Tuesday, July 14, 2020

UDUPI



கோபி சந்தன கிருஷ்ணன் J K SIVAN

நமது ஹிந்து சனாதன தர்மத்தை மூன்று பெரிய கோட்பாடுகள் அஸ்திவாரமாக தாங்குபவை.
அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத் வைதம். அப்படி என்றால் என்ன? ரொம்ப என்னைப்போன்ற அஞ் ஞானிகள் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன்: குப்புராவ் வெளியூருக்கு புளியோதரை மூட்டை கட்டி சுமந்துகொண்டு பிரயாணம் நடக்கிறான். புளியோதரை வேறு. குப்புராவ் வேறு. ரெண்டும் ஒன்றல்ல. இது தான் சார் த்வைதம்.
ஜீவாத்மா பரமாத்மா வேறு வேறு. சூர்யன் உச்சிக்கு போய்விட்டான். பசி வயிற்றை கிள்ளுகிறது. குப்புராவ் புளியோதரை பொட்டலத்தை பிரித்து புளியோதரையை முழுதும் காலி செய்து விழுங்கிவிட்டான். இப்போது புளியோதரையும் குப்புராவும் வேறு வேறல்ல. ரெண்டல்ல எல்லாம் ஒன்றே. இது அத்வைதம்.
ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் வேறு வேறாக காணப்பட்டாலும் ரெண்டும் ஒன்றே. குப்புராவ் வயிற்றில் சென்ற புளியோ தரை இன்னும் ஜீரணமாகவில்லை. இன்னும் முழுதுமாக ஜீரணம் ஆகி கரைந்து அவன் ரத்தத்தோடு கலந்து மறையவில்லை. சற்று நேரமாகி ய பின்னர் அவனோடு கலந்து விடுகிறது. இது விசிஷ்டாத்வைதம்.
ஜீவாத்மா பரமாத்மா ரெண்டும் ஒன்றாக காணப்பட்டாலும் ஜீவாத்மா பரமாத் மாவை சரணாகதி அடைந்த பின் சேர்கிறது.
இதற்கு மேல் விவரமாக உள்ளே சென்றால் என்னை புளியோதரை ஆக்கி விடுவீர்கள் என்பதால் இது புரிந்தால் போதும். மேலே சொன்ன மூன்றில் த்வைத சித்தாந்தத்தை பரப்பியவர் மத்வாச் சாரியார் (1238-1317). அவர் உடுப்பியில் ஒரு அற்புதமான கிருஷ்ணன் கோவிலை உண்டாக்கியது மேற்கே அரபிக்கடல் ஓரத்தில் இன்றைய கர்நாடகாவில் இன்னும் நான் சென்று தரிசிக்கும் உடுப்பி ஸ்ரீ க்ஷேத்ரம், ஸ்ரீ கிருஷ்ண மடம் என்றும் அதற்கு பெயர் உண்டு. இன்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று உடுப்பியில் கிருஷ்ணனை தரிசனம் செய்கிறோம்.
உடுப்பி என்பது உடு+பா. உடு என்றால் நக்ஷத்ரம் பா என்றால் அணிபவன், தலைவன். சிவன் தான் சந்திரசேகரன், சந்திரமௌளி மதவாச்சாரியார் காலத்துக்கு முன்பு இந்த பெயர் இருந்தாலும் உடுப்பி என்றால் கிருஷ்ணன் உலகம் முழுக்க தெரிந்ததாகி விட்டது. உடுப்பியை வைகுண்டம் என்பார்கள். கிருஷ்ணன் மத்வாச்சாரியார் வேண்டு கோளுக் கிணங்கி தானே அவரை அடைந் து தங்கிய க்ஷேத்ரம்.
உடுப்பி மங்களூரிலிருந்து 60 கி.மீ. கர்நாடகாவில் ஒரு முக்கிய யாத்திரை ஸ்தலம். உடுப்பி கிருஷ்ணன் ஆலயத்தில் மூல ஸ்தானத்தின் வலது பக்கம் ப்ரத க்ஷிணம் வரும் இடத்தில் மத்வாச் சாரியார் சிலை உள்ளது. வடக்குப் பக்கம் பாண்டுரங்கன் விக்ரஹம்.
அதெல்லாம் இருக்கட்டும். உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணன் எப்படி மத்வாச்சா ரியாரை தானே தேடி வந்து அடைந்து தங்கி கோவில் கொண்டான் என்பது தெரியுமா? சொல்லலாமா ?.
