Sunday, November 27, 2022

PERIYA NAMBI

 



பெரிய நம்பி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்ரீ வைஷ்ணவத்தில்  குரு  அவரது சிஷ்யன்  ரெண்டு பேருமே  100  வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள்  உண்டா என்றால்  ராமாநுஜரையும் அவரது பிரதம குரு  பெரிய நம்பியும்  தான்  அப்படி  என்றே சொல்லலாம்.

பெரியநம்பி வைஷ்ணவ சித்தாந்த நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் என்பதால் அவருக்கு மஹா பூர்ணர் என்று ஒரு பெயரும் உண்டு.  பராங்குசதாசர் என்பதும் இவரையே. 

 

ஆளவந்தார் என்ற ஆசார்யனின்  பிரதம சிஷ்யன். இவர்கள் அனைவருமே  ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய  போட்டோ இல்லாதவர்கள். ஆதார் இல்லாவிட்டாலும்  ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு  ரொம்பவே ஆதாரமானவர்கள்.
பெரிய நம்பியைப் போலவே  ஆசார்யர்  ஆளவந்தாரின் மற்ற சிஷ்யர்கள்  திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி,  திருமலை ஆண்டான், போன்றவர்கள். 

எல்லோருக்குமே  வழிகாட்டி  ஸ்ரீரங்கநாதன்  ஸ்ரீ காஞ்சி வரதராஜன் எனும் பெருமாள் தான் . வரதராஜனை ஸ்ரீ அருளாளப்பெருமாள் என்று வழிபட்டவர்கள்.

ஆளவந்தாருக்கு  ராமானுஜரை ரொம்ப பிடிக்கும் என்றாலும் நேரே பார்த்து பேசியதில்லை.  பெரிய நம்பி தான் சகல விஷயங்களையும் அவரைப்பற்றி ஆச்சர்யனுக்கு அளித்தவர்.  

''பெரியநம்பி,    உனக்கு தான் ராமானுஜனை நன்றாக தெரியுமே .அவனைப் பற்றி  உயர்வாக கேள்விப்பட்டதிலிருந்து நான்  அவனை பார்க்க  ஆவலாக இருக்கிறேன்.  நீ உடனே காஞ்சிபுரம் சென்று அவனை இங்கே என்னிடம் அழைத்து வா...ஸ்ரீ வைஷ்ணவ விசிஷ்டாத்வைத பிரச்சாரம் பற்றி  நிறைய பேசவேண்டும்..''  

ஆளவந்தார் விருப்பத்தை நிறைவேற்ற  பெரியநம்பி   ஸ்ரீ ரங்கத்திலிருந்து  காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை  ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்ல வந்து இருவரும் ஸ்ரீரங்கம் சென்றபோது  ஆச்சார்யர்  ஆளவந்தார் விண்ணுலகெய்திவிட்டார்.  ராமானுஜரை  பெரிய நம்பி  மதுராந்தகம்  ஏரிகாத்த ராமன் கோவிலில் பார்த்து அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய சங்க சக்ர  முத்ரை  அளித்த ஸ்தலம் மதுராந்தகம்.  அந்த இடத்தை  இன்றும்  நாம் பார்க்க முடிகிறது.

மாறனேரி நம்பி  என்பவர்  நோய்வாய்ப்பட்டு  அந்திம கதி அடைந்தபோது அவருக்கு பெரிதும் உபகாரமாக இருந்தவர்  மட்டும் அல்ல அந்திம கிரியைகளை புரிந்தவரும்  பெரிய நம்பி தான்.  ஜாதி வித்யாசம்
 பார்க்காதவர். அதனால் மற்ற வைஷ்ணவர்கள் அவரை  பஹிஷ்கரித்து புறக்கணித்தனர்.  ஸ்ரீ ராமானுஜர் அவரிடம்  ''குருவே,  எதற்கு இப்படிச் செயது,  அவப்பெயர் வாங்கினீர்கள்?''எனக் கேட்டார்?

''ராமானுஜா,   எனக்கு ராமாயணத்தில் ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.  ஸ்ரீ ராமன்  ஜடாயுவை குற்றுயிரும் குலையுயிருமாக கடைசி தருணங்களில் பார்த்து ராவணன் சீதையை  கடத்தியதை சொல்லி உயிர் நீங்குகிறான்... ஜடாயுவுக்கு  அந்திம கிரியைகளை ஸ்ரீ ராமன் புரிந்தார்.  நான்  ராமனைக் காட்டிலும் பெரியவனுமில்லை, ஜடாயுவை விட தாழ்ந்தவனுமில்லை ''

''குருவே  நீங்கள் ஒரு சிறந்த மஹான் என்று அவரை வணங்கினார்  ராமானுஜர். மற்ற வைணவர்கள் அவரை  ஏற்க தயாரில்லை.  ஆகவே ஒரு சம்பவம் அவர்கள் அனைவரையும் மாற்றியது.

 ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் உற்சவர் வீதி உலா வரும்போது தேர் பெரிய நம்பிகள் இல்லத்திற்கு எதிரே வந்தபோது அவரை வைஷ்ணவர்கள் மதிக்கவில்லை,  பெருமாள்  தீர்த்தமும் தரவில்லை. வீட்டிலிருந்தே  பெருமாளை  வணங்கினார்  பெரியநம்பிகள்.  அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எவ்வளவு முயன்றும் ரங்கநாதன் தேரோடு  பெரியநம்பி இல்லத்தின் எதிரே இருந்து நகரவே இல்லை.  அப்புறம்  யாரோ சொல்லி  பட்டாச்சாரியார்  பெருமாள் தீர்த்த  பிரசாதத்தை பெரியநம்பிக்கு  அளித்த பிறகு தான் பெருமாள் தேரைக் கிளப்ப அனுமதித்தார். வைணவர்களின் எண்ணத்தை பெருமாள் சுலபத்தில் மாற்றினார். 

ராமானுஜன் என்பவன் யார்,   வைணவம் என்ற  ஒரு மதத்தை சைவத்துக்கு எதிராக பரப்பும் அவனை எங்கிருந்தாலும்   உடனே பிடித்து  இங்கே கொண்டுவாருங்கள் என்று  வீர சைவ சோழ ராஜா  கட்டளையிட்டு வீரர்கள் ராமானுஜரை தேடி சென்றார்கள்.  எப்படியோ விஷயம்  அறிந்து ராமானுஜரின் பிரதம  சிஷ்யர்  கூரத்தாழ்வான் ஓடிவந்து ராமானுஜரை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி ஆழ்வானும் பெரிய நம்பி களும்
 வீரர்களோடு சோழனை சந்திக்கிறார்கள்.  இருவர் கண்களையும்  பிடுங்கி குருடாக்கினான் சோழன்.  வயதான காலத்தில் கண்ணிழந்து ரத்தம் சிந்தி பெரியநம்பிகள் மறைகிறார்.  

ஆசார்யனுக்காக  உயிர் கொடுக்கும் சிஷ்யர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், சிஷ்யனுக்காக  உயிர் கொடுத்த குருவை பெரிய நம்பி மூலம் அறிந்து வணங்குகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...