Saturday, November 5, 2022

KUNDALINI


 மூலாதார குண்டலினி - #நங்கநல்லூர்_j_k_SIVAN

 
 நம் உடம்புக்குள்  இருக்கும் ஒரு  உயர்ந்த  சக்திக்கு பெயர்  குண்டலினி. அதை  நாம் அறியவில்லை,  உணர்வதில்லை, உபயோகிப்பதில்லை.  அசையாமல்  அடியில் சுருண்டு படுத்திருக்கும்   ஒரு பாம்பை உசுப்பி விட்டு,   அதை மேலே  உச்சி வரை ஏற்றிவிடுவது தான் குண்டலினி சக்தி  இயக்கம்.

பாம்பு  என்று ஏன் சொல்கிறோம்?  அதற்கு உள்ளுணர்வு ,நுண் உணர்வு செயல்பாடு அதிகம்.  யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து அசையாமல் படுத்திருக்கும். பாம்பா பழுதா கயிறா  என்று தெரியாது.  நகரும்போது சரசரவென்று  ஓடும்.  குண்டலினி சக்தியை மேலே  எழுப்ப  சரியான குருவின் கண்காணிப்பில் முறையான யோக மார்க்க  பயிற்சி கண்டிப்பாக அவசியம். அதைப்  பெறாமல் தானாக முயற்சி செய்வது நெருப்போடு விளையாடுவது ஆகும்.  அது மிகவும்  வீரியம் வாய்ந்த  அபாயகரமான யோக முறை. 

உள்ளங் காலிலிருந்து உச்சந்தலை வரை உடம்பில்  மொத்தம்  7  மையங்கள் (சக்கரங்கள்) இருக்கிறது. அதன் வழியாக  பிராண சக்தி 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது.   ஏழு சக்கரங்களும்  நம் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் எல்லாவற்றுக்கும் காரணம்.   அவை யாவை?

1. மூலாதாரம்: இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் நடுவில் உள்ள இடம்.  ஆதார ஸ்தானம். அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு  மையம்.   பஞ்ச பூதங்களில்  பூமி, நிலம்  (ப்ரித்வி) மாதிரி.

2. சுவாதிஷ்டானம்: இது பிறப்புறுப்புக்கு சற்று மேலே   உள்ள மையம்.  நமக்கு இன்பம்  தருவது இதன் வேலை. .பஞ்ச பூதத்தில் நீர்,ஜலம்  மாதிரி. 

3.மணிபூரகம்: இது தொப்புளுக்கு அருகில் இருப்பது.  இதன் வேலை தான் முயற்சியும்  உழைப்பும்.அக்னி, நெருப்பு மாதிரி.

4.  அனாகதம்: இருதயத்துக்கு அருகில் இருப்பது.  இது தான் அன்பு , படை ப்பாற்றல்.  சிந்திக்க வைப்பது.  பஞ்ச பூதத்தில் வாயு,  காற்று  மாதிரி.  அன்பு  பற்றி சொல்லும்போது அதனால் தான் மார்பை தொடுகிறோம்.

5.விசுக்தி: தொண்டைக் குழியில் உள்ளது.  ஆகாசம் மாதிரி.   இது தான்  தீமைகளை தடுத்து நிறுத்தும் சக்தி. ஆலகால விஷத்தை சிவன்  தொண்டையில் தடுத்து நிறுத்தி நீலகண்டன் ஆனான். ஞாபகம் இருக்கிறதா?

6.ஆக்ஞா .   ரெண்டு புருவத்துக்கும் நடுவே.   ஞானம் பேரறிவு, ஆற்றல்  வெளிப்படுவது இதனால் தான். 

7. ஸஹஸ்ரஹாரம் (துரீ யம்):  உச்சந் தலையில்
இருப்பது.   நான்  என்ற  தன்னிலை  கடந்து ஆன்ம விடுதலை பெற்று  பேரானந்தம் தருவது. ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வது மாதிரி  என்பார்கள். எனக்கு அந்த அனுபவம் இல்லையே. .சிவன்  யோகீஸ்வரன். அவன்  தலையில் பாம்பு  படம் போட்டிருப்பது  குண்டலினி பாம்பு உச்சி ஸஹஸ்ராரம்  அடைந்ததை காட்ட.

சரி, எப்படி  குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து ஸஹஸ்ராரம்  வரை எழுப்புவது? 
யோகம்,  தியானம்  செய்யாமல் முடியாது.    ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அடக்குவது யோகம்.
 
உடலைக்  கட்டுப்படுத்தி செயல்படுவது கர்ம யோகம்.

மனதை  அடக்கி, புத்தியை பயன் படுத்தி யோக நிலை பெறுவது  ஞான  யோகம். 

உணர்வை, உணர்ச்சிகளை ஒரு  முகமாக குவித்து  பெரும் யோகநிலை பக்தி யோகம்.

உயிர்ச்  சக்தி  மூலம்  அடையும்  யோக நிலை  க்ரியா யோகம்.
ஏதாவது ஒரு யோக  நிலை மூலம்  குண்டலினி சக்தி பிரயோகம்   செய்து பலனடைய சரியான  குருவின்  வழிகாட்டல் ரொம்ப ரொம்ப முக்யம்.

இல்லறத்தில் இது முடியாது. துறவு அவசியம். பிரம்மச்சர்யம் முக்கியம்.  வள்ளலார்,  ராமகிருஷ்ணர், புத்தர் மஹா பெரியவா   போன்ற  மா மனிதர்களை உதாரணமாக சொல்லலாம்.   நம் போன்றவர்கள்   வேண்டுமானால்  நடிக்கலாம். 

மீதி அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...