மத்வ விஜயம் என்கிற மத்வாச்சாரியார் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒரு கதை சொல்கிறது. அதன் சாராம்சம்:
உடுப்பியில் நிற்கும் பால கிருஷ்ணன் எப்படி அரபிக்கடலில் பிரயாணம் செய்து இந்தியாவின் வடமேற்கில் உள்ள துவாரகாவிலிருந்து தெற்கு மார்க்கமாக உடுப்பிக்கு வந்தான்? ஒரு சுவாரஸ் யமான சம்பவம் இதன் பின்னால் இருக்கிறது.
ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு, ஒரு முறை பால கிருஷ்ணன் நாம் நெற்றியில் இட்டுக்கொள்ளும் கோபி சந்தனம் செய்ய உதவும் களிமண் கட்டிக்குள் விக்ரஹமாக ஒளிந்து மறைந்து இருந்தது நம் யாருக்காவது தெரியுமா?
இந்த கோபிசந்தனம் செய்யும் களிமண் கட்டியை துவாரகையில் ஒரு கப்பல் சொந்தக்காரன் வாங்கி தனது மரக் கப்பலில் அதை பின்பாரமாக ஏற்றி வைத்து அந்த வியாபாரக் கப்பல் கடலில் தெற்கு நோக்கி ஒருநாள் மிதந்தது.
குதிரை, மாட்டு வண்டிகளில் பிரயா ணம் செய்தவர்களுக்கு பின்பாரம் என்று சொன்னால் தெரியும். வண்டியில் சிலரை பின்னால் உட்கார்த்தி வைப்பது பழக்கம். அவர்கள் எடையால் தான் வண்டியின் முன்பக்கம் சற்று மேல் நோக்கி மாடோ, குதிரையோ வண்டியை இழுக்க சௌகர்யமாக இருக்கும். அதேபோல் கடலில் கப்பல் மிதக்கும்போது கப்பலின் பின் பக்கம் ஒரு குறிப்பிட்ட அளவு நீரில் அமிழ வேண்டும். அப்போது தான் எதிர்நோக்கி செல்லும்போது கப்பல் காற்றினால் தூக்கி எறியப்படாமல் அலைகளை எதிர்கொண்டு மிதக்கும். ரொம்ப அமிழ்ந்தால் முழுகிவிடும். கப்பல் விஷயத்தில் இந்த பின்பாரத்தை ஆங்கிலத்தில் BALLAST என்று சொல்வோம். இப்போது களிமண் கட்டி எல்லாம் இல்லை. கடல்நீரை கப்பல் அடிபாகத்தில் TANK என்று தொட்டிகளில் நிரப்பி எடையை வேண்டிய அளவு சமன் செய்வது.
மேலே படித்தோமே அந்த மரக் கப்பல் அரபிக்கடலில் துவாரகையிலிருந்து தெற்கு நோக்கி சென்றது. உடுப்பி அருகே கப்பல் புயலில் சிக்கியது. மாலுமியால் சமாளிக்க முடியவில்லை. கப்பல் கரையை நோக்கி புயல் காற்றில் வீசப்பட்டு கடற்கரை மண்ணில் தரை தட்டியது.
தரை தட்டிய கப்பலை கப்பலில் இருந்த அனைவரும் கரையில் இறங்கி மீண்டும் இழுத்து கடலில் தள்ளி மிதக்க வைக்க பிரயாசை பட்டுக்கொண்டிருந்ததை அந்த பக்கமாக தனது சிஷ்யர்களோடு சமுத்திர ஸ்னானத்துக்கு வந்த மத்வாச்சாரியார் பார்த்துவிட்டார். அன்று தான் துவாதச ஸ்தோத்ரம் எனும் 12 ஸ்லோகங்களை கிருஷ்ணன் மேல் புகழ்மாலையாக இயற்றிக் கொண்டி ருந்தார். முதல் ஐந்து ஸ்தோத்ரம் பாடி முடித்திருந்தார். கிருஷ்ணனை புகழ்ந்து பாடப்பட்ட 12 அற்புத ஸ்லோகங்கள் கொண்ட துவாதச ஸ்தோத்ரத்தை ஒருநாள் விளக்குகிறேன்.
