Thursday, July 2, 2020

TAMIL POETS



                 
    இறவா வரம் பெற்ற  ஒரு பாடல்   J K   SIVAN  

அவர் ஒரு கவிராயர்.   சிறந்த    ராம பக்தர்.   தமிழில் அற்புதமாக  எளிமையாக  கவிகள், நாடகங்களாக  தொகுத்து அளிக்கும் தனித்திறமை வாய்ந்தவர்.     


வெள்ளைக்கார,  ஹிந்துஸ்தானி,  வடமொழி,  மற்ற மொழி கவிஞர்கள்,  பலர் நமக்கு  ஞாபகம் வரும் அளவுக்கு,   பாரதியைத்  தவிர  மற்ற பக்தி கீர்த்தனங்களை பாடிய தமிழ் கவிஞர்கள் நினைவுக்கு ஏனோ வருவதில்லை.

தமிழ்  தெரிந்த  உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்.   உங்களில் எத்தனை பேருக்கு அருணாசலக் கவிராயரை  (1711-1779) தெரியும் ?   அருணாசலமா?  யார் திருவண்ணாமலையில் இருந்த ரமணரா? என்று ரமணரைப்பற்றியும் தெரியாதவர் குறுக்கு  கேள்வி வேறு கேட்பார். உடுமலை நாராயணகவியா, அண்ணாமலை ரெட்டியார் என்பவரா? என்றெல்லாம் பதில் கேள்விகள் வேறு வரும்.

என் தாய்வழி முன்னோர்கள் வாழ்ந்ததே இந்த அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை பாடியும் நாடகம் நடித்தும் தான். நான் அவரைப்பற்றி சொல்ல கடன், அல்ல, கடமைப் பட்டிருக்கிறேன்.

கவிராயர்   பிறந்தது சீர்காழியில் 1711 ல். தில்லையாடி என்னும் ஊரில். கார்காத்த வேளாளர் குலம். இளமையிலேயே  கவிபாடும் புலமையும், இசையுடன் பாடும் ஆற்றலும் இருந்ததால் தருமபுர ஆதீனத் தலைவர் ஆதரவு கிடைத்தது. சீர்காழியில் குடும்பம் வசதியாக தங்க ஆதீனம் உதவியது.

கர்நாடக இசையில் அற்புத பாட்டுகள் மெட்டமைத்தவர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் காலத்துக்கும் முந்தியவர். முதலில் இருந்தவர் முத்து தாண்டவர். (1525-1625) . அப்புறமாகதான் அருணாச்சலாகவிராயர் மற்றும் அவரது சம காலத்தவரான மாரிமுத்துப் பிள்ளை (1717-1787). அருமையான முத்தான தமிழ் கீர்த்தனைகள் படைத்தவர்கள் இந்த மூவரும். இன்றும் பாடப்பட்டு வருகிறது.

இராம நாடகக் கீர்த்தனை (சங்கீத ராமாயணம்) 258 இசைப்பாடல்களை நாடக வடிவில் கொண்டது. இந்த கீர்த்தனைகளை தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பல பிரசித்த ராகங்களில் அமைத்தார். மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடுகிறார்கள்.

அருணாசல கவிராயர்  இதிகாச கதையை கீர்த்தனைமூலமாக மக்களிடம் பரப்பிய முதல் கவிஞர் எனலாம். 'இராமநாடகக் கீர்த்தனை' திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.  அது இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.

"இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றியது போல அங்கேயே கொண்டு சென்று அரங்கேற்றினார்.

"ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கநாதா" எனும் மோகன ராக கீர்த்தனை எண்ணற்ற பரத நாட்டியக் கலைஞர்களால் அபிநயம் பிடித்து பிரபலமானது. இன்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது. எத்தனையோ சங்கீத வித்துவான்கள் பாடியது.  

ராமன்  யார்.  நாராயணன் , அவனே ஸ்ரீ ரங்கம் ரங்கநாதனாக  பாம்பணையில் பள்ளி கொண்டவன்.  அவனை நேரில் ஸ்ரீரங்கத்தில் பார்த்த  கவிராயர்  என்ன   செய்தார்?  நம்மைப்  போல்  கடிகாரத்தைப்    பார்த்துக்கொண்டே  வரிசையில் உள்ளே சென்று கன்னத்தில்  பட்  பட்   என்று  போட்டுக்   கொண்டு கண்கள் எங்கேனும் பிரசாதம் கிடைக்குமா  என்று தேட  சிற்பக்   கலைகளை ரசிக்க தெரியாமல் வெளியே வருவோம்.  

கவிராயர்  அப்படியல்ல.  ராமா  நீ  தான் கிருஷ்ணனும்  கூட.  

எதற்காக  இப்படி காலை  நீட்டி  அதிகமாக வேலை செய்தவன் களைத்து இளைப்பாறுவது போல்  ஜம்மென்று படுத்துவிட்டாய்?  ஒருவேளை நீ செய்த காரியங்களால் களைத்து விட்டாயோ, இளைத்து விட்டாயோ என்று வரிசையாக  இதனாலோ அதனாலோ என்று  அநேக சம்பவங்களை  நினைவு கூர்ந்து கேட்கிறார்.  

