மாலனை பாடியவரின் வேலன் பாட்டு - நங்கநல்லூர் J K SIVAN
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
தேனினும் இனிய தமிழ் மொழியில் தெய்வத்தைக் காட்டும் சக்தி அருட் கவிகள் ஒரு சிலரே. ஊத்துக்காடு தனது பாடல்களில் கிருஷ்ணனை நம்மோடு ஆடச் செய்பவர். ''ஆடாது அடங்காது வா கண்ணா, அசைந்தாடும் மயில் ஒன்று கண்டேன், அலை பாயுதே கண்ணா, பால் வடியும் முகம் , பார்வை ஒன்றே போதுமே.தாயே யசோதா, புல்லாய் பிறவி, ஸ்வாகதம் கிருஷ்ணா.''. ... ஆஹா, எத்தனை அற்புதமான பாடல்கள்!! வேறொருவர் இதுபோல் எளிய தமிழில் எழில் மிகு கண்ணனை கண் முன்னே கொண்டு வந்து காட்ட முடியுமா? ஆடலிலும் பாடலிலும் அவர் பாடல்கள் இன்றும் மேடைகளில் செவிக்கு அலுக்காத விருந்து.
ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700 - 1765) 65 வயசு தான் வாழ்ந்தார் இன்னும் மறையவில்லை என்றும் மறைய முடியாதவர். திருவாரூர் தக்ஷிண த்வாரகை எனப் பெயர் பெற்ற மன்னார்குடியில் பிறந்தவர் வளர்ந்த இடம் தேனுஜவாசபுரம் என்ற பெயர் கொண்ட ஊத்துக்காடு. கும்ப கோணத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது. நீடாமங்கலம் நடேச ரத்தின பாகவதர் தான் குரு. அப்புறம் கிருஷ்ணனே குரு.
ஒரு அற்புத பாடலை மாலின் மருகோனே முருகன் மேல் பாடி இருக்கிறார். இன்று தான் கேட்டேன்... மஹாராஜாபுரம் சந்தனத்தின் அருமைக் குரலில் ஆனந்தமாக ரசித்தேன். மாமனை அழகாக காட்டியவர் மருகோ னையும் இந்த பாடலில் அவனுக்கு பிடித்த ஷண்முக ப்ரியா ராகத்தில் எப்படி காட்டுகிறார்.!
கிளிக் பண்ண லிங்க் https://youtu.be/VIos2M9Vvs4
பாட்டை கீழே தந்திருக்கிறேன், அர்த்தம் தேவை இல்லை என்றாலும் சொல்ல ஆசை. அர்த்தம் இது தான்:
முருகா, மரகத பச்சை மயில் வாகனனே,ஆறுமுகா , எனக்கு ஒரு வரம் கொடுடா. பரமேனும் ப்ரம்மத்தின் ப்ரணவஸ்வரூபா, பச்சை பொண்ணு பார்வதிக்கும் பரம ப்ரம்ம ஞானியான பரமசிவனுக்கும் நடுவே உட்கார்ந்திருக்கும் சோமஸ்கந்தா, உன்னிடம் நான் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று பெரிய லிஸ்ட் எதுவும் தரப்போவதில்லே, ஒன்றே ஒன்று.தான் கேட்பேன்..
எனக்கு பொன்னும் பொருளும் வேண்டவே வேண்டாமாடா, சிரிக்கும் சிங்காரவேலா உன் முகம் பார்த்ததும் அதெல்லாம் எனக்கு புளிச்சுப் போச்சு... உன்னைப் பார்க்கும் முன்பு உலகத்தில் என்னென்னவோ இன்பங்கள் தரும் வஸ்துக்கள் இருக்கு என்று தெரிந்து வைத்திருந்தேன், அது அத்தனையும் உன் மயில் ஆடும் ஆட்டத்தில் உன் அழகைப் பார்த்ததும் அடியோடு மறந்தே போச்சு. வாயில் எந்த வார்த்தையும் இப்போது வருவதே இல்லை. எப்பவும் முருகா முருகா என்ற ஒரே சொல் தான்..அது தரும் ''கிக்'' கில் மோகவெறி தலை சுற்றி, பாஷையே மறந்து போச்சுடா.
அப்பனுக்கு உபதேசம் காதில் கிசு கிசு வென்று சொன்னாயே அதை எனக்கும் சொல்லுடா... அறுபடை வீடு கொண்ட வீறு நடைபோடும் வேல் முருகா, உன் திருப்பதம் தா..தாயாயினும் சாலப்பறிந்து அருளும் தயாளா....
ராகம்: ஷண்முகப்பிரியா தாளம் :ஆதி
வரம் ஒன்று தந்தருள்வாய்! வடிவேலா!
வரமொன்று தந்தருள்வாய்! --எங்கள்
மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா (வரமொன்று)
அனுபல்லவி
“பரம்” என்ற சொல்லுக்கொரு பொருளே! --பரத்தில்
பரம் என்ற சொல்லுக்கொரு பொருளே!---இளம்
பச்சைக்கும் இச்சைக்கும் நடுப் பொருளே!
பல பொருள் கேட்டுனை அது இது எனாது
பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த (வரமொன்று)
சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை--
புளித்துப் புளித்துப் போச்சே!--- ஏனென்றால் உந்தன்
புன்னகை முகம் கண்டதால் ஆச்சே!
இன்னும் உலகமுறும் இன்பம் என்றவை---
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்
ஏறுமயில் நடம் கண்டதாலாச்சே!
முன்னும் மனம் உருக “முருகா முருகா” என்று
மோஹமீறித் தலை சுற்றலாச்சே!-- சொல்ல வந்த
மொழி கூட மறந்துதான் போச்சே!
பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே (ஏதோ)--அந்தரங்கம்
போதும் என்று கேட்கவும் ஆசை ஆச்சே
மத்யம காலம்
புனிதமான அறுபடை வீடுடையாய்! புகு மதக்களிறு நடையுடையாய்!
இனித்த நறு வைங்கலவை அதனினும்-- இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்கும் ஒரு பதம் தந்தருள மணமணக்க வரு தமிழருளுடையாய்
அன்னையினும் சிறந்ததான அருளொடு நிறைந்ததான அறுமுக வடிவேலா
(வரமொன்று)
No comments:
Post a Comment