Tuesday, November 1, 2022

SIMPLE GEETHA

 



ஒரு சிம்பிள்  கீதை  --  நங்கநல்லூர் J K  SIVAN 


ரகுநாத செட்டியார்  பற்றி ரெண்டு வார்த்தை.

 சொக்கனாங்குப்பத்தில் மொத்தம்  15 வீடுகள் தான்.  ஆறு வீடு  செட்டியார் பரம்பரை சொத்து.  மூணு இடிஞ்சி விழுந்து யாரும் இல்லாத  பாழ் மனை.  12 வீடுகளில்    வ்ருத்தகிரீஸ்வரர்  சிவன்  கோவில் அர்ச்சகர் ராஜகோபாலய்யர் குடும்பம்,  எண்ணெய்  செக்கு  ஆட்டுகிற  சோமன் செட்டியார் வீடு.  வாழைத்தோப்பு  நாயக்கர் வீடு.  கும்பகோணத்து  ஆச்சாரி கோபாலு  வீடு. இன்னும் சிலர். கிராம தலையாரி,   கர்ணம் ,  எல்லாம்  நிலம் வீடு  வைத்திருந்தார்கள் .  துணி வியாபாரி   குடும்பம் ஒன்று மூன்று வீடுகளை பிடித்து  தறி நெய்பவர்கள் .  மற்றவர்கள்  வெளியூர்  சென்று வாழ்ந்து வருஷத்தில் ஒரு தடவை ரெண்டு தடவை மட்டும்  வருபவர்கள்.

ரகுநாத செட்டியார்  வேதாந்தி. தென்னை மரத்தோடு பேசுவார்.  பாடுவார். நிறைய சித்தர் பாடல்கள்  புத்தகம் வைத்து ராகம் போட்டு  சிவன் கோவிலில் பாடுவார். அர்த்தம் சொல்வார்.   சிவ வாக்கியர்  தாயுமானவர் பட்டினத்தார் பாடல்களை கண்ணீர் விட்டு  அழுது கொண்டே  விளக்குவார். வயிற்று வலிக்கு,,  ஜுரத்துக்கு,   சிவன் கோவில் விபூதி மந்திரித்து கொடுப்பார்.

ரெண்டு நாளாக  ஊரே  அசந்து போய்விட்டது.    
எண்ணெய்  செக்கு ஆட்டும்  சோமன் ஊரில்  எல்லோரிடமும்  ''செட்டியார் ஐயா எனக்கு  சாவுக்கு அப்புறம் நாம் எப்படி இருப்போம் என்ன எல்லாம் நினைவு இருக்கும் என்று சொல்லிக்கொடுத்தார். அதை உங்களுக்கு என்னால் சொல்லத்  தெரியலியே.  நல்லா புரிஞ்சா மாதிரி இருக்குது. திருப்பி சொல்ல வரலே எனக்கு''  என்று சொல்லி திரிந்து  கொண்டிருந்தான்.

சிவன் கோவில் அர்ச்சகர்  ராஜகோபாலய்யருக்கு கொஞ்சம் சமஸ்க்ரிதம் தெரியும்.  கீதை ரொம்ப  பிடிக்கும்.  அவர்  செட்டியாரை  ஒருநாள் சாயந்திரம் கோவிலில் பார்க்கும்போது   ''இன்னிக்கு இங்கே எல்லோருக்கும் கீதை பத்தி சொல்லுங்க செட்டியார்'' என்று கேட்டுக்கொண்டார்.  

செட்டியாருக்கு கரும்பு தின்ன கூலியா வேண்டும்.. அன்று ஞாயிற்றுக்கிழமை.  பிரதோஷம்.  அடுத்த சாமஞ்சேரி  கிராம  ஜனங்கள் நிறைய வந்தார்கள்.  எல்லோரும்  செட்டியார் சொல்லும் கீதை கேட்க  அமர்ந்தார்கள்.    செட்டியார்  மூக்குப் பொடி  ஒரு சிட்டிகை  உறிஞ்சிவிட்டு, மேல் துண்டில் தும்மல் ஒன்று பெரிதாக போட்டு விட்டு  ஆரம்பித்தார்.

''கீதை  என்னா சொல்லுது?  கிருஷ்ணன் சாமி  அருச்சுனன் கிட்டே   ''டேய் , நீ எதுக்குடா  சும்மனாங்  காட்டியும் காரணமே இல்லாம  கவலைப்  படறே?  வீணா எதுக்கு  பயப்படறே?  உன்னை எவண்டா  கொல்ல முடியும்? நீ  பொறக்கவும்  இல்லை, சாகவும் இல்லை. நீ  தாண்டா  ஆத்துமா.  எது உலகத்துல நடந்தாலும் அது நல்லதுக்காகவே நடந்தது,   இப்போவும்  நடக்குது, இனிமேயும் நடக்கும். போனதைப் பத்தியும் கவலைப் படாதே, வரப்போறதைப்   பத்தியும் நீ எதுக்குடா
கவலைப்படணும்.   வரது  உன்னை கேட்டா வரப்போவுது.     உன்னாலே எதுவும் இல்லைடா. எதையும்  நீ கொண்டாரலை. எடுத்துக்கினும் போவப்போறதில்லை.  நடக்கிறது தானாவே நடக்கப்போவுது. 