தரை தட்டிய மரக்கப்பலை மீண்டும் கடலுக்குள் தள்ளி மிதக்க வைக்க மாலுமிகள் கூட்டமாக வெகுநேரமாக பிரயாசைப் பட்டு தள்ளிக்கொண்டிருந் தார்கள் அல்லவா ? அதைப் பார்த்த மத்வாச்சாரியார் அவர்கள் அருகே வந்து தனது மேல் அங்கவஸ்திரத்தை உயரே தூக்கி அதை கடல் பக்கமாக காற்றில் அசைத்தார் .
என்ன ஆச்சர்யம் அவர் அசைத்த அங்கவஸ்திரம் அங்கே வீசிக்கொண் டிருந்த பலத்த காற்றை அவர்களுக்கு சாதகமாக மாற்றி கப்பல் மெதுவாக தரையிலிருந்து கடலுக்குள் நகர்ந்தது. மீண்டும் நீரில் மிதந்தது. கப்பல் சொந்தக்காரன் மாலுமிக்கு ஆச்சர்யம். பரம சந்தோஷமும் கூட. தனது கப்பலை காப்பாற்றி மீண்டும் கடலில் செலுத்தியதற்கு மாதவாச்சார்யரை வணங்கி நன்றி சொன்னான்.
''சாமி உங்களுக்கு கோடி நன்றி . நீங்க செய்த இந்த உதவிக்கு கப்பல்லே இருக்கிற பொருள் எது ேண்டுமா னாலும் கேளுங்க தரேன்''
''கப்பல் பின்னாலே அதோ வச்சிருக் கியே கோபி சந்தன மண் கட்டி. அதைக் கொடுப்பியா?. அது தான் வேணும். கோபி சந்தனம் செய்து பக்தர்கள் எல்லோருக்கும் கொடுக்கலாம்''
''இதோ நிறைய இங்கே கல் பாறைங்க இருக்கு. நான் வேறே ஒண்ணு எடுத்து வச்சிக்கிறேன். இந்த களிமண் கட்டியை நீங்க எடுத்துக்கிட்டு போங்க ''
மத்வாச்சார்யரும் அவருடைய முப்பது சீடர்களுமாக அந்த பெரிய கோபி சந்தன களிமண் கட்டியை தூக்கிக் கொண்டு திரும்பினார்கள்.
கடற்கரையை தாண்டி உடுப்பிக்குள் நுழையும் வழியில் களிமண் கட்டி ரெண்டாக உடைந்தது. அதன் உள்ளே இருந்த அற்புத வடிவம் கொண்ட அழகான ஒரு பால கிருஷ்ணன் கீழே மண்ணில் விழுந்தான். அவனுக்கு மண் பிடிக்குமே. அதற்குள் அவர்கள் கடற்கரையிலி ருந்து நாலு மைல் தூரம் வந்தாகிவிட்டது. சிஷ்யர்களால் அவனை தரையிலிலிருந்து தூக்க முடிய வில்லை.
''ஹா, என் பரமானந்த தெய்வமே என்று ஆசையாக மத்வாச்சாரியார் பால கிருஷ்ணனை பார்த்து பெற்ற தாய்ப் பாசத்தோடு அவனை அணைத் ததும் எளிதில் அசைந்தான் கிருஷ்ணன். அவரால் குழந்தையை போல் அவனை தூக்க முடிந்தது. அவனைத் தூக்கிய படியே மீதி ஏழு ஸ்லோகங்கள் கடகட வென்று அவரால் இயற்ற முடிந்தது. உரக்க பாடிக்கொண்டே ஆடிக் கொண்டே நடந்தார்.
பாலக்ரிஷ்ணனை தூக்கிக்கொண்டு உடுப்பியில் மாத்வ ஸரோவர் எனும் குளத்தில் ஸ்னானம் செய்வித்தார்.
அதன் கரையிலேயே ஒரு ஸ்ரீ கிருஷ்ண மடம் நிர்மாணித்து அவனை அதில் ஸ்தாபனம் செய்தார். பால கிருஷ்ணனை எப்படி பூஜை வழிபாடுகள் செய்யவேண்டும் என்று வழிமுறை வகுத்தார். உடுப்பியில் இருக்கும் போதெல்லாம் தானே நித்ய பூஜைகள் செய்வார்.மத்வாச்சார்யார் ஏற்படுத்திய ஆலய பராமரிப்பு பர்யாயம் என்ற வழிபாட்டு முறை. எட்டு மாத்வ மடங்கள் பொறுப்பேற்பவை. அவற்றின் பெயர்கள்: புட்டிகே, ஷிருர் , பெஜவார், பாலிமார் ,சோதே , கணியூரு, அதமார், க்ரிஷ்ணபுரா, அஷ்டமடம் எனும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ஸ்வாமிஜி ரெண்டு மாதத்திற் கொருமுறை மாறி மாறி பூஜை வழிபாடுகள் செய்து ஆலயத்தை பராமரிப்பவர்கள். பின்னர் வந்தவர்கள் ரெண்டுமாதம் என்பது மிகவும் குறைவான காலம் என்பதால் அதை ஒவ்வொருமடத்துக்கும் ரெண்டு வருஷ காலமாக்கினார்கள்.
