Wednesday, November 15, 2017

காற்று வெளியிடைக் கண்ணம்மா

காற்று வெளியிடைக் கண்ணம்மா- J.K.SIVAN

மனது என்பது எண்ணங்களை குவித்து வைத்துக்கொள்ளும் கிடங்கு அல்ல. அதில் சேர்பவற்றை, உள்ளவற்றை, மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு கொள்ளிடம். ''யாரிடம் சொல்வேனடி தோழி '' என்று பாடுவதை கேட்கும்போது ''ஓஹோ நிச்சயம் இதை யாரிடமாவது சொல்லவேண்டும்'' என்ற
அவசரம் உள்ளே இருப்பது புலப்படும்.

எத்தனையோ சினிமா பாட்டு காதில் நுழைகிறது, அப்படியே வெளியேறுகிறது. சிலது காதில் விழுவதோடல்லாமல் உள்ளே நெஞ்சுக்குள் நுழைந்து நின்றுவிடுகிறது. அது மட்டுமா. ஒவ்வொரு சமயம் மேலே எழும்பி சந்தோஷத்தை வீசிவிட்டு மீண்டும் உள்ளே குடிபுகுந்து விடுகிறது. அப்படி ஒரு பாட்டு கேட்டேன். அது என்ன என்று சொல்லுவதற்கு முன்பு ஒரு சின்ன பரிமாறல்.

அதோ ஒருவன் பேசுகிறான் கேட்கிறதா. அவனா, அவன் மனமா?

'உன்னிடம் சொல்லவில்லையே, கேள். இந்த தென்னண்டை காற்று அது தான் தென்றல், என் மீது வீசும்போது இன்னொரு வேலையும் செய்கிறது. என் மனதில் உன்னைப்பற்றிய மனோகரமான பிரேமையை வெளிப்படுத்தி என்னை மகிழ்விக்கிறது.

அப்படி உன்னை நினைக்கும்போது என்னவெல்லாம் என் கண் முன் தோன்றுகிறது தெரியுமோ? அமிர்தம் ஒரு ஊற்றாக சுரக்கும் உன் இதழ்கள் , உன் கண்ணிலிருந்து பெருகி வழியும் நிலவின் குளுமை, பத்தரை மாத்து தங்கம் போல் ஜொலிக்கின்ற உன் பொன்மேனி. என் கடைசி மூச்சு உள்ளவரை உன் இந்த அழகிய உருவம் என்னை ஆளுமை செய்து இந்த உலகையே எனக்கு தேவலோகமாக ஆக்கிவிடுகிறது.

எனக்கு உயிர் எங்கே என்று கேட்டால். நான் எங்கும் தேட வேண்டாமே. நீ என்று உன்னை காட்டிவிடுவேன். சதா சர்வ காலமும் நேரமும் நீதானே என் மூச்சு. உன்னை ஒரு தரம் கண்டாலே போதும். என் எல்லா கவலைகள், துன்பங்கள், எத்தனையோ வலிகள் எல்லாமே காணமல் போய்விடுகிறதே. உன்னைக் கண்ணம்மா என்று தானே நான் எப்போதும் வாய் நிறைய கூப்பிடுவேன். அப்போது என் வாயில் ஊறுவது எச்சில் அல்ல அமிர்தம். என் உயிரையே தீயாக மூட்டி அதில் கொழுந்து விட்டு எரியும் அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கமடி நீ. ஒளிவீசும் திவ்ய ஜோதி. எனக்கென்று ஒரு என்னமோ சிந்தனையோ எதுவும் கண்ணம்மா நீயன்றி வேறில்லை.''

அவன் பேசியது புரிந்ததா? அவன் மனநிலைப்பாடு தெரிந்ததா?

பிரபல பாடலாக வெளிவந்து என்றும், என்னைப்போல் பலர் நெஞ்சில் குடிகொண்ட இந்த பாரதி பாடலை கேட்கும்போது கண்ணனை கண்ணம்மாவாக கண்டு அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள் புண்ய சாலிகள் தான் என்பதில் சந்தேகமே இல்லை. பி.பி. ஸ்ரீனிவாஸ் ''கண்ணம்மா கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே '' என்று கொஞ்சும் தேனினும் இனிய குரல் எத்தனை காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -- நில
வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக்(காற்று வெளி)1
நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர்
போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்
வாயினி லேயமு தூறுதே -- கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக்(காற்று வெளி)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...