Wednesday, November 15, 2017

உத்தவ கீதை

உத்தவ கீதை.
                                           இதைக் கேள் உத்தவா...

உத்தவன் நினைத்து பார்க்கிறார்.  கண்ணன் என்னவெல்லாம் செய்திருக்கிறான் என்று.  கிருஷ்ணனை நிழலாக தொடர்ந்து போற்றி அனுபவித்து  வளர்ந்தவர் அல்லவா.  

கிருஷ்ணன்  இருந்தபோது, தன்னைக்காண  விரும்பியர்வர்க்கெல்லாம் காட்சி அளித்தான். நரகாசுரன் சிறைப்படுத்திய  பதினாயிரம் இளவரசிகளை, அவர்கள் விருப்பம் பூர்த்தியாக  மணந்தான்.  ருக்மிணியை சிறைக்கைதி போல் நடத்திய ருக்மியை வென்று அவளை மீட்டு மணந்தான். எண்ணற்ற அரக்கர்களை, அசுரர்களை கொன்று வீழ்த்தினான். யாக  யஞங்களில் பங்கேற்க அழைத்தபோதெல்லாம் நண்பர்களுக்கும்  பக்தர்களுக்கும்  உதவினான். நட்புக்கு சிகரமாக விளங்கினான்.  உறவினர்களையும் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்களையும் திருப்திப்படுத்தினான்.  மூவுலகிலும் தன்னை நினைத்தவர்களுக்கெல்லாம் நேரில் காட்சி அளித்து காப்பாற்றினான். 
தனது தாயாகிய தேவகியை மகிழ்விக்க  கம்சன் கொன்ற அவளது  ஆறு  குழந்தைகளை மீட்டு தந்தான்.   பூமிக்கு கீழே  சுதல லோகத்தில் இருந்த தனது பக்தன் மஹாபலிக்கு அருள் பாலித்தான். தனது குரு சாந்தீபனியின் இறந்த மகனை யமலோகம் சென்று யமராஜனை சந்தித்து  மீண்டும்  உயிர்ப்பித்து  தந்தான். தேவலோகம் சென்று  பாரிஜாத மலர்களை   சத்யபாமாவுக்காக  கொண்டு வரும்போது தேவர்களை
 மகிழ்வித்தான். வைகுண்ட லோகம் சென்று ஒரு பிராமணனின் இறந்த குழந்தைகளை திரும்ப கொண்டு வந்தான். உண்மையாக  தன்னை பூஜித்து  வேண்டியவர்களை என்றும் மகிழ்வித்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணன் 125 வருஷங்கள் பூமியில் அவதார புருஷனாக  வாழ்ந்தவன்.

போதும் உத்தவா, நிறைய வாழ்ந்து விட்டேன். இனி ஒன்றும்  செய்யவேண்டியது மிச்சமில்லை இங்கே.  பதரிகாஸ்ரம ரிஷிகளை நான் சந்திக்கப்போவதில்லை, எனக்கு பதிலாக நீ சென்று அவர்களை சந்தித்து என்னை அடையும் வழிமுறைகளை சொல்லிக் கொடு. நர நாராயணர்களை கண்டு வணங்கு.
என்னை சரணடைந்தவர்களை பாதுகாத்து அவர்களுக்கு நற்கதி அளிப்பது என் வேலை. என் மீது பக்தி கொண்டு சேவை செய்யும்போது என்னை மறந்தாலும் அவர்கள் பக்தி ஒன்றே என்னை அவர்களை ரக்ஷிக்க செய்கிறது.  என் மீதிருக்கும் பக்தியோடு பிறர்க்கு சேவை செய்பவன் மரணமடைந்தாலும்  என்னையே அடைகிறான்.

உத்தவா நீ எனது முக்கிய பக்தன். என் மீது இடைவிடாது பாசமும் நேசமும் கொண்டவன். இந்த யது குல சம்பந்தங்களின் உறவை விடு. ''   என்கிறான் கண்ணன். 