ஏனய்யா  ரங்கநாதரே  நீர்  இப்படி நெடுஞ்சாண்கிடையாக  படுக்க சரியான இடத்தை  ரெண்டு  ஆறுகளுக்கு நடுவே   குளுகுளுவென்று  அமைதியான இடமாக  கண்டுபிடித்து  காலை நீட்டி படுத்துவிட்டீர்.?  

ஓஹோ   அந்த விஸ்வாமித்ரன்  உம்மை நடத்தி காட்டில் யாக சாலைக்கு அழைத்துக்கொண்டுபோன  களைப்பா?
யாகங்களுக்கு இடையூறு செய்த அரக்கி தாடகை மார்பில்  அம்பு தொடுத்தற்காக உனக்கு வருத்தத்திலா?
யாராலும்  எடுத்து தூக்க கூட முடியாத சிவ தனுசை  எடுத்து உடைத்த களைப்பினாலா?
வழியில் எதிர்த்த பரசுராமன் கர்வத்தை   அடக்கி அவன் வில்லை  உடைத்ததாலா?
சீதையோடு கானகமெல்லாம் அலைந்ததால் இளைத்துபோய் விட்டாயோ?
தூய இதயம் கொண்ட குகனோடு  படகில் அமர்ந்து கங்கையைக் கடந்த களைப்பா உனக்கு?
சித்ர கூட மலைமீது நடந்ததால்  வந்த  களைப்பா உனக்கு ?  ஒருவேளை  
வேகமாக உனக்கு பாய்ச்சல் காட்டி ஓடிய  மாரீச  மாயமானை துரத்தக்கொண்டு  ஓடினாயே அதற்காக இப்போது இளைப்பாறுகிறாயா?
சீதையை காணோம் என்று   மூலை முடுக்கெல்லாம் ஓடி தேடி  அலுத்து  களைத்துவிட்டாயோ?
சுக்ரீவன் நம்பிக்கை கொள்ள  இழு மராமரங்களை  ஒரே அம்பால் துளைத்தாயே  அந்த களைப்பினாலா?
சமுத்திரத்தை அடக்க ஒரே அம்பினால் சமுத்திரராஜன் சொன்ன லட்சியத்தை அழித்தாயே அந்த செயல் தந்த களைப்பா?
இலங்கை  எனும்  மா நகரத்தை  அழித்ததால்  மனதில் ஏற்பட்ட வருத்தத்தாலா?
வானம் சேனைகளோடு  இலங்கை சென்று ராவணன் முதலாகிய அனைத்து ராக்ஷஸர்களையும்  வதம் செய்தாயே  அந்த  வீராவேச செயல் தந்த  களைப்பினாலா?
இதோடு விடவில்லை கவிராயர் 
கிருஷ்ணனாக  அவன் செய்த லீலைகளையும் ஒன்று விடாமல் சொல்லி அவை தந்த களைப்பினால் இப்படி சௌகர்யமாக காலை நீட்டி சுகமாக  படுத்துக்கொண்டு விட்டாயா  என்று  ரங்கநாதனை கேட்கிறார். 
கடைசியில்   போதும் நீர் படுத்தது. கொஞ்சம்   எழுந்து  உட்காருங்கள்,  வாருங்கள் என்னை பாருங்கள், என்னிடம் கருணை காட்டி வரம் தாருங்கள்,  மஹாலக்ஷ்மியோடு சேர்ந்து என்னை ரக்ஷியுங்கள்  என்று முடிக்கிறார். 

எவ்வளவு எளிதான அற்புத  தொகுப்பு இந்த கவிஞரின் பாடல் பாருங்கள்:  பாடுங்கள்.  
 
''ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
 பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே
வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே
கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்
மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி
தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி
 இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
 இலங்கை என்னும் காவல் மாநகரை
 இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(மதுரையிலே வரும் களையோ?
முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ?
 கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின்
 உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை
இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி
மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி
 தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?
படி தனிலே மெத்தவும் நானே உம்மை
பரம் எனவே அடுத்தேனே
அடிமை கொள்வீர் என்னைத்தானே
 செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!
ததம் உரைந்த கரும் பாறை சாபமது
தடுத்து ரக்ஷித்தீரே!
விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு
 கண் விடுத்து ரக்ஷித்தீரே!
கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத்
துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!
மடுவில் ஆனை முன் ஓடி முதலையை
மடித்து ரக்ஷித்தீரே
அதுபோல்
வாரும் க்ருபை கண்ணாலே
 பாரும் மனக்கவலை தீரும்
நினைத்த வரம் தாரும்
தாரும் என் சாமி
வக்ஷமேவும் மஹாலஷ்மியுடன்
 பெரும் பக்ஷமாக என்னை
ரஷிக்க எழுந்திரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...