வேணுகானத்துக்கொரு சரப சாஸ்திரிகள் - நங்கநல்லூர் J K SIVAN
1872-ல் கும்பகோணத்தில் பிறந்து ரெண்டு வயதிலேயே நோய் வந்து பார்வையை இழந்ததால் பள்ளிப் படிப்பு இல்லை. அப்பா சொல்லிக்கொடுத்து கல்வியறிவு பெற்றார். கேட்கும் திறன், புத்தி கூர்மை வளர்ந்தது. கும்பகோணம் சோலையப்ப முதலி தெருவில் வாழ்க்கை. அம்பு அம்மா மனைவியானாள். சாஸ்திரிகள் அம்மா தர்மாம்பாள் வீடு திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தது. சிறுவயதில் அப்பா மறைந்தார். மாமா குப்புஸ்வாமி சங்கீதம் பயிற்சி கொடுத்தார். மானம்பூச்சாவடி வேங்கடசுப்பையர் தியாகராஜ ஸ்வாமிகள் சிஷ்யர் மற்றும் கோவிந்த நாயக்கர் புல்லாங்குழல் கற்றுக்கொடுத்தார்கள். மனம் விரும்பியபடி இசையை கை விரல்கள் மூங்கில் குழாய் மேல் நர்த்தனமாடி அற்புத வேணுகானம் ஒலித்தது. ஒவ்வொரு ராகமும் போட்டி போட்டுக்கொண்டு அவர் குழலில் புகுந்து முழு அழகோடு அளவோடு கானமாக புறப்பட்டது. நமது துரதிர்ஷ்டம் சரப சாஸ்திரிகள் புல்லாங்குழல் இசையை இசைத்தட்டாக பாதுகாக்க அப்போது வழியில்லை, நாம் இப்போது கேட்க வாய்ப்பில்லை. அவர் சிஷ்யர் பல்லடம் சஞ்சீவ ராவ் வாசிப்பதை கேட்க முடிவதால் குரு சரப சாஸ்திரிகள் எப்படி வாசித்திருப்பர் என்று ஊகிக்க முடிகிறது. சரப சாஸ்திரிகள் கந்த சஷ்டி உபவாசம் விரதம் இருந்த முருக பக்தர். உள்ளூர் ஸ்கந்தனந்த சுவாமி கோவிலில் சர்ப்ப காவடி, மச்ச காவடிகள் உத்சவ ஏற்பாடு செய்தவர். 500 சாஹித்யங்கள் நாயன்மார் சரித்திரத்தில் இயற்றியவர்.
அவர் காலத்தில் இருந்த மஹான்கள் திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரி, சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், வயலின் வித்வான் திருக்கோடி காவல் கிருஷ்ணய்யர், பிடில் கோவிந்தசாமி பிள்ளை, சாஹித்ய கர்த்தா பட்டணம் சுப்ரமணிய அய்யர், தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர், மிருதங்கம் நாராயணசாமி அப்பா, மிருதங்கம் அழகநம்பி பிள்ளை, கும்பகோணம் சிவக்கொழுந்து, திருமருகல் நடேச ஆகியோருடன் நல்ல நட்பு. அவர்கலோடு சங்கீத உபன்யாச நிகழ்ச்சிகள், சங்கீத வியாக்கியானங்கள் நிகழ்ந்தது.
மைசூர் மஹாராஜா சாஸ்திரிகளை ஆஸ்தான வித்வானாக நியமித்து அழைத்த போது மறுத்து விட்டார். சங்கீதம் விலை பேசப்படக்கூடாத ஞானம் அல்லவா. சரப சாஸ்திரிகள் ஸ்ரீ ராம பக்தரும் கூட என்பதால் வருஷா வருஷம் ஸ்ரீ ராமா நவமி உத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடுவார்.
சரப சாஸ்திரிகள் உபயோகித்த 100 வயதான 8 துளை புல்லாங்குழல் இன்றும் சரப சாஸ்திரிகள் ஆரம்பித்து வைத்த ஸ்ரீ ராம பஜனை சபா, 110 சோலையப்பன் தெருவில் காட்சிப் பொருளாக இருக்கிறது. சபா வருஷா வருஷம் ராம நவமி, மற்றும் ராதா கல்யாண மஹோத்ஸவ வைபவங்கள் நிகழ்த்தி பல வித்துவான்கள் பங்கேற்று செவிக்கும் அன்னதானம் மூல வயிற்றுக்கும் திருப்தியாக விருந்தளித்து வருகிறது. சரப சாஸ்திரிகள் சிஷ்யர் ஸ்ரீ பல்லடம் சஞ்சீவராவ் வாசித்த ஒரு காம்போதி கீர்த்தனை குருவை ஞாபகப்படுத்தட்டும்
No comments:
Post a Comment