Wednesday, November 29, 2017

ANNADHANA SIVAN 3

எங்கள் வம்சம்: - J.K. SIVAN

அன்னதானத்துக்கு ஒரே ஒரு சிவன் தான் 3

காஞ்சிபுரம் சென்றவர்களுக்கு அங்கே ஓணகாந்தன்தளி என்று ஒரு ஆலயம் இருப்பது தெரியும். ஓணன், காந்தன் என்ற இரண்டு அஸுரர்கள் சிவனை வழிபட்ட ஸ்தலம். அந்த ஆலய பிக்ஷாடன மூர்த்தியை சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு முறை பார்த்தார். “லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா புராதனமான இந்தக் காஞ்சிபுரத்திலே, ‘கச்சி மூதூர்’லேயே இருக்கா. அவ போட்டு சாப்பிட்டா வயிறு ரொம்பறது மட்டுமில்லே, உயிரும் ரொம்பி விடும்' என்று ஒரு பாடல் பாடினார்.

''தையலாள்உல குய்யவைத்த காரிரும்பொழிற் கச்சிமூதூர்க் காமகோட்டமுண் டாகநீர்போய் ஊரிடும்பிச்சை கொள்வதென்னே, ஒணகாந்தன் றளியுளீரே?''

இதை மஹா பெரியவா எப்படி சொல்லியிருக்கிறார் தெரியுமா:

‘ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி’ ன்னு ஆதி சங்கராச்சாரியார், (அன்னபூர்ணியிடம்) பிரார்த்திச்சுண்டபடியே, அவ கையால வாங்கி சாப்பிட்டா ‘உய்நெறி’ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும் இப்படி ஒருத்தி இந்த காஞ்சிபுரத்திலேயே, காமகோட்டத்துல இருகிறப்போ, ஏ பிச்சாண்டி ஸ்வாமி! நீர் ஏங்காணும் இப்பிடி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சை எடுத்துண்டு திரியறீர்?’ன்னு ஸுந்தரர் ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமாகக் கேலி பண்றார்''

இப்படி அன்னபூரணி ஞாபகம் வரகாரணம் நாம் இப்போது அன்னதான சிவனை பற்றி நினைப்பதால்.
''எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாதுன்னு அவர் என்ன பண்ணுவாராம் தெரியுமா? பத்து மூட்டை, இருபது மூட்டை வடிச்சு அதை அப்படியே நீள நீளப் பாய்லே பரத்திக்கட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கிற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெல்லிசா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடு கிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து இருபது மூட்டை ஈரப்பச்சரிசியை, ஆமாம் பச்சையா இருக்கிற அரிசியாவேதான் பரத்திக் கொட்டிட்டு,அதுக்கு மேலே கெட்டிக் கோணியாப் போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடி வரையில் அதை ஓரளவு இறுக்கமாச் சொருகி மூடிப்பிடுவாராம். கால் மணியோ அரைமணியோ கழிச்சுக் கோணியை எடுத்தா அத்தனை அரிசியும் புஷ்பமா சாதமாயிருக்குமாம். அதாவது சாதம் வடிக்கிற கார்யத்தில் பாதி மிச்சம்பிடிக்க இப்படி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார்.''

“இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய மோர் விடனும்னா அத்தனை பாலுக்கு எங்கே போகிறது?

இந்த மாதிரி பெரிய உத்ஸவ சமாராதனைகளில் சிவன் அதுக்கும் ஒரு யுக்தி கையாண்டிண்டிருந்தார். ரிஃப்ரிஜிரேடர், அது இதெல்லாம் இல்லாத அந்த நாளில் அவர் ஒரு புது மாதிரி ரிஃப்ரிஜிரேடர் கண்டுபிடிச்சிருந்தார்!

ஸமாராதனைக்குப் பல வாரம், மாஸம் முந்தியே தயிர் சேகரம் பண்ண ஆரம்பிச்சிடுவார். சேர சேரப் பெரிய மரப் பீப்பாய்கள்ல அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும் வாயை மெழுகால அடைச்சு, அப்படியே, ஆழமான கொளங்களுக்கு அடியில் தள்ளிப்பிடுவார். அப்பறம் எப்ப தேவைப்படறதோ அப்ப தொறந்தா மொத நாள் ராத்ரிதான் தோச்ச மாதிரி தயிர் சுத்தமா இருக்கும். கொளத்தோட குளிர்ச்சி மாத்திரந்தான் காரணம்னு சொல்லறதிக்கில்லே, அவரோட மனஸு விசேஷமும் சேந்துதான் அப்படி இருந்திருக்கணும்.”