இதில் நீங்கள் ஒரு முக்கியமான கேள்வியை இன்னும் கேட்கவில்லையே?
கிருஷ்ணன் எப்படி த்வாரகையில் நாமக்கட்டி க்குள் அடைந்தான்? இதை ''ப்ரமேய நவமாலிகா டிகா'' எனும் 17ம் நூற்றாண்டு ரகுவாரிய தீர்த்தரின் நூல் சொல்கிறது.
அன்னை தேவகி பிற்காலத்தில் ''அடே கிருஷ்ணா, பிருந்தாவனத்தில் உன் பால்ய சுட்டித்தனத்தை எல்லோரும் கண்டு வியக்க தாய் நான் காணவில்லையே கண்ணா, '' என்று வருந்துகிறாள்.
'சரி கண்ணை துடைத்துக்கொள், உனக்கு நான் என் பால்ய லீலைகள் சிலவற்றை ரீ வைண்ட் செய்து காட்டு கிறேன் '' என்கிறான் கிருஷ்ணன்.
அடுத்த கணம் ஒரு சிறுகுழந்தை தேவகியின் மடியில் புரண்டு விளையாடியது. அவள் தயிர் கடைய சென்றபோது பின்னாலேயே புடவையை பிடித்துக்கொண்டு நடந்து அவள் மத்தை பிடுங்கியது. தயிர் சட்டியில் கையை விட்டு அளாவி நிறைய வெண்ணையை எடுத்து மேலே பூசிக்கொண்டது. அவள் மேலும் பூசியது. வாயெல்லாம் வெண்ணை. மத்து கடையும் கயிற்றை எடுத்து ஒளித்து வைக்கிறான். பின்னர் கயிற்றை கையில் வைத்துக்கொண்டது.
கணநேரத்தில் குழந்தை மறைந்து அங்கே துவாரகை கிருஷ்ணனாக கம்பீரமாக நிற்கிறான். இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ருக்மணிக்கு கிருஷ்ணன் பால்ய வயது சிறு குழந்தையாகி மத்து, கயிறோடு நின்றது மனதில் பதிந்துவிட்டது. இதை என்றும் காணவேண்டும் என்று தோன்றியது. உடனே அதைப் போல ஒரு பொம்மை செய்தாள். தான் படைத்த அந்த பதுமையை ருக்மணி விடாது பூஜை செய்தாள்.
பின்னர் அந்த விக்ரஹம் அர்ஜுனனை அடைகிறது. கிருஷ்ணன் பூலோகத்தை விட்டு மறைந்ததும் துவாரகையை விட்டு எல்லோரும் வெளியேறியபோது அருகே ஒரு இடத்தில் ருக்மிணிவனம் எனும் ஸ்தலத்தில் அர்ஜுனன் பால கிருஷ்ணன் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்கிறான். பல நூறு ஆண்டுகளில் அதை சுற்றி இருந்த களிமண் மேட்டில் அந்த விக்ரஹம் புதையுண்டு மறை கிறது. ஒரு பெரிய மண் கட்டியாகிறது. இந்த மண் கட்டி யாரோ ஒரு துவாரகை வியாபாரி கண்ணில் பட்டு அதை அவன் ஒரு கப்பல் காரனுக்கு விற்கிறான். அப்புறம் மேலே உள்ள ''ஐந்தாயிரம் வருஷம்..... என்று ஆரம்பிக்கும் பாராவிலிருந்து மீண்டும் படித்தால் கிருஷ்ணன் நன்றாக தெரிவான்...
பாலகிருஷ்ணனை மதவாச்சாரியார் கிழக்கு நோக்கி பார்த்தவாறு பிரதிஷ்டை செய்தாலும் இன்று வரை மேற்கு நோக்கி தான் நமக்கு உடுப்பியில் தரிசனம் தருகிறானே எப்படி என்பதை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். ரொம்ப பெரிய கட்டுரையாகிவிடும் இது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...