Saturday, July 11, 2020

EKALAVYAN



குருபக்தியும்  தக்ஷிணையும்  J K  SIVAN 

துரோணருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 
''ஆஹா எவ்வளவு கெட்டிக்காரச்  சிறுவன் இந்த  அர்ஜுனன். நான் கற்றுக்கொடுக்கும்  தனுர் வித்தைகளை எவ்வளவு சிரத்தையாக கற்றுக்கொள்கிறான். எவ்வளவு விசுவாசமாக மரியாதையோடு என்னை தெய்வமாக மதிக்கிறான். இப்படி ஒரு சிறந்த  மாணவனை  உலகில்  எங்கும் காணமுடியாது. நான் தன்யன் இவனை மாணவனாகப் பெற அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் ''  என்று மனம் திறந்து சொன்னார்  துரோணர். 

''த்ரோணா,  நீ சொல்வது சரி. நானும் கவனித்தேன். அவன் குருவை மிஞ்சும் சிஷ்யனாக வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ''  என்கிறார்  கிருபாச்சாரியார்.

அர்ஜுனன் ஓடிவந்தான். தான்  புதிதாக   கற்றுக்கொண்ட  சில வித்தைகளை குருமார்கள் எதிரே செய்து  காட்டினான்.

''அடே அர்ஜுனா, அதற்குள் நான் கற்றுக் கொடுத்த வித்தையை  பழகிக்கொண்டாயா. பலே பலே.  இதோ பார் அர்ஜுனா, இன்னும் சில வித்தைகள் தான் பாக்கி இருக்கிறது. அப்புறம் நீயாக புதிதாக கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியது தான். என்னுடைய சகல தனுர் வித்தைகளையும் உனக்கு கற்பித்து விட்டேன்.  என் மாணவர்களில்  உன்னை மிஞ்சுபவன்  வெல்பவன்  இந்த உலகில் இல்லை. ''

 அர்ஜுனன் வணங்கிச்  சென்றான். 

ஒருநாள் துரோணர் ஹஸ்தினாபுரம் அருகே உள்ள ஒரு ஊருக்கு சென்றார். அங்கே  ஒரு சிறுவன் அவரைப் பார்த்து விட்டு ஓடி வந்தான்.    மான் தோலை இடையில் அணிந்து, தலையில்  பட்சிகளின் சிறகுகளை  அணிகலனாக  தலைப் பாகையில் செருகி,  காணப்பட்ட அவன் ஒரு   காட்டு வாசி,  வேடுவ சிறுவன் என்று புரிந்தது.   துரோணரை  கீழே விழுந்து வணங்கினான்.

''யாரப்பா நீ  எதற்கு என்னைக்  காண வந்தாய்?''

''குருவே,  நீங்கள் பாண்டவர்கள் கௌரவர்களுக்கு  தனுர் வித்தை கற்பிக்கும் ஆசான் என்று எனக்கு தெரியும். தனுர் சாஸ்திரத்தில்  தீராத தாகம் கொண்ட நான்  அதில்  மிகச்சிறந்த உங்களை   ஆர்வ மிகுதி யால் காண வெகுநாள் காத்திருந்தேன். இந்த ஊருக்கு  நீங்கள் வந்திருப்பதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தேன். 

''நீ யார்  ?''

''குருநாதா, என்று  நா தழுதழுக்க கைகளை கட்டிக்கொண்டு அந்த சிறுவன்  ''நான் ஏகலைவன்,  இந்த காட்டின் தலைவன்  நிஷாதன் ஹிரண தனு வின் மகன். என் தந்தை மகத மன்னன் ஜராசந்தனின்  படை தளபதி.  என்னை உங்கள்  மாணவனாக  ஏற்றுக் கொண்டு  எனக்கும்  தனுர் வித்தைகள் கற்றுத்தர வேண்டுகிறேன்''.

''மிக்க மகிழ்ச்சி  ஏகலைவா.   என்னால்  பாண்டவர்கள் கௌரவர்களைத் தவிர வேறு யாருக்கும்  கற்றுத்தர முடியாத  நிலையில் உள்ளேன்.  உன்னை சிஷ்யனாக  மாணவனாக
அடைய வாய்ப்பில்லை அப்பா. நீ சென்று வா''

