வாழ்க்கை ஒரு சக்கரம் என்பது சரிதான் போல இருக்கிறது. பழைய பழக்கங்கள் எல்லாம் திரும்பி வருகிறதே. வெளியே எதையும் வாங்கி சாப்பிடுவதில்லை. கடையே கிடையாது அப்புறம் தானே வாங்கி சாப்பிட முடியும். வாகனங்கள் இல்லாமல் எங்கேயும் நடை தான். டிராமா சினிமா டான்ஸ் எதுவுமே கிடையாது. அதிகம் மக்கள் கிடையாது. இப்போது நிறைய பேர் இருந்தாலும் நெருங்குவதில்லை. வாயை கையால் பொத்திக்கொண்டு பெரியவர்களிடம் மரியாதையாக சற்று விலகி இருந்து பேசுவோம். இப்போது வாயை துணியால் மூடிக்கொண்டு தள்ளி நின்று கொண்டு பேசுகிறோம். முன்பெல்லாம் கை கொடுக்கும் பழக்கம் கிடையாது. இப்போது அந்த பழக்கம் கூடாது.
குடும்பங்கள் ஒற்றுமையாக ஒன்றாக இருந்தது. இப்போது எல்லோரும் ஒரே வீட்டில் வெளியே போகமுடியாமல் wfh வீட்டிலிருந்தே வேலை செய். work from home. அப்போதெல்லாம் pant ஷர்ட் கிடையாது.வேஷ்டி ஜிப்பா, அரைக்கை சட்டை பனியன் என்று தான் இருந்தது. இப்போது வீட்டில் துண்டு, லுங்கி, சட்டை இல்லாமல் வேலை செயகிறார்கள். அப்போதெல்லாம் க்ஷவரம் செய்த்துக்கொள்ள கூட வபன காலம் எது என்று பஞ்சாங்கம் பார்த்து தான் செய்து கொள்வார்கள். முக்கால்வாசி வீடுகளில் க்ஷவரம் வாசல் மரத்தடியில். இப்போது க்ஷவரம் வெளியே செய்ய அனுமதியில்லை. எல்லோரும் ரிஷிகளாக காண்கிறார்கள். சகோதரர்கள், அப்பா /பிள்ளை தான் இப்போது ஒருவருக்கொருவர் நாவிதர்கள். முன்பெல்லாம் நட்பு நண்பர்கள் என்று அக்கறை உண்டு. அப்புறம் எல்லோரும் பிசியாகி பேசவே நேரம் இல்லாமல் போய் விட்டது. இப்போது தேடிப்பிடித்து போனில் '' என்னடா எப்படி இருக்கே, அங்கெல்லாம் கொரோனா எப்படி இருக்கு?'' மொட்டை மாடியில் வாக்கிங் போகும்போது பல பேர் கைகள் ஆட்டி சிரித்து புன் முறுவல் social distancing. முன்பெல்லாம் பார்த்து பேசவே நேரமில்லை. அன்பா, பாசமா, நேசமா ?
ஒரே வித்யாசம் அப்போதெல்லாம் கோவில் உண்டு, இப்போது இருந்தாலும் மூடி இருக்கிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் அதற்காக இந்த கட்டுரை இல்லை.
இப்போது ''அன்பு'' பெருகி விட்டதா ? முன்பு ஒருமுறை வாழ்கையில் அன்பை பற்றி ஒருவர் என்னிடம் கேட்டதை நினைவு கூர்கிறேன்.
''யார்டா கோபு வந்திருக்கா வாசல் மணி அடிக்கிறதே போய்ப்பார். வாசலிலிருந்து கீச்ச்சு கீச்சு குரல் கேட்டது. '''மூக்குப் போடி போட்டுண்டு தும்முவாறே அந்த மாமா''.அவர் உள்ளே வந்துவிட்டார். ''சார் நமஸ்காரம். ஞாபகம் இருக்கா. நான் விஸ்வாமித்திரன், பக்கத்து தெருவில் குடி வந்திருக்கேன் வணிக வரி அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்று மதுரையிலிருந்து இங்கு என் பெண் வீட்டுக்கு வந்துள்ளேன். உங்களைப் பார்க்க ரெண்டு தடவை வந்திருக்கேன். .
'' ஓ ஆமாம் பார்த்திருக்கேன். நமஸ்காரம் ஸ்ரீ விஸ்வாமித்திரன். தங்கள் பெயரே எனக்கு அந்த ரிஷியின் வைராக்யத்தையும் தபோ வலிமையையும் நினைவு படுத்துகிறது..''
விஸ்வாமித்திரன் சிரித்தார். ''உங்களிடம் ஒரு விஷயம் கேட்க ஆசைப்படுகிறேன். சார். வாழ்க்கையில் அன்பின் பங்கு என்ன?''
''என்ன திடீரென்று அன்பை பற்றி ஒரு யோசனை?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.
