ஒரு பொது கூட்டம் J K SIVAN
பரமேஸ்வரர் கைலாயத்தில் எல்லா தெய்வங்களையும் தேவதைகளையும் அழைத்து இருந்தார். ஒவ்வொருவரும் தங்களது கடமைகளை சரிவர செய் கிறார்களா என்று கேட்டு அறிந்துகொண்டிருந்தார். நாம் வருடம் ஒரு தரம் வருடாந்திர பொது கூட்டம் ANNUAL GENERAL BODY மீட்டிங் வைக்கிறோமோ அது போல் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.
''பூலோகத்தில் நாராயண னுக்கும் உங்களுக்கும் தான் பெருமை போற்றுதல் அதிகம் இருக்கிறது.' என்றான் இந்திரன்
''இந்திரா நீ உன்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக பூலோகத்தில் பேசுகிறார்கள் என்று அறியாமல் பேசுகிறாய். எவரையாவது புகழ்வதானால் உன் பேரும் சந்திரன் பேரும் தான் அவர் என்ன பெரிய இந்திரன், சந்திரன் என்று போற்றுகிறார்கள்.
''நாரதா நீ என்ன சொல்கிறாய்?'
''சரியாக எவரும் என்னைப்போல் சுற்றி பார்க்கவில்லை, கிராமங்களுக்கு போய் பார்த்தால் தெரியும்.
''என்ன தெரியும் நாரதா?''
''அய்யனார், அம்மன் தான் வேறு வேறு பெயரில் அதிகம் ''
''ஆனால் எல்லாம் சிறு சிறு கோவில்களாகத்தான் இருக்கிறது. என்கிறார் பிரமன்.
''உங்களுக்கு தான் கோயிலே இல்லையே நீ எதற்கு இதை பற்றி பேசுகிறாய் என்றார் விநாயகர்
பிரமனுக்கு கோவில் இல்லாவிட்டால் என்ன. அவனுக்கும் சேர்த்து சரஸ்வதி படம் நிறைய பக்தர்கள் வசம் இருக்கிறது. சரஸ்வதியை கோயில் கட்டி கொண்டாடுகிறார்கள், ஒரு நதியே அவள் பெயரில் இருந்து மீண்டும் எங்கோ தேடிக்கண்டு பிடித்திருக்கிறார்கள். சரஸ்வதியை நினைக்காத பள்ளிக்கூடங்களோ, கல்விச்சாலைகளோ இல்லை தெரியுமா?.
''அண்ணாவுக்கு தான் அதிகம் கோயில், அண்ணா இல்லாத தெருவோ , ஆற்றங்கரையோ, அரசமரத்தடியோ கிடையாது'' என்றான் முருகன். அவன் அடிக்கடி ஏதாவது மலையிலிருந்து இறங்கி வந்து இந்த கூட்டங்களில் கலந்துகொள்வான். ஊரெங்கும் ஆறுமுகத்தோடு பரவலாக எல்லோருக்கும் தெரிந்தவன் அந்த குமரன்.
''எந்த அண்ணா? என்கிறார் நாரதர்
''ஐயோ தமிழகத்தில் மட்டும் இப்படி சொல்லக்கூடாது தப்பு தப்பு பிள்ளையார் என்ற எனது மூத்தவர் கணேசன் என்று சொல்லவேண்டும்.
''எந்த கணேசன்? என்று நாரதர் குழப்ப ....
''அடடா இதுவும் தப்பு. தமிழ்நாட்டில் இந்தப்பேர் வேறு எவரையோ குறிக்கும். விநாயகர், விக்னேஸ்வரர் என்று சொல்லி சந்தேக நிவர்த்தி செய்கிறேன். என்றான் முருகன்.
உடைப்பதற்கும் அவரைத்தான் முதலில் தேடுகிறார்கள். என்றான் இந்திரன்
ஆமாம் அவருக்காக தேங்காயை தேடி உடைப்பவர்கள் எண்ணற்றவர்கள் என்று பேச்சை மாற்றினான் முருகன்.
மொத்தத்தில் எல்லா தெய்வங்களுக்கும் போற்றுதல் வழிபாடு இருக்கிறது.
