கண்டு கொண்டேன்.... கொண்டேன்..''#நங்கநல்லூர்_J_.K_SIVAN
அங்கே நின்றபோது என்னை மறந்தேன்.
ஆஹா ! கிட்டத்தட்ட 250 வருஷத்துக்கு மேல் ஆகியும் அதன் பழமை குன்றவில்லையே. காற்றில் ராகங்கள் கலந்து அற்புதமாக செவிக்கு விருந்து. ஹோ வென்று காவேரி கரைபுரண்டு ஓடுகிறாள். பிரமிக்க வைக்கும் அசைவு. அதன் சிறு சிறு அலைகளில் எத்தனையோ நினைவுகள் கலந்திருக்கிறது.
நான் நிற்கும் கரை அருகே ஒரு கட்டிடம். ஒருகாலத்தில் அது ஒரு பழைய வீடு. மராத்தி ராஜா கொடுத்த மான்யம். அதில் வசித்தவர் தெரிகிறார். தொண்டு கிழவர். ஸ்ரீ ராம ராம ராமா என்று மூசசுக்கு முன்னூறு தடவை முணு முணுப்பவர் . அட அந்த மூச்சே ஒவ்வொன்றும் ஒரு அலாதி சுக ஸுஸ்வரமாக கீர்த்தனமாக வெளி வருகிறது. ராமனை நினைப்பது, நினைப்பது அவனைப் பாடுவது அவனோடு பேசுவது ஒன்றே இந்த பிறந்த உலகில் அவருக்கு தெரிந்ததெல்லாம். கிழவி காவேரிக்கு இது நன்றாக தெரியுமே. அவளே அவர் சங்கீதத்தில் ஊறினவள் தானே.
கம்மென்று மலர்கள் வாசம் வீசின, எங்கும் அந்த அறையில் கமகமவென்று சாம்பிராணி, அகில்புகை மனம் வீசியது. தம்புராவில் ஓங்கார சுருதி கேட்டுக்கொண்டே இருக்கும் அறை, தியாகப்ரம்மம் இருந்த அறையா அது, இல்லை இல்லை, ஸ்ரீ ராமன் சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சகிதம் சந்தோஷமாக தியாக ராஜ சங்கீத கானத்தில் திளைத்து மகிழ்ந்த ஒரு மா நாத பிரம்மத்தின் அறை அல்லவா?
தியாகராஜஸ்வாமி ரொம்ப பெரிய செல்வந்தர். நம்மைப்போல் காசு பணத்தில் அல்ல. மகரிஷி நாரதரே வந்து ''இந்தா உனக்கு , இதை வைத்துக் கொண்டு பாடு '' என்று சங்கீத ஞானத்தை அருளிய செல்வத்தில். ஸ்ரீ ராமனே கதவை தட்டி ''நான் உள்ளே வருகிறேன்'' என்று வந்து நின்ற அறை அது.
கல்விச்சாலையில் கலாசாலையில் காகிதத்தில் எவனோ கையெழுத்து போட்டு கொடுத்த அங்கீகாரமா அந்த ஞானம்?. பொழுது விடியும்போது ராமனோடு, நாள் முழுதும் ராமனோடு, இரவு முடியும் வரை ராமனோடு, கனவிலும் நனவிலும் ராமனோடு வாழ்ந்து பெற்ற ஞானம் அல்லவா? வாழ்வில் எத்தனை மூச்சு இருந்ததோ அத்தனையும் ராமனாச்சே.
இன்று அந்த நினைவு மீண்டும் ராமனுக்கு அபிஷேகம் பண்ணும்போது அவருக்கு வந்தது. ''எத்தனை நாள் என்னை விட்டு பிரிந்திருந்த வாட வைத்தாய்? ''
எந்த நினைவு ..? எப்போது?
அவரது அருமை ராமரை இழந்தபோது? கிட்டத்தட்ட மூன்று மாதம் அவனைக் காணாமல் துடித்தது. ஏன் திடீரென்று இன்று அது நினைவுக்கு வருகிறது?
