Saturday, July 25, 2020

ADHI KETHU



செம்மங்குடி J K SIVAN ஆதிகேது ஸ்தலம்




ஏன் இப்படி ?

கண்ணில் ரத்தம் வழிய என்று சொல்வோமே. அதை அனுபவித்ததுண் டா என்று கேட்டால் அதை முற்றிலும் அனுபவித்தேன் என்று நான் தைரியமாக சொல்ல ஒரு சந்தர்ப்பம் 2018 செப்டம்பர் 4ம் தேதி அன்று சீர்காழி அருகே ஒரு கிராமத்தில் கிடைத்தது. சிறிய கிராமம். ஒன்று இரண்டு பஸ் ஓடுகிறது. நிறைய மரம் அடர்ந்த குறுகிய கிராம சாலைகள். ஒரு பெரிய சக்தி வாய்ந்த பிடாரி கோவில். அது தவிர இன்னொரு அம்மன் கோவிலும் இருக்கிறது. அதன் அருகே ஒரு பஞ்சாயத்து நிர்வாக பள்ளிக்கூடம்.
பிரவுன் கலர் பாவாடை, அரை நிக்கர், காவி கலர் மேல் சட்டை அணிந்த சிறுமிகள், சிறுவர்கள் பையை முதுகில் சுமந்தவாறு தெரு வெல்லாம் விளையாடிக்கொண்டு காலை எட்டரை மணிக்கே காணப் படுகிறார்கள். நிறைய குழந்தைகள் வெறும் காலோடு நடக்கின்றனர்.
செம்மங்குடி என்று அந்த அந்த ஊர் பெயர் அறிந்ததும் ஒரு பிரபல கர்நாடக வித்துவான் சம்பந்தப்பட்ட ஊரோ என்று எதிர்பார்த்த பின் ஏமாந்தேன் . ஏனென்றால் அந்த செம்மங்குடி வேறு. அது கும்பகோணம் பக்கம் இருக்கும் வித்துவான் பிறந்த ஊர்.
இந்த செம்மங்குடி சீர்காழி அருகே நான்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வயல்களுக்கு இடையே ஒளி ந்து
கொண்டிருக்கிற அமைதியான ஊர்.
இந்த ஊருக்கு மிகப்பெரிய சொத்து நாகநாத சுவாமி ஆலயம். கேது பகவான் க்ஷேத்ரம். கேது யார்? திருப்பாற் கடலில் அம்ருதம் உண்டானபோது தேவர்கள் அதை மஹாவிஷ்ணுவிடமிருந்து பெற்றபோது ஒரு ராக்ஷஸன் தேவர்கள் போல உருவம் கொண்டு அதை உட்கொள்வதை சூரிய சந்திரர்கள் கண்டுபிடித்து , அம்ருதம் உட்கொண்ட அந்த ராக்ஷஸன் சிவனால் தலை துண்டிக்கப்பட்டு அவன் தலை விழுந்த இடத்தில் ஒரு பாம்பின் உடலோடு, உடல் விழுந்த இடத்தில் பாம்பின் தலையோடும் ராகு கேதுவாகிறான். தன்னை காட்டிக் கொடுத்த சந்திரன் சூரியனை அவன் பழிவாங்குவது தான் கிரஹணம் என்று ஐதீகம். சயன்ஸ் வேறு ஏதாவது சொல்வதை பற்றி அக்கறை இல்லை.
பாம்பின் தலையோடு மனித உடலோடு இருப்பது கேது.
மனித தலையோடு பாம்பின் உடல் கொண்டது ராகு. செம்மங்குடியில் கீரநல்லூர் சாலையில் இந்த கேது ஆலயம் உள்ளது. செம்மங்குடியில் மனித உடல் விழுந்து பாம்பின் தலையோடு கேது உருவான இடம் ஆதி கேதுஸ்தலம். எந்த நவகிரஹ க்ஷேத்ரமானாலும் அது ஒரு சிவன் ஆலயமாகத் தான் இருக்கும். செம்மங்குடியில் சிவன் பெயர் நாகநாத சுவாமி. அம்பாள் கற்பூரவல்லி . புராதன ஆலயம். செம் பாம்பு குடி தான் செம்மங்குடி ஆயிற்று என்கிறார்கள். சீர்காழியில் சிரபுரம் என்ற பகுதியில், ராகுஸ்தலமும் உள்ளது. அங்கு அம்பாள் பெயர் பொன் நாகவள்ளி சிவன் நாகேஸ்வரமுடையார். அந்த கோவிலை பற்றி அப்புறம் எழுதுகிறேன். கண்ணில் ரத்தம் விஷயம் இனி துவங்குகிறது. செம்மங்குடி நாகநாதசுவாமி கோவிலுக்கு உள்ளூர்க் காரர்களே வருவதில்லை என்று நம்பகமான தகவல் அந்த கோவிலை பராமரிக்கும் ஒரு பால்காரர் வீட்டு பெண்கள் கூறியபோது வருத்தமாக இருந்தது. கோவில்களை புறக்கணிப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம்.
