திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்
J K SIVAN
80 .தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
ஸ்ரீரங்கத்தையும் திருச்சியையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றோடொன்று ஆன்மீகத்தால் இணைந்தவை. காவேரி அதன் உபநதி கொள்ளிடத்தோடு சேர்ந்து இவற்றை பிரிக்கவில்லை, இணைக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
திருச்சி பக்கம் அழகான கண்கவர் மலைக்கோட்டை, உச்சியில் பிள்ளையார் கோவில் எங்கிருந்து பார்த்தா லும் தெரியும். காவிரியின் பாலத்தின் மீது டடங் டடங் என்று ரயிலில் போகும்போது கீழே அகண்ட காவிரி, மேலே உச்சி பிள்ளையார் கோயில் இன்னொரு பக்கம் சோலைகள் மிகுந்த ஸ்ரீரங்கம் ஆலய கோபுரம், மற்றொரு பக்கம் திருவானைக்கா சிவாலய கோபுரம் .. என்று பார்க்காத ரயில் பிரயாணி இருக்கமுடியாது.
ஒருபக்கம் திருவானைக்கோவில் என்ற பழம்பெரும் சிவாலயம். இன்னொருபக்கம் ஸ்ரீரங்கம். ரெண்டும் அருகருகே தான்.
ஸ்ரீரங்கம் கோவில் உற்சவாதிகள் பக்தர்களை மகிழ்த்துபவை, எம்பெருமான் பல்லக்கில் அற்புதமான திருவாசி, மேலே குடை, இருபக்கமும் கவரி வீசுபவர்கள், நான்கு பிரதான வீதிகளில் அவர் காட்சி தந்துகொண்டு வரும்போது தான் எத்தனை விதமான அலங்காரங்கள், தீப ஒளி, பழங்காலத்தில் தீவட்டிகள் எண்ணெய் ஊற்றப்பட்டு தீவட்டிக்குக்கு எண்ணெய் ஊற்றுவதற்கென்றே ஒருவன் எண்ணெய் சட்டி, கரண்டியோடு கூடவே வருவான். மூங்கில், அல்லது கனமான மரத் தடியிலான தீவட்டி முனையில் பிரகாசமாக தீ எரியும். நாதஸ்வர தவில் சத்தம் எம்பெருமான் எங்கோ வரும்போதே இங்கே கேட்கும். சத்தம் கேட்டு தெருவின் இருமருங்கிலும் வீட்டிலிருந்து எல்லோரும் வெளியே வந்து, முன்னேற்பாடாக வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு வைத்திருப்பார்கள். தயாராக கையில் வெற்றிலை பாக்கு தேங்கயோடு அர்ச்சனைக்கு காத்திருப்பார்கள். வேதகோஷம் ஒரு புறம் இருந்தாலும், கணீரென்று திவ்ய பிரபந்தம் தான் செவிக்கினிமையாக கேட்கும். பெண்கள் சேர்ந்து பாடிக்கொண்டு வருவார்கள், சிலர் கோலாட்டம் ஆடிக்கொண்டு முன் செல்வார்கள். ஸ்வாமி பல்லக்கை தாங்கும் பாதம் தாங்கிகள் பல்லக்கின் இருபுற கனமான மூங்கில் தடியை தோளில் துணிமேல் வைத்து தூக்கிக்கொண்டு, நடக்கமாட்டார்கள், ஆடுவார்கள், ஒருவர் கையை மற்றொருவர் கோர்த்துக்கொண்டு, தோளில் கை போட்டுக் கொண்டு பல்லக்கை வையாளி இசைக்கேற்ப அசைந்து ஆடிக்கொண்டே வருவார்கள், பெருமான் நடனமாடி வருவது போல் அசைவு கொடுப்பார்கள். மணிகள் ஒலிக்கும், கற்பூர தீபாராதனை ஒவ்வொரு வீட்டின் முன்னே நடக்கும், பெண்கள் ஆண்கள் சேர்ந்து தெருவில் பல்லக்கின் முன் விழுந்து நமஸ்கரிப்பார்கள். ரங்கா ரங்கா என்று குரல் ஒலி எங்கும் கேட்கும்.
ஓரிருவர் பெரிய சவுக்கை வீசிக்கொண்டே பாதம் தாங்கிகள் முன்னால் தரையில் சோடெர் சொடேர் என்று வீசி அடிப்பார். துணி துவைப்பது போல் இருக்கும் அது.
ஒரு முறை ஸ்ரீரங்க வீதி உலாவில் இப்படி வீசப்பட்ட சவுக்கு அருகே இருந்த பராசர பட்டர் தோள் மீது விழுந்தது. நல்ல அடி . சவுக்கை வீசியவன் பதறிப்போனான் .