நீ எதுக்கு அழுவுறே? உனக்கு என்னாடா  நஷ்டம் வந்துடுச்சி?  நீ  என்னாடா சாதிச்சுட்டே. அது கெட்டுப்போச்சு? உன்னாண்டை இருக்கிறது எங்கேருந்து கொண்டாந்தே? எல்லாமே இங்கே கிடைச்சுது தானே, இங்கே தானே அதை விட்டுட்டு போகப்போறே?  அதே மாதிரி நீ ஏன்னா கொடுக்கிறியோ  அதுவும் இங்கே கிடைச்சது தானே?. உனக்கு முன்னாலே எத்தினியோ பேர்  அனுபவிச்சது தானேடா.  

 சாமி கொடுத்தது, சாமி கிட்டேயே போவுது ன்னு இருக்க வேண்டியது தானே. நீ  எல்லார் மாதிரியும் வெறுங்கை வீசிக்கினு வந்தே, அப்படியே போகவும் போறே?  எவன் கிட்டேயோ  இருந்ததெல்லாம் நம்ம கிட்டே  வந்திருக்கிது. நம்ம கிட்டே ருந்து இன்னொருத்தனாண்டே போவப்போது. இதிலே நமக்கு என்னடா சொந்தம்.  ஆத்திலே தண்ணீ ஓடிக்கினே இருக்குது.  நாயெல்லாம் நக்கி குடிக்கிது. அம்புட்டு தானே.  உன்கிட்டே இருக்கும்போது  இது என்னுது, எனக்கு சொந்தம் னு மனப்பால் குடிக்கிறே. அது தான் தப்பு. எதுவும் உன்னுது இல்லடா கண்ணு.  இது உன்னாண்ட இருக்க சொல்ல  சந்தோஷம், ஆனந்தம்னு சொன்னா, அப்புறம் உன்னை விட்டு அது இன்னொருத்தன் கிட்டே போகும்போது நீ  துக்கமா  அழுவப்போறே. உண்மை தெரிஞ்சுக்கினு உஷாரா இருந்தா எதுக்கு சுகம் துக்கம் எல்லாம்? சொல்லு. 

நேரம் ஓடிக்கிட்டே இருக்குதே, திரும்பியா வரும்?  போனது போனது தான். எல்லாம் மாறிக்கிட்டே தாண்டா இருக்கும். அது தான் உலகம். அது அப்படி தான் இருக்கும்னு விஷயம்  தெரிஞ்சவங்க புரிஞ்சுக்குவாங்க. வாழ்க்கை ஒரு சக்கரம்னுவாங்க. கீழே இருக்கிறவன் மேலே போவான். மேலே இருக்கிறவன் கீழே விழுந்து மண்ணைக் கவ்வுவான்.  உன்னுது என்னுது, பெரிசு  சின்னது ன்னு வித்யாசமே எதிலியும்  வேணாண்டா தம்பி.  

அப்படி ஒரு எண்ணம் வந்துட்டா, எல்லாம் உன்னுது தான், எல்லாமும்  எல்லோருதுதும் தான். இந்த உடம்பு உன்னை கேட்டு வரலே,  உன்னிஷ்டப்படி போகவும் போகாது.  நம்ம  பாட்டன் பூட்டன் எல்லாம் எங்கேருந்து வந்தானோ   அங்கேயே
 கடோசிலே போய்ட்டான்.   நாமளும் அப்படித்தான் போகப்போறோம். மண்ணிலே வந்து மண்ணோடு போறோம். இதிலே  எவண்டா ஒஸ்தி  எவன் மட்டம்? 

எல்லோரும் கேளுங்கோ,  இதோ  கோவில்லே  சாமி இருக்குது, அந்த கிருஷ்ணன் சிலையும் இருக்குது, கும்பிடுடா. அது கொடுத்தது, சந்தோசமா நம்மை வச்சிருக்கு அதுக்கு ஒரு பெரிய கும்பிடு போடுடா.  சவுந்தரராஜன் பாடுவானே , ஆட்டுவித்தால்  ஆரொருவர்  ஆடாதாரே கண்ணா.''     புரிஞ்சுக்கோடா.   பாடின  அவர் வாயிலே சக்கரை போடணும்.  நாமெல்லாம் பொம்மைங்க.  எவனோ ஆட்டறான் . ஆடறோம்.  நாம நினைக்கிறது, செய்யறது,எல்லாம் அவனாலே தாண்டா.    இது புரிஞ்சிட்டா, அழுவவேண்டாம், சிரிக்கவேண்டாம், தையா தக்கான்னு குதிக்க வேண்டாம். ''

இதை தான்  கீதைலே  சொல்லிருக்குது.  
பட்டினத்தில்  பேரன் வீட்டிலே ஒரு மாசம் இருந்தேன். பக்கத்துலே ஒரு மண்டபத்திலே தினமும் ஒரு  பெரியவர்   கீதை சொல்லுவாரு. அப்படியே கேட்டுட்டு சந்தோஷமா மண்டையில் ஏத்திக்கிட்டேன். 
நிறைய  பேத்துக்கு அதெல்லாம்   சொல்லிட்டே வாறன். நீங்களும் எல்லோராண்டையும்  சொல்லுங்கப்பா. 

செட்டியார்  பேசிவிட்டு எழுந்தார்.  அர்ச்சகர் தேங்கா மூடி வாழைப்பழம் பிரசாதம் கொடுத்தார். செட்டியார் எல்லோருக்கும் விபூதி  இட்டு விட்டார்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...