சிரிக்கிறார் தியாக ப்ரம்மம்.
''ராமா நீ என்னோடு விளையாடி இருக்கிறாய்? எனக்கு தான் புரியவில்லை? ஆனால் நான் எவ்வளவு துடித்தேன் என்பது உனக்கு தெரியுமல்லவா?
''இல்லை பக்தா. உன் துயரத்தில், இழப்பில், நீ என்னை எப்படித் தேடுகிறாய், உருகிப் பாடுகிறாய் என்று கேட்க எனக்கு விருப்பமாக இருந்தது ''நெனெந்து வெத குதுரா '', பாடினாயே ஞாபகமிருக்கிறதா?
கண்களில் நீர் மல்க தியாகராயரின் தலை அசைந்தது. அந்த சம்பவம் நினைவுத் திரையில் மீண்டும் ஓடியது.
+++
'ஜப்பேசன் அண்ணா. மூத்த சகோதரன். உலகத்தில் எல்லோரையும் போல் தான் அவனும். அவன் பெயர் அச்சில் அடிபட காரணம் அவன் தியககப்ரம்மத்தின் அண்ணா என்பதால் மட்டுமே. வீடு குடும்பம் பணத்தைத் தேடுகிறது. சுகம் கேட்கிறது. சம்பாத்தியம் போதவில்லை. தம்பி நன்றாக பாடுகிறான், தானாகவே க்ஷண கால நேரத்தில் பாடல்கள் இயற்றுகிறானே. ஊரும் உலகமும் அவனைப் புகழ்கிறதே. ராஜா வரை விஷயம் போய் யானை குதிரை பல்லக்கு சகிதம் பண மூட்டையோடு, தங்க நாணயங்களோடு வந்து கூப்பிடுகிறார்கள், இந்த மடையன் போகமாட்டேன் ராஜா மேல் பாடமாட்டேன் என்று அடம் பிடித்து வந்த லக்ஷ்மியை காலால் உதைக்கிறானே. எவ்வளவோ சொல்லியும் அவன் காதில் ஏதும் நுழையவில்லை.
ஏன்?
சதா சர்வ காலமும் இதோ இந்த ராம விக்ரஹம் முன்னால் அமர்ந்து காலத்தை வீணடிக்கிறானே. இந்த ராமனை முதலில் இந்த வீட்டில் இருந்து அகற்றினால் தான் தம்பி தியாகு வழிக்கு வருவான்'' ஜப்பேசன் மனதில் இந்த தீர்மானம் உறுதியாகிவிட்டது.
தியாகராஜர் வெளியே உஞ்ச வ்ருத்திக்கு சென்றிருந்த சமயத்தில் ராம விக்ரஹத்தை துணியில் சுற்றி கையில் எடுத்துக்கொண்டு பிசுபிசுவென்ற தூற்றலை பொருட்படுத்தாமல் ஓ வென்று சப்தத்துடன் ஓடும் காவேரியை நோக்கி சென்றான் ஜப்பேசன். கரையில் நின்றவன் மனதில் ஒரு கனம் . கையிலும் விக்ரஹமாக ராமன் கனத்தான் .
''ராமா, நான் நிரீஸ்வர வாதி அல்ல. நானும் உன் பக்தன். ஆனால் நான் ஏன் இப்படிச் செய்ய துணிந்தேன்? என் தம்பி சதா சர்வ காலமும் குடும்ப பொறுப்பு, பற்றுதல், ஈடுபாடு ஒன்றுமில்லாமல் உன்னையே சுற்றிக் கொண்டிருக்கிறான். நான் உன் மேல் பக்தி கொண்டவனாக இருந்தாலும் என் தம்பி தியாகு கொஞ்சம் உன்னைப் பிரிந்து இருந்தால் திருந்துவான் என்ற ஒரு நப்பாசை. என்னை மன்னித்து விடு. எனக்கு வேறு வழி தோன்றவில்லை. நீ காவேரியில் பள்ளிகொள். உனக்கு தான் தண்ணீரில் படுக்கும் பழக்கமாயிற்றே.''