உடைந்த மனதோடு ஏகலைவன் திரும்பினான்.  துரோணர் மீது அளவுகடந்த மதிப்பு, மரியாதை, பக்தி கொண்ட ஏகலைவன்  துரோணாச்சார் யார் மாதிரி ஒரு  களிமண் பொம்மை செய்தான். அதை  தனது தெய்வமாக,  குருவாக ஏற்று தொழுது இரவு பகலாக அர்ச்சித்து  வணங்கினான்.   நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று அவர் எதிரில் தானே  அவர் கற்றுக்கொடுப்பது போல  பாவித்து வில் வித்தை பழகினான்.  இப்படியே சில வருஷங்கள் ஓடியது.  வில் வித்தையில் தலை சிறந்தவனாகி விட்டான். துரோணரின் தனுர் சாஸ்த்ர ஞானம் பூரா கற்றுக் கொண்டான்
ஓர்நாள் பாண்டவர்களும் கௌரவர்களும்  வேட்டையாட அந்த காட்டுக்கு வந்தார்கள்.  பாண்டவர்கள் உற்சாகமாக  வேட்டையாடி னார்கள் . அவர்களது வேட்டை நாய்  அவர்களோடு  வேட்டையில் பங்கேற்றது.   காட்டில் சுற்றி ஓடிய  நாய்  நடுக்காட்டில் ஏகலைவன் துரோணர்  பொம்மை முன்  அஸ்திர வித்தை பயிற்சி செய்து கொண்டிருக் கும்போது  யாரிவன் புதிதாக இந்த காட்டில் என்று உரக்க  குலைத்தது.   குருவை  வணங்கிக்  கொண்டிருந்த ஏகலைவன்  ஒரு அம்பை விட்டு அது ஏழு அம்புகளாக  அந்த நாய் வாயில் நுழைந்து அதன் வாயை  தைத்தால் போல  இறுக்கமாக  மூடிவிட்டது.  நாயால் குலைக்க முடியவில்லை.   வாயை திறக்க வழியில்லை.  பயந்து போய்  அதிர்ச்சி அடைந்த  நாய்  பாண்டவர்களிடம் ஓடிவந்தது. 

ஒரு அஸ்திரத்தால்  நாய் வாயின் அம்புகளை விடுவிக்கிறான்  அ ர்ஜுனன் 

''யார்  இவ்வளவு  சிறப்பாக  ஊசிகளால்  தைத்த மாதிரி நமது நாயின் வாயை   மூடிய  அஸ்திர வித்தை கற்ற  நிபுணன்?    எனக்கு மட்டும் தானே  இந்த வித்தையை கற்பித்தார்  துரோணர்?  என்று அதிசயிக்கிறான்  அர்ஜுனன்.   பாண்டவர்கள்  காட்டினுள்  சென்று தேடி ஏகலைவனை சந்திக்கிறார்கள்
''நீ யாரப்பா?
''நான்  ஏகலைவன்,   நிஷாத  ராஜா ஹிரணதனு வின் மகன்.  
    
'' உன்னை பாராட்டுகிறோம்..  இவ்வளவு அற்புதமாக  வில் வித்தை உனக்கு யார் கற்றுக்கொடுத்தது? மிகச்சிறந்த ஆசான்  துரோணரிடம்   கற்றால் மட்டுமே  இவ்வளவு துல்லியமாக அம்புகளை விடமுடியும்'' யார் உனது குரு ?''

''ஆஹா  என் குரு  தனக்கு நிகரில்லாத  தனுர் வித்தை ஆசார்யன்  துரோணர். ஆம்   மிகப் பெருமை அடைகிறேன், அவரிடமிருந்து எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்டுவிட்டேன்''
வாருங்கள் என் குருவை காட்டுகிறேன் என்று  பாண்டவர்களை அழைத்து சென்று தான் வழிபடும் துரோணரின் களிமண் பொம்மை யை காட்டுகிறான்.

அதிர்ச்சியும் ,ஆச்சர்யமும் பொங்க  பாண்ட வர்கள்  துரோணரிடம் சென்று      நடந்த விவரங்களைக் கூறுகிறார்கள்.  
தயங்கி தயங்கி  அர்ஜுனன், 

''குருநாதா  எனக்கு மட்டும்  தானே  சில  விசேஷ வித்தைகளை கற்பித்திருக்கிறேன். வேறு யாருக்கும் கற்றுக் கொடுக்க வில்லை என்றீர்கள். எப்படி    ஏகலைவனுக்கு இதெல் லாம்   சொல்லிக் கொடுத்தீர்கள்.  என்னுடைய  மாணவர்களில்  உன்னை மிஞ்சுபவன், உன்னை வேலவன் எவனுமில்லை என்பீர்களே.  என்னை விட சிறந்தவனாக அவன்  வில் வித்தையில் அவன் இருப்பது எப்படி? ''

துரோணர் திடுக்கிடுகிறார்.  ஏகலைவன் என்று ஒருவனை சந்தித்த நினைவே  அவருக்கு இல்லையே . எப்படி அவன் இந்த வித்தை யெல்லாம்   நான்  கற்றுக்கொடுக்காமலேயே  தெரிந்துகொண்டான்? 

