Thursday, November 17, 2022

AN INTERVIEW


 ஒரு இன்டர்வ்யூ.... #நங்கநல்லூர்_J_K_SIVAN

ராமதுரை அமேரிக்கா ஐரோப்பா எல்லாம் போய் பேருக்கு பின்னாலே A to Z பட்டம் எல்லாம் போட்டுக் கொண்டு கிராமத்துக்கு ஒரு தரம் வந்தான். சின்ன ஊர். ஸ்ரீனிவாச அய்யங்கார் பரம்பரை மிராசு. நிறைய நிலம். பெரிய ஐந்து கட்டு வீடு. கொல்லையில் ஏகப்பட்ட பழம் தரும் மரங்கள், பூச்செடிகள். கூட்டு குடும்பம். எல்லா பெண்களும் நிறைய பூ பறித்து தொடுத்து பெருமாள் கோவில், பிள்ளையார் கோவிலுக்கு கொடுத்து வீட்டில் முன்னோர்கள் படங்களுக்கு போட்டு தாங்களும் தலையில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சரம் சரமாக தினமும் பூப்பந்து தொடுப்பார்கள். அப்போது நிறைய ஊர் வம்பும் பேசுவார்கள்.
''ராமதுரை வரப்போறானாமே''.''இன்னும் ரெண்டு நாள் ளே . ஆறுமாசம் இருக்க போறானாம். பள்ளிக்கூடத்தை பெரிசாக்கி காலேஜ் பண்ணப்போறானாம். கேள்விப்பட்டேன். முத்தம்மா சொன்னா'.
பள்ளிக்கூட வாத்யார் அய்யாசாமி அய்யர் தான் அதுக்கும் பிரின்ஸிபால்னு பேசிக்கிறா. அவன் வேறே யாரையோ கொண்டுவரப்போறானாம்''
ராமதுரை ஊருக்கு வந்தான். மாமா ஸ்ரீனிவாச ஐயங்கார் வீட்டில் இன்டர்வ்யூ. ரெண்டு நாள் கழித்து அய்யாசாமி அய்யரை பார்க்கணும் என்று வரச்சொன்னான். வந்தார்.
வாசலில் பழைய செருப்பு, வார் ஒன்று அறுந்து ஒரு SAFETY PIN செருகி மாட்டிக்கொண்டு வந்தார். பஞ்சகச்சம். வெள்ளை வேஷ்டியாக எப்போதோ இருந்தது இப்போது காவியை நெருங்கி கொண்டிரு ந்தது. மொட்டை கழுத்து அரைக்கை ஜிப்பா. மேலே பட்டன் இல்லை. மார்பு எலும்புகள் துருத்திக் கொண்டு ஜிப்பா வழியே தெரிந்தன. பூணல் வெள்ளையாக இருந்தது. நெற்றியில் பட்டையாக விபூதி. கழுத்தில் ஒரு ருத்ராக்ஷம் ஒரு சிகப்பு பட்டுநூல் கயிற்றில் கழுத்தை நெருக்கியவாறு அணிந்து கொண்டிருந்தார். முன் வழுக்கை, காதோரங்களில் சில வெள்ளை திட்டுகள், பின்னால் காற்றில் ஆடும் சிறு சிண்டு முடிச்சு. காசித்துண்டு மேலே அங்கவஸ்திரம். ஜிப்பா பாக்கெட்டில் கண்ணாடிக்கூடு. ஆழமான கண்களை மறைத்த பிளாஸ்டிக் பிரேம் கண்ணாடி.
நமஸ்காரம் பண்ணினான். அய்யரும் பதிலுக்கு நமஸ்கரித்தார்..
''வாங்கோ உட்காருங்கோ'' (நிச்சயம் இந்த ஆளை ஸ்கூல் நடத்த சொன்னா உருப்படவே உருப்படாது. மெட்ராஸ்லேருந்து ஒரு கிறிஸ்டியன் டீச்சரை கொண்டுவரவேண்டும். இன்டர்வ்யூ முடித்து செலக்ட் பண்ணி வைத்திருந்தான்)
'நாற்காலியில் மெதுவாக எதிரே 'ஹர ஹர மஹாதேவா ''என்று சொல்லி உட்கார்ந்தவரை ஏற இறங்க பார்த்த ராமதுரை.'
