்யர்கள்  ஜாலரா ,சிப்ளாக்கட்டை, கஞ்சிராவோடு  வாங்கிப்பாடுவார்கள்.  தீவட்டி,  அவுட்  என்கிற  வாண  வேடிக்கை  இரவெல்லாம்  இருக்கும்.

 ஒவ்வொரு  அடியையும்  ரெண்டு மூணுதடவை  பாடச்சொல்லி   சரசா  ஆடுவாள்.    வாழைத் தோப்பு,  எள்ளு புண்ணாக்கு,  எண்ணெய் செக்கு  ஓனர் கிருஷ்ண செட்டியார் சரசாவின்  விசிறி.  அவள்  நிகழ்ச்சி  எந்த  ஊரில்  நடந்தாலும்  வண்டி கட்டிக்கொண்டு சென்று விடுவார்.  

எப்போதும்   ஒரு  புடவை, ரவிக்கை துண்டு,  தட்டு நிறைய  மொந்தன் வாழை,  மாதுளை  (எல்லாம்  அவர்  தோட்டம் தான்) புண்ணாக்கு மூட்டை,  எண்ணெய்  தூக்கு வைத்து  கூடவே ஒரு  தங்கக்காசு  கொடுப்பார்  ஒரு வராகன் ( சவரன்  விலை  மூன்று வெள்ளிப்பணம் -  அப்போதைய  மூன்று  ரூபாய். வெள்ளைக்கார  ராணி விக்டோரியா காலமோ, மொட்டைத்தலை  ராஜா எட்வர்ட் காலமோ. ),

 ஊரில்  யார்  வீட்டுக்   கல்யாணமோ  என்றில்லாமல்  அவரவர்  தங்களிடம்  இருக்கும்  சிறந்த  ஆடைகளையும்  நகைகளையும்  போட்டுக்கொண்டு  பங்கேற்பார்கள்.  காரை,  புல்லாக்கு , நாக ஒத்து, பட்டு புடவை, ஜிமிக்கி,   ஒட்டியாணம், வங்கி, காசு மாலை  இதெல்லாம்  தான்  அக்கால  ஆபரணங்கள். இதெல்லாம் இன்னும்  மாடலுக்கு   சென்னை எழும்பூர்  மியூசியத்தில்   மாடியில் ஒரு இடத்தில் பார்த்தேன். விசித்திரமானவை. இப்போது யாராவது ஒரு பெண்ணை  புல்லாக்கு போட்டுக்கோ என்றால் கொலையே  பண்ணிவிடுவாள். அப்போதெல்லாம்  பவுடர்  கிடையாது.  சாந்துப் பொட்டும்   கும்குமமும் தான்  பெண்களை அலங்கரிக்கும்.  சாந்து  கூட்டுவது என்பது ஒரு  கலை.  சாந்து இடும்போது  வாயில்  டொக் டொக் என்று சத்தமிடுவார்கள்.  எங்கம்மா எனக்கு இட்டு விட்டு இருக்கிறாள்.  கொட்டங்கச்சியில்  சாந்து  சேமித்து  வைத்திருப்பா
ர்கள். கண்  மையும்  வீட்டிலேயே  கூட்டுவார்கள்.

அமங்கலிகள்  கண்ணிலேயே படமாட்டார்கள்.  பாவம்  அவர்கள்.  எத்தனையோ  இளம்   பெண்கள் அவர்களில்  அடக்கம். அவர்களது  உடை  நார்மடி  என்று சொல்லப்படும்  ஏறக்குறைய காவி கலரில்  சிவப்பு  அல்லது  கருப்பு  கரை,  அல்லது கரையே  இல்லாமலோ பதினெட்டு  முழம்.  மொட்டை தலையை  சுற்றி அது கழுத்தை  மூடி  இருக்கும்.     தலையில் சிகை இல்லாமல்  நகை இல்லாமல், கண்களில்  ஏக்கத்தோடு,   முகத்தில் மலர்ச்சி  இன்றி, வெறும்  ' வேலை, வேலை, வேலை'   ஒன்றே  அவர்களது கடமையாக  உழைக்கும் சமூகத்தில்  ஒதுக்கிவைக்கப்பட்ட  மதிப்பு  மரியாதை  இழந்த தெய்வங்கள்  அவர்கள்.  அவர்களால்  தான் அனைவருக்கும்  வேளா  வேலைக்கு  உணவு கிடைக்கும். இவர்கள் இல்லாத வீடு  தெய்வமில்லாத கோவில்.   இவர்களைப்பற்றி  நிறைய   எழுதவேண்டும் .  ஒருநாள் எழுதுகிறேன்.

பெண்கள்  பாடவேண்டும்  என்பதற்காக  சில  பாட்டுகளை  வாத்தியார்களை   வைத்து   சொல்லிக்கொடுப்பார்கள்.  சாரீரம்  இருக்கிறதோ  இல்லையோ  பெண்கள்  பாட்டு   நாலு  ஐந்தாவது  கைவசம்  தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  படிப்பு  முக்கியமில்லை.  கடிதம்  எழுதக்கூடாது.  ஆனால்  கார்டு வந்தால்   அதை  எழுத்துக்   கூட்டி  படிக்கும்  அறிவு   இருந்தால் போதும்.  தமிழ் ஒன்று  தான் மொழி.   ஹார்மோனியம்  எல்லார் வீட்டிலும் இருக்கும். நாட்டியம்  பெண்களுக்கு  அவ்வளவு அவசியம்  என்று  அவர்கள்  நினைக்கவில்லை.  தெரிந்தாலும்  அது  வெளியாட்களுக்கு  எதிரில்  இல்லை.  ஆங்கிலம்  தெரியாது எவருக்குமே.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...