Tuesday, July 28, 2020

RAMA NATAKA KEERTHTHANAI



   அருணாசல  கவிராயரின் அற்புத ராம நாடக கீர்த்தனைகள்   J K   SIVAN  


தமிழில் எண்ணற்ற பக்தி கீர்த்தனங்களை பாடிய  கவிஞர்கள்  ஏராளம்.   அன்றும் இன்றும்.   நான் கவனித்த வரையில்  வடமொழியில், தெலுங்கில், கன்னட, மலையாள மொழிகளில் பாடிய கவிஞர்கள் புலவர்களை நன்றாக  ஞாபகம் வைத்து பேசும் நாம்,   நமது தமிழில் பாடிய கவிஞர்களை ஏன் மறந்துவிடுகிறோம். யாரவது முத்து தாண்டவர், அருணாச்சலாகவிராயர், அண்ணாமலை ரெட்டியார்,  மாரிமுத்தா பிள்ளை , கவி குஞ்சர பாரதியை  ஞாபகம்  வைத்திருந்து அவர் பாடல்களை பற்றி என்றாவது  பேசுகிறோமா?

அருணாசலக் கவிராயர் (1711-1779) அற்புதமான கவிஞர்.    என்  தாய் வழி முன்னோர்கள் வாழ்ந்ததே இந்த அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை பாடியும் நாடகம் நடித்தும் தான். நான் அவரைப்பற்றி சொல்ல கடன், அல்ல, கடமைப் பட்டிருக்கிறேன்.

பிறந்தது சீர்காழியில் 1711 ல். தில்லையாடி என்னும் ஊரில். கார்காத்த வேளாளர் குலம். இளமையிலேயே
கவிபாடும் புலமையும், இசையுடன் பாடும் ஆற்றலும் இருந்ததால் தருமபுர ஆதீனத் தலைவர் ஆதரவு கிடைத்தது. சீர்காழியில் குடும்பம் வசதியாக தங்க ஆதீனம் உதவியது.  கர்நாடக இசையில் அற்புத பாட்டுகள் மெட்டமைத்தவர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் காலத்துக்கும் முந்தியவர். முதலில் இருந்தவர் முத்து தாண்டவர். (1525-1625) . அப்புறமாகதான் அருணாச்சலாகவிராயர் மற்றும் அவரது சம காலத்தவரான மாரிமுத்துப் பிள்ளை (1717-1787). அருமையான முத்தான தமிழ் கீர்த்தனைகள் படைத்தவர்கள் இந்த மூவரும். இன்றும் பாடப்பட்டு வருகிறது.

இராம நாடகக் கீர்த்தனை (சங்கீத ராமாயணம்) 258 இசைப்பாடல்களை நாடக வடிவில் கொண்டது. இந்த கீர்த்தனைகளை தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பல பிரசித்த ராகங்களில் அமைத்தார். மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடுகிறார்கள்.

நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் பாடிய ''ராமனுக்கு மன்னன் முடி.." இந்தோள ராக பாட்டை கேட்டு ரசித்ததுடன் கண்களில் நீரைத் துடைத்துக் கொண்டேன். மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய ''ஏன் பள்ளிக்கு கொண்டீரய்யா'' என்ற மோஹன ராக பாடலை எத்தனை முறை இதுவரை கேட்டிருக்கிறேன் என்று கணக்கே இல்லை.

கவிராயரை  இதிகாச கதையை கீர்த்தனைமூலமாக மக்களிடம் பரப்பிய முதல் கவிஞர் எனலாம். 'இராமநாடகக் கீர்த்தனை'     திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது. என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.

ஒரு அல்ப சந்தோஷம். நாம் மறந்துவிட்டாலும் அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகளை எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், மகாராஜபுரம், அரியக்குடி, போன்ற மஹா வித்துவான்களும் திரைநடிகையும் பாடகியுமான பானுமதி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் பாடி எத்தனை லக்ஷம் ரசிகர்கள் செவிகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்திருக்கிறதோ!

கவிராயரை   ஆரம்பத்தில்  காசுக்கடை என்ற நகை அடமானம் வைத்து கடன் கொடுக்கும் கடை வைத்து பிழைக்க வைத்தார்கள். மனம் அதில் செல்லவில்லை. ஒரு அதிசயம் நடந்தது.