1933ல் கும்பகோணம் ஸ்ரீமடத்தின் ஜீரணோத்தாரணத் திருப்பணியும் பூர்த்தி அடைந்திருந்தது. முழுக்கவும் கருங்கற் திருப்பணியாகவே அதைச் செய்து முடித்திருந்ததும் அன்னதான சிவனேதான். ஆயினும்கூட, அவருடைய திருப்திக்காக ஸ்ரீ மஹாபெரியவாள் வீதியிலிருந்தவாறே மடத்தின் வெளிப்புறத்தை மட்டும் பார்வையிட்டாரேயன்றி உள்ளே பிரவேசிக்கவில்லை.

அன்னதான சிவன் லக்ஷக்கணக்கான யாத்ரிக ஜனங்களுக்கு அன்னதானம் அளித்தது பல இடங்களில் பல விழா, விசேஷ தினங்களில். - சித்திரை மாதம் திருச்செங்காட்டாங்குடி அமுது படையல் திருவிழா. வைகாசியில் தேப்பெருமாள் நல்லூர் வசந்தோத்ஸவம், பூந்தோட்டம் திருமாளகரம் திருவிழா. ஆனி மாதம் காரைக்காலில் மாம்பழத்திருவிழா. ஆடி மாதம் சங்கமுகம், ஆடி அமாவாசை பூம்புகாரில். ஐப்பசியில் மாயூரம் (மயிலாடுதுறை) துலாஸ்நானம், கார்த்திகையில் திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவாரத்திருவிழா,மார்கழியில் நாச்சியார் கோயில் தெப்பம், தை மாதம் எண்கண் புஷ்யம் திருவிழா, மாசியில்கும்பகோணம் மகம், திருவைகாவூர் சிவராத்திரி பங்குனியில் எட்டுக்குடியில் உத்திரம். இன்னும் எத்தனை எத்தனையோ...

''எனக்கு அன்னதானத்துக்கு காசு கொடு '' என்று யாரிடமும் சிவன் காசு பணம் கேட்டதில்லை. ''அன்னதானத்துக்கு இந்த இடத்துக்கு இந்த பொருள்களை அனுப்பி வைச்சு புண்யத்தை மூட்டை கட்டிக்கோ''-- அவ்வளவு தான். அவரவர் தகுதி வசதி தெரிந்து எது முடிகிறதோ அதை பெற்றுக்கொள்வார்.

ஒருமுறை இரண்டு மூட்டை அரிசி அனுப்பி வைத்த ஒருவரிடம் '' உன் குடும்பம் பெரியது ஒருமூட்டை போதும்'' என்கிறார்.

ஒருமுறை ஸமாராதனைக்கு ஊறுகாய்க்கு நெல்லிக்காய் பத்து வண்டியில் வந்ததாம். '' இரண்டு நாளில் தீர்ந்துவிடுமே'' என்று கொஞ்சம் கவலைப்பட்ட சமயம் எங்கிருந்தோ மேலும் பத்துவண்டி நெல்லிக்காய் வந்ததாம்.

விறகு நூறு வண்டி, உணவு பரிமாறப்பட்ட இடத்தினை உடனடியாக சுத்தம் செய்வது சிவனின் தூய்மையான குணத்துக்கு அடையாளம். சுத்தம் செய்ய துடைப்பம் மட்டும் இரண்டு மாட்டுவண்டியில் வந்ததாம்.
திருச்சி திருவானைக்கா கோயில் தாடங்க பிரதிஷ்டையின் போது ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டதாம்.

சிவனின் தாராள மனசு, சுத்தம், பக்தி, சுயநலம் கருதா குணம், பரோபகாரம் சேவை, இவற்றால் பல நூறு செல்வந்தர்கள் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தது நம்மை அதிசயிக்க வைக்கிறது. அது சிவன் ஸமாராதனை.

பரிமாற பாத்திரங்களை அந்தந்த இடங்களில் வாங்கி பின் பணி முடிந்தவுடன் ஏலம் விட்டு அதன் மூலம் சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுத்து, உணவு மீதம் இல்லாமல் பார்த்துக்கொள்வதுடன் யாருக்கும் இல்லை என சொல்லாது உணவளித்து, தயிர் ,நெய் மீதமானால் அவற்றினை பீப்பாய்களில் நிரப்பி... கெடாமல் இருக்க குளத்துக்குள் குளிர்ந்த நீரில் மூழ்க வைத்து ... பாதுகாத்து பின் பயன்படுத்திக்கொள்வது அவரின் சிக்கன நடவடிக்கை.