''ஐயோ சுவாமி இந்த மஹா பாவி இப்படி பண்ணிவிட்டேனே. என்னை மன்னித்துவிடுங்கள்'' என்று காலில் விழுந்தான்.
பட்டர் துளியும் அந்த சம்பவத்தை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.கோபப்படவில்லை.
''அப்பனே, நீ ஒரு தவறும் செய்யாதபோது ஏன் கலங்குகிறாய்? நீ செய்தது எம்பெருமானுக்கு கைங்கர்யம். அப்படி நீ வழக்கமாக செய்யும் கைங்கர்யத்தில் எனக்கு ஒரு தோளில் பரிசாக கிடைத்தது. மற்றொரு தோளிலும் விழவில்லையே என்று தான் வருத்தம். இந்த பாதம் தாங்கிகள் அனைவரின் தோள்களையும் பார் எப்படி தடித்து, காய்த்து போய் இருக்கிறது. ஒரு தோள் மாற்றி இன்னொரு தோள் என்று அவர்கள் எம்பெருமானை சுமக்கும் கைங்கர்யம் தந்த பரிசு அல்லவா அது. வைகுண்ட வாசல் அவர்களுக்காக எப்போதும் திறந்தே இருக்குமே'' என்கிறார்.
இந்த சம்பவத்தை நமது திருக்கோளூர் மோர் தயிர் வியாபாரம் செய்யும் பெண்பிள்ளை பார்த்தாளோ , தெரிந்து வைத்திருக்கிறாளோ என்னவோ அறியமுடியவில்லை. அதனால் தான் ராமாநுஜரிடம் தான் ஏன் இந்த எல்லோரும் ''புகும்'' ஊர் திருக்கோளூரில் வசிக்க அருகதை இல்லாதவள் என்று விளக்கும்போது 80வது உதாரணமாக இந்த சவுக்கடி சம்பவத்தை நினைவுகூர்ந்து நான் என்ன பராசர பட்டர் போல் ஒரு தோளில் சவுக்கடி விழுந்தும் இதோ இன்னொரு தோள்'' என்று சந்தோஷமாக மற்றொரு தோளைக் காட்டிக்கொண்டு வந்தவளா? எப்போது எந்த கைங்கர்யம் செய்திருக்கிறேன் இந்த புண்ய பூமியில் வாழ்வதற்கு? என்கிறாள்.
அன்பர்களே, அடுத்த பதிவு 81வது உதாரணத்தோடு நாம் திருக்கோளூர் பெண்பிள்ளையிடமிருந்து விடை பெறுகிறோம். இத்தனை நாட்கள் அன்றாடம் ஒரு பிரதியாக வந்தவள் இனி புத்தகமாக வரும் கைங்கர்யத்தில் பங்கு பெற விரும்புவோர்கள் உத்தேசமாக ஒரு பிரதிக்கு நூறு ரூபாய் RS 100் என்று (கூடவே ஆகும் 200 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவரும்போது ) எத்தனை பிரதிகள் வேண்டுமோ உங்களுக்கு அவ்வளவு பிரதிகளுக்கு பணம் செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு, நூல் நிலையங்களுக்கு, படிக்க விரும்புவோர்க்கு இலவசமாக கொடுங்கள். நாங்கள் அப்படி தான் செயகிறோம். புத்தகம் அச்சேறி வெளிவந்தவுடன் தேவைப்பட்ட புத்தகங்கள் உங்களை அடையும். ஆயிரம் பிரதிகள் அச்சிட எண்ணம் கொண்டிருக்கிறேன். புத்தகத்துக்கு விலை கிடையாது. விற்பனைக்கு எங்கும் கிடைக்காது. ஆயிரம் பிரதிகளும் முன் பதிவு செய்தவர்களுக்கு எத்தனை பிரதி தேவையோ அத்தனை பிரதிகள் விநியோகம் செய்யப்படும். நன்கொடை அளிப்பவர்கள் வங்கியில் செலுத்திவிட்டு 9840279080ல் எனக்கு விவரம் விலாசத்தோடு அனுப்பவும். குறித்து வைத்துக் கொள்கிறேன். நன்கொடைக்கு ரசீது உண்டு. வருமானவரி விலக்கும் 80G பிரிவில் உண்டு. இப்படி கிடைக்கும் நன்கொடை அடுத்த புத்த வெளியீட்டுக்கு உதவும். Bank Account : SREE KRISHNARPANAM SEVA TRUST, CURRENT ACCT NO.510909010114902 , CITY UNION BANK, NANGANALLUR BRANCH. IFSCODE CIUB0000104
No comments:
Post a Comment