நாராயணா, பரமேஸ்வரா அதோ ரெண்டு பேர் தலையை கவிழ்த்து கடைசியில் ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்ன என்று கேளுங்கள்.''
''என்ன எமதர்மா, என்ன சனீஸ்வரா நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன விஷயம்?''.
எமதர்மன் தலையை ஆட்டினான் அவன் முகத்தில் வருத்தம் போகவில்லை.
''சர்வேஸ்வரா. தர்மராஜன் என்று பெயர் கொடுத்து அவனுக்கு நீங்கள் கொடுத்த வேலைக்கு அவனுக்கு கிடைத்தது அவமதிப்பு தான் தருகிறது என்கிறான் சனீஸ்வரன்''
''என்ன சொல்கிறாய் முருகா?
''தர்மராஜன் அடிக்கடி ஏதாவது காரணத்தால் ஜனத்தொகையை குறைக்கிறான். வெள்ளம், புயல், சுனாமி, இப்போது கொரோனா, ஃப்ளு FLU , புற்றுநோய் என்று ஏதேதோ சாக்கில் அவரவர் காலம் முடிகிறது.. அவனிடம் போய் சேரும் மக்கள் அவனை எதற்கு குறை சொல்கிறார்கள்.? திட்டும்போது கூட ஒருவரை ஒருவர் ''எமனே'' என்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத அவன் வாகனத்தையும் சேர்த்து ''எருமை , எருமைக்கடா'' என்று திட்டுகிறார்கள். அவனுக்கு வழிபாடு எங்கும் கிடையாது. எனக்கு இந்த நீதித்துறை , டிபார்ட்மென்ட் வேண்டாம் மாற்றுங்கள் என்கிறான்.
''இது அவன் மேல் அவமதிப்பு இல்லை, மக்களுக்கு மரணத்தில் மேல் உண்டான பயம். அதற்கு அவன் எதற்கு வருந்தவேண்டும். மரணத்தை யாரும் கொண்டாட வில்லை, அதனால் அவனுக்கு கோயில் காட்டவில்லை. இல்லாமல் போகட்டுமே. அவனை மாற்றிவிட்டு வேறு எவரை அந்த துறையில் போட்டாலும் அந்த பதவிக்கு இவ்வளவு தான் மரியாதை. எல்லாம் மக்களின் பயத்தினாலேயே தவிர அவன் மேல் அவமதிப்பால் இல்லை. தர்மா இதுவும் ஒரு தர்மம் தான். மனதில் இதை வைக்காதே''
''அப்போது சனீஸ்வரன் எதற்கு வருத்த படுகிறான்? ''
''சனீஸ்வரனுக்கு என்ன குறை. நான் தான் எனக்கு உண்டான ஈஸ்வரன் பெயரை அவன் ஒருவனுக்கு மட்டும் தானே சூட்டியிருக்கிறேன் சனீஸ்வரன் என்று பெருமையாக. அவனுக்கும் கோவில் இருக்கிறதே. அவன் ராசியில் இடம் பெயரும்போது சனிப்பெயர்ச்சிக்கு எத்தனை கூட்டம், பூஜை அபிஷேகம், அலங்காரம். நைவேத்தியம்.... என்றார் சிவன்
''எல்லாம் அவன் தங்களை விட்டு போகவேண்டும் என்று அவர்கள் கொடுக்கும் ரிட்டயர்மெண்ட் பார்ட்டி நாராயணா'' என்றான் நாரதன்.
சனீஸ்வரன் பெயரை யாரும் வைத்துக் கொள்வதில்லை. போற்றுவதில்லை, ஒருவரை ஒருவர் திட்டுவதில் கூட சனி என்று அவன் பெயரும் அடிபடுகிறது. ''அந்த சனி வந்துடுத்து'' என்று அருவருப்பாக பேசுவதை என் காது பட கேட்டிருக்கிறேன் என்றான் நாரதன்.
சனீஸ்வரரை பற்றி அவர் கோவில் பற்றி தனியாக ஒரு கட்டுரை அடுத்ததாக எழுதுகிறேன். நான் பார்த்த அந்த சனீஸ்வரர் கோவில் இருக்கும் ஊர் பெயரை சொல்லி முதலில் பயமுறுத்திவிடுகிறேன்.
''கொள்ளிக்காடு''
No comments:
Post a Comment