உணவு தயாராகும் போதே அதன் வாசனையிலிருந்தே சொல்லிவிடுவார். “டேய்! சாம்பாருக்கு இரண்டு முறம் பச்சை கொத்தமல்லி சேர்க்கணும், ஒரு முறம் உப்பு போடு. குறைவு போல இருக்கு '' .

ஸமாராதனையில் உண்டவர்கள் எழுந்தவுடன் அவர்கள் உண்ட எச்சில் இலையின் மீது விழுந்து புரளுவது சிவனின் வழக்கம். கரூர் அருகே உள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை (நினைவு) தினத்தில் பலதரப்பட்ட மக்கள் உண்ட இலைகளின் மீது பிரார்த்தனை செய்துகொண்டவர்கள் உருள்வது இன்றும் நடைபெறுகிறது.

இது சிவனின் மன அடக்கத்துக்கு உதாரணம். நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. எல்லோருக்கும் உணவு அளித்த சிவன் தான் பசியோடு சாப்பிட உறவினர் நண்பர் யார் வீட்டுக்காவது, பிராமணர் அல்லாத பக்தர்கள் வீட்டிலும், போய் ஒரு கவளம் மோர்சாதம் சாப்பிடுவார்.

நடக்கமுடிதா தள்ளாத வயதில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும்போது வண்டிக்காரனிடம் ''மாட்டை அடிக்காதே, விரட்டாதே, தார் குச்சி போடாதே. மாட்டை துன்புறுத்தாதே'' என்பார். முடிந்தபோது மாட்டுவண்டியின் பினால் நடந்து போனார்.

''உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லை உடனே வாங்கோ'' என்று செய்தி வந்தபோது ''ஸமாராதனை முடியட்டும். வரேன்.போகிற உயிரை பிடிக்கவாடா முடியும்? இத்தனை பேருக்கும் சாப்பாடு போடவேண்டாமா.''

ஸமாராதனை முடிந்து சிவன் வீடு சென்றார். அவருடைய தன்னலமற்ற சேவைக்கு, தியாகத்துக்கு உற்ற துணையாய் இருந்த தர்ம பத்னி சிவகாமி, தீர்க்க சுமங்கலியாய் கைலாச பதவி அடைந்திருந்தார். சிவனுக்கு சிவகாமி அந்த பரமசிவன் அளித்த பரிசு.!

அன்னதான சிவனுக்கு நன்றாக ஜோதிடம் தெரியும். சொன்னபடியே நடக்கும். 87 வருஷம் இடுப்பில் ஒரு கந்தல் கரை படிந்த வேஷ்டி, மேலே ஒரு சவுக்கம் வாழ்ந்தார். வைகள், மனிதர்கள், இடுப்பில் ஒரு கந்தல், தோளில் ஒரு சவுக்கம், கையில் ஊன்றி நடக்க ஒரு தடி, பல லக்ஷம் பேருக்கு அன்னதானம் செய்தவரின் சொத்து இது தான். !

ஆஹா! தன்னலம் சிறிதும் இல்லாமல் அன்னதானத்துக்கு கூட யாரிடம் பல் இளித்து கேட்காமல் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் கருணையோடு பக்தியோடு சேர்ந்த கட்டளையில் ''நீ இதை இதை அனுப்பி வை” என்று அவர் சொன்னதை எல்லாம் ''இது எங்கள் பாக்கியம்'' என தனவந்தர்கள் செல்வந்தர்கள் பரோபகாரிகள் பொருளாக, பணமாக அளித்தார்கள். சிவனைப் போல் மற்றவர்கள் இதை செய்ய இயலாது.


தேப்பெருமாள் நல்லூரில் சிவனை அடையாளம் காட்ட சிலையோ, மண்டபமோ இல்லை. வேண்டாம். மனதில் நிறைந்து நிற்கிறார் அது போதும். தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோயில் சன்னதியில் தட்சிணாமூர்த்தியை சேவிக்கும்போது அங்கே சிவன் தெரிவார். நம்மை ஆசீர்வதிப்பார். பக்தர்கள் மனமே அன்னதான சிவனுக்கு மணி மண்டபம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...