2. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே....
ஊர் சிறிய து. உள்ளம் பெரியது என்று இருந்த காலம் அது. யாருமே பணம், கஷ்டம், என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஒருவரை மற்றொருவர் பணக்காரன் ஏழை என்று வித்தியாசப்படுத்த வில்லை உறவுகளாகவே ஒன்றாக கூடி வாழ்ந்தார்கள். இருப்பதை பங்கிட்டு கொண்டார்கள். தனிக்குடும்பங்கள் என்பது எண்ணத்தில் கூட இல்லை.
பொது இடங்களில் தான் ஊர் செயதிகள், விவகாரங்கள் பேசப்பட்டு அறிந்து கொண்டார்கள்.
யாராவது வெளியூரிலிருந்து வந்தால் என்ன சேதி என்று கேட்டு, அது மத்தியானத்துக்குள் அந்த சமாசாரம் அக்குவேறு ஆணிவேராக பல ரூபங்கள் எடுத்து ராமன் குப்பனை அடித்தான் என்பது ராமனின் ஊரில் அனைவருமே குப்பன் எதிரிகளாகவும் அவர்களை வேட்டையாடி முறியடித்ததாக செயதி உருவம் பெறும்.
வெளியூரில் இருந்து திரும்பியவர்கள் மூலம் அடுத்த ஊர் கதைகளும் கோவில் பக்கத்தில் விநாயகர் உட்கார்ந்திருக்கும் ஆலமரத்தடிக்கு வந்துவிடும். அங்கே போய் தான் மத்யஸ்தம், பிரச்னைகளுக்கு தீர்வு.
முத்து தீட்சிதர், வாத்யார் நாகராஜன், ஜோசியர் ராமன் போன்ற உள்ளூர் ஞானஸ்தர்கள் அளிக்கும் தீர்ப்பு தான் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட். தலையாரி தாமோதரன் தமுக்கடித்து ஊரில் விஷயம் சொல்வான்.
''ஊர்லே கல்யாணம் மார்லே சந்தனம்'' என்பது வழக்கத்தில் இருந்தது. யார் வீட்டுக்கல்யா ணம் என்றாலும் அனைத்து வீடுகளுக்கும் அதில் பங்கு உண்டு. கல்யாணத்துக்கு இப்போது போல் ஒரு வருஷம் முன்னாலேயே சத்திரம் தேடும் வழக்கம் இல்லை. சமையல் கான்ட்ரக்டர் பிறக்காத காலம்.
கோட்டை அடுப்பு என்று தெருவில் ஓரமாக சில ஒலைத்தட்டிகளை மடக்கி கூறை போட்டு உள்ளே கண கண வென்று பெரிய வாய் திறந்து கொண்டு கல் அடுப்புகள் நிற்கும். அதில் நிறைய விறகுகள் எரிந்து கொண்டிருக்கும். சாம்பார், ரசம், தாளிப்பு மணம் எங்கும் வீசும். பெரிய தவலை அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசி வெந்து கொண்டிருக்கும். சில சமையல்காரர்கள் ஒரு பக்கம் காய்கறி நறுக்க, சிலர் அம்மியில் பொடி செய்தோ கல்லுரலில் கொட கொட என்று கைவிடாமல் அரைத்துகொண்டோ இருப்பார்கள். தலைமை பரிசாரகர் அவர்களை விரட்டிக் கொண்டே இருப்பார்.
''சாமா சாதம் ரெடியா?'' என்று குரல் வரும்.
''அண்ணா இன்னும் சத்தே பொறுங்கோ ரெடி. சாதம் கஞ்சி வடிச்சுட்டேன் கொஞ்சம் ஓலைப்பூறட்டும். எலே பாலு சீக்கரம் இலை போடு.''
தெருவை மடக்கி பந்தல். அப்போதெல்லாம் அத்தி பூத்தாற்போல மாட்டு வில் வண்டி குதிரை வண்டி ஏதாவது மட்டும் போகும்; வண்டிச்சக்கரத்தில் குச்சியை நீட்டி சத்தம் பண்ணிக்கொண்டு வருவது தான் ஹார்ன். ஓரம்போ என்று கத்துவான் வண்டிக்காரன்.
நாயனம் வகையறா காலம்பரத்திலே இருந்தே விடாமல் கீர்த்தனங்கள் வாசிக்கும். தவில் சத்தம் ஊரின் அமைதியைக் கொன்று, அனைவரும் எங்கே மேளம் யார் வீட்டில் விருந்து என்று தெரிந்ததால் ஒன்றாகக் கூடிவிடுவார்கள். சிலர் நீர் மோர் பானகம் தங்கள் வீட்டில் தயாரித்துக் கொண்டுவந்து விநியோகம் செய்வார்கள். பரந்த மனம்.