ஜப்பேசன் கண்களில் ஒற்றிக்கொண்டு ராமனை காவேரியில் கைக் கெட்டியவரை தூரத்தில் வீசி எறிந்தான்.
வீடு திரும்பினான். அலறி அழுதுகொண்டு தியாகராஜன் அவனை வரவேற்றார்.
''அண்ணா எங்கே என் ராமன்?'' ஜப்பேசன் மௌனத்திலிருந்து அவன் அடிக்கடி சொல்வானே
''........ ''
இந்த ராமனை ஒருநாள் காவேரியில் எறிந்தால் தான் நீ குடும்பத்தில் கவனம் செலுத்துவாய்?''..அண்ணாவின் குரல் உள்ளே ஒலித்தது. ...ஓஹோ அடிக்கடி சொல்வானே இன்று அது நடந்துவிட்டதா?.
வீடே வெறிச்சிட்டுவிட்டதே? உயிரற்ற உடலாகிவிட்டேனே? அண்ணா என்ன செய்துவிட்டாய் நீ?
பதிலுக்கு காலத்திராமல் காவேரிக்கரைக்கு ஓடினார். பித்து பிடித்தவன் போல் மூன்று மாத காலம் ராம ஸ்மரணையோடு காவிரிக்கரையில் காத்திருந்தார் தியாகராஜர் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் வெள்ளம் கொஞ்சம் வற்றிய பிறகு காவேரியில் நீர் மட்டம் குறைந்தது இறங்கி தூறு வாருவது போல் வெகு ஆர்வமாக ராமனை தேடினார். ''எண்டு டாகி நாடோ?'' எங்கே அப்பா நீ போய் மறைந்திருக்கிறாய், ராமா?'' என்று கதறுகிறார்.
'' நான் இங்கே இருக்கிறேன்'' என்று கனவில் ராமன் சொன்ன இடத்தில் தேடியபோது துழாவின கைகளில் கனமாக ராமன் மீண்டும் கிடைத்தான். குழந்தையை பெற்ற தாய் ........ தியாகராஜர் புத்துணர்ச்சியோடு பாடுகிறார் .
கனுகொண்டினி ஸ்ரீ ராமுனி நேடு
அனுபல்லவி
இன குலமந்து3 இம்புகா3னு 2புட்டின
இலலோன ஸீதா நாயகுனி நேடு3 (க)
சரணம்
ப4ரத லக்ஷ்மண ஸ1த்ருக்4னுலு கொலுவ
பவமான ஸுதுடு3 பாத3முல பட்ட
தீ4ருலைன ஸுக்3ரீவ ப்ரமுகு2லு
வினுதி ஸேய த்யாக3ராஜ நுதுனி நேடு3 (க)
''ராமா உன்னை மீண்டும் கண்டு கொண்டேனடா ,ராமா உன்னை இன்று அடைந்தேனடா. இந்த பூமியில் ரவி குளத்தில், இனிதாக பலரும் போற்றும் வகையில் பெருமையாக பிறந்த சீதை மணாளா உன்னை இன்றுனடா .
பரத லக்ஷ்மண.சத்துருக்னர்கள் அருகே நின்று சேவை செய்ய, வாயு மைந்தன் ஹனுமான் உன் திருவடிகளைப் பற்ற,
தீரர்களான சுக்கிரீவன் முதலிய வானர தலைவர்கள் போற்றி மகிழ, இதோ இந்த தியாகராஜனால் போற்றப் படுபவனான ஸ்ரீ ராமா உன்னை இன்று கண்டுகொண்டேனடா''
பிலஹரி எப்போதும் ரகு குல திலகன் ராமனின் நாமத்தோடு காதில் ரீங்காரமிட்டபடி இருக்கிறதே.....
No comments:
Post a Comment