பலே ஜாதகன்- ராசி பலன் J K SIVAN
ஒரு சில வீடுகளில் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். குழந்தை இல்லையே என்று. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று தெரியும். குழந்தை பிறந்ததும் சொல் வந்து கொல் கிறேன் என்று ராஜா ஆணை இட்டு, அந்த அப்பா அம்மா ஏழு குழந்தைகளை பெற்ற அடுத்த கணமே அவர்கள் கண்ணெழுதிரே அந்த குழந்தைகள் கொல்லப்படுவதை பார்த்தவர்கள். இதை எப்படி எழுத முடியும்? அந்த துயரம், துன்பம் நிர்கதி எழுத்தில் பிடிபடுமா? இந்த நிலையில் தான் எட்டாவது குழந்தையும் பிறந்து நல்ல வேளை உயிர் பிழைத்தது. ஏனென்றால் அது உலகத்தின் அனைத்து உயிர்களையும் பிழைக்க வைப்பது ஆயிற்றே.
எந்த தாயாவது குழந்தையை பிறந்ததும் இழக்க சம்மதிப்பாளா?அப்புறம் அது எங்கே சென்றது, வளர்ந்தது, என்ன ஆயிற்று என்று அறியமுடியாத நிலை அவளுக்கு..... அந்த குழந்தையை பற்றி தான் இப்போது சொல்லப்போகிறேன்.
குழந்தை பிறந்த சேதி கேட்டு எல்லா உறவினர்களும் நண்பர்களும் பரிசோடு வருவார்களே. கொஞ்சுவார்களே.......அந்த குழந்தை பிறந்தபோது, அதை கொஞ்ச யாரும் வரவில்லை. இரவோடு இரவாக அதை தாயிடமிருந்து பிரித்தாகிவிட்டது. பிறந்ததே வெளியே தெரியாத போது பிறந்த தை யார் கொண்டாட முடியும்?. வளர்ந்ததும் எங்கோ! . அதற்கு ஜாதகம் பார்த்தார் களா? நல்ல நாள் பார்த்து பேர் வைத்தார்களா? கன்னங்கரேல் என்று இருக்கும் அந்த கருப்பழகன் ஊரில் யாராலும் கிருஷ்ணன் என்றே அழைக்கபட்டான். கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்று அர்த்தம்.
அதெல்லாம் சரி, இதற்காக அவனுக்கு ஜாதகம் என்று ஒன்று இல்லாமலா போய் விடும்?.
ஒருவன் பிறந்த நாள், நேரம் எல்லாம் சரியாக தெரிந்ததால் அதை வைத்து கொண்டு பல ஜோசியர்கள் ஜாதகம் கணித்து குணாதிசயம், எதிர்காலம் எல்லாம் சொல்கிறார்களே. நாம் இலவசமாகவும், காசு கொடுத்தான் ஜாதகம் பெருகிறோமே .
அந்த பயல் ஜாதகத்தை அப்போது யாரும் கண்டிக்கவில்லை. பல ஆயிரம் வருஷம் கழித்து எத்தனையோ ஜோசியர்கள் அவன் ஜாதகத்தை கணித்து, பலன் சொல்கிறார்கள்.... ஆச்சர்யமாக இருக்கிறது.
அவர்கள் கணிப்பு அந்த கருப்பனின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறதே. அவன் ஏன் மற்றவர்களை விட வித்யாசமாக இருந்தான்??அவன் ஏன் ஒரு காந்த சக்தியாக இருந்தான்? கண்ணற்ற சூர்தாசை கேட்டால் அவர் கவிதை ரூபமாகவே அவன் ஜாதகத்தை பாடிவிடுகிறார்!அவர் அப்படி என்ன சொன்னார்? அவன் அதி புத்திசாலி, பேரழகன், பெரிய செல்வந்தன், மாணிக்கம், மரகதம், வைரங்கள் ஜொலிக்கும் ஆபரணதாரி.... 16000 பெண்கள் அவனை நம்பி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி பெரிய மாளிகைகளாம் .சொன்னது எல்லாமே அவன் செல்வத்தின் அளவில் துக்குணியூண்டு என்றால் பார்த்துகொள்ளுங்கள் . நவ கிரஹங்களும் அவன் சொற்படியே கேட்கும். அவன் ஒரு தியாக செம்மல். அவன் ஒரு தனிப்பிறவி. இறைவனின் மானுடஉரு என்று சுருக்கமாக சொல்வது தான் சரி.