''வா உடனே போகலாம். அவனைக் காண்பி எனக்கு ''

 என்று அர்ஜுனனோடு அந்த காட்டுக்கு சென்ற  துரோணர்   ஏகலைவன் தன்னைப் போலவே   ஒரு களிமண்  பிரதிமையை வைத்து பிரதிஷ்டை செயது உபாசிப்பதையும், அதன் எதிரே  வில்வித்தை தானாகவே  பயில் வதையும் காண்கிறார். அவன் நிச்சயம்  அர்ஜுனனை விட சிறந்தவனாக தன்னிடமி ருந்து தனுர் சாஸ்திரம் அனைத்தும்  தெரிந்து கொண்டிருப்பது புரிகிறது.   அவருக்கு  அதிர்ச்சியும்  ஆச்சர்யமும் பெருகி  அடுத்து என்ன செய்யவேண்டும் என்று மனதில் பட்டு விட்டது.

உலகில் அர்ஜுனனைத்   தவிர வேறு எந்த சிறந்த வில்லாளியும் இருக்க கூடாது. தனது வாக்கு பொய்க்கக்கூடாது. 

''ஏகலைவா,   உன்  வில்வித்தை எனக்கு  மகிழ்ச்சி  அளிக்கிறது.  உன் திறமையை மெச்சுகிறேன்.   எவ்வளவு காலமாக நீ இப்படி என்னிடமிருந்து  இதெல்லாம்  கற்றுக் கொள்கிறாய்?'' 

கையைக்கட்டிக்கொண்டு  குருபக்தியோடு  துரோணர் காலில் விழுந்து எழுந்த ஏகலைவன் ''குருநாதா  உங்களை சந்தித்த நாள் முதல் நான் உங்கள் மாணவன்'' என்று பழைய சம்பவத்தை நினைவூட்டுகிறான்.

ஏகலைவனைப் போல் ஒரு மாணவன் கிடைத்த தற்கு  ரொம்ப சந்தோஷம் அடைந்த  துரோண ருக்கு  அதே சமயம் தான் நேரடியாக  கற்றுக் கொடுத்து  ''அர்ஜுனா  உன்னைப்போல் வேறு எவரும் சிறந்த வில்லாளி இனி உலகில்  கிடையாது'' என்று சொன்ன வார்த்தை  பொய்யாக விருப்ப மில்லை . 

''ஏகலைவா,   உன் குருபக்தியை, ஞானத்தை  உண்மையாக மெச்சுகிறேன்.  நீ  என்  மாணவன் என்று நினைத்தால், நம்பினால், என்னிடமிருந்து எல்லா வித்தைகளையும் பூரணமாக கற்றவன் என்பது உண்மை யானால்  எனக்கு நீ  ஆச்சார்ய  சம்பாவனை, குரு தக்ஷிணை கொடுக்கவேண்டாமா?   குரு தக்ஷிணை கொடுக்காமல் கற்ற கல்வி  பாபத்தை தருமல்லவா. உனக்கு தெரியாதா?''

''குருநாதா, நான் உங்களையே  நேரில் கண்டு உங்கள் ஆசிர்வாதம் பெற்றதில்  தன்யனா னேன்.  குருதக்ஷிணையாக என்ன வேண்டு மோ கேளுங்கள் உடனே தருகிறேன் '' என்றான் ஏகலைவன்.  

அர்ஜுனன் இதெல்லாம் சிலையாக  பார்த்துக் கொண்டு நிற்கிறான். அவன் முகத்தில்  ஏக்கம், ஏமாற்றம் தெரிகிறது. 

அதைக்    கவனித்த  துரோணர் ஒரு க்ஷணத்தில் முடிவெடுத்தார்.  வில்வித்தைக்கு முக்கியம்  கட்டை  விரல் . நாண்   ஏற்றி   இழுத்து அம்பு பொருத்தி,   குறி தவறாமல் அஸ்திரம் தொடுக்க  அது அத்தியாவசியம்
.  
''ஏகலைவா,   எனக்கு நீ அளிக்கும் குரு தக்ஷிணை   உனது வலது கட்டைவிரல்''

மறுகணமே  ஏகலைவன் தனது இடுப்பில் செருகி இருந்த வாளை  எடுத்து இடது கரத்தால் வலது கட்டை விரலை துண்டித்து ரத்தம் சொட்ட சொட்ட  குருவின் காலடியில் வைத்து நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்குகிறான். அவன் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.  
மிகவும் மனம் உடைந்தவராக துரோணர் அவனை உள்ளூர பாராட்டினாலும்  அவருக்கு   தான் அர்ஜுனனுக்கு துரோகம் செய்யவில்லை, அவனுக்கு தான் கொடுத்த வாக்கு  பொய்க்காது இனிமேல் என்ற திருப்தியும் ஏற்பட்டது. 

கண்களில் நீரோடு ஏகலைவனை அணைக் கிறார்.  இனி ஏகலைவன்  கற்ற வில்வித்தை அவனுக்கு  பயன்படாது  என்றாலும் அவன் குருவின் அணைப்பில் பெருமிதம் அடைந்தான்.

மஹாபாரதத்தில் அப்புறம் ஏகலைவன்பற்றிய செய்தி எதுவுமில்லை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...