Friday, July 24, 2020

KRISHNA'S FLUTE



                     
   குழலின்  தத்துவம்   J K  SIVAN   

நான்  எது எழுதினாலும்  அதில் கண்ணனோ, அவன் குழலோ இடம் பெறாமல் இருந்ததில்லை. எங்கோ எப்படியோ அவை இடம் பெற்றுவிடுகிறது.  அது எனக்கு அவன் தந்த அனுக்கிரஹம் என்று எடுத்துக் கொள்கிறேன். 

கிருஷ்ணன்   யமுனையில்   ஆயர்பாடி  சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தான்.  கண்ணன் விளையாடி பொழுது போக்கவா அவதாரம் எடுத்தான். இல்லை.  அவன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக காட்சி அளித்ததன் காரணம் எதையும் அவன் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாமலேயே  கச்சிதமாக  காரியத்தை முடித்துவிடுவான்.  நாரதன் கலகத்தின் பின்னால் ஏதேனும் ஒரு நன்மை இருக்கும். அதுபோல் கிருஷ்ணனின்  சிறு செயல்களிலும்  ஒரு தத்துவம் ஒளிந்து கொண்டிருக்கும். 

இதோ யமுனைக்கரையில்  ஒரு கூட்டம்.   யமுனையில் குதித்து  கண்ணன்  தனது நண்பர்களோடு நீந்தி விளையாடுகிறான்.    கரையில்    அவனுடைய   வஸ்திரங்கள்,   புல்லாங்குழல்,  அவன்அணியும்  மணி மாலைகள்   அவன்  நதியிலிருந்து அவன் வர காத்திருந்தபோது  தான் இது  நிகழ்ந்தது.

“நம்  அனைவரிலும் யார்  விலையுயர்ந்தவர்கள்,   யாருக்கு  மதிப்பு  ஜாஸ்தி?”  இந்த கேள்வியை எழுப்பியது  விடை தெரிந்த அவனுடைய  பீதாம்பரம்.    தான்  விலை யுயர்ந்தவன்  தனக்கே மதிப்பு  அதிகம்  என்ற   கர்வம்  அதன்  கேள்வியிலேயே  தெரிந்தது. 

 இதைக் கேட்ட  அவனது நவரத்ன மணிமாலை சும்மா இருக்குமா?  “ ஏன் உனக்கு தெரியாதா பீதாம்பரமே,  என்னை  ஆயர்பாடி  கோபியர்கள் எங்கிருந்தெல்லாமோ  சேகரித்து  கோர்த்து கிருஷ்ணனுக்காக செய்தது. ஆகவே  உன்னைப்போல  எளிதில் என்னை  மதிப்பிட முடியாது. எனக்கு  என்ன  விலை  என்பதே  எவருக்கும் தெரியாது....”

புல்லாங்குழல்  பேசாமலேயே  இருந்தது.   இரண்டின் பார்வையும்  அதன் மேல் சென்றது. வம்புக்கு
புல்லாங்குழலை இழுக்க தயாரானது.
“இந்த  மூங்கில்  குழாய்க்கு  என்ன மதிப்பு போடலாம்?” என்று  கண்ணனின்  வஸ்திரம் மணிமாலையை  கேட்டது.

“எதாவது இருந்தால்  தானே  போடுவதற்கு”  என்று  அது பதிலளிக்க   இரண்டும்  கேலியாக  சிரித்தன.

அருகில்  மரத்தடியில்   ஒரு  முனிவர்  தவம் செய்து கொண்டிருந்தவருக்கு  இந்த  சம்பாஷணை காதில் விழுந்தது.  அவர் அங்கிருந்தே  வஸ்திரம், மணிமாலை ரெண்டையும் நோக்கி  பேசினார்:

''மதிப்பு  பற்றி பேசும்  மதியிலிகளே  இதை கேளுங்கள்:

நீங்கள்  நினைப்பது போல்  இந்த  மூங்கில் குழாயான  கண்ணனின் புல்லாங்குழல்  அற்பமானதல்ல.
கண்ணன் குழல்  இசைக்காத போதும்,மற்ற  பிள்ளைகளோடு  விளையாடும்போதும்,  ஆவினங்களிடம்  கோபியர்களுடனும் அவன்  சல்லாபிக்கும்போதும்  அவன்   இடுப்பில்  அது  ஏன்  எப்போதும்  அவனை விட்டுப் பிரியாமல் 
குடிகொண்டிருக்கிறது ?  யோசித்தீர்களா? 

 அவன்  அதை ஏன்  தனக்கு  பிடித்த  பொருளாக உபயோகிக்கிறான் என்றாவது உங்களுக்கு  தெரியுமா?”

''அவன்  கையிலிருக்கும்  இந்த  குழல்  தான்  உலகில் அனைவரும்.   இந்த குழலில்  எட்டு  துளைகள் இருக்கிறதே,  அதுவே  நம் 8  உறுப்புகள் -  கண்கள், காதுகள்  மூக்கு,  நாக்கு, சருமம், புத்தி, மனம், அஹங்காரம் ( இது தான் நான்  மற்றவனை காட்டிலும் வேறானவன் என்று  நினைக்க வைக்கிறது) 

 கிருஷ்ணன் வாசிக்காதபோது  வெறும்  காற்று   தான்  உள்ளே  நுழைகிறது.    அது குழலிலிருந்து
தானாக  வெளியேறினால்  ஏதோ ஒரு சப்தம் தான் வரும்  இசை வராது.  மூங்கில் காடுகளில் சுநாதமா வெளிவருகிறது ? 

 நம்மை  கண்ணனுக்கு  அர்ப்பணம் செய்து  அவனே  நமது  வழிகாட்டி  என  உணர்ந்தால்  நம்மில்  அபூர்வ நாதங்கள்  தோன்றும். அதுவே  அவன்  வாசிக்கும்  இசை.  நாம்  அவன் மூலம், இயங்கினால்  நம்முடைய, கோபம், தாபம், நேர்மையின்மை, வெறுப்பு, அசூயை, எல்லாம்  காலியாகி, அவன்  நம்மை  உபயோகித்து இசைக்கும்  “தெய்வீகம்”  நமது  வாழ்க்கை ஆகிறது.   இதுவே புல்லாங்குழல் தத்துவம்.   

மஹா  பெரிய ஞானிகளும் முனிவர்களும்  ரிஷிகளும்  இத்தகைய  புல்லாங்குழல்கள்.  அவர்கள்  மூலமே   நாம் ஞானம் பெறுகிறோம்.  மேன்மையுருகிறோம். பரமானந்தம்  பெறுகிறோம்.  

இதைகேட்ட  புல்லாங்குழல் கர்வத்தோடு  சிரிக்கவில்லை.  அப்போதும்  அமைதியாக கண்ணனின்  வரவுக்காக  காத்திருந்தது.

இனியாவது  நாமும்   நம்மை  அவனது  புல்லாங்குழலாக மாற்றிக்  கொள்ளமுடியும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...