''வீட்டில் மற்றும் வெளியில் எங்கும் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். எவருமே சரியாக நின்று முகம் கொடுத்து பேச நேரமில்லை. வெடுவெடு வென்று ஒரு அருவறுப்போடு, ஸ்வாரஸ்யமில்லாமல் நேரமே இல்லாதவர்கள் போல் காண்கிறார்கள். மனம் விட்டு பேசுவோரே காணாமல் போய்விட்டார்களா? அன்போ பாசமோ, ஒரு இனிமையோ விருப்பமோ மக்களை சந்திக்கும்போது இல்லையே . ஏன் சுவாமி?''
பக்கத்திலிருந்த ப்ளாஸ்கிலிருந்து வெந்நீர் பருகிவிட்டு தொண்டையைக் கனைத்துக்கொண்டேன் .
''இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே முக மலர்ச்சியோடு சிரிக்க முடியும். இருப்பினும் நிறைய பேர் சிரிப்பை மறந்துவிடுகிறார்கள் ஏன் என்று நானும் யோசித்ததுண்டு. இதற்கெல்லாம் ஆதி காரணம் இருக்கிறது. வாழ்க்கையை ஒரு பாதையாகவோ பயணமாகவோ கருதுகிறோம். ரொம்ப சிம்பிள் உதாரணம்.
வாழ்க்கை ஒரு பாதையானால் மனிதன் ஒரு வண்டி. அந்த வண்டி ஓடுவதற்கான பெட்ரோல் டீசல் தான் அன்பு. அன்புக்கு பதிலாக மனிதன் வேறு குணங்களையும் பண்புகளையும் கொண்டு வாழ்க்கையை துவக்கினான் என்றால் வாழ்க்கைப் பயணம் தடைபடும். சுமுகமாக, சுகமாக, ஓட இயலாது. கடா முடா சத்தங்கள் தான் போடும். நகர கஷ்டப்படும். வேறு யார் உதவியோடு தான் அதைத் தள்ள வேண்டியிருக்கும். அர்த்தம் புரிகிறதா என்ன சொல்கிறேன் என்று ?''.
''அன்பு ஒன்றினாலே தான் நமது வாழ்க்கை இன்பகரமாகும் என்கிறீர்கள்.''
''பெட்ரோல், டீசல், மாதிரி அன்பு அரிதான பொருள் அல்ல. நிறைய மண்டிக்கிடக்கிறதே. உபயோகிப்பதில்லை என்பது தான் குறை இதில். இலவசமாகவே பெறலாம். எப்போதும் எங்கும் கிடைக்கக் கூடியது.
''கடை விரித்தேன் கொள்வாரில்லை'' என்று வள்ளலார் ஏங்கினாரே அந்த சாதாரணமான எங்கும் நிறைந்த வஸ்து அன்பு. ஆனால் எவரும் லக்ஷியம் பண்ணாதது.
அன்பை வெளியே எங்குமே போய் தேட வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் மண்டிக்கிடக்கிறது. இருபத்திநாலு மணி நேரமும் அதை எடுத்து பிரயோகிக்கலாமே. அதால் நன்மை தானே விளைகிறது. எல்லா சாஸ்திரங்களும் இயற்கையிலேயே மனிதன் அன்பினால் உருவாக்கப்பட்டவன் தான், மனிதனின் இயற்கை குணமே அன்புதான் என்கிறதே.
என்ன ஒரு வித்யாசம் இதில் என்றால் அன்பு மெதுவாக வளரக்கூடியது. கோபம் த்வேஷம், ஆத்திரம் , வெறுப்பு போன்று உடனே தனது ஸ்வரூபத்தை, வெளிப்பாட்டை, காட்டாது. மனிதனை அடிமையாக்காது.
அன்பை மனிதனிடம் அண்ட விடாமல் மற்ற மேற் சொன்ன குணங்கள் அதை அமுக்கி விடுகிறது. பாவம் அது என்ன செய்யும்? . மனிதன் தான் கெட்டிக்காரனாக நடந்து கொண்டு அதை உணர வேண்டும். ஒரு பொது நோக்கமாக சுயநலம் இன்றி பலரோடு இணைந்தால் அன்பு தலை தூக்கும். இதற்கு காலம் அதிகமாகும். பொறுமை அவசியம். உண்மைக்கும் நேர்மைக்கும் அன்பு நெருங்கிய நண்பன். அதேபோல் மனிதனின் உள்ளே உறையும் ஆத்மா அன்பின் தோழன். இரண்டும் ஒன்று என்று கூட கொள்ளலாம்.
மனம் ஒன்று தான் பொல்லாதது. அது தான் அன்பை அவ்வளவாக கிட்டே சேர்க்காமல் மற்ற தீய சகவாசத்தை நாடுகிறது.
''சார். அருமை. நன்றாக புரிகிறது. ''பயம் பயம்'' என்கிறோமே அதற்கும் அன்புக்கும் எதாவது சம்பந்தம் உண்டா சார் ?