நீங்க இருபது வருஷமா இங்கே பள்ளிக்கூடத்தில் இருக்கேளே. நிறைய இம்ப்ரூவ் மென்ட் இருக்கா?
''பக்கத்துலே அஞ்சு கி.மீ. தூரத்திலே டவுனில் பெரிய பிரைவேட் ஹை ஸ்கூல் இருக்கு. பஸ் வேறே போறது. இங்கே கிராமத்துல இருக்கிறவா ஏழை குழந்தைகள் அவாளுக்கு சாப்பாடு போட்டு பாடம் சொல்லி தறோம். மூணு டீச்சர் இருந்தா கணக்கு டீச்சர் ரொம்ப வருஷ மா இருந்தவ மெட்றாஸ் போய்ட்டா பிள்ளை யோட. வேறே யாரும் இன்னும் அவளுக்கு பத்தியா அப்பாயி ண்ட் பண்ணலே. நானும் இன்னும் ஒருத்தரும் மாத்தி மாத்தி சொல்லி கொடுக்கிறோம். நன்னா மார்க் வாங்கறா பசங்க. சந்தோஷமா படிக்கிறா. பழைய ஸ்டுடென்ட்கள் வந்து ஆங்கிலம், ஹிந்தி, கணக்கு சயன்ஸ் சொல்லிக்கொடுக்க ஹெல்ப் பண்றா
'பசங்க டிசிப்ளினா இருக்கணும். நான் நிறைய பணம் செலவு பண்ணி ஸ்கூலை இம்ப்ரூவ் பண்ண போறேன். நீங்க தான் ப்ரின்சிபாலா இருக்கணும்னு சொல்றா. எனக்கு உங்களை பத்தி ஒன்னும் தெரியாது. ஒரு சின்ன கேள்வி கேக்கறேன் பதில் சொல்றேளா"
''கேளுங்கோ. தெரிஞ்சதை சொல்றேன்''
'நீங்க ஒருநாள் குழந்தைகளுக்கு '' தொடர்பு'' சம்பந்
தம்'' பத்தி ஏதோ லெக்சர் கொடுத்ததை எனக்கு ரெகார்ட் பண்ணி அனுப்பினா கேட்டேன். எனக்கே சரியா புரியலே குழந்தைகளுக்கு எப்படி புரியும்னு யோசிச்சேன்.''
நீங்க மேல் நாட்டில் படிச்சவர். நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கத்துண்டவன். '
நீங்க மெட்ராஸ் பட்டணமா?*
"''ம்ம்''. (எதுக்கு இந்த கிழவன் பேச்சை மாத்தறான்?)' 'யார் லாம் வீட்லே இருக்கா?'''.(அதிகப்ரசங்கி, மூக்கை வேண்டாத விஷயத்திலே நுழைகிறான்)
'' .... '
'''யார் எல்லாம் வீட்லே இருக்கா?"' மறுபடி கேள்வி.
'அம்மா போய்ட்டா, அப்பா இருக்கார். எனக்கு மூணு சகோதரர்கள், ஒரு அக்கா. எல்ல்லோருக்கும் கல்யாணம் ஆயிட்டுது. ( எதுக்கு என் பர்சனல் மேட்டர் இந்த கிழடுக் கு?'
நீங்க அப்பாவோடு பேசுவேளா"
(டே கிழவா, கோபத்தை கிளர்றே. என்ன நடக்கும்னு தெரியலை)
''..............................'
'''என்ன பேசாம இருக்கேள் . அப்பாவோட எப்போ கடைசியா பேசினேள் ?''
( கோபத்தை அடக்கிக்கொண்டு) ''ஒரு மாசதுக்கு மேலே இருக்கலாம்'. மூணு நிமிஷம் வேலைக்கு நடுவிலே அமெரிக்கா லேருந்து பேசினேன்.''
''சகோதரர்கள் சகோதரி எல்லாம் அடிக்கடி சந்திப்பே ளா?""
''.......''(டே கிழவா, எல்லை மீறாதே நீ..)