அன்பை தருவதிலும், தானே அதுவாகவும் ஆனவன் அவன். ஒரு பிரபல ஜோசியர் தொடையைத் தட்டி உரக்க சொல்கிறாரே காதில் விழுகிறதா?
''அவன் ரிஷப ராசிக் காரன்யா!! . லக்னாதிபதி சுக்ரன்! கேக்கணுமா?” ரோஹிணி நக்ஷத்ரம் வேறே! . சந்திரன், சனி, அங்காரகன் எல்லாம் உச்சத்திலே இருக்கா. அவா அவா கிரஹ த்திலே சூரியன், குரு, புதன் எல்லாரும் சௌகர்யமா உக்காந்திருக்கா. ரிஷப ராசியிலே லக்னத்தில் சந்திரன் அக்கடான்னு இருந்தா ஜாதகன், அழகனா, பேரும் புகழுமா ஆள் மயக்கியா, செல்வத்திலே புரளாம என்ன பண்ணுவான்?
ஒண்ணாம் மடத்திலே கேது ங்கிறதாலே கொஞ்சம் அதிகமாவே கேளிக்கை உண்டு. அபவா தங்களும் கூடதான் அவன் மேலே இருக்கும் !.
3ம் வீட்டிலே செவ்வாய் நீச்ச பங்கனா இருக்கான் என்கிறதாலே ஆசாமி யுத்தத்திலே படு
தைர்யசாலி! ரோகிணி அழகி, சந்திரனை ஆக்ரமித்தவள். எனவே சந்திரனும் ரோஹிணி
யும் சேர்ந்த ஜாதகன் அழகனாக ஆள் மயக்கியாக இருந்ததில் என்ன அதிசயம்?. ரிஷபத்துக்கு பசு நேசம் உண்டே!! இந்த ராசிக்காரன் பசுக்களிடையே பிரபலமானவன் இதனால் தானோ??
6ல் புதன், 10ல் சனி பிரதானமாக இருந்து ஜாதகன் தர்ம ஞாயத்தில் ஸ்ட்ராங்காக இருக்க உதவியிருக்கிறான். அங்காரகன் ராஹுவுடன் சேர்க்கையால் ஜாதகன் ராஜதந்திரி.
இதை கேளுய்யா!! ரெண்டுலே உடைமையானவன் புதன்; படு ஜோரா 5ல் இருக்கான். அதனா லே வாய்லேருந்து வர வார்த்தை எல்லாம் முத்துன்னா முத்து தான். பேச்சிலே மயங்காதவா புத்திசாலித்தனத்தால் அடிமையாகாதவா கிடையாது. இதை பாரு. சூரியன் தன்னுடைய வீட்டிலே குருவோட ஸ்வஸ்தமா இருக்கான். அதனாலே என்னவா? ஹு ம்ம் .. எதிரிகள் பொடிப் பொடி!! ஆசாமியை அசைக்க முடியாது.
இது என்ன வேடிக்கை. 7ம் வீட்டுக்கு சொந்தக்காரன் அங்காரகனோடு களத்ர காரகன்
சுக்ரன் சேர்ந்துட்டதாலே மனைவிகள் கொஞ்சம் ஜாஸ்தி தான்.அதனாலே என்ன நாமா சோறு போடப் போறோம்? இல்லே சண்டை போடப்போறோம். பரவாயில்லை!! ஏன்னா, ராகு பக்கத்திலேயே இருக்கான். தெய்வீக உறவு தான்.
9லே, அதான், சனியோட இடத்திலே, கேது இருக்கான். யோககாரகனா சனி 7ல் இருந்துண்டு வெற்றி மேலே வெற்றியா தரான். யுத்தத்திலே ஜாதகனை அடிச்சிக்க ஆளு கிடையாது. புரியறதா??. சனி தான் ஆயுள் காரகன், வர்கோத்தமன் ஆச்சே. ஆசாமிக்கு பூரண வயசு
கிருஷ்ணன் தான் 125 வயசு இருந்தானே.
எல்லாத்துக்கும் காரணமான தெய்வத்தின் ஜாதகத்தில் எல்லாமே சரியாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று தான் எனக்கு தோன்றுகிறது.