இந்த ஏழால் என்ன பயன்? J K SIVAN
ஏற்கனவே பெண்களை நம்பாதே என்று ஒரு பெண்களை தாழ்த்தி எழுதியிருந்த பேர் தெரியா கவிஞரின் ''விவேக சிந்தாமணி'' நூலிலிருந்து சில பாடல்களை எழுதி இருந்தேனே ஞாபகம் இருக்கிறதா? மறுபடியும் உரக்க சொல்கிறேன். விவேக சூடாமணி வேறு விவேக சிந்தாமணி வேறு. விவேக சூடாமணி ஆதி சங்கரர் எழுதிய அற்புத வேதாந்த, நூல்.
இந்த விவேக சிந்தாமணி அழகாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் எப்போது யார் எழுதிய நூல் இது என தெரியவில்லை. சமீப காலத்தில் இல்லை. எப்படியும் ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது எனது ஹேஷ்யத்தில். எழுத்து வாசனை அப்படி மதிப்பிட வைக்கிறது.
இந்த ஆசிரியர் ஒரு ஏழு விஷயங்களை சொல்லி இதெல்லாம் நமக்கு பிரயோஜன மில்லை என்று எளிய தமிழில் சொல்கிறார்.
''அன்புள்ள கோபு, இப்பவும் நீ அங்கே சௌக்கியமா? இங்கே உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. தோட்டத்தில் கன்னுக்குட்டிக்கு குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு . பச்சிலை வைத்தியம் கொடுத்து கோபாலசாமி நாயக்கர் சூரணம் கொடுத்தார். அது பேதியில் வேறு கொண்டுவிட்டது. ஆகவே இதை தந்தி போல் பாவித்து பணம் அனுப்பு.-- உன் அப்பா சோமசுந்தரம்''
பையன் கடிதத்தைத் தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டான். அடுத்து ஆறு கடிதங்கள், ஒன்றிரண்டு டெலிபோன்.. கொர கொர சத்தத்தை காரணம் காட்டி தொடர்பை அறுத்தான்.... இப்படிப்பட்ட பையன்கள், ஆபத்துக்குதவா பிள்ளைகள் . இருந்தும் இல்லாதவர்கள் என்கிறார் புலவர்.
அடுத்து நல்ல பசிவேளைக்கு பழையது கூட கிடைக்கவில்லை. அப்புறம் பாதம் ஹல்வா கிடைத்து என்ன பிரயோஜனம்.அரும்பசிக்கு உதவா அன்னம்.
காட்டுப்பாதை, மலைப்பாதை, சுள்ளென்று கொதிக்கும் மணல். வெகுநேரம் நடந்து நெஞ்சை வறள்கிறது தாகம் , ஒரு சொட்டு நீர் கிடைக்கவில்லை. அப்புறம் இன்னொரு நாள் சில்லென்று ஜூஸ் கிடைத்து குடித்து என்ன பிரயோஜனம். தாகத்தை தீர்க்காத நீர்.
புருஷன் நூறு ரூபாய் சம்பாதித்தால் நானுறு ரூபா செலவு செய்து அவனுக்கு கடன் வைக்கும் மனைவி. அவளை வீட்டின் தரித்திரம் அறியாத பெண் என்கிறார்.
ராஜா என்றால் பொறுமை, விவேகம் சாந்தம் வேண்டும். கோபம் எதற்கெடுத்தாலும் வந்து எங்கே வாள் இவனை உடனே சிரச்சேதம் செய்கிறேன் என்று கோபிப்பவனால் நீதி நேர்மை நியாயம் கிடைக்குமா?
எவ்வளவு அருமையாக ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார். குற்றால குறவஞ்சி வர்ணனைகள் சொல்கிறார். திரிகூட ராசப்ப கவிராயர் பின்னால் போகாமல் மனதில் ''ஆத்தா, ஆத்தோரமா ..'' என்று ஏதோ சினிமா பாட்டை முனகிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் மாணவன்... இதுபோல் குருமொழி கொள்ளாத சீடர்களால் நாட்டுக்கே ஆபத்து.
கடைசியாக ஒரு விஷயம் சொல்கிறார்
.
நாம் கோவில்களுக்கு சென்றபோது, அங்கே புஷ்கரணிகளில்தீர்த்தங்களில் ஸ்னானம் செயகிறோமே. அது எதற்காக. நம்மைப்பிடித்த பாபங்கள் விலக. அவற்றுக்கு தலை முழுக. அப்படி நமது பாபங்களை விலக்காத குளங்களில் குளித்து என்ன பயன் என்று கேட்கிறார்.
ஆகவே மேலே சொன்ன ஏழு விஷயங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்காவிட்டால் நமக்கு அதால் என்ன பிரயோஜனம்...?? என்கிறார் அந்த பெயர் தெரியாத புலவர் ''விவேக சிந்தாமணி'' யில். அந்த பாடல் இதோ:
''ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும் பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயன் இல்லை ஏழும்தானே''
இன்னொரு பாடல் அப்புறம் சொல்கிறேன்.
No comments:
Post a Comment