'எப்போ கடைசியா குடும்ப விசேஷம் ஏதாவது நடந்த போது சந்திச்சேள் ?'
'ராமதுரைக்கு வியர்த்தது. நான் இவனை இன்டர்வ்யூ பண்ண வந்தேனா, இவன் என்னை இன்டர்வ்யூ பண்றா னா '''
'ரெண்டு வருஷம் முன்னாலே ஒரு ஸ்ரார்த்தம் போது எல்லோரும் மீட் பண்ணினோம்"
''எவ்வளவு காலம் ஒண்ணா இருந்தேள்?'' (பொறுமையை இழக்க கூடாது. எவ்வளவு தூரம் போறது பாக்கலாம்) ''மூணு நாள்'''
'அப்பாவோடு எவ்வளவு நேரம் செலவழிச்சேள். பக்கத் திலே போய் உட்கார்ந்தேளா?
ராமதுரை அய்யர் இருப்பதை மறந்தவாறு பாக்கெட்டில் இருந்து ஒரு நோட்டை எடுத்து ஏதோ எழுத ஆரம்பித் தான்.
''எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து டிபன், லன்ச், டின்னர் எல்லாம் சேர்ந்து சாப்பிட்டேளா?அப்பா எப்படி இருக்கே ள்'' னு தோளைத் தொட்டு கேட்டேளா? அம்மா போனப் புறம் எப்படிப்பா டைம் போறது உங்களுக்குன்னு ஆதூர மா கையைப் பிடிச்சுண்டு கேட்டேளா?''
ராமதுரையின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டி யது. கையிலிருந்த நோட் ஈரமானது. அவரை கலங்கிய கண்களோடு பார்த்தான்.
ராமதுரையின் கைகளை ஐயர் பிடித்துக்கொண்டார். சங்கோஜப் படாதேங்கோ .வருத்தப்படாதேங்கோ. உங்க மனசை நான் புண்படுத்திட்டேனோ. அப்படின்னா ஸாரி . தெரியாம அப்படி நடந்துடுத்து. ஆனா நா இப்போ கேட்டேனே கேள்விகள் அது தான் உங்க கேள் விக்கு, சந்தேகத்துக்கு பதில்.
காண்டாக்ட் என்கிற தொடர்பு என்பது வேறே. கன்னெக்ஷன் என்கிற சம்பந்தம் உறவு வேறே. ஆங்கில வார்த்தை வேறே ஆத்ம சம்பந்தம் வேறே. நீங்க அப்பாவோட காண்டக் CONTACT தான் பண்ணி னேள் . கன்னெக்ஷன் பண்ணாம வுட்டுட்டேள் கன்னெ க்ஷன் என்கிறது ஹ்ருதயத்தோடு ஹ்ருதயம் இணை யறது . ஒண்ணா உட்காரறது , சாப்பிடறது ஒருத்த ரோடு ஒருத்தர் பாசமா, உண்மையான அன்பா இருக்கி றது தொடுவது, கை குலுக்குறது. கண்ணோடு கண் பார்க்கிறது. சந்தோஷமா நேரம் சேர்ந்து செலவிடறது வேறே அனுபவம். நீங்க உங்க சகோதர சகோதரிகள் மீட் பண்ணினேள் . அது கான்டக்ட் . CONTACT தொடர்பு.
''இப்போ புரியறதா நான் குழந்தைகளுக்கு தொடர்பு சம்பந்தம் பத்தி சொல்லி கொடுத்தது உங்களுக்கு.?''
''ஸார்,அருமை. என் வாழ்நாளில் மறக்கமுடியாத பாடம் கத்துக் கொடுத்தேள் ''
ராமதுரையைப் போல் நாமும் இதை கற்போம். பயன்படுத்துவோம், பயன்பெறுவோம். கிராமத்தில் பள்ளி அய்யர் தலைமையில் வெகுகாலம் நன்றாக நடந்து நிறைய குழந்தைகள் வாழ்க்கையில் பயன் பெற்றார்கள் என்பது சினிமாவில் கடைசியில் வரும் சுபம் சுபம் சுபம்.
அருமையான
ஆசிரியர்கள் கிடைப்பது அதிர்ஷ்டம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...