சின்ன மடக்குப் பாய் நீளமாக விரித்து வரிசையாக தெருவே கூடி எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள். பெண் வீட்டுக்காரர்கள் அத்தனை பேரும் வந்து ''வாருங்கோ வந்து சாப்பிடுங்கோ'' என்று உபசாரம் கட்டாயம் சொல்வார்கள் . பதில் சொல்லி வாய் வலிக்கும். பிள்ளை வீட்டுக்காரர்கள் ஒரு பக்கம் இதே உபசாரம் பண்ணுவார்கள். ''இன்னும் இன்னும் '' என்று மேலே மேலே இலையில் சாதமும் பலகாரங்களும் சாம்பார் ரசம் கூட்டு எல்லாம் விழும். பெரிய வாழை இலை.
ஐஸ்க்ரீம் ப்ரூட்சாலட் எல்லாம் தெரியாது. இலையில் பலவித பலகாரங்கள் நிரம்பும் . நொறுக்குத் தீனி இல்லாததால் எல்லோருமே ஒரு கை பார்ப்பார்கள். அப்பளம் பெரிசு பெரிசா இலையையே மறைக்கிற மாதிரி இருக்கும். யானையடி அப்பளம் என்று இதற்கு பெயர். ரெண்டு அப்பளம் முழுதாக சாப்பிட்டால் இப்போது நாள் முழுதும் பசிக்காது.
இந்த அப்பளம் எல்லாம் கல்யாணத்துக்கு பல மாதங்களுக்கு முன்பே எல்லா மாமிகளும் கூடி தினம் தினமாக பல நாள் ஒன்றாக ஜமா கச்சேரி போட்டு இட்டது. வெயிலில் நன்றாக காய்ந்து சுட்ட அப்பளம். எல்லாம் ருசிகரமாக இருக்கும். பாயசத்தில் அப்பளம் நொறுக்கி சாப்பிடுவார்கள். இன்னும் எனக்கு ரொம்ப பிடிக்கிறது. தொன்னையில் நெய் நிரப்பி பரிமாருவார்கள். ரசம் வாங்கி வாங்கி குடிப்பார்கள். யாருமே கொலஸ்ட்ரால் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள்.
''டயட்டிங்'' என்றால் ஏதோ ஊசி மருந்து என்று ஓடுபவர்கள். அப்போதெல்லாம் ஊசி பெரிதாக இருக்கும். ரொம்ப ரொம்ப வலிக்கும்.
வடகம் வத்தல் எல்லாமே 'MADE BY MAMIS PAATTIS AND ATHTHAIS '' மாமிகளின் ''மேக்'' தான். வெளியில் விற்க யாருமில்லை ஆதலால் கிடைக்காது. கல்யாணத்தில் பாட்டு தூள் பறக்கும். இட்டுக்கட்டி பாடுவதற்கு தயார் செய்து கொண்டு வருவார்கள். நலங்கின் போது அவர்கள் சாமர்த்தியங்கள் பிள்ளை வீடா, பெண்வீட்டாரா எது ஜெயித்தது என்று சளைக்காமல் போட்டி போட்டு அவர்களின் திறமை வெளிப்படும்.
கல்யாண உற்சாகம் 6 நாள் 7நாள் கூட தொடரும். கட்டுச் சாத கூடை வைக்கிற அன்று கண்ணீர் பிரவாகமாக பெருகும் பெண் வீட்டாரோடு தெருவில் உள்ளவர்களும் ஊர்க்காரர்களும் கூட சேர்ந்து அழுதாலும் பெற்றோரைத் தேற்றுவார்கள்.
கல்யாண பெண்ணுக்கோ பிள்ளைக்கோ இதில் சம்பந்தமே இல்லாமல் அந்த சிறுசுகள், வாண்டுகள், விளையாடிக் கொண்டு இருக்கும். தங்களுக்குக் கல்யாணம் என்று ஒன்று நடந்ததாக அறியாத வயது அல்லவா. புதுத் துணியும் பட்சணமும் தான் பிரதானம். பிள்ளைக்கு ஒன்பது பத்து வயசும் பெண்ணுக்கு ஆறு ஏழு ஆனாலே கல்யாணம். இப்போது ஒண்ணாம் க்ளாஸ் வயசு. இல்லை இல்லை கான்வென்டில் முதலாம் வகுப்பு.!!!
No comments:
Post a Comment