''இது சரியான கேள்வி. இது மனம் சம்பந்தமுள்ளது. நமது இயற்கை ஸ்வபாவம் அன்பு என்றேன். இந்த புத்தி என்பதற்கும் உடம்புக்கும் இடையே மனம் இருக்கிறதே. அது தான் மனிதனை ஆட்டிப்படைக்க வல்லது. ஆத்மாவிடம் செல்லவிடாமல் உடம்பைத் தான் ஆளுமை செய்கிறது. மனம் விவரிக்க முடியாத எல்லை கொண்டது. நல்லது, தீயது, போன்ற சகல உணர்ச்சிகளையும் எழுப்பக்கூடியது. எப்போது எந்த விதத்தில் மனிதனை விழுங்கும் என்று சொல்லவே முடியாது. ஆனால் அந்த மனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வந்து அதில் அன்பைப் புகுத்திவிட்டால், அதைப்போன்று ஒரு சிறந்த சாதனம் எதுவுமே கிடையாது. அந்த மனத்தில் சில எண்ணங்களை தவறாக வளர்த்துக் கொண்டால் அது சில காரியங்களை செய்ய, எண்ணங்களை தூண்டும். அதனால் விளைவது தான் பயம். பாதுகாப்பு இன்மை.
அன்பு எதையும் எதிர்பாராமல் வந்து சேர்வது. பயம் எதையாவது எதிர்பார்த்து அதை அடைவதில் தவறான வழியை, மனம் அறிந்து, தவறு என்று தெரிந்தும், பயன்படுத்தினால் கிடைப்பது.
மனத்தின் ஒரு இயல்பு அலைபாய்வது. ஓயாமல் ஒழியாமல் ஓடுவது. தாவுவது. எதிலும் நிரந்தர பற்றுதல் இல்லாதது. இதனால் தான் மனம் ஒரு குரங்கு என்பார்கள். ரோலர் கோஸ்டர் என்று விளையாட்டு தெரியுமா? திடீரென்று மேலே தூக்கி செல்லும், அடுத்த கணம் அதல பாதாளம் போல் கீழே இறக்கும். பயமாக இருக்கும். அடி வயிற்றில் ஐஸ் பாறை. ஜில்லென்று மூச்சை நிறுத்தும்.
அவ்வளவுக்கவ்வளவு ஆத்மா நிதானமானது. அசையாதது. பொறுமையானது. அமைதி நிரம்பியது. அதன் ஆகாரம், ஏன் ஆதாரம், அன்பு ஒன்றே.
விஸ்வாமித்ரன், அன்பைப்பற்றி அதி முக்யமான ஒரு விஷயம் தெரிந்து கொள்ளவேண்டும் சார், நீங்கள்அன்பைப் பொறுத்தவரை அதை ஒருவருக்கு, ஒருவரிடம் கொடுத்தால் தான் ரெட்டிப்பாக பெறலாம். இதில் என்ன அதிசயம் என்றால், கொஞ்சம் கொடுத்து விட்டு பதிலுக்கு நிறைய கூட பெறமுடியும்.
விதை விதைத்தால் தானே அறுவடை செய்ய முடியும். அதைப்போல. முதலில் எல்லோரிடமும் , அவர்கள் மனதில் அன்பை நாம் விதைக்க வேண்டும்.
அன்பை காசு கொடுத்து வாங்க முடியாது. அதிகாரத்தால் பெற முடியாதது. உலகமே அன்புக்காக ஏங்குகிறது. நிறைய எதிர்பார்க்கிறது. கொடுக்க தான் தயக்கம், என்ன காரணம்? அதன் உண்மை புரியாததால், அதன் மேன்மை அறியாததால்.
புத்தர் ஒரு சீடனிடம் சொன்னார், ''அப்பனே, கொடுப்பதில் உள்ள சுகத்தை என் போல் நீயும் உணர்ந்தால், ஒரு கவளம் சோற்றைக் கூட மற்றவனோடு சேர்ந்து பகிர்ந்து கொள்ளாமல் நீ உனக்காக சாப்பிடமாட்டாய்.''
விஸ்வாமித்ரன் வாயைப் பிளந்து யோசித்தார். ஜிப்பா பாக்கெட்டுக்குள் கை விட்டு பொடி டப்பாவை தேடினார். கிடைத்தது. ஒரு சிட்டிகை எடுத்து இடது நாசிக்குள் பீரங்கி குழாயில் வெடி மருந்து போல் திணித்தார். காரம் கண்களில் நீர் வரவழைக்க, ஒரு பெரிய அதிர்வேட்டு தும்மல். தலையாட்டி விட்டு என்னை வணங்கி விட்டு விச்வாமித்ரன் விடைபெற்றார். அவர் மனதில் நாமும் புத்தர் சொன்னது போல் செய்வோமா, நாம் அவசியம் அப்படி செய்யவேண்டாமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கலாம். நம் மனத்திலும் எழ வேண்டாமோ?
No comments:
Post a Comment