Saturday, July 18, 2020

SANEESWARAR TEMPLE KOLLIKKADU

நல்லது  செய்யும்  சனீஸ்வரன்    J K SIVAN

                           
ஒரு சமீபத்திய கட்டுரையில் சனீஸ்வர பகவான் கோவில் ஒன்று பற்றி எழுதுவதாக சொன்னே னே  அது தான் இது. 

நண்பர்   அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு அற்புதமான  கோவில்கள் எத்தனையோ சென்ற பாக்யம் கிடைத்தது பூர்வஜென்ம பலன் எனலாம்.  திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்  திருக்கோயிலுக்கு   நாங்கள்  சென்ற  பொது உச்சி வெயில் நேரம் சுள்ளென்று சூரியன்  கொதிக்கும் கிரணங்களை கொள்ளிக் கட்டைகளை போல  மேலே  தெறித்த நேரம். காலில் செருப் பின்றி  கோவிலை நோக்கி நடந்தபோது தலையிலிருந்து கால் வரை சூடு என்றால் என்ன என்று புரிந்தது. 

கொள்ளிக்காடு  சிவனுக்கு பொருத்தமான பெயர்  தீ வண்ணநாதர் . அவரை  இப்படி அதி பொருத்தமாக   சூடாக சென்று தரிசனம் செய்தவன்   நானும்  சிவன்.  நெருப்போடு  பஞ்சு  அம்பாள்.  அவள்  அற்புதமான பெயர் கொண்டவள்  பஞ்சின் மெல்லடியம்மை, '' ம்ருது பாத நாயகி''.  ஸ்தல விருக்ஷம்  வன்னி, கொன்றை, ஊமத்தை. 

 பூஜைகள் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் 

சனி பகவான் தன்னைக் கண்டு மனிதர்களும் தேவர்களும் பயப்படுவதை அறிந்து மிகவும் மனம் வருந்தி னார். ஈசனை நோக்கி இந்த  ஸ்தலத்தில் வந்து தங்கி தவம் புரிந்தார். சிவபெருமானும் அக்னி வடிவில் தோன்றி

' அப்பனே,  'நவகிரஹ நாயகர்களில் உன் ஒருவனுக்கு தான் சனீஸ்வரன் என்று என்னை ப்போல்  ஈஸ்வரன்   பட்டம்   கொடுக்கப்பட்டி ருக்கிறது.   நீ  உன் கடமையை தானே செய்கிறாய்.  உன்னை எல்லோரும் வெறுக் கிறார்கள் என்ற  கவலையை விடு. இந்த க்ஷேத்திரத்தில் இனி நீ எல்லோருக்கும் நல்லதே செய்வாய். நீ வெறுப்பதாக சொன்ன  மக்கள்  எல்லோரும்  இங்கே  ஓடி வந்து உன்னை வேண்டி வழிபடுவார்கள். போதுமா? இனி நீ பொங்கு சனி. மங்களம் புரிகிறவன்,   மக்களை நீ  அணுகும் காலம்  பொங்கு சனி காலம் எனப்படும். அந்த நேரம்  நீ அவர்களை பிடித்த  போது  அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னா கும், நினைத்ததெல்லாம் நடக்கும், கொட்டோ கொட்டு என்று சுபிக்ஷம் கொட்டும்  போதுமா ? என்று அருள்புரிகிறார் பரமேஸ்வரன். அக்னீஸ்வரர்  சனி பகவானை பொங்கு சனி யாக மாற்றிய  ஸ்தலம் இது. 

 இத்தலத்தில் சிவனையும், சனியையும் வணங்குபவர்களது சனிதோஷம் விலகும்.  இத்தலத்தில் சனீஸ்வரன் குபேர மூலையில் இருந்து அனைவர்க்கும் செல்வ   வளங்களை வாரி வழங்குவதாக தலவரலாறு கூறுகிறது. நளனும் திருநள்ளாற்றில் அவரைக் கண்டு வணங்கிய பிறகு இத்தலத்திற்கு வந்து வணங்கி இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது
.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். கொள்ளிக்காடர் என்று பதிகத்தில் இறைவனை சம்பந்தர் அழைக் கிறார். தீவண்ணநாதரரை  அக்னீஸ்வரர்  என்று வடமொழியில் நாமம்.   ஒரு  ஏக்கரா நில விஸ்தீரணத்தில் கோவில் அமைந்துள்ளது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து  15 கி.மீ. தூரத்தில்  திருக்கொள்ளிக்காடு    ஒரு காலத் தில் அடர்ந்த காடாக இருந்து  நளனோடு
தொடர்புடையது.   இவ்வாலயத்தில்  முருகன் கையில் வில்லுடன் காட்சியளிப்பது அதிசயம்.   வேல் முருகன் வில்முருகன் இங்கே.  இது தவிர  இங்கே  நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி  நிற்கிறது. 

நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் இருப்பார்கள் அல்லவா. ஆனால் இங்கே வேறுவிதம். "ப" வடிவில் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். நமது இங்கே சனீஸ்வரன் அக்னீஸ்வரர்  பாபங்களை  அழித்து விடுகிறார். அதனால் எந்த நவகிரஹத்துக்கும் வேலையில்லை. லீவ் தான்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில்  திருக்கொள்ளிக்காடு உள்ள 115ஆவது சிவஸ்தலம்.  திருவாரூர்  ஜில்லா,  திருத்துறை பூண்டி  தாலுக்கா.

மறுபடியும் சொல்கிறேன்.  கேளுங்கள்: 
சனீஸ்வரனுக்கு ரெண்டு முகம். பொங்கு சனி ,  மங்கு சனி என்று. ரெண்டாவதாக சொன்ன வரிடம் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். துன்பத்தின் மேல் துன்பமாக வாட்டி வதைத்து விடுவார். ஒரு ஏழரை ஆண்டு காலம் அவர் ஒரு ராசிக்காரரை வாட்டி விட்டு அடுத்த ராசிக்கு போவதை தான் ஏழரை நாட்டான் என்பது. மற்ற கிரஹங்கள் போல் அல்லாமல் மிகவும் மெது வாக நகர்பவர். ஏழரை வருஷம் என்பது மெதுவாக நகரும் சனி கிரகம் செல்வதை குறிக்கும் காலம். அதனால் தான் சனைஸ்சரன் (மெதுவாக செல்பவன்) என்று வடமொழியில் அர்த்தம். சனீஸ்வரன் அல்ல. 


அதே நேரம் பொங்கு சனி என்பது அந்த ஏழரைஆண்டுகள் ஒரு ராசிக்காரனுக்கு சகல நன்மைகளும் வாரி வழங்குவது. அது சனீஸ் வரன் அருள்வதால் அவரை பொங்கு சனி, மங்கள சனீஸ்வரர் என்பார்கள்.

அப்படிப்பட்ட பொங்கு சனி கிரகத்தை வேண்டுபவர்கள் செல்லும் ஒரு ஊர்தான் இந்த   திருக்கொள்ளிக்காடு. அக்னீஸ்வரம். கொள்ளி என்றால் நெருப்பு. அக்னி. 

 நான் சென்ற  போது   போகும்  வழி சனி பகவான் தொல்லையோடு  தூக்கி தூக்கி போட்டவாறு குதித்துக்கொண்டே சென்றேன். ஆனால்  ரெண்டு பக்கத்திலும் உள்ள கால்வாய்கள் மண் தூர் வாரப் பட்டு அருகே வயல்களில் நல்ல மண் எருவாக குமிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நல்ல காரியம் தமிழ் நாட்டில் புதுச்சேரியில் கண்டபோது மனம் குளிர்ந்தது.

கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் மிகவும் சின்ன கோவில். ராஜ ராஜ சோழன் காலத் தியது. நிறைய கல்வெட்டுகள் உள்ளன. படிக்கமுடியாத தமிழ். ராஜகோபுரம் காணோம். மேற்கு பார்த்த வாசல். உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம்,நந்தி. அதைத் தாண்டி உள் வாயில் வழியாக சென்றால் அக்னீஸ்வரர் மேற்கு பார்த்து காட்சி தருகிறார். அக்னிதேவன் வழிபட்ட ஸ்தலமாதலால் திருகொள்ளிக்காடு என்று பெயர். மூலவர் அக்னீஸ்வரர் என்பதால்  சிவலிங்கத்தின் மேல் கொஞ்சம் சிவப்பாக நிறம் தெரிகிறது. சந்நிதியின் இடப்பக்கத்தில் அம்பாள் 'ம்ருது பாத நாயகி'', பஞ்சினும் மெல்லடியம்மை என்கிற பேர்  ரொம்ப பிடித்திருக்கிறது. .

மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, அண்ணாமலையார், தட்சிணா மூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள்.

மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி. அவருக்கு தனி விமானம், தனி மண்டபம். திருநள்ளாருக்கு அடுத்த படியாக சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் வெகு விசேஷம்.

எங்கும் வறண்டு கிடந்த வயல் சூழ் கிராமங்களை, மரங்களை, செடி கொடி புதர்களை தாண்டி அதிகம் வீடே பார்க்காமல் வந்த நான் இந்த கோவில் கண்ணில் பட்ட திலிருந்து எண்ணற்ற வண்டிகள், ஜன நடமாட்டம், கார்கள், வேன்கள், பஸ் என்று நிறைய வண்டிகளை பார்த்தேன்.

புரூரவஸ் என்ற மகாராஜாவுக்கு சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான். சனி பகவான் இங்கே துன்பம் தராத அனுக்கிரக மூர்த்தி,.. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...