புதுச்சேரிக்கு வியாபாரத்துக்காக தங்கம் வாங்க நடந்தார். ரெண்டு மஹா வித்வான்களை வழியில் சந்திக்கும் பாக்யம் கிடைத்தது. வெங்கட்டராம ஐயர், கோதண்டராம ஐயர் என்ற அந்த ரெண்டு சங்கீத வித்வான்களும்  
சீர்காழியை அடுத்த சட்ட நாதபுரத்தைச் சேர்ந்தவர்கள்.    அருணாச்சல கவிராய ர்   சீர்காழியில்   தருமபுர மடத்துக் கிளையில் தங்க நேர்ந்தது.    அப்போது அந்த சீர்காழி மடத்தில் தலைவராக இருந்தவர் முன்பு அருணாசல கவிராயருடன் படித்த சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர் "கட்டளை மாலை" என்ற பாமாலையை இயற்றியிருந்தார். அவருக்குத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி குறித்த ஒரு பாடலை இயற்றி  அதில்   சேர்க்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் வேலை பளுவின் காரணமாக எழுத நேரமில்லை. பாட்டில் தொடக்க அடி மட்டும்தான் எழுதியிருந்தார், மேற்கொண்டு எழுத நேரமில்லை. அந்த நேரம் பார்த்து அருணாசல கவிராயர் சீர்காழி வந்தபடியால்,

''அருணாசலம், நான் ஆரம்பித்தேன். அப்புறம் எழுத நேரமே இல்லை. நீ இந்த பாமாலையை பூர்த்தி செயகிறாயா? என்றார் சிதம்பரம்பிள்ளை.

''சரி நான் எடுத்துக் கொண்டு போகிறேன். புதுச்சேரியில் தங்கம் வாங்கும் வேலை இருக்கிறது. முடிந்தால் அங்கேயே எழுதுகிறேன். வரும்போது தருகிறேன்'' என்கிறார் கவிராயர்.

புதுச்சேரியில் ஒரே இரவில் அந்த பாமாலை பூர்த்தி ஆகியது. ஒரு ஆள் மூலம் சீர்காழியில் உள்ள சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். ''ஆஹா எத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறார் என்று அவர் புலமையை வியந்தார். மனதில் ஒரு எண்ணம் உதித்தது. எப்படியாவது அருணாசலத்தை தன்னுடன் சீர்காழியில் தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தில்லையாடியிலிருந்து அவரது குடும்பத்தை சீர்காழிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார்.

புதுச்சேரியிலிருந்து தங்கம் வாங்கிக்கொண்டு திரும்பிய கவிராயர் வழியில் சீர்காழி வந்தபோது நண்பர் சிதம்பரம் பிள்ளை தனது குடும்பத்தையே தில்லையாடியிலிருந்து சீர்காழியில் கொண்டு வந்து குடியமர்த்தி யது ஆச்சரியமாக இருந்தது. சரி இனிமேல் நமக்கு சீர்காழி தான் என்று அங்கேயே தங்கிவிட்டார். அது முதல் சீர்காழி அருணாசல கவிராயர் என்றழைக்கப்பட்டார்.

புதுச்சேரியில் பழக்கமாகி சந்தித்த இரு சங்கீத வித்வான்களான வெங்கட்டராம ஐயரும், கோதண்டராம ஐயரும் சீர்காழியில் மீண்டும் அருணாசல கவிராயரை சந்தித்து கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதற்காக வந்தனர்.

''கவிராயரே, எங்கள் சந்தேகங்களை அற்புதமாக கம்பராமாயணத்திலிருந்து விளக்கி தெளிவாக சொன்னீர் கள். எங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இவ்வளவு அற்புதமாக நீங்கள்  கண்முன் தோன்றுவது போல் சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் கம்பராமாயணத்தை ஒரு நாட்டிய இசை நாடகமாக நிறைய பாடல்கள் எழுதி ஆக்கக்கூடாது. கவிதைகளை நீங்கள் இயற்றுங்கள், நாங்கள் அவற்றுக்கு ராகம், தாளம் இவற்றை அமைத்து இசை நாடகமாக ஆக்க உதவி செய்கிறோம்" என்றனர்.