அந்த பாமர இன்னசன்ட் பெண்கள் சொன்னது பொய்யல்ல என்பதை அந்த கோவிலை சுற்றி பிரகாரத்தில் உள்ள பிள்ளையார் சந்நிதி, தக்ஷிணாமூர்த்தி கோஷ்டம், நாகநாதர் சிவன். கற்பூரவல்லி அம்பாள் சந்நிதிகளுக்கு செல்ல முடியாதபடி பாதங்களை துளையாக்கிய படர்ந்த நெருஞ்சி முள் குடும்பம் புரிய வைத்தது . உழவாரப்பணியார்களே இந்தப்பக்கம் கொஞ்சம் வாருங்களேன். அடிக்கடி பக்தர்கள் வந்து நடந்தால் நெருஞ்சிமுள் எங்கிருந்து வரும்? எத்தனையோ உழவாரப்பணி அன்பர்கள் ஊர் ஊராக சென்று சேவை செயகிறவர்கள் இந்த ஆலயத்துக்கும் அவசியம் செல்லவேண்டும். பிரகாரத்தில் நடக்க வழி ஏற்படவேண்டும். நான் அங்கு தென்பட்ட ஒரு சில வயதானவர்களை கெஞ்சி கேட்டுக் கொண்டேன். அந்த ஆலயத்திற்கு அடிக்கடி பக்தர்கள் வரும்படியாக விளக்கேற்றி குழந்தைகளை வைத்து தேவாரம் திருவாசகம், திருவருட்பா மாலையில் சொல்லி தாருங்கள், சுண்டல் அவல் பழங்கள் போன்ற தின்பண்டங்களை நைவேத்தியம் செயது பிரசாதமாக கொடுங்கள் என்றேன். செவ்வாய்கிழமை என்பதால் நாங்களே விளக்கேற்றி வழிபட்டோம். நாகநாதர், அம்பாளுக்கு விளக்கு ஆரத்தி காட்டி சில அகல்விளக்குகள் ஏற்றி, ஸ்லோகங்கள் சொல்லி நிறைய அங்கே கிடைத்த புஷ்பங்களை சாற்றினோம். நாகநாதர் கற்பூரவல்லி அம்பாள் படம் இத்துடன் இணைத்துள்ளேன். அம்பாள் சந்நிதி சிறியது. குனிந்து உள்ளே தலை நீட்டி அபிஷேகம், அர்ச்சனை செய்யவேண்டும். ஒரு மின்சார பல்பு தொட்டாலே மின்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளை விக்கும் நிலையில் இருப்பதை அந்த ''தர்மகர்த்தா'' பெண் சொல்லியபோது அதிர்ச்சியாக இருந்தது. இதை உடனே யாராவது கவனிக்க கூடாதா? கண்ணில் தென்பட்ட பெரியவர் ஒருவரிடம் விண்ணப்பித்தேன். அவ்வளவு பெரிய கிராமத்தில் ஒரு மின்சார தொழிலாளர் இல்லாமலா போய்விடுவார்? சீர்காழி மிகப்பெரிய பிரபல நகரம் அங்கிருந்து நான்கு ஐந்து கி.மீ. தூரத்தில் தானே இருக்கிறது. அங்கிருந்து வருவது கூடவா கடினம்? யாரோ ஒரு அர்ச்சகர் வருவதாக சொன்னார்கள் அந்த குடும்பத்தார். சாவி அந்த பால்காரர் வீட்டில் இருந்ததால் எங்களைக் கண்டதும் அந்த பெண் கதவை திறந்து விட்டாள். அந்த கோவிலின் தன்னாக்கத்தொண்டு 'தர்மகர்த்தாவாக'' நான் அவளை வணங்கினேன். புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அவள் உதவாவிட்டால் ஆதி கேது க்ஷேத்ரம் தரிசிக்கும் பாக்யம் எனக்கு கிட்டியிருக்காது. மறுபடியும் நான் எப்போது அங்கே செல்வேனோ? ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் பாக்யம் கிடைத்தால்! சீர்காழி பக்கம் செல்பவர்கள் அவசியம் செம்மங்குடி சென்று கேது பகவானை தரிசித்து வாருங்கள். எல்லோருக் கும் சொல்லுங்கள். இன்னொரு அற்புதமான கோவிலை வெகு சீக்கிரம் மற்றவர் களுக்கு இழக்கவேண்டாம் என்று நெஞ்சில் ஒரு அச்சம் எழுகிறது..
(இது நான் இந்த கோவிலை பார்த்து விட்டு ரெண்டு வருஷங்களுக்கு முன்பு எழுதியது. யாராவது இப்போது சென்று பார்த்துவிட்டு, அருகே சீர்காழியில் இருப்பவர்களுக்கு முடிந்தால் போய் பார்த்து விட்டு தற்போதைய நிலைமை பற்றி சொல்வீர்களா?)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...