உத்தவர் ஒருவரே கண்ணனை முழுதுமாக அறிந்தவர். கண்ணன் மீது பற்று கொண்ட எவருமே உலக வாழ்வின் இன்பத்திலும் சுகத்திலும்  பற்றில்லா
தவர்கள். உறுதியான மனம் படைத்த வர்களை மாயை அணுகாதே. உடலாலும் உள்ளதாலும் கண்ணனையே சேர்ந்த பக்தர்கள்.

yad idaà manasä väcä cakñurbhyäà çravaëädibhiù
naçvaraà gåhyamäëaà caviddhi mäyä-mano-mayam
''என் அன்பார்ந்த உத்தவா, இந்த மாய உலகை துச்சமென கருது.  அது மனதில், ஐம்புலன்களில் மட்டுமே காணப்படுவது.  உண்மையில் இல்லாதது''.  

puàso ’yuktasya nänärtho bhramaù sa guëa-doña-bhäk
karmäkarma-vikarmeti guëa-doña-dhiyo bhidä
இதில் என்ன வேடிக்கை என்றால், காண்பவன் காண்பது தான் இந்த காட்சி. ஆளுக்கு ஆள் மாறுபடுவது. மனம் எண்ணியபடி தோற்றம் அளிப்பது. அர்த்தமே வேறு தான் அகராதியும் வேறு தான்.   ஒருவன் செய்யவேண்டிய கடமையை செய்யாமல் வைத்து செய்யவேண்டாததை செய்ய வைப்பது.
வேதங்கள் இதெல்லாம் அறிந்ததால்  தான் எதை செய்யவேண்டும், எதை நெருங்க கூடாது என்று வரையறுத்திருக்கிறது. அஞ்ஞானிகளும் ஞானம் பெற வழி செய்திருக்கிறது. புலன்களுக்கு அடிமையானவனுக்கு இது ரொம்ப தூரம். 

tasmäd yuktendriya-grämo yukta-citta idam jagat
ätmanékñasva vitatam ätmänaà mayy adhéçvare
ஆகவே  உத்தவா  மீண்டும் சொல்கிறேன். ஜாக்கிரதை.  புலன்களுக்கு இடம் கொடுக்காதே. இழுத்து சென்றுவிடும். உலக சுக துக்கங்களில் ஆழ்த்திவிடும் . உன் சிந்தையை என் மேலே வை. உலக வாழ்வியலில் எல்லாம் நிஜம் போல் தோன்றும். ஏமாற்றும்.
உண்மையான உள்ளமே  எல்லாவற்றையும்  கண்ணனோடு இணைந்ததாக  காணும். மற்றதெல்லாம் கூண்டுக்குள் இருக்கும் மசால்வடையின் மேல் ஆசை வைத்து மாட்டிக்கொண்ட எலிகள் தான். 
கண்ணன் உத்தவருக்கு படிப்படியாக  உபதேசித்து கர்மாக்களை பற்றி, ஆத்மாவின் உயர்வைப் பற்றி எடுத்து சொல்கிறான்.

jïäna-vijïäna-saàyukta ätma-bhütaù çarériëäm
atmänubhava-tuñöätmä näntaräyair vihanyase
வேதங்கள் சொல்வதை நன்றாக அறிந்துகொண்டு, அதை நடைமுறையில் கடைபிடிக்கவேண்டியதின் அவசியத்தை எல்லோருக்கும் நீ  உணர்த்த வேண்டும். உத்தவா, இதன் மூலம் சர்வ ஜீவர்களின் அன்புக்கு நீ பாத்திரமாவாய். உன்னை மாயை தடை செய்யாது. ஹரியை உணராதவன் மாயையில் சிக்கி ஆத்மாவை அனுபவிக்க தவறிடுவான். அவனே கம்சனாகவும், ஜராசந்தனாகவும்  ஆவதில், அழிவதில்  என்ன ஆச்சர்யம் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...