''வித்வான்களே, இது மிக பிரமாதமான யோசனையாக அல்லவோ இருக்கிறது. எனக்கு தோன்றவே இல்லையே. என்கிறார் கவிராயர்.

அருணாசல கவிராயர்  கம்பனுடைய காப்பியச் சுவையில் திளைத்தவர். அதை மேலும் படித்து அனுபவிக்க இப்படி ஒரு சந்தர்ப்பமா? கம்பனின் கவி நயமிக்க பாடல்களும், பால பாரதியின் சந்த விருத்தங்களும் அவர் மனதில் ஒரு தாக்கம் விளைவிக்க இராம நாடக கீர்த்தனைகள் உருவாயின. பண்டிதரும் பாமரரும் பாடி மகிழ்ந்து, நாடகமாக நடிக்கப் பட்டது. அவர் கையாண்ட சிறந்த உத்தி என்னவென்றால் சாதாரணமான அன்றாட புழக்கத்திலுள்ள சொற்களைப் போட்டு, பழக்கத்திலிருக்கும் பழமொழி களைச் சேர்த்த எளிமையான பாட்டுக்கள் நல்ல இசையோடு சேர்ந்து, கேட்போர் அனைவர் நெஞ்சங்களையும் கவர்ந்தது .

"இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றியது போல அங்கேயே கொண்டு சென்று அரங்கேற்றினார்.

"ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கநாதா" எனும் மோகன ராக கீர்த்தனை எண்ணற்ற பரத நாட்டியக் கலைஞர்களால் அபிநயம் பிடித்து பிரபலமானது. இன்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

அவர் காலத்தில் தஞ்சையை துளஜாஜி என்ற மராட்டிய மகாராஜா ஆண்டார். குடும்ப சூழ்நிலை சரியில்லா மலிருந்த காரணத்தால், இந்த நாடகத்தின் அரங்கேற்றம் துளஜாஜி ராஜா முன்னிலையில் நடத்த முடியாமல் போனது. கவிராயர் புதுச்சேரி துபாஷாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினார். அவர் சென்னையில் அப்போது இருந்த வள்ளலும், கலை ஆர்வலருமான மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார் நல்ல கலா ரசிகர். அருணாசல கவிராயரின் சில பாட்டுக்களை வித்வான்கள் பாடக் கேட்டிருக்கிறார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சூழ் நிலையில் இப்போது அந்த பாடல்களை இயற்றிய ஆசிரியரே நேரில் வந்திருக்கிறார், அதிலும் இராமாயண நாட்டிய நாடகத்துக்கான எல்லா பாடல்களோடும் வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பிறகு தஞ்சையில் துளஜா ராஜா நிலை சரியானபின்பு அருணாசல கவிராயரின் இராம நாடகத்தை அரண்மனையில் நிகழ்த்தினார். புதுவை சென்று ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையிலும் நடத்தினார். அப்போது பிள்ளையுடன் வேறு பல செல்வந்தர்களும் இருந்து ரசித்துப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் அருணாசல கவிராயருக்கு அரும் பெரும் விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை அளித்து கெளரவித்தனர்.

முடிப்பதற்கு முன் ஒரு பாடல் பற்றி சொல்கிறேன்

''ஆஞ்சநேயருக்கு மிகவும் சந்தோஷம். இலங்கை வந்த ராம காரியம் முடிந்தது. சீதையை உயிரோடு கண்டு அவளுக்கு ராமர் பற்றிய செய்தி சொல்லியாகிவிட்டது. அவளிடமிருந்து ராமருக்கு பதில் செய்தியும் தக்க அடையாளத்தோடு வாங்கிக் கொண்டாயிற்று. சீக்கிரம் திரும்பிப் போய்விட வேண்டியது தான். நான் ராம தூதன். தூதனுக்கு லக்ஷணம் திருட்டுத் தனமாக வந்து தப்பி ஓடுவதல்ல. இந்த ராவணனுக்கு அவன் யாரோடு மோதுகிறான் என்று தெரிய வேண்டாமா? எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா? அப்படிச் செய்யாமல் திருட்டுத் தனமாக வந்து செல்வது என்போன்ற வீரனுக்கு அழகா?தேவையா?

எதிரி எப்படிப்பட்டவன் அவன் பலம் என்ன என்று அறிவுறுத்த, ராவணனுக்கு சில கஷ்ட நஷ்டங்கள் உண்டாக்கியாகி விட்டது. இனி அவனைச் சந்தித்து புத்திமதி சொல்ல வேண்டியது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. நல்ல வேளை. அந்தச் சந்தர்ப்பத்தை அவன் மகனே உண்டாக்கிக் கொடுத்திருக்கிறானே. நான் தேடிப்போவதற்கு பதிலாக அவனே என்னை தருவிக்கிறான். நல்லது '' என்று தன்னைக் ''கட்டு'' ப் படுத்திக்கொண்டார்.   எனவே பயந்தவராக பிடிபட்டவராக தன்னைக் காட்டிக்கொண்டு, கட்டுப்பட்டு ராவணன் மாளிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது கோபமாக இருந்த இலங்கை வாசிகள் அவரைத் தாக்கினார்கள். பிரம்மாஸ்திரம் அவரை தொட்டுவிட்டு விலகியது. இந்திரஜித்துக்கு பெருமிதம். ஒரு பலசாலியை அடக்கி கட்டி இழுத்துக் கொண்டு வந்துவிட்டோம் என்று.

''இவன் சாதாரண வானரன் இல்லை. எண்ணற்ற நமது வீரர்களை தனியொருவனாகக் கொன்றவன். சேதம் விளைவித்தவன். என் திறமையால் பிரம்மாஸ்திரம் உபயோகித்து இவனைக் கட்டிக் கொணர்ந்தேன். இனி இவனுக்கு தக்க தண்டனை கிடைக்கும். '' என்று அனைவரும் கேட்க மேகநாதன் முழங்கினான்.

ராவணன் முன் நின்ற ஹனுமனை ராவணன் கேட்கச் சொன்னதால் ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷச அதிகாரி கேட்கிறான்:
''ஏ, வானரா, நீ யார், யாரால் அனுப்பப்பட்டவன்? பயப்படாமல் உண்மையைச் சொல், உன்னை விடுவிக்கிறேன்.'

இது தான் அந்த பாடல்:
செஞ்சுருட்டி : ஆதி தாளம்
'' ஆரடா குரங்கே - இங்கே வந்த நீ - ஆரடா குரங்கே''
வார் சிங்காசனம் போல், - வால் இட்டென்னிலும் மேல் இட்டிருகிறாய் ''
கம்பத்தின் மேலே காலனைப் போலே
செம்புமாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலெ
சிட்சை செய்வேன் என்று கட்சி உடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்த நீ.... ஆரடா குரங்கே.....

(ராவணன் எதிரில் தனது வாலைச்சுற்றி உயரமான ஆசனம் அமைத்து ராவணனை விட மேலே உயரமாக அனுமன் அமர்ந்திருக்கிறானாம்) ( செஞ்சுருட்டி ராகத்தில் ஆதி தாளத்தில் -- ராவணன் கேட்பது )

அதற்கு அனுமார் பதில்: மோகனம்: ஆதி தாளம்

''ராமசாமியின் தூதன் நான் அடா -- அடடா ராவணா
நான் அடா என் பேர் அனுமான் அடா ( ராவணன் ஒரு அடா போட்டால் அனுமன் பல அடா போடுகிறான்!!)
கொடுத்த வரமும் தனமும் கனமும் வீணிலேன் போக்குகிறாய்
குடிக்கும் பாலை அய்யோ கமர் வெடிக் குளேன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்த்ரி செனங்களை தொடர்ந்தேன் பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட்டேணியை வாங்கும் துர்த்தர் வார்த்தையைக் கேட்கிறாய் ...( . ராம )

கவிராயரின் இன்னும் சில பாடல்களை பற்றி ஒவ்வொன்றாக எழுத விருப்பம் இருக்கிறது. நேரம் கிடைக்கட்டும். என் அம்மா  இந்த  பாடல்களில் நிறைய மனப்பாடம் செய்